வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



23/12/2014

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் Kalaignar  ஆற்றிய உரை:
------------------------------------------------------------------------------
உடல் நலிவுற்றிருந்த என்னை, கடந்த வாரம் சந்தித்து, இந்த இனிய விழாவில் இரண்டு மூன்று நிமிடங்கள் நீங்கள் பேசினால் போதும், அதில் கலந்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்தி; நான் வேண்டாம் என்று சொன்னால் தப்பிக்க முடியாது என்பதற்காக, என்னுடைய உடலைத் தொட்டுப்பார்த்து எந்த அளவிற்கு நான் உடல் நலமில்லாமல் களைத்திருக்கிறேன் என்று எடுத்துச் சொல்லியும் கூட, ஐந்தே ஐந்து நிமிடம்தான் நீங்கள் மேடையில் ஏறி மக்களைப் பார்த்து விட்டு உடனடியாக போய் விடலாம் என்று தம்பி இனிகோ இருதயராஜ் சொன்னதை நம்பி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகின்ற வாய்ப்பினை உருவாக்கிக் கொண்டேன்.
வந்தபிறகுதான் தம்பி இனிகோ எந்த அளவிற்கு என்னிடத்திலே பொய் சொல்லியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இனிகோ பொய்யைச் சொல்லியாவது இந்த விழாவிற்கு என்னை அழைக்க வேண்டும் என்று நீங்காத ஆர்வத்தோடு, என்னை இங்கே வருமாறு அழைத்து அதில் வெற்றி பெற்றிருக்கிறார். வள்ளுவன்,
"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்’’
என்று ஒரு குறட்பாவில் கூறுகிறார். பொய் கூட வாய்மையின் பக்கம் வைத்துக் கருதப்படும்; அந்த பொய் ஒருவேளை நன்மை பயக்குமேயானால் அது கூட வாய்மையிடத்திலே வைத்துக் கருதப்படும் என்று அதற்கு பொருள் கூறுவார்கள். அதைப் போல பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனில் என்ற வள்ளுவருடைய குறளை தவறாது பின்பற்றி, நம்முடைய தம்பி இனிகோ இருதயராஜ் அவர்கள் இந்த நிகழ்ச்சியிலே என்னை கலந்து கொள்ளுமாறு செய்திருக்கிறார். நான் அவரை பாராட்டுகிறேன் - அவர் பொய் சொன்னதற்காக அல்ல, பொய்மையும் வாய்மையிடத்த; அது நன்மை பயக்குமாயின் என்ற அந்த குறள் வழி நின்று, இந்த நிகழ்ச்சியிலே என்னை கலந்து கொள்ள செய்திருக்கிறாரே, அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். திருக்குறளை எந்த வகைகளில் எல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கு, சான்றாக இந்த நிகழ்ச்சியிலே அவர் ஐந்தே நிமிடத்திலே நீங்கள் வந்து மேடையிலே ஏறி, மக்களைப் பார்த்துவிட்டு விடைபெற்றுக் கொள்ளலாம் என்று சொன்ன அந்த வார்த்தையை நம்பி நான் வந்தேன்.
ஆனால் வந்த பிறகு இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்த பிறகு எனக்கே கூட இன்னுமொரு அரைமணிநேரம் இந்த நிகழ்ச்சி நடந்தாலும் பரவாயில்லை, ஏனென்றால் அவ்வளவு இனிமையான நிகழ்ச்சி, அவ்வளவு குளிர்ச்சியான மொழிகள், அவ்வளவு கருணை நிறைந்த மதச்சார்பற்ற நேர்மையான வழிமுறைகள் இவைகள் எல்லாம் இங்கே அமர்ந்திருக்கின்ற நம்முடைய பெரியோர்களாலும், பல நண்பர்களாலும், வழிகாட்டப்பட்டு அதிலே நானும் கலந்து கொள்ளுகின்ற வாய்ப்பை பெற்றிருக்கிறேன் என்பதை காணும்போது இனிகோ அவர்களை நான் கடிந்து கொள்ள தயாராக இல்லை. அவரை நான் பாராட்டுகிறேன். அவருடைய செயலுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அவருடைய பெயர் "இனி-கோ’’ அந்தப் பெயரை நாம் உச்சரித்தாலே இனி - "கோ’’ - "இனி நீ போகலாம்"" என்றுதான் அதற்கு பொருள் விளக்கம். இனி போகலாம் என்றால் இனிகோவைப் போன்றவர்கள் இது போன்ற செயல்களை ஆற்றுவதிலே வல்லவர்கள், தங்கள் பணிகளை ஆற்றி, நிறைவேற்றுவார்களேயானால் அந்தப் பணியிலிருந்து அடுத்து பணிக்கு அவர்கள் போகலாம் இனி "கோ’’ என்ற அந்த ஆங்கில சொற்றொடரை அருமையாக இந்த நிகழ்ச்சியிலே பயன்படுத்தலாம் என்று நான் சொல்லுகின்றேன். எனவே இங்கே நான் பயன்படுத்துகின்றேன்.
இந்த மன்றம் பல ஆண்டுகளாக நம்முடைய இனிகோ போன்ற தம்பிமார்களுடைய அரிய முயற்சியினால் தொடர்ந்து இந்த இலக்கியப் பணியினை, மதச்சார்பற்ற பகுத்தறிவுப் பணியை, மனிதநேயப் பணியை, ஆற்றி வருகிறது. மேலும் ஆற்றி மனித சமுதாயத்திற்கு குறிப்பாக தமிழ் சமுதாயத்திற்கு, சிறப்பாக திராவிட சமுதாயத்திற்கு பலன் விளைவிக்கின்ற பயிராக விளங்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு. அவர் மாத்திரமல்ல; அவரைப் போன்ற இளைஞர்கள் இதுபோன்ற மன்றங்களை அமைத்து, அந்த மன்றங்களில் ஏசுநாதருடைய அருள்மொழிகளை அவருடைய வாழ்க்கைநெறியை பரப்ப -அந்த வாழ்க்கை நெறி மூலமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அரிய பெரிய தத்துவங்களை மனித நேய வளர்ச்சியை பெற வேண்டும் என்பதிலே எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கின்ற நாங்கள், ஒருபுறத்தில் நம்முடைய அருட்தந்தை சின்னப்பா அவர்கள் இருக்கின்றார்கள். ஒரு புறத்திலே அரசியலிலே என்னோடு பழகி நெருங்கிய நண்பராக விளங்கிய, இன்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கின்ற பீட்டர் அல்போன்ஸ் போன்ற தோழர்கள் நண்பர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லாம் சேர்ந்து இந்த நிகழ்ச்சியிலே இன்றைக்கு பல கருத்துகளை எடுத்துக் கூறுகிறோம் என்றால், அந்தக் கருத்துகளை எல்லாம் நீங்கள் உடனடியாகப் பின்பற்றிச் செயல்படுத்த வேண்டும் என்ற தணியாத ஆசையினால் அல்ல. இந்தக் கருத்துகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி, தமிழ்நாட்டிலே உள்ள மக்களைத் தழுவி, அவர்களுடைய உள்ளங்களில் எல்லாம் இடம் பெறக் கூடிய தத்துவங்களுக்கு நல்ல உரமாக விளங்கக் கூடிய ஒரு நிலையை உருவாக்க வேண்டுமென்பதற்காகத் தான் இது போன்ற விழாக்களில் எங்களைப் போன்றவர்கள் சில கருத்துகளைக் கூறுகின்ற வாய்ப்பினைப் பெற்றிருக்கிறோம். இந்த வாய்ப்பினை, தி.மு. கழகத்தைச் சேர்ந்த என்னைப் போன்றவர்கள், எங்களைப் போன்றவர்கள், அல்லது வேறு இயக்கங்களைச் சேர்ந்த பீட்டர் அல்போன்சைப் போன்றவர்கள் - எங்களுடைய கருத்தெல்லாம் மொத்தச் சமுதாயம், மனித சமுதாயமாக, மனித நேயச் சமுதாயமாக வாழ வேண்டும் என்பது தான். அதிலே கிஞ்சிற்றேனும் பிசிறு ஏற்படுமேயானால், அந்தச் சமுதாயத்தில் ஏற்படுத்த வேண்டிய எழுச்சியை, நாங்கள் ஏற்படுத்தத் தவறி விட்டோம் என்று தான் பொருள்.
இங்கே நம்முடைய தம்பி மு.க. ஸ்டாலின் பேசும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் எந்தெந்த வகைகளில் எல்லாம் கிறித்தவ சமுதாயத்திற்கு, கிறித்தவப் பெருமக்களுக்குப் பயன்பட்டிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி, இனியும் பயன்படவிருக்கிறது என்ற நம்பிக்கையையும் இங்கே தொகுத்துச் சொன்னார். தி.மு. கழகத்தின் சமுதாயக் கொள்கையில், மதச் சார்பற்ற - மதங்களைப் புறக்கணிக்கின்ற - மத வாதங்களை நொறுக்கித் தள்ளுகின்ற அந்தக் கொள்கை தான் அன்று முதல் இன்று வரை, பெரியார் காலத்திலிருந்து, பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து, அவர்கள் விட்டுச் சென்ற திராவிட முன்னேற்றக் கழகமாம் இந்த ஆலமரத்தை மேலும் மேலும் வளர்த்து, ஏழை யெளிய மக்களுக்கு, பாட்டாளி மக்களுக்கு, சாதாரண சாமானிய மக்களுக்கு, பாடுபடுகின்ற மக்களுக்கு, தொழிலாளத் தோழர்களுக்கு பெரும் துணையாக நிலை நிறுத்த வேண்டும் என்ற அந்தத் தணியாத ஆசையோடு தான் இந்த இயக்கத்தை நாங்கள் வழி நடத்திக் கொண்டிருக்கிறோம். அதிலே ஒரு துளி தான் இந்த நாள். அதிலும் சாதாரண நாள் அல்ல. உலகத்திலேயே மதச் சார்பற்ற முறையில், மனித நேய உணர்வோடு, மக்களை வழி நடத்தக் கூடிய ஒரு மாபெரும் மத வளர்ச்சியை, குறிப்பாக கிறித்தவச் சமுதாய மக்கள் பயன் பெறுகின்ற அளவுக்கு உருவாக்கி, அப்படி அவர்களுக்குப் பயன்பட்டாலும், மொத்த மனித சமுதாயத்திற்கே பெரும் நன்மைகளை விளைவிக்கக் கூடிய ஒரு மதச்சார்பற்ற நிலை உருவாக வேண்டுமென்பதிலே எங்களுக்குள்ளே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் மதச் சார்பற்ற ஆட்சி வேண்டும். மதச் சார்பற்ற, மனித சமுதாயத்தினுடைய மன்றங்கள் வேண்டும், மதச் சார்பற்ற முறையிலே மதங்களைப் பாவிக்க வேண்டும் என்ற அந்த நிலையை இன்று நாங்கள் மறந்து விடவில்லை. இன்றைக்கல்ல, என்றைக்கும் மதங்களின் பெயரால், மதவாதிகளின் பெயரால், ஆத்தீகத்தின் பெயரால், கடவுளின் பெயரால், கடவுளர்களின் பெயரால், கடவுளுக்கு பூஜை செய்பவர்கள் பெயரால் வளர்க்கப்படுகின்ற, வளர்த்து விடப்படுகின்ற எந்தவொரு காரிய மானாலும், அந்தக் காரியத்தை திராவிட முன்னேற்றக் கழகம், இங்கே உரையாற்றிய நம்முடைய பெருந்தலைவர்கள், பேரன்புக்குரிய சமய சார்புள்ள நண்பர்கள், பெரியவர்கள் அத்தனை பேருடைய துணையோடு, அவர்களை யெல்லாம் துணைக்கு வைத்துக் கொண்டு அந்த மத வாத எண்ணங்களை முறி அடிப்பதிலே தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான வெற்றி இருக்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
இன்றோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில், ஜனநாயக ரீதியில் நடைபெற்று வருகின்ற கழகத்தின் 14வது பொதுத் தேர்தல்கள் முடிவுற்று வெகு விரைவில் தி.மு. கழகத்தின் பொதுக் குழு கூடி, தலைவர் யார், பொதுச் செயலாளர் யார், பொருளாளர் யார், கழகத்தைக் கட்டிக் காக்கக் கூடிய நண்பர்கள் யார் என்பதையெல்லாம் அறிவிக்கவிருக்கிறது. அப்படிப்பட்ட அறிவிப்புக்குப் பிறகு கழகம் நான் முதலிலே சொன்னதைப் போல, தருவாக வளர்ந்திருக்கின்ற இந்தக் கழகம், ஆட்சிப் பொறுப்பிலே இருந்தாலும், இல்லா விட்டாலும், திராவிடச் சமுதாயத்திற்காக, தமிழ் இனத்திற்காக, ஏழையெளிய மக்களுக்காக, தொழிலாளர்களுடைய வர்க்கத்திற்காக தொடர்ந்து பணியாற்றக் கடமைப்பட்டிருக்கிறது, பணியாற்றும். அப்படி பணியாற்றுகின்ற நேரத்தில் எங்களுக்கு இது போன்ற மன்றங்களின் ஒத்துழைப்பு, இது போன்ற தோழர்களின் உதவி, துணை, இவைகள் தேவை என்பதை நான் இந்த நேரத்தில் எடுத்துரைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு அரசியல் இயக்கம் என்று யாரும் கருதிக் கொள்ளக் கூடாது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியலில் சமுதாயமும் கலந்திருக்கிறது. பொருளாதாரக் கொள்கையும் அதிலே கலந் திருக்கின்றது. சமுதாயக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை இவைகளை யெல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மனித நேயக் கட்சி என்ற அளவில் மாத்திரம் நாங்கள் சொல்லவில்லை. எங்கள் மனித நேயத்தில், தமிழ்நாட்டிலே உள்ள மக்கள் மாத்திரமல்ல, இந்தியாவிலே உள்ள மக்கள் மாத்திரமல்ல, இந்தியாவிற்கு வெளியே உள்ள நாடுகளிலே உள்ள மக்கள் எல்லோருக்கும் சேர்த்துத் தான் இந்த மனித நேயத்தை நாங்கள் உருவாக்கி, அந்த நிழலிலே தான் நாங்களும், அவர்களும் பணியாற்றக் கூடிய ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை எவ்வளவு உறுதியானது, மக்களை எவ்வளவு கவரக் கூடியது என்பதை எடுத்துக்காட்ட விருக்கிறோம்.
அதற்குச் சான்றாக இன்றைய விழா நம்முடைய தம்பி ஸ்டாலின் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல எதிர்காலத்தில் நாம் தான் இந்தச் சமுதாயத்தைக் காக்கக் கூடிய, இந்தச் சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடிய ஒரு நல்லரசை ஏற்படுத்த முடியும், அந்த நல்லரசு, நம்முடைய அரசாக இருந்தாலும், இல்லா விட்டாலும், வேறு யாருடையதாக இருந்தாலும், அது நாணயமான அரசாக இருக்க வேண்டும். நீதி நெறி தவறாத அரசாக இருக்க வேண்டும். நாம் கடந்த காலத்தில் இந்தச் சமுதாயத்திற்காக, குறிப்பாகவும் சிறப்பாகவும் கிறிஸ்தவச் சமுதாயத் திற்காக ஆற்றியிருக்கும் அரும் பெரும்பணிகளை யெல்லாம் கிறித்தவ இளைஞர்கள், மாணவர்கள், பெரியோர்கள் உணரக் கூடிய அளவுக்குப் பிரச்சாரத்தைச் செய்திட வேண்டும். அப்படிச் செய்த பிரச்சாரம் இந்த இயக்கத்தை வளர்ப்பதற்காக மாத்திரமல்ல, அவர்கள் எல்லாம் உங்களை உணர்ந்து, இந்த வழியில் நடைபோட வேண்டுமென்பதற்காகத் தான் இதைச் சொல்கிறேன். இதை தயவு செய்து மறந்து விடக் கூடாது என்று கேட்டுக் கொண்டு, இந்த இனிய விழாவில் நான் கலந்து கொண்டதில், உங்களோடு இணைந்து தொண்டாற்ற நாங்களும் வருகிறோம் என்று சூளுரைப்பதில் ஒரு தனிப் பெருமையே கொள்கிறோம் என்று குறிப்பிட்டு, உங்களுக்கெல்லாம் என்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த அளவில் என்னுடைய மகிழ்ச்சியை வெளியிட்டு, நன்றியை அனைவருக்கும் கூறி விடை பெறுகிறேன்.

No comments:

Post a Comment


Labels