வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



31/08/2014

மெல்ல மெல்ல ஆரியம் தமிழகத்திலே தன்னுடைய 
சித்து வேலைகளைத் தொடங்கி விட்டது : கலைஞர்

தமிழக சட்டமன்றப் பேரவை முன்னாள் செயலாளர் எம்.செல்வராஜ் இல்ல மணவிழாவை தலைமையேற்று நடத்தி வைத்து திமுக தலைவர் கலைஞர் ஆற்றிய உரை:

’’இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பாக வரவேற்புரை ஆற்றிய திராவிட முன்னேற்ற க் கழகத்தின் பொருளாளர், தளபதி தம்பி மு.க. ஸ்டாலின் அவர்களே, சட்டப் பேரவையின் முன்னாள் தலைவர் ஆவுடையப்பன் அவர்களே, முதன்மைச் செயலாளர் அருமை நண்பர் ஆற்காட்டார் அவர்களே, துணைப் பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி அவர்களே, மாநிலங்களவையின் கழகக் குழுத் தலைவர் கவிஞர் கனிமொழி அவர்களே, அமைப்புச் செயலாளர்கள், தம்பிகள் டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களே, ஆலந்துhர் பாரதி அவர்களே,  தாய்மார்களே, பெரியோர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, இந்த மண விழா நிகழ்ச்சியில் நம்முடைய சட்டப் பேரவையினுடைய முன்னாள் செயலாளர் அழைப்பின் பேரில் அவருடைய அன்பிற்குரிய நண்பர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். 

இப்போது பதவியில் இருந்தால் என்ன ஆகுமோஎன்ற அச்சத்திற்கு இடமின்றி, எதிர் காலத்திலே நம்முடைய தமிழ்ச் சமுதாயம் வாழ எப்படிப்பட்ட திறமும், வீரமும், நெஞ்சுறுதியும் ஒவ்வொரு தமிழனுக்கும் தேவை என்பதை உணர்த்துகின்ற வகையில், இந்த மணவிழாவினை நடத்து கின்ற நம்முடைய அருமை நண்பர் செல்வராஜ் அவர்கள் நம்மையெல்லாம் வியப்பிலே ஆழ்த்துகின்ற வகையில், அவரே ஒரு சொற்பொழிவை இங்கே ஆற்றி முடித்திருக்கிறார். 

இப்படிப்பட்ட மணவிழாக்களில் நன்றி கூறுவது என்ற பெயரால், மணமக்களுடைய குடும்பத்தார் சார்பில் அனைவருக்கும் நன்றி என்று கூறிவிட்டு அமர்ந்து விடுவார்கள். ஆனால் செல்வ ராஜ் அவர்கள் நீண்ட நேரம் ஒரு உரையையே ஆற்றி எனக்குப் பேசுவதற்கு இடம் தருவாரோ மாட்டாரோ (சிரிப்பு) என்கிற அளவுக்கு ஒவ்வொருவருக்கும் நன்றி கூறி நீண்ட உரை யாற்றி உங்களை யெல்லாம் மகிழச் செய்திருக்கிறார். 

குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால், என்னையும் வியப்பிலே ஆழ்த்தி யிருக்கறார், மகிழ்ச்சியிலே ஆழ்த்தியிருக்கிறார் என்று சொன்னால் அது மிகை யாகாது. சட்டப் பேரவையிலே செயலாளராக இருந்த செல்வராஜா இப்படிப் பேசுகிறார்என்று நான் ஆச்சரியப்ப டுகின்ற அளவுக்கு தன்னுடைய நன்றி உரையை அவர் ஆற்றியிருக்கிறார். 

இந்த மண விழாவில் மணமக்களாக வீற்றிருப்பவர்கள் இருவருமே படித்தவர்கள், கல்வியில் சிறந்தவர்கள், உலகம் அறிந்தவர்கள். செல்வராஜின் அன்பு மகள் செல்வி அனுஷா, வாழ்க்கைத் துணைவராக ஏற்கிற மணமகனின் பெயர் அர்மேஷ்; அதாவது மணமக்கள் அனுஷா, அர்மேஷ் - இரண்டு பெயர் களுமே தமிழ் பெயர்கள் தான் என்று நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று 
இல்லை. 

அந்த இரண்டு பெயர்களும் வடவர்களால் தமிழ்ச் சமுதாயத்தின் மீது ஒரு காலத்தில் திணிக்கப்பட்ட பெயர்கள். ஆனாலும் வழக்கத்தில் வந்து விட்ட காரணத்தால், இனி அதை மாற்றுவதால் அதிலே பல சட்டச் சிக்கல்கள் வரக் கூடும் என்பதை உணர்ந்து அவர்கள் அந்தப் பெயரிலேயே தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு இந்த மணவிழாவினை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை வாழ்க வாழ்க என்று நான் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன். 

குறிப்பாக தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு, அமைதி என்றால் என்ன விலை என்று கேட்கக் கூடிய நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தநேரத்திலும் ஒரு காலத்தில், ஆட்சியில் அலுவலராக, செயலாளராக, எங்களுக்கு உற்றத் துணைவராக இருந்த செல்வராஜ் அவர்கள், அந்த நன்றியை மறவாது,எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதைப் பற்றிக் கவலை  யில்லை, ஆனால் தான் தமிழன், தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பெரும்பணிகளை ஆற்ற வேண்டியவன் என்கின்ற அந்த உணர்வோடு இன்றைக்கு இந்தத் திருமணத்திலே, தன்னுடைய வீட்டுச் செல்வங்களுக்கு தமிழ் முறைப்படி, தமிழர்களுடைய நாகரிகத்தின் அடிப்படையில் இந்தத் திருமணத்தை நடத்தியிருப்பது பெரிதும் பாராட்டுக்குரிய ஒன்றாகும். நாம் மகிழத்தக்க ஒரு நிகழ்ச்சி யாகும். 

இதை நான் ஏன் மகிழத் தக்க நிகழ்ச்சி, பாராட்டுக்குரிய நிகழ்ச்சி என்று சொல்கிறேன் என்றால், இன்றையதினம் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள படிப்படியான தீமைகளை யெல்லாம் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று நம்முடைய கையிலே தமிழுக்கு ஏற்றம் தரக் கூடிய எந்த சக்தியையும் நாம் படைத்திருக்க வில்லை. என்னால் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல முடியும். நான் தமிழகத்தின் முதலமைச்சராக ஐந்து முறையும், தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக பன்னிரண்டு முறையும், சட்டப் பேரவை உறுப்பினராக ஏறத்தாழ 50 ஆண்டுக் காலம் இருந்தவன் என்ற முறையில் உங்களோடு பழகியவன், பழகிக் கொண்டிருக்கிறவன், மேலும் பழகப் போகிறவன்
என்ற வகையில் சில அபாய அறிவிப்புகளை நீங்கள் மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன். 

நம்முடைய தமிழ்ச் சமுதாயம் வாழ்வதற்காகப் பாடுபட்டவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார் என்று ஒருவர் இருந்தார். அவர் தமிழ் நெறி, தமிழ் முறை, தமிழ் நலன், தமிழ் இயக்கம், இதற்காக தன்னையே ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்தவர். அவர் நம்முடைய இல்லங்களிலே நடைபெறுகின்ற விழா வானாலும், நாம் நடத்துகின்ற பெரு விழாக்களானாலும், அந்த விழாக்களில் எல்லாம் தமிழைப் போற்றுங்கள், தமிழை வாழ்த்துங்கள், தமிழர்கள் இலக்கியங்களை மறவாமல் அவற்றைப் பின்பற்றுங்கள் என்பதைச் சொல்லிச் சொல்லி மக்கள் மனதிலே பதிய வைப்பார். அப்படிப்பட்ட அந்தப் பாரதியார், நாவலர் பாரதியார் ஒன்றைச் சொல்வார். நம்மை இன்றைக்கு சீரழிக்க வந்துள்ள 
மொழி ஆதிக்கத்திற்குப் பெயர் “சஞ்சுகிருதம்” என்று சொல்லுவார்.

 அதாவதுசமஸ்கிருதத்தை அவ்வளவு கிண்டலாக, கேலியாக, “சஞ்சுகிருதத்தை”   யாரும் பின்பற்றாதீர்கள் என்று சொல்லுவார். அப்படிப்பட்ட பெரியவர்கள், தியாகச்செம்மல்கள், தமிழ்ச் சான்றோர்கள் வாழ்ந்த தமிழ் நிலத்தில் இன்றைக்கு தமிழ்த்திருமணத்தை நடத்திக் கொள்கின்ற நேரத்தில் ஒன்றை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவர் சொன்ன அந்த “சஞ்சுகிருதம்” - அவர்கேலியாகச் சொன்ன, ஏளனமாகச் சொன்ன, அந்த சஞ்சுகிருதம் இன்றைக்கு தமிழ்நாட்டில் சமஸ்கிரத வாரமாகக் கொண்டாடப்பட வேண்டுமென்று சொல்கிற 
அளவுக்கு ஓங்கி வளர்ந்திருக்கின்றது. 

அது மாத்திரமல்ல; இன்றைக்கு காலையிலே நான் பத்திரிகையிலே படித்த ஒரு செய்தியில், என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், இனிமேல் “ஆசிரியர் தினம்” என்பதற்குப் பதிலாக “குரு உத்சவ்” என்ற பெயரில் அதைக் கொண்டாட வேண்டுமென்று மத்திய அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் 
சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக செய்தி வெளி வந்துள்ளது.

 ஆசிரியர் தினம் என்பதை நாம் ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடித்து வருகிறோம். அந்தச்  சொல்லை மாற்றி இன்றைக்கு வந்துள்ள மத்திய புதிய அரசு வெளியிட்டு ஆணை, இனிமேல் அனைத்துப் பள்ளிகளிலும் “குரு உத்சவ்” என்று தான் ஆசிரியர் தினத்தை அழைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். 

இப்படி நம்முடைய மொழியில் முதலில் கை வைத்து, அதை வீழ்த்தி விட்டு, அதற்குப் பிறகு இந்த மொழிக்குரியவர்களை, இந்த மொழியால் உயர்ந்தவர்களை, இந்த மொழியால் தங்களை வருத்திக் கொண்டவர்களை வீழ்த்தி விட கொஞ்சம் கொஞ்சமாக, சிறிது சிறிதாக சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு எந்த உதாரணமும் தேவையில்லை. ஆகவே தான் நாம் இந்தத் திருமணத்தை தமிழர் முறைப்படி நடத்திக் கொண்டாலுங்கூட, இந்தத் தமிழர் முறைகளுக்கு வேட்டு வைக்கின்ற அளவுக்கு மெல்ல மெல்ல ஆரியம் தமிழகத்திலே தன்னுடைய சித்து வேலைகளைத் தொடங்கி விட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

சமுதாயத் துறையிலே திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபாடு கொண்டு இத்தகைய செய்திகளை யெல்லாம் வெளியிடா விட்டால், தமிழன் மேலும் அடிமைப்பட்டுப் போய் விடுவான் என்பதை ஞாபகத்திலே வைத்துக் கொண்டு, அந்த ஞாபகத்தை சிறிதும் மறவாமல் தமிழர்களுக்காக, தமிழன் வாழ வேண்டும், தமிழ்ச் சமுதாயத்திற்காக உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும் என்ற அந்த உணர்வோடு செயல்படுங்கள் என்று நான் இந்தத் திருமண விழாவிலே அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

 இந்த மணவிழாவிலே உரை யாற்றிய, நன்றி உரையாற்றிய நம்முடைய அருமை நண்பர், சட்டப் பேரவையின் முன்னாள் செயலாளர் தம்பி செல்வராஜ் கழகத்திற்கு, கழகக் கொள்கைக ளுக்குஎவ்வளவு உடன்பாடானவர் என்பதை நான் அறிந்திருந்தாலுங்கூட, அவர் வேலை பார்த்த நேரத்தில், அவர் அலுவலகத்திலே பணியாற்றிய நேரத்தில், அந்தக் கொள்கைகளை முன் வைத்து, அவருடைய உழைப்பை, அவருடைய செயலாற்றலை முன் வைத்து இந்த இயக்கத்தை, இந்த அரசை நடத்த வேண்டு மென்று எண்ணினாரே தவிர எந்த நேரத்திலும் அவர் தன்னுடைய சுயநலத்திற்கு அல்லது அமைச்சர்களே கூட, நானே கூட, தவறாக ஒன்றைச் செய்தால் அதை என்பால் உணர்த்தி, திருத்தி, சட்டமன்றம் ஜனநாயக மன்றம், அந்த ஜனநாயகத்திற்கு கேடு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அழுத்தந்திருத்த மான கருத்து உடையவராகத் திகழ்ந்தார். அதனால் தான் ஜனநாயக முறையில் ஆட்சி ஒன்று கடந்த காலத்தில் நடைபெற்றது என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்றால் அதற்கெல்லாம் காரணம், நம்முடைய செல்வராஜைப் போன்ற நண்பர்கள் ஜனநாயகத்திலே கொண்டிருந்த பற்றும், அந்தப் பற்று கொண்டிருந்த எங்கள் 
பால் அவர்கள் கொண்டிருந்த பரிவும் அன்பும் தான் காரணம் என்பதை எடுத்துச் சொல்லி, அப்படிப்பட்ட நல்ல அலுவலாளர்கள், நல்ல செயலாளர்கள் யாராவது வாய்த்தால், அவர்களைப் பாராட்டி, புகழ்ந்து, அவர்கள் வழி நடந்து, தாங்கள் கொண்டிருக்கின்ற எந்தக் காரியமாயினும், அதைத் தமிழ் வழியில், தமிழர் களுடைய வழியில் சிறப்பாக, செம்மையாகச் செய்து, பெரியாருக்கு,பேரறிஞர் அண்ணாவுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அந்த மூன்று தாரக மந்திரங்களையும் மறவாதவர்கள் என்ற அந்த ஒரு நிலையை எடுத்துச் சொல்வதற்காக நான் இதைக் குறிப்பிட்டேன் என்பதை இங்கே கூறி, நம்முடைய அனுஷா அவர்களும், அரிமேஷ் அவர்களும் இல்வாழ்க்கையை இனிது நடத்தி, எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிட வேண்டுமென்று வாழ்த்தி வாழ்க வாழ்க மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ்க என்று என்னுடைய வாழ்த்துகளை இணைத்துக் கொள்கிறேன். ’’

நன்றி நக்கீரன்

No comments:

Post a Comment


Labels