வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



26/02/2013

இலங்கைக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் அணி அணியாக கலந்து கொள்ள வேண்டும்: கலைஞர்
 
 
இலங்கைக்கு எதிராக டெசோ அமைப்பு சார்வில் மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் அணி அணியாக கலந்து கொள்ள வேண்டும் என திமுக தலைவர் கலைஞர் அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிங்கள அதிபர் ராஜபக்சேவின் ராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரனை கொடுமையாகச் சுட்டுக் கொன்றுள்ளது.
தாக்குதல்கள் நடததக்கூடாதென வரையறுக்கப்பட்ட பகுதிகளில் சிங்கள ராணுவம் அத்துமீறி கொடூரத் தாக்குதல்களை நடத்தி, ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்களை இரக்கமின்றி கொன்று குவித்த காட்சிகளை லண்டனைச் சேர்ந்த சேனல் 4 நிறுவனம் ஆவணப்படமாக வெளியிட்டுள்ளது.
பெண்கள் சீரழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காட்சிகளும், ஆண்களை நிர்வாணமாக்கி சுட்டுக் கொல்கின்ற காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன. இதயம் படைத்த யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத போர்க் குற்றங்களை சிங்கள அரசு செய்துள்ளது என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளாக அவை உள்ளன.
மணந்தவனை மரத்திலே பிணைத்துவிட்டு அவன் மனைவி அவன் கண்ணுக்கு நேராகவே மானபங்கப்படுத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவங்கள் இலங்கையில் நடைபெற்றதெல்லாம் மறந்தா போய்விட்டது?
இலங்கையில் அத்துமீறல் நடந்தது உண்மைதான் என்று அறிக்கை ஒன்றினை உண்மை கண்டறியும் குழு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்தது. அந்த குற்றச்சாட்டுகளை இலங்கை மறுத்ததோடு நிவாரணப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியது.
அவை உண்மையா என்று அறிய இலங்கைக்கு அமெரிக்கா அனுப்பிய குழு, நிவாரணப் பணிகளில் மன நிறைவு இல்லை என்று தெரிவித்தது. அதன் அடிப்படையில்தான் அமெரிக்கா மேலும் ஒரு தீர்மானத்தை தயாரித்துள்ளது. ஜெனீவாவில் மார்ச் மாத இறுதியில் அத்தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. 
இலங்கையில் நடைபெறும் கொடுமைகள் இன்று நேற்றல்ல, தந்தை செல்வாவின் காலத்தி-ருந்தே, தமிழன் என்றாலே அவனைத் தாக்கிக் கொன்று குவிக்கிற அளவுக்கு சிங்கள வெளி அப்போதே தலைதூக்கியது. தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்டோரை சிறைச்சாலையிலேயே கொலை செய்து அவர்களது கண்களைப் பிடுங்கி கீழே போட்டு மிதித்த கொடுமையெல்லாம் நடைபெற்றது.
இந்த வேதனைகளையெல்லாம் நினைவுபடுத்தி இலங்கை இனவாத அதிபர் ராஜபக்சே ஒரு சர்வதேச போர்க்குற்றவாளி என்று உணரச் செய்வதற்காகத்தான், வரும் மார்ச் 5ஆம் தேதியன்று சென்னையில் இலங்கைத் தூதரகத்தை டெசோ இயக்கத்தின் சார்பில் முற்றுகையிடும் அறப்போராட்டமும், அதே நாளில் இந்திய தலைநகரான டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஜனநாயக வழியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் திமுக உறுப்பினர்கள் மட்டுமின்றி, டெசோ அமைப்பில் இடம்பெற்றுள்ள இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் அணி அணியாக கலந்து கொண்டு வெற்றியாக்கித் தர வேண்டும். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels