வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



28/02/2013

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஏனோதானோன்னு பராமரிக்கும் ஜெ. அரசு: கருணாநிதி தாக்கு

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதிமுக அரசு ஏனோதானோவென்று அலட்சியமாக நடத்தி வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"கோட்டூர்புரத்திலே உள்ள புகழ் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் எதுவும் முறையாக நடப்பதாகத் தோன்றவில்லை. ஆசியாவிலே 2010ம் ஆண்டு ஜுலைத் திங்களில் திறமை வாய்ந்த புகழுக்குரிய நூலகம் என்று பெயர் பெற்றது இந்த நூலகம் - நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டிருந்தது - ஆனால் தற்போது இங்கே என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிவிக்கும் பட்டியலே இயங்காத நிலையில் படிக்க வருவோருக்கு புத்தகங்கள் எங்கே உள்ளன என்பதைத் தேடுவதே மிகுந்த சிரமமாக உள்ளது.
நூலகத்திற்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி இன்னும் தொடங்கப்படவே இல்லை. நூல்களை வழங்குவதிலும், திரும்பப் பெறுவதிலும் நூலக அறிவியல் திட்டங்கள் இன்னும் அறிமுகப்படுத்தவே இல்லை.
ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய ஆராய்ச்சியை முறையாக நடத்தி முடிப்பதற்கு இந்த நூலகம் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிகம் பேர் அமர்ந்து படிப்பதற்குத் தேவையான இடவசதி இருந்தும் ஒரு அறை மட்டுமே பயன்படுத்தப்பட அனுமதிக்கப்படுவதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
போட்டித் தேர்வுக்குத் தயார் செய்யும் மாணவர்களுக்குத் தேவையான செய்தித்தாள்கள், மாத இதழ்கள் மற்றும் நூல்கள் இல்லாததாலும், அவ்வப்போது புதிதாக வாங்குவதற்கு அனுமதியில்லாததாலும், அவர்களும் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்கள். நூலகத்தில் வந்து படிப்போருக்கு ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள வசதிகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை" என்று ஒரு ஆங்கில நாளேடு எழுதியிருக்கின்றது.
அதிமுக ஆட்சி தொடங்கியவுடனேயே பேரறிஞர் அண்ணா நினைவு நூலகத்தை ஜெயலலிதா எழும்பூரில் உள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்போவதாகவும், தற்போதுள்ள கட்டிடத்தில் குழந்தைகள் மருத்துவமனை தொடங்கப் போவதாகவும் அறிவித்தார்.
அது குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு "இப்படி ஒரு அருமையான, நவீன வசதி கொண்ட, நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்ட சிறந்த நூலகத்தை இடம் மாற்றம் செய்வது ஏன்? மருத்துவமனை கட்டுவதென்றால் மெரினா கடற்கரையில் கட்டலாமே! அரசின் இந்த முடிவு உள்நோக்கம் கொண்டது" என்று குறிப்பிட்டனர்.
நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்ட பிறகு, வேறு வழியில்லாமல் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் கழக அரசு தொடங்கிய இடத்திலேயே நடந்து வருகிறது. ஆனால் நூலகத்திற்குச் சென்று படிப்போர் முழுமையாகப் பயன்படுத்த முடியாத அளவிற்கு, முறையாக நடத்தாமல், ஏனோதானோவென்று அலட்சிய உணர்வோடு அதிமுக அரசு எந்த அளவிற்குப் புறக்கணித்து வருகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment


Labels