வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

18/07/2015

என்னைப் பேசக் கூடாதென்று எச்சரிக்கை செய்வதா ஜனநாயகம்? பன்னீர்செல்வத்திற்கு கலைஞர் பதிலடி!


தமிழகத்தின் பொது நலத்தை முழுதும் புறக்கணித்து, தமது சுயநலத்தைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு வாக்களித்த மக்களின் சார்பில் கேள்விகளை எழுப்பினால்,  அமைச்சர் என்னைப் பேசக் கூடாதென்று எச்சரிக்கை  செய்வதா  ஜனநாயகம்? என திமுக தலைவர் கலைஞர் அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக  நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாக 17ஆம்  தேதிய  நாளேடு ஒன்றில்  “ஜெயலலிதா பற்றிப் பேசுவதை  கருணாநிதி நிறுத்த வேண்டும்  -  ஓ. பன்னீர்செல்வம் எச்சரிக்கை”என்ற தலைப்போடு  வெளியிட்டுள்ளது.   

நான் 7-7-2015 அன்று ஆலந்தூர்க் கூட்டத்தில் ஆற்றிய உரைக்குத் தான்  அமைச்சர் பதில் கூறியிருக்கிறார். ஆலந்தூரில் நான் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றிப் பேசும்போது,    தயவுசெய்து  உங்கள் உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.    ஒரு முதலமைச்சர் நாட்டிற்கு, மக்களுக்கு  ரகசியமானவராக இருக்கக் கூடாது.  அவர் பகிரங்கமானவராக இருக்க வேண்டும்;   வெளிப்படையானவராக இருக்க வேண்டும்.  அப்படிப்பட்ட ஒரு முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோமா?  இல்லை! நிச்சயமாக இல்லை, நான் இதை  மிகுந்த துயரத்தோடு, வேதனையோடு சொல்கிறேன்.  முதலமைச்சருக்குண்டான வேலையைச் செய்ய அவருக்கு உடல் நலம் இல்லை.  அப்படிப்பட்ட காரணத்தினால்தான் எந்த நிகழ்ச்சியும்  முதலமைச்சர் பெயரால் அறிவிக்கப் படுகின்ற நிகழ்ச்சிகள் எதுவும் தமிழகத்தில்  நடைபெறவில்லை  என்று பேசினேன்.  

என்னுடைய இந்தப் பேச்சிற்குத் தான் பன்னீர்செல்வம் எச்சரிக்கை செய்திருக்கிறார்.  தொடர்ந்து நான் பேசினால், பன்னீர்செல்வம் எங்கே அவருடைய இளவல் ஓ. ராஜாவை அனுப்பி வைத்து,  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பூசாரி நாகமுத்துவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை பாணியில் ஏதாவது   செய்து விடுவாரோ என்னவோ?

நான் அப்படி என்ன தவறாகப் பேசி விட்டேன்?   உடல் நலம் குன்றியிருப்பதாகப் பரவலாகப் பேசப்படும்  முதல் அமைச்சரை உடல் நலம் பேணுவதற்கு  ஓய்வெடுக்க வேண்டுமென்று கூறியது தவறா?   ஒரு முதல் அமைச்சர் என்றால் அவருக்கு எத்தனை எத்தனை வகைவகையான பணிகள்  இருக்கும்?  எத்தனை பொது  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்?      நான் ஜெயலலிதா என்ற தனி நபரைப்  பற்றியா பேசினேன்?  தமிழகத்தின் முதல் அமைச்சர் மாநில மக்களின் நலனுக்காக எப்படியெப்படி  எல்லாம் பணியாற்றிட  வேண்டுமென்று கருத்து தெரிவிக்க பன்னீர்செல்வம் போன்றவர்கள் வாழ்கின்ற தமிழகத்தில் எனக்கு உரிமை இல்லையா?   ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி செய்தி வெளியிடாத பத்திரிகைகள், சமூக வலைதளங்கள்  இருக்கின்றனவா?   அரசு சார்பில்   அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கேட்காத  அரசியல் தலைவர்கள் உண்டா?   அந்தச் செய்தியில்  உண்மை இல்லை என்று கருதினால்,  அமைச்சர் பன்னீர்செல்வம் தன் பெயரிலேயே, “முதல் அமைச்சருக்கு உடல் நலம் நன்றாகத் தான் இருக்கிறது,  அன்றாடம் அலுவலகம் வராததற்கு மட்டும்  காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை” என்றெல்லாம் அறிக்கை வெளியிடுவது தானே?   இன்னும் சொல்லப் போனால் 1-7-2015 அன்று நடைபெற்ற, முதலமைச்சர் ஜெயலலிதாவே ஏற்பாடு செய்த  இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் இதே நிதியமைச்சர் பன்னீர்செல்வம் படித்த ஜெயலலிதாவின் உரையில், “திடீரென்று ஏற்பட்ட உடல் நலக் குறைவின் காரணமாக இந்த விழாவிற்கு என்னால் நேரில் வர இயலவில்லை”என்று தெரிவிக்கவில்லையா?  

ஒரு முதலமைச்சர் தலைமைச் செயலகத்துக்கு வருவதே அகில இந்திய  அதிசயங்களில் ஒன்றாகி விட்டதே;  எப்படி?  ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக 4-7-2015 அன்று பதவியேற்ற பிறகு  எத்தனை நாட்கள் ஆகின்றன?  இந்த இடைவெளியில் அவர் தலைமைச் செயலகத்திற்கு  எத்தனை நாட்கள் வந்து அரசுப் பணிகளை மேற்கொண்டார்? பெங்களூர் உயர் நீதி மன்றத் தீர்ப்புக்கு பிறகு எத்தனை நாட்கள் ஆகி இருக்கின்றன?   கடந்த ஒன்பது மாதங்களில் ஒரு அமைச்சரவை கூட்டமாவது நடந்தது  உண்டா? இந்த ஆண்டுக்கான மானியக் கோரிக்கைகள் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படாததால் புதிய திட்டங்கள் எதுவும் எடுத்துக் கொள்ளப்படவில்லையே?   வழக்கமாக நடைபெற வேண்டிய மாவட்ட ஆட்சியர் - காவல் துறை கண்காணிப்பாளர் மாநாடு 2014ஆம் ஆண்டிலும், 2015ஆம் ஆண்டு இதுவரையிலும் நடைபெறவில்லையே?  மத்திய அரசு நிதி, கல்வித் துறையில் 4,400 கோடி ரூபாய்;  காவல் துறையில் 1,500 கோடி ரூபாய்;  செலவிடப்பட முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டதற்கு அரசின் செயலற்ற தன்மை தானே காரணம்?  110வது விதியின் கீழ் முதலமைச்சர் பேரவையில் செய்த அறிவிப்புகளுக்கான திட்டங்களில் இன்னும் 70 சதவிகித அறிவிப்புகள், அறிவிப்பு நிலையிலேயே ஆழ்ந்த உறக்கம் கொண்டு விட்டனவே;  என்ன காரணம்?  முதலமைச்சர் அலுவலகத்தில் கோப்புகள் குன்று போல் குவிந்து கிடப்பதாக  செய்தி வருகிறதே, ஏன்?  

14,600 கோடி ரூபாய் மதிப்பிலான மிக  முக்கியமான  “மெட்ரோ” ரெயில் திட்டத் துவக்க விழாவைக் கூட “வீடியோ”கான்பரன்ஸ் மூலம் நடத்தக் காரணம் என்ன?    சட்டப் பேரவை உறுப்பினராகப் பதவியேற்க முதலில்  ஒரு தேதி அறிவித்து, பின்னர் அது ரத்து செய்யப்படக் காரணம் என்ன?   அது போலவே  அதானி நிறுவனத்தோடு  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதாக அறிவித்து,  அந்த நிறுவனத்தினரும்  குஜராத்திலிருந்து வருகை தந்து காத்திருந்தார்களே,  குறிப்பிட்ட நாளன்று அந்த நிகழ்ச்சி நடை பெறாமல் இந்த மாதம்   4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படக் காரணம் என்ன?   முதல் அமைச்சர்  தினந்தோறும்  தலைமைச் செயலகத்திற்கு  வந்து பணியாற்ற வேண்டுமா? வேண்டாமா?   அன்றாடம் அலுவலகம் வராமல், “அத்தி பூத்ததற்கு ஒப்ப” என்பார்களே, அதைப் போல என்றோ  ஒரு நாள்  “வராத அரிய விருந்தாளி”போல  தலைமைச் செயலகம் வந்து விட்டு, அவசரம் அவசரமாக “வீடியோ கான்பரன்ஸ்” மூலமாகச் சில  நிகழ்ச்சிகளை நடத்தி விட்டு,  அரை மணி நேரத்தில் இல்லம் திரும்ப என்ன காரணம்?  

அது மாத்திரமல்ல;  அமைச்சர் பன்னீர்செல்வம் எனக்குப் பதில் சொல்லியிருக்கும்  செய்தி 17-7-2015 அன்று  வெளிவந்துள்ள அதே “மாலை முரசு”ஏட்டிலும், “மாலைமலர்”ஏட்டிலும்   முதல் பக்கத் தலைப்புச் செய்தி என்ன தெரியுமா?   முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில்  மீனவர்களுக்கு படகுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கினார் என்று  தமிழக அரசு 17ஆம் தேதி  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ளதைத் தான்  அந்த ஏடுகள் வெளியிட்டுள்ளன.   அரசு 17ஆம் தேதி  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ளதைப் போல உண்மையில் முதலமைச்சர் ஜெயலலிதா அன்றையதினம் தலைமைச் செயலகத்திற்கு வந்தாரா என்றால் இல்லவே இல்லை.    முதல் அமைச்சர் தலைமைச் செயலகத்திற்கே அன்று வராத நிலையில்,  580  மீனவர்களுக்கு  51 கோடி ரூபாய் வழங்கியதாக அரசு அன்று செய்திக் குறிப்பு அனுப்பியது எப்படி?    மீனவர்களுக்கு உதவி வழங்கப்படவே இல்லையா என்றால்,  முதலமைச்சர் ஜெயலலிதா  15ஆம் தேதி தலைமைச் செயலகத்திற்கு வந்த போதே,  இந்த நிகழ்ச்சி நடைபெற்று விட்டதாகவும்,  அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு,  17ஆம் தேதி அன்று தான் அந்த நிகழ்ச்சி நடைபெற்றதைப் போலவும்,  அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறதா?   முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீனவர்களுக்கு உதவி வழங்கிய புகைப்படமே “மாலைமுரசு” ஏட்டில் முதல் பக்கத்தில் வந்திருக்கிறதே?     

அது மாத்திரமல்ல;  16ஆம் தேதிய  மாலை இதழ்களில்,  முதலமைச்சர் ஜெயலலிதா,  மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்குகின்ற புகைப்படத்தோடு,  தமிழக அரசு   16ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பும் வெளி வந்திருந்தது.   ஆனால் 16ஆம் தேதி முதலமைச்சர் தலைமைச் செயலகத்திற்கு வந்தாரா என்றால் கிடையாது.    உண்மையில் முதலமைச்சர் ஜெயலலிதா 15ஆம் தேதி அன்று மட்டும் தலைமைச் செயலகத்திற்கு வந்து  ஒரு சில வீடியோ கான்ஃபரன்ஸ்  நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு  புகைப் படங்கள்  எடுக்கச் செய்து விட்டு, அரை மணி நேரத்தில் இல்லம் திரும்பி விட்டார்.   ஆனால் அ.தி.மு.க. அரசு சார்பில் 15ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சிகளை யெல்லாம்  16ஆம் தேதி அன்றும்,  17ஆம் தேதி அன்றும் தொடர்ச்சியாக  நடைபெற்றதைப் போலவும், அந்த நாட்களிலும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்திற்கு வந்ததைப் போலவும் ஜோடித்து, ஒவ்வொன்றாக  செய்திக் குறிப்பு வெளியிடுகிறார்கள் என்றால் அது மாநில மக்களை  ஏமாற்றும் செயலா, அல்லவா?     தனி நபர்கள் ஏமாற்றும் (உhநயவiபே) செயலில்  ஈடுபட்டாலே அது குற்றம் என்கிற போது, ஒரு அரசாங்கமே இப்படிப்பட்ட திட்டமிட்ட ஏமாற்று வேலையில் ஈடுபட்டிருக்கிறதென்றால் சட்டப்படி அதற்கு என்ன பொருள்?  அதற்கு என்ன  பொருள் என்று,  நீதி மன்றம் மூலம் நிரூபிக்கத்  தயாரா?

தொடர்ந்து மக்கள் மனதில் எழுந்துள்ள இந்தக் கேள்விகளுக்கெல்லாம்  என்ன பதில் என்று வாக்களித்து விட்டோமே என்ற ஜனநாயக உரிமையில் முதல் அமைச்சரிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பார்கள்?  மக்கள் மனதிலும், பத்திரிகைகளிலும்  தோன்றும்    இதையெல்லாம் நான் கேட்டால்,  “கருணாநிதி, ஜெயலலிதாவைப் பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும்”என்று நிதியமைச்சர் எனக்குத் தடை விதித்து எச்சரிக்கை செய்வது;  மக்களை நிந்திப்பதாகாதா?   மக்களாட்சி என்பதை இழிவுபடுத்துவதாகாதா?     இன்னும் சொல்ல வேண்டுமானால், ஆலந்துhர் கூட்டத்தில் நான் அமைச்சர் பன்னீர்செல்வத்தை பாராட்டித்  தான் பேசினேன்.  பரிதாபப்பட்டுத் தான்  பேசுவதாகக் குறிப்பிட்டேன்.  அவரைப் பாராட்டுவதும், பச்சாதாபப்படுவதும் தவறு என்று அமைச்சர் எனக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறாரா?   அல்லது தனக்கு வேண்டிய பதவி உயர்வு வராமல் போய்விடுமே என்று வாய்ச் சவடால் காட்டுகிறாரா?

வாக்களித்த மக்களுக்கு ஆற்றிட வேண்டிய பணிகளை மறந்து,  வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் முடக்கி, எல்லாத் துறைகளையும் செயலற்றதாக ஆக்கி,  மாநில நிர்வாகத்தை கடன் என்னும் கடலுக்குள் தள்ளி சட்டம் ஒழுங்கை சாக்காட்டுக்கு அனுப்பி,  தமிழகத்தின் பொது நலத்தை முழுதும் புறக்கணித்து, தமது சுயநலத்தைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு வாக்களித்த மக்களின் சார்பில் கேள்விகளை எழுப்பினால்,  அமைச்சர் என்னைப் பேசக் கூடாதென்று எச்சரிக்கை  செய்வதா  ஜனநாயகம்? இவ்வாறு அவர்  கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Labels