வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

11/04/2016

திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு வரலாற்று ஆவணம்! 

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை:

’’2016 தமிழ்நாடு 15ஆம் சட்டப் பேரவைத் தேர்தலையட்டி திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அனைவருக்கும் அனைத்தும் என்னும் தந்தை பெரியார் அவர்களின் தத்துவ விளக்கம் - ஒளிமயமான தமிழ்நாட்டின் சூரிய வெளிச்சம் என்று படம் பிடித்துக் காட்டி, பாராட்டி வரவேற்றுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:


வருகின்ற மே 16ஆம் தேதி (16.5.2016) அன்று தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சிகளும், பல அணிகளாகி தேர்தல் ஆயத்தங்கள் செய்து கொண்டுள்ளன 
மும்முரமாக!
தேர்தல் அறிக்கைகள்  என்பவை ஜனநாயகத்தில் வாக்காளர்களுக்கு  கட்சிகள் தங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஆட்சிக்குத் தங்களை அனுப்பினால் 5 ஆண்டு காலத்தில் எவற்றையெல்லாம் செய்வோம் என்பதற்கான உத்தரவாத அறிவிப்புகளாகும்.
தி.மு.க. அதன் தேர்தல் அறிக்கையை தி.மு.க. தலைவர் மதிப்பிற்குரிய  கலைஞர் அவர்கள் நேற்று (10.4.2016)  சென்னையில்வெளியிட்டுள்ளார்.

வரலாற்று ஆவணம்!
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்றாலே அதற்கென தனி மதிப்பும், மரியாதையும், ஈர்க்கும் பல்வேறு அம்சங்களையும் கொண்ட ஒரு சமுதாய வளர்ச்சி - முன்னேற்றத்திற்கான ஆவணம் என்பதை கடந்த பல முறைகளில் அகிலத்திற்குக் காட்டியுள்ளது.
“சொன்னதைச் செய்வோம்;செய்வதையே சொல்வோம்” - என்ற பெருமையோடு, கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தபோது  செய்த  வரலாற்றுச்சாதனைகளை முறியடிக்க, மற்றொரு முறை திமுகவே ஆட்சிக்கு வந்து முன்பைவிட மேலும் அதிகமாக மக்கள் தேவை அறிந்து செய்வதன் மூலமே முடியும்!
அதன் சாதனைகளை முறியடிக்க, அதனால் மேலும் செய்து குவிப்பதன் மூலமே முடியும்.
பல்கலைக் கொள்கலன்!இந்த தேர்தல் அறிக்கை (2016)   வளர்ச்சித் திட்டங்களையும், நிகழ்கால, வருங்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்கும், வளமானமுன்னேற்றத்திற்கும் உறுதி கூறும், கலங்கரை விளக்கு  கலங்களுக்கு வெளிச்சம் காட்டி, வழிகாட்டுவது போன்று, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தேவையானவற்றை அவர்கள் கேட்காமலேயே செய்து முடிப்போம் என்ற உறுதிகளைக் கூறும், பல்கலைக்கொள்கலன், பல்பொருள் பேரங்காடி என்பதாக இருக்கிறது! 
.
அத்தனைத் தரப்பு மக்களையும் அவர்களின் தேவைகளையும் புரிந்து செயல்படும் ஏழை, எளிய, மக்களின் காவலனாக, இருக்கும் தி.மு.க. ஆட்சி என்பதைச் சொல்லுகிறது தேர்தல் அறிக்கை.
எந்த ஒரு அரசியல் இயக்கமும் செய்யாத அளவிற்கு இப்படி ஒரு குழுவினரை, தமிழ்நாடு முழுவதும் அனுப்பி,  அனைத்து மக்களது கோரிக்கைகள், வேட்கைகள், விருப்பங்களைக் கேட்டு, தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை  இந்தியாவிலேயே இதுவாகத்தான் இருக்க முடியும். அறிவு  ஆசான் தந்தை  பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தபோது, ஒரு  வாக்கியத்தில் ஒன்றை எழுதினார்கள்.

அனைவருக்கும் அனைத்தும் “அனைவருக்கும் அனைத்தும்”  என்று. அதை  அப்படியே  சமூகத்தின் பல்வேறு  தரப்புகளுக்கும் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் தலைமையில் அமையப் போகும் (தி.மு.க.) ஆட்சி செய்து முடிக்க - இலக்குகள் இவை என்று கூறும் எடுத்துக்காட்டானதுதான் தி.மு.க.வின் தனித்தன்மை வாய்ந்த தேர்தல் அறிக்கையாகும்!

மதுவிலக்குபற்றி தி.மு.க. அறிவிக்கப் போகிறது என்பதனாலேயே சட்டமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு கூறிய, ‘முடியாது; மதுவிலக்கு சாத்தியமில்லை, கள்ளச் சாராயம்  ஆறாக ஓடும்’ என்று அளந்த  அ.தி.மு.க. (21-1-2016)  அரசின் முதல் அமைச்சர், இப்போது கீழே இறங்கி,  ‘மதுவிலக்கை படிப்படியாகக்  கொண்டு வருவோம்’ என்று கூறுவது - தேர்தல் முடிவு தங்களுக்குச் சாதகமாக அமையாது; என்பதால் அவருக்கு, செலுத்தப்படும் மூச்சுத் திணறலுக்கான பிராண வாயு  ஆகும்.

தி.மு.க. சொன்னதைச் செய்யும், மற்ற கட்சிகள் நெருங்க முடியாத அளவுக்கு வெற்றியை நோக்கி நாளும் தி.மு.க. சென்று கொண்டிருக்கும் நிலையில்,   திமுகவின் இத்தேர்தல் அறிக்கை சிறந்த உந்து சக்தி, நல்ல துவக்கம் எனலாம். மாவட்டங்களுகென தனியே திட்டங்களை அறிவித்திருப்பது முற்றிலும் புதுமையான ஒன்றாகும்.

தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் உதயசூரியன் வெளிச்சம்!
எனவே பாராட்டி மகிழுகிறோம். ஒளிமயமான தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் இந்த உதயசூரியனின் வெளிச்சம், சூழ்ந்துள்ள இருட்டை விரட்டும்; அதற்கான கதிரொளி தான் இத்தேர்தல் அறிக்கையாகும் - வரவேற்கிறோம்.’’

No comments:

Post a Comment

Labels