வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

08/07/2015

இந்தியாவிலேயே முதலமைச்சர் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: கலைஞர் பேச்சு


சென்னை மாநகர மக்களின் கனவான மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்த திமுக தலைவர் கலைஞர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சென்னை ஆலந்தூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு ஏற்புரையாற்றிய திமுக தலைவர் கலைஞர், 

தமிழகத்தில் ஏற்கனவே நடைபெற்ற   திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்  நிறைவேற்றப்பட்ட ஏராளமான சிறப்புத் திட்டங்கள்,  மக்களுக்கான செயல் திட்டங்கள், மக்களுக்கு தேவையான நிறைவான திட்டங்கள், குறிப்பாக இந்த மெட்ரோ ரெயில் திட்டம்  ஆகியவற்றுக்கு  நன்றி கூறுகின்ற வகையிலே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சென்னை தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

எனக்கு  இதிலே வியப்பு என்னவென்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நன்றி அறிவிக்கின்ற ஒரு செயல் தேவைதானா என்பதுதான்! தலைமை ஏற்றிருக்கின்ற மாவட்டக் கழகச் செயலாளர்  மா.சுப்பிரமணியன் அவர்களும்,  கழகத்தினுடைய பொருளாளர் அன்புத் தம்பி தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், முதன்மைச் செயலாளர் தம்பி துரைமுருகன் அவர்களும் எடுத்துச் சொன்ன விளக்கங்களைத் தவிர மேலும் விளக்கங்களை நான் எடுத்துக் கூறி அவர்களை விட அதிகமாக நான் விளக்கங்கள் தெரிந்துக் கொண்டிருக்கிறேன் என்று காட்டிக் கொள்ள விரும்பவில்லை. 

``மாலை நேரத்து கல்லூரிகள்’’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் நம்முடைய  பொதுக்கூட்டத்தைப் பற்றி சொல்லுவார்.  அவர் சொன்னதில் தவறில்லை என்பதைப்போல், இன்றைய  கூட்டம் அமைந்திருப்பதை  நீங்கள் அறிவீர்கள்.  ஏனென்றால் இப்பொழுது சென்னை மாநகரத்திலே அறிமுகப்படுத்தப்பட்டு, மக்கள் பயணம் செய்கின்ற மெட்ரோ ரெயில் திட்டம்  நம்முடைய விமர்சனத்திற்கு இன்றைக்கு உள்ளாகி இருக்கின்றது.  நீண்ட காலமாக வராதா? வராதா? என்று எண்ணியிருந்த - நம்முடைய ஆவலை நிறைவு செய்கின்ற வகையில், சுலபமாக பயணம் செய்கின்ற - அதிக தொகை  கொடுக்காமல் பயணம் செய்கின்ற  ரயில் பயணத்தை -  மாநகரத்திற்குள்ளே ஒரு பகுதியிலே இருந்து இன்னொரு பகுதிக்கு செல்லுகின்ற வகையிலே அமைந்த மெட்ரோ ரெயில் பயணத்தைத் தான்  நான் குறிப்பிடுகின்றேன்.  

நம்முடைய மக்கள் அதை அனுபவ ரீதியாக இன்றைக்கு  பயன்படுத்துகின்ற வேளையில்   அதற்கு யார் காரணம் என்பதை எடுத்துரைத்து அந்தக் காரண கர்த்தாக்களாக என்னையும்  தம்பி ஸ்டாலினையும் , குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தையும் , திராவிட முன்னேற்றக் கழக அரசையும் சுட்டிக்காட்டி உங்களுடைய நன்றியை இந்தக் கூட்டத்திலே  தெரிவித்திருக்கின்றீர்கள். 

தம்பி துரைமுருகன் மற்றும் இந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டவர்கள்  எடுத்துச் சொன்ன விளக்கங்கள், எனக்கு  முன்பு பேசிய நம்முடைய அருமை தம்பி கழகத்தினுடைய பொருளாளர் எடுத்துச் சொன்ன விரிவான கருத்துக்கள் இவைகளெல்லாம்  புதிதாக இட்டுக்கட்டி சொன்னவைகள் அல்ல.  திராவிட முன்னேற்றக் கழகம் அரசு பொறுப்புக்கு வரும் போதெல்லாம் என்னென்ன இந்த நாட்டிற்கு தேவை என்று தேர்தல் நேரங்களில் சொன்னோமோ;   அவைகளையெல்லாம் ஒன்றுவிடாமல்   நிறைவேற்றிக்காட்டிய பெருமைக்குரிய ஒரே ஒரு கட்சி தமிழ்நாட்டிலே திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்றால் அது மிகையாகாது. 

திராவிட முன்னேற்றக் கழகத்தை  வரவிருக்கின்ற தேர்தலிலே நாங்கள் ஒரு கை பார்க்கத் தான் போகிறோம் என்று யாராவது மார்தட்டுவார்களேயானால் அவர்கள்  மார் தட்டுவதற்கு முன்பு, அவர்கள் தட்டிப் பார்க்க வேண்டியது, மக்களுடைய  நெஞ்சங்களை!

இன்றைக்கு தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி  ஏற்பட்ட பிறகு இந்த நான்காண்டு கால ஆட்சியில் மக்கள் படுகின்ற  வேதனை, கிராமப்புறத்திலே இருக்கின்றவர்கள், நகர்ப் புறத்திலே இருக்கின்ற மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றுமுள்ள ஏழைபாழைகள் இவர்களெல்லாம் படுகின்ற அல்லல், இவர்களெல்லாம் இன்றைக்கு  பெற்ற அனுபவம் என்ன என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்ப்பார்கள் என கருதுகின்றேன். 

ஏனென்றால் ஒரு நாட்டில் நடைபெறுகின்ற அரசு, அந்த மக்களை காப்பாற்றுகின்ற மக்களை பாதுகாக்கின்ற அரசாக இருக்க வேண்டும். இங்கே உள்ள அரசு, மக்களை பாதுகாக்கவும் இல்லை, மக்களை பட்டினி போடுகின்ற சூழ் நிலையியிலிருந்து அவர்களை விடுவிக்கவும்  இல்லை. அந்த நிலையிலே; நடைபெறுகின்ற இந்த  அரசை  குறை கூறாமலோ, இந்த அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நாம் உறுதி எடுத்துக் கொள்ளாமலோ இருக்க முடியுமா? என்பதை  எண்ணிப் பாருங்கள்.
கழகத்தினுடைய ஆட்சி சில பல ஆண்டுகள் தமிழகத்திலே நடைபெற்றது.   திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற அந்தக் காலத்திலேதான், இங்கே பேசிய நம்முடைய தம்பி ஸ்டாலின் குறிப்பிட்டதைப் போல;  இந்தியாவில், ஏன் உலகத்திலே உள்ள நாடுகளிலே இல்லாத அளவுக்கு  ஒரு நூலகம்;  பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பெயரால்  உருவாக்கப் பட்டது.  `அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்’ என்று அமைக்கப்பட்டது. அந்த நூலகத்தினுடைய கதி என்ன இன்றைக்கு? ஒரு நாட்டில் சராசரி மனிதன் கல்வி அறிவு பெற்றவனாக திகழ வேண்டுமானால் அவன் நூலகங்களுக்குச் சென்று நூல்களை புரட்டிப் பார்த்து, அவற்றைப்  படித்துப் பார்த்து அதனுடைய பயனை பெற வேண்டியது ஒரு நூலகம் செய்ய வேண்டிய கடமை,  ஆற்ற வேண்டிய தொண்டு.

ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டிலே இருக்கின்ற அ.தி.மு.க. ஆட்சியிலே இருக்கின்ற எந்த ஒரு நூலகமாவது உருப்படியாக, நல்ல காரியங்களைச் செய்ய பயன்படுகிறதா என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இருக்கின்ற நூலகத்தையும் அழித்துவிட்டு, அது யார் பெயரில் இருந்தால் என்ன?  அண்ணா பெயரால் இருந்தால் என்ன? பெரியார் பெயரால் இருந்தால் என்ன? அம்பேத்கார் பெயரால் இருந்தால் என்ன? எந்த நூலகமானாலும் அவற்றையெல்லாம் நாங்கள் பயனற்ற வகையிலே ஆக்கித்தான் எங்களுக்குப் பழக்கம் என்று சொல்லுகின்ற ஒரு ஆட்சி இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  இங்கே சொன்னார்கள் -  “மெட்ரோ ரயில் திட்டம், நாங்கள் கண்டுபிடித்தது” என்று அம்மையார் அவர்கள் சொன்னதாக பத்திரிகையிலே படித்திருக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சிக்கு அந்த பெருமை உண்மையில் சொந்தமானதா? 

 என்னைப் பொறுத்தவரையில் யார் இந்தத் திட்டத்தை கொண்டுவந்திருந்தாலும், அது மக்களுக்கு உள்ளபடியே பயன்படுமேயானால்,  மக்களுக்கு செலவு குறைந்து, அந்தத் திட்டங்களைப்  பயன்படுத்திக் கொள்வார்களேயனால் அதற்காக நன்றி பாராட்ட,  நான் கடமைப்பட்டிருக்கின்றேன், யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்? எவர் அந்த நன்றிக்கு உரியவர்களாக நாட்டிலே இருக்கின்றார்கள்? தமிழகத்தைப் பொறுத்தவரையிலே யார் யாரோ ஆட்சி நடத்தியிருக்கின்றார்கள். என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.   ஆட்சி நடத்தியிருக்கின்றார்.  பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி நடத்தியிருக்கின்றார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைவதற்கு முன்புவரை, வந்த பிறகும் கூட, பல கட்சிகளுடைய ஆட்சிகள் தமிழகத்தில் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் ஒன்றை மாத்திரம் சொல்கின்றேன். எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு, எந்த அரசாங்கமும் செய்யாத அளவிற்கு,  விசித்திரமான  காரியங்களை செய்வதிலே  வல்லவர்களாக, சாமர்த்தியம் உள்ளவர்களாக, அற்புதமான காரியங்களை (?)  நிறைவேற்றக்கூடியவர்களாக இன்றைக்கு இருக்கின்ற ஒரே தலைவி “அம்மா”  அவர்கள்தான் தமிழ்நாட்டில் இன்றைக்கு சாதனையாளர்,!   சுவர்களிலேப் பார்த்தால் “அம்மா”வினுடைய படம் இல்லாத, போஸ்டர் இல்லாத, எந்த சுவரும் இருக்காது. அப்படிப்பட்ட “அம்மா” எந்தக் குழந்தையைக் காப்பாற்றினார்? எந்த மக்களை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்? எந்த மக்களுக்காக பாடுபடுகின்றார்? அந்த “அம்மா” வை  நாம் இன்றைக்கு வீட்டுக்குப் போக வேண்டுமென்று சொல்கிறோம்.  தயவுசெய்து  “ரெஸ்ட்”  எடுத்துக் கொள்ளுங்கள்.    தயவுசெய்து  உங்கள் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.    ஒரு முதலமைச்சர் நாட்டிற்கு, மக்களுக்கு  ரகசியமான வராக இருக்கக் கூடாது.  அவர் பகிரங்கமானவராக இருக்க வேண்டும்.  வெளிப்படையானவராக இருக்க வேண்டும்.  அப்படிப்பட்ட ஒரு முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோமா?  இல்லை! நிச்சயமாக இல்லை, சத்தியமாக இல்லை. 

நான் இதை  மிகுந்த துயரத்தோடு, வேதனையோடு சொல்கிறேன்.  முதலமைச்சரே இல்லாத ஒரு நாடு, ஒரு மாநிலம், இந்தியாவிலே இருக்கிறது என்றால் அது தமிழ்நாடுதான்.  முதலமைச்சருக்கு இங்கு வேலையே இல்லை;  காரணம் வேலை செய்ய அவருக்கு உடல் நலம் இல்லை.  அப்படிப்பட்ட காரணத்தினால்தான் எந்த நிகழ்ச்சியும்  முதலமைச்சர் பெயரால் அறிவிக்கப்படுகின்ற நிகழ்ச்சிகள் எதுவும் தமிழகத்தில்  நடைபெறவில்லை.  

இந்தத் தேதியில்,  இத்தனை மணிக்கு இந்த இடத்தில், இந்தத்  திறப்பு விழாவை நடத்துவார் என்று பத்திரிகைகளில் முன்பெல்லாம்  அறிவிப்பு வரும்.  அதுபோன்ற அறிவிப்புகள் இப்போது உண்டா?   சில அறிவிப்புகள் வந்தாலும் அவை  நடைமுறைக்கு வருவதில்லை.  

காரணம், அப்பாவியாக  இருக்கின்ற நம்முடைய தற்காலிக முதல்  அமைச்சர் -  பன்னீர்செல்வம்தான் படாதபாடு படுகிறார்.  அவர் எந்தக் கருத்தையும் சுயமாக வெளியிடக்கூடிய தகுதிப் படைத்தவராக இந்த ஆட்சியிலே  நடத்தப்படவில்லை.  இந்த ஆட்சியிலே பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்ற நிலையிலேதான்  பன்னீர்செல்வத்தை வைத்திருக்கிறார்கள்.  அதற்காக பன்னீர்செல்வம் என்மீது கோபித்துக் கொள்ளக்கூடாது, அவருக்காக நான் பரிந்துதான் பேசுகிறேன்.  பரிதாபப்பட்டுதான் பேசுகிறேன்.   அவர் எவ்வளவு பெரிய ஆள்? ஆஜானுபாகுவான உருவம்!

இன்றைக்குக்கூட நெற்றியிலே பூசுகின்ற விபூதியை அதற்கு மேல் வைக்கின்ற குங்குமத்தை அழிக்காமல் “அம்மா”வை  லாலி  பாடக்கூடியவர் பன்னீர்செல்வம், அப்படிப்பட்ட பன்னீர்செல்வத்தை என்ன பாடுபடுத்துகிறார்கள்  என்பது எனக்குத்தான் தெரியும்.  அவர் தனியாக என்னைப் பார்த்தால் “ஓ” வென்று கதறி அழுதாலும் அழுதுவிடுவார்.  அந்த அளவிற்கு - அவரைப் போன்ற பெரிய மனிதர்கள் எல்லாம் படாதபாடு படுகின்ற காலத்தில் நாம் நம்முடைய விமர்சனங்களை இதுபோன்ற பெரிய கூட்டங்களில் எடுத்துச் சொல்வதையே நம்முடைய கடமையாக கருதுகிறோம்.

 இந்தக் கூட்டத்திலே தம்பி துரைமுருகனும், தம்பி ஸ்டாலினும் மற்றும் உள்ள ஆலந்தூர் பாரதி போன்றவர்களும் பல்வேறு கருத்துக்களை எடுத்துக்கூறியிருப்பது ஆட்சியிலே இருப்பவர்களை இழிவுபடுத்துவற்காக அல்ல, அவர்களை கேலி செய்வதற்காக அல்ல, அவர்களை கிண்டல் செய்வதற்காக அல்ல, அவர்கள் திருந்தி நாட்டிற்காக, மக்களுக்காக,  எதற்காக பொறுப்பேற்றுக் கொண்டார்களோ, அந்தப் பொறுப்பை நிறைவேற்றுகின்ற காரியத்திற்காக அவர்கள் பாடுபட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடுதான்!   நான் இந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்திலே சில கருத்துகளைத் தெரிவித்ததும் அந்த எண்ணத்திலே தான்!   
ஏனென்றால் இப்போது நடைபெறுவது ஆட்சி அல்ல, ஒரு  காட்சி.  இந்தக் காட்சியை எவ்வளவு நாளைக்கு நாம் பொறுத்துக் கொண்டிருக்க முடியும், முடியாது.  எனவேதான் இந்தக் காட்சியிலே தோன்றுகின்றவர்களை அவர்கள் எல்லாம் “ராஜபார்ட்” வேடம் தரித்து நடிப்பவர்களாக  சில நேரங்களில் கருதுகிறார்கள்.  சில நேரங்களிலே விதுஷகர்களாகவும் திகழ்கிறார்கள்.   ஆனால் மற்ற நேரங்களில் இவர்கள் பார்வையாளர்களுக்கு ஆபத்தான வேடங்களைத் தரிக்கிறார்கள்.  இந்த இரண்டு வேடங்களிலும் தமிழ்நாட்டிலே அரசியல் ரீதியாக இன்றைக்கு நடமாடிக் கொண்டிருக்கின்ற நிலையை எவ்வளவு நாளைக்கு நாம் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்?  

இங்கே தம்பி ஸ்டாலினும், தம்பி துரைமுருகனும் மற்றவர்களும் நடைபெறுகின்ற ஆட்சியினுடைய அவலங்களை, அக்கிரமங்களை, அநியாயங்களை எல்லாம் எடுத்துச் சொல்லி இதற்கு முடிவு என்ன என்றெல்லாம் என்னைப் பார்த்துக் கேட்டார்கள். இதற்கு முடிவு என்னுடைய கையிலே மாத்திரமல்ல, இங்கே பேசிய நம்முடைய தம்பிமார்களுடைய  கைகளிலே  மாத்திரமல்ல, இதற்கான முடிவை எடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு, ஒரு முழுமையான அதிகாரம் படைத்தவர்கள் தான் என் முன் வீற்றிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெருமக்கள் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.  
எனவே நீங்கள் தான் கொண்டு வந்தீர்கள், நாங்கள் செய்த நன்மைகளை  எல்லாம் எண்ணிப் பார்க்காமல் தி.மு.கழக ஆட்சியிலேதான் மெட்ரோ ரயிலுக்கான திட்டம் தீட்டப்பட்டது என்பதை மறந்து விட்டு;  தி.மு.கழக ஆட்சியிலேதான் விலைவாசி குறைந்தது என்பதை மறந்து விட்டு;  அது  மாத்திரமல்ல, ஏழை எளிய மக்களுக்கு அவர்களுடைய வீடுதேடி, வயோதிகப் பெரு மக்களுக்கு திட்டங்கள் சென்று அடைந்தது என்பதையெல்லாம் மறந்து விட்டு;  நாங்கள் மறந்தோம்;  ஒரு நண்மைக்குத்தான் என்பதைப்போல இன்றைக்கு நீங்கள் நடந்து கொள்வது எங்களைப் பொறுத்தவரையிலே வேதனையானதுதான்.
நன்றி பாராட்டுகின்ற கூட்டம்  என்று என்னை அழைத்திருக்கிறீர்கள்.  ஆனால் நீங்கள் நன்றி தெரிவிக்கின்ற அளவிற்கு நடந்து கொண்டிருக்கின்றீர்களா  என்பதை தயவுசெய்து கூட்டத்திலே கலந்து கொண்டிருக்கின்ற நண்பர்களும், தாய்மார்களும் மாத்திரமல்ல;  தமிழ்நாட்டு மக்களும்  எண்ணிப்பார்க்க வேண்டும்.   நீங்கள் நன்றிக்குரியவர்கள் என்றால், எங்கள் இடத்தில் நன்றியும், விசுவாசமும் உள்ளவர்களாக இருக்கின்றீர்கள் என்றால் நாங்களும் உங்களுடைய தம்பிமார்கள்தான்;   உங்கள் வீட்டுப் பிள்ளைகள்தான்; என்றாலும்,  எங்களை நீங்கள் எத்தனைமுறை ஏமாற்றியிருக்கிறீர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.  நீங்கள் ஏமாற்ற, ஏமாற்ற,  நாங்கள் அதை சகித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம்;  எவ்வளவு காலம் ஏமாற்றுவார்கள், ஏமாற்றுவதற்கும் ஒரு அளவு உண்டு, ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்;  அதுவரையிலே நாம் காத்திருப்போம், என்று காத்திக்கின்றோமே தவிர, உங்களைத் தண்டிக்க வேண்டும் என்றோ, உங்களை நசுக்க வேண்டுமென்றோ, உங்களை கைவிட வேண்டும் என்றோ, கருணாநிதியோ, அல்லது கழகத்தைச் சேர்ந்த வேறு  எந்தத் தோழர்களோ என்றைக்கும் நாங்கள் கருதியதில்லை.  ஆகவே தயவு செய்து நீங்கள் எங்களை சோதித்தது போதும்,    இதிலிருந்து நீங்கள் உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.  ஜெயலலிதாவிடம் இருந்தும் உங்களை  விடுவித்துக் கொள்ளுங்கள்.  அ.தி.மு.க.விடமிருந்தும்  உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். இந்த நாட்டில் ஒரு காலத்திலே ஜனநாயகம் செழித்தது.  அண்ணா வளர்த்தார், பெரியார் வளர்த்தார், பெருந்தலைவர் காமராஜர் வளர்த்தார்;  அவர்கள் எல்லாம் உருவாக்கிய தமிழ் மாநிலம் இன்றைக்கு எப்படி தறிகெட்டுப் போயிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்து அதைச் சீர்திருத்த, அதைச் செம்மைப்படுத்த, மீண்டும் தமிழகத்திலே ஒரு நல்ல ஆட்சித் தோன்ற நீங்கள் பயன்பட வேண்டும்.   எங்களையெல்லாம் அதற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு, அதுதான் உண்மையான நன்றி தெரிவிப்பது, அது தான் உண்மையிலேயே எங்களை   நீங்கள் மதிப்பது, நீங்கள் மரியாதைக் கொடுப்பது;  எங்களுடைய பணிக்கு நீங்கள் பாராட்டுத் தெரிவிப்பது என்பதை எடுத்துச் சொல்லி அதன்படி நடந்து கொள்ளுங்கள்,! நீங்கள் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டி எங்களையெல்லாம் நீங்கள் கவுரவித்தது பெரிதல்ல,  நீங்கள் எங்களை உண்மையிலேயே பாராட்டுகிறீர்கள் என்றால், நன்றி தெரிவிக்கிறீர்கள் என்றால், இனியும் தவறான ஆட்சிக்கு இந்த நாட்டிலே இடம் தராமல் நல்லாட்சிக்கு இடம் தந்தால் அதுவே இந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்திற்கு சரியான சான்றாகும் என்பதை எடுத்துச் சொல்லி அதன்படி நடந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.

இவ்வாறு கலைஞர் உரையாற்றினார்.

No comments:

Post a Comment

Labels