வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

11/04/2016


திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை 
 தேர்தலின் “சூப்பர்ஹீரோ” 

 -திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டி.

செய்தியாளர்: மறுமலர்ச்சி தேமுதிகவினர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது திமுக அழைக்கும் பட்சத்தில் உடனடியாக வந்து திமுக தலைவர் கலைஞரை சந்திப்போம் என சொல்லி இருக்கிறார்களே ?
 மு.க.ஸ்டாலின்: ஏற்கனவே தலைவர் கலைஞர்  தேமுதிகவிற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார். அதை மறுக்கவில்லை. அந்த அழைப்பு அதே நிலையில்தான் இருக்கிறது. எனவே அவர்கள் வந்தால் தலைவர் கலைஞர் சந்திப்பார்.

செய்தியாளர்: ”திமுக, அதிமுகவிற்கு எதிரி நான், ஸ்டாலினுக்கு எதிரி அவரேதான்”, என்று விஜயகாந்த் விமர்சனம் செய்து பேசியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
மு.க.ஸ்டாலின்: ஆக எனக்கு எதிரிகள் யாரும் இல்லை என்று சொல்லியிருக்கிறார் என்ற அந்த அர்த்தத்தில்தான் அப்படி பேசியுள்ளதாக நான் எடுத்துக் கொள்கிறேன். எனது எதிரி யார் என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் நானே எதிரி என்று பேசியிருப்பதாக நான் அப்படி எடுத்துக் கொள்கிறேன்.

செய்தியாளர்: தேர்தல் அறிக்கையில் கல்வி கடன் ரத்து செய்வது பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. அது எந்தவகையில் ரத்து செய்யப்படும் ?
 மு.க.ஸ்டாலின்: அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு தலைவர் கலைஞர் அவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்னதைத்தான் செய்வார், செய்வதைத்தான் சொல்வார் என்பதை கடந்த கால வரலாறு நிரூபித்துக் காட்டியுள்ளது. வரக்கூடிய காலங்களிலும் அதை நிரூபிப்பார்.

செய்தியாளர்: தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு செல்ல என்னென்ன விஷயங்கள் கையாளப்படுகிறது ?
 மு.க.ஸ்டாலின்: இளைஞர்கள், மாணவர்கள், மகளிர், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள், ஆசிரிய பெருமக்கள், நெசவாளர்கள், விவசாயிகள் என்று எல்லாத்தரப்பு மக்களுடைய நாடித்துடிப்பை அறிந்து, அதற்கு ஏற்றவகையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு நேற்று தலைவர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது தானாகவே மக்களிடத்தில் சென்றடையும்.

செய்தியாளர்: விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என அறிவிக்கப்பட்டுள்ளது, அது எந்தளவுக்கு செயல்படும் ?
 மு.க.ஸ்டாலின்: முழுமையாக செயல்படுத்தப்படும் என்பதாலேயே அதை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.

செய்தியாளர்: வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் ?
மு.க.ஸ்டாலின்: விரைவில் தலைவர் கலைஞர் வெளியிடுவார்.

செய்தியாளர்: மதுவிலக்கு சட்டம் கொண்டு வருவோம் என்று சொல்லியிருப்பது மக்களை திசை திருப்பும் செயல் என்று விமர்சனம் வைக்கப்பட்டு இருப்பது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?
 மு.க.ஸ்டாலின்: இதுபற்றி தலைவர் கலைஞர் அவர்கள் தெளிவாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்: தாங்கள் அளித்த வாக்குறுதிகளையே திமுகவும் வெளியிட்டு இருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளாரே ?
மு.க.ஸ்டாலின்: அவர் எப்போதும் இப்படித்தான் தேவையற்ற வகையில் எதையாவது சொல்வார். அதற்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை.

செய்தியாளர்: திமுக மட்டும்தான் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று சந்திரகுமார் நேரடியாக சொல்லியிருக்கிறார். அவர் திமுக அணிக்கு வர வாய்ப்புள்ளதா ?
 மு.க.ஸ்டாலின்: அதாவது திமுக ஆட்சிக்கு வர வேண்டும், வரும் என்கிற எண்ணத்தோடு ஆதரவு தெரிவிக்கக் கூடிய கட்சிகளை வரவேற்பதற்கு திமுக என்றைக்கும் தயாராக இருக்கிறது என்று தலைவர் கலைஞர் அவர்கள் ஏற்கனவே சொல்லி இருக்கிறார். எனவே திரு.சந்திரகுமார் சொல்லியுள்ள கருத்து அதனை ஒட்டி இருப்பதனால், அவர் வந்தால் அவரோடு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

செய்தியாளர்: அதிமுக தேர்தல் விதிகளை மீறி செயல்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுவதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?
மு.க.ஸ்டாலின்: இதற்கு தேர்தல் கமிஷன் தான் பதில் சொல்ல வேண்டும்.

செய்தியாளர்: நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கி இருப்பதாக நினைக்கிறீர்கள் ?
 மு.க.ஸ்டாலின்: ஏற்கனவே தலைவர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை தேர்தலின் “ஹீரோ” என்று சொல்வார்கள். இந்த தேர்தல் அறிக்கை “சூப்பர் ஹீரோ” வாக இருக்கிறது.

No comments:

Post a Comment

Labels