வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



28/02/2013

ஸ்டாலினைப் பெற்றதற்காகப் பெருமைப்படுகிறேன்... சென்னை விழாவில் உருகிய கருணாநிதி
 Karunanidhi Is Proud Having Stalin
சென்னை: மு.க.ஸ்டாலினைப் பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
மு.க.ஸ்டாலினுக்கு 60 வயது நிறைவடைகிறது. இது அவருக்கு மணிவிழா ஆண்டாகும். நாளை அவர் தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடுகிறார். தனது பிறந்த நாளை தான் ஆடம்பரமாக கொண்டாடப்போவதில்லை என்று ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், தென் சென்னை திமுக சார்பில் 60 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்தி வைக்கும் வைபவம் இன்று சென்னையில் நடந்தது. திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது ஸ்டாலினை வெகுவாகப் புகழ்ந்து பேசினார் கருணாநிதி.
கருணாநிதி பேசுகையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணி விழாவை முன்னிட்டு இளைஞர்கள் எழுச்சி நாள் விழா கொண்டாடப்படுகிறது. இங்கு பேசியவர்கள் எல்லாம் என்னை பாராட்டினார்கள் அதற்கு காரணம் மு.க.ஸ்டாலின் என் மகன். எனது அருமை செல்வன் என்பதற்காகத்தான். அதற்காக நான் பெருமை படுகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.
எந்த தந்தைக்கும் இல்லாத பெருமையை அடைகிறேன். காரணம் ஒரு மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இந்த மகனை பெற இந்த தந்தை என்ன தவம் செய்தாரோ என்று ஊரார் பேச வேண்டும் என்று வள்ளுவர் கூறியுள்ளார். அந்த வள்ளுவர் வழியில் நடைபோடும் இயக்கம்தான் திமுக.
இந்த இயக்கத்தின் சிறப்பு ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்து பாடுபடும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவுக்கே வரும் நெருக்கடிகளை கண்டு, கேட்டு, சென்று தீர்த்து வந்துள்ளது.
அப்படிப்பட்ட பரந்த நோக்கமும் உலக தமிழர்களை பாதுகாக்கும் இன உணர்வும் கொண்டவர்கள் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் மு.க.ஸ்டாலின். அவர் மீதான தியாகத் தழும்புகளை வரலாற்று பகுதிகள் எடுத்துக்காட்டும் அப்படிப்பட்ட தியாகசீலர்களை இந்த இயக்கம் பெற்று வளர்ந்துள்ளது.
அப்படிப்பட்ட இயக்கத்தில் இருக்கும் இளைஞர்களை சிறிய அளவில் ஒரு அணியாக உருவாக்கி இளைஞர் அணி என்ற பெயரில் உருவாக்கி தலைமை கழகமும், ஆதரிக்க வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்கிய பெருமை மு.க.ஸ்டாலினுக்கு உண்டு.
சில அணிகள் பிணிகளாக மாறி விடுகிறது. ஆனால் அணியை பிணியாக்காமல் அணியாகவே வைத்திருக்கும் பொறுப்பை எனதருமைச் செல்வன் மு.க.ஸ்டாலின் வைத்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. அந்த செல்வனுக்கு அந்த மணி விழா நாயகனை பாராட்டும் நேரத்தில் இயக்கத்தை கட்டுக்கோப்புடனும், கட்டுப் பாட்டோடும், அண்ணா கற்று தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை மனதில் கொண்டு இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும். அதுதான் இந்த இயக்கத்தை மென்மேலும் வலுப்படுத்தும் என்பதை மனதில் தாங்கி இந்த நேரத்தில் சூளுரையாக ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டிய, இயக்கத்தின் மானத்தை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது என்பதை நினைத்தால்தான் எல்லா அணிகளும் சிறப்பாக செயல்பட முடியும். திராவிட இயக்கத்தை பலப்படுத்துவதில் எதிரிகள் பார்த்து அச்சப்படும் அளவுக்கு இயக்கத்தை வளர்ப்பதுதான் மு.க.ஸ்டாலின் சார்பாக நான் கொடுக்கும் வேண்டுகோள் ஆகும். இதை மதித்து ஒவ்வொரு வரும் இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முக.ஸ்டாலினை வாழ்த்துகிறேன் என்றார் கருணாநிதி.

No comments:

Post a Comment


Labels