வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



26/01/2013

வருகிறது ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டம்! சென்னையில் 4-ந் தேதி 'டெசோ' ஆலோசனை!

சென்னை: ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடரில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக ஆலோசிக்க 'டெசோ' அமைப்பின் கூட்டம் வரும் 4-ந் தேதி நடைபெறும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழர்களை கொல்வதற்கு காரணமாக இருக்கும் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவிலே எந்த பகுதியிலும் பயிற்சி அளிக்கக்கூடாது என்பதுதான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள். அந்த வேண்டுகோளை இந்திய அரசிடம் நாம் பலமுறை விடுத்து விளக்கியுள்ளோம்.இந்தியாவிலே இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கமாட்டோம் என்று இந்திய அரசின் சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்க அவர்களால் இயலவில்லை. நேற்றைய தினம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, இலங்கையில் தமிழர் மறுவாழ்வு பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை என்று கூறியிருக்கிறார்.
பேபி, யோகி, புதுவை ரத்தினதுரை கதி என்ன?
சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா, லண்டனில் இருந்து கண்ணன், நார்வேயிலிருந்து சிவகணேசன் ஆகியோர் எனக்கு ஒரு தகவலை அனுப்பியிருந்தனர். அதன்படி, 2009 போர் முடிந்தவுடன் இளங்குமரன் என்ற பேபி சுப்பிரமணியம், யோகி, கவிஞர் புதுவை ரத்தினதுரை, பாலகுமாரன், இளம்பரிதி ஆகியோருடன் 18 ஆயிரம் தமிழர்கள் சிறை வைக்கப்பட்டனர்.அவர்களுடைய தற்போதைய நிலை என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து யோகியின் மனைவி யோகரத்தினம் யோகி; கவலையுடன் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது, ஈழக் கவிஞர் புதுவை ரத்தினதுரை எங்குள்ளார் என்று தெரியவில்லை என்றும், ஒரு சிலர் அவர் சாகடிக்கப்பட்டு விட்டார் என்றும் சொல்கின்றனர். ஈழப் பிரச்சினையில் ஆர்வத்தோடு களப்பணியாற்றிய கவிஞர் ரத்தினதுரையின் உயிர், கேள்விக்குறியாக உள்ளது என்றெல்லாம் தெரிவித்து இதைப்பற்றி நான் வினா எழுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
20-1-2013 அன்று நான் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் எழுதிய நீண்ட கடிதத்தில், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வரும் அத்துமீறல் மற்றும் அராஜக நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
ஜெனிவா கூட்டம்
வருகிற மார்ச் திங்களில் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனிதஉரிமை சபையின் கூட்டத்தொடர் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி விரிவாக விவாதிக்கும் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது. உலக நாடுகளின் கடுமையான கண்டனங்கள் இலங்கை அரசுக்கு எதிராக அப்போது தெரிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா நிலைப்பாடு
அந்த நேரத்தில் நம்முடைய இந்தியா, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக உறுதியான நிலைப்பாட்டினை மேற்கொள்ளவேண்டுமென்பதே தமிழகத்தில் வாழும் தமிழர்களின் விருப்பமும் வேண்டுகோளுமாகும்.இதைப்பற்றியெல்லாம் விரிவாக விவாதித்திடத்தான் 4-ந் தேதி அன்று மாலையில் அண்ணா அறிவாலயத்தில் டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறவுள்ளது. நான் எழுதியுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அந்த கூட்டத்தில் விவாதித்து; துன்பச் சூறாவளியில் துவண்டு கொண்டிருக்கும் இலங்கை தமிழர்களின் வாழ்வில் நல்லொளி பரவிட நல்ல முடிவுகளை எடுப்போம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels