வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



26/01/2013

அனைத்து வளமும் கொண்ட தமிழ் ஏன் மத்திய ஆட்சி மொழியாகக் கூடாது?: கருணாநிதி கேள்வி


 Tamil Deserves Official Languages States  

சென்னை: 2000 ஆண்டு தொன்மை வாய்ந்த தமிழ் அனைத்து வளங்களும் கொண்டது. எனவே தமிழுக்கு மத்திய ஆட்சிமொழியாகும் தகுதி உண்டு என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமையேற்று பேசிய கருணாநிதி கூறியதாவது:
ஹிந்தி படிக்காவிட்டால் வேலை கிடைக்காது என்று சொல்கிறார்கள். ஹிந்தி படித்த வடநாட்டினர் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். ஹிந்தி படிப்பதால் நமது தாய்மொழியான தமிழ்மொழி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படும், ஆட்சிமொழியாகாது.
தமிழ் தொன்மையானது
நாட்டில் எல்லா மொழிகளுக்கும் ஆட்சிமொழியாகும் தகுதி உண்டு. தங்கள் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்று ஒவ்வொரு மாநில மக்களும் ஆசைப்படலாம். அது நடைமுறையில் முடியாது என்றால், எந்த மொழியெல்லாம் ஆக முடியுமோ அதை ஆட்சி மொழியாக்குங்கள். அப்படி மற்ற மொழிகளால் முடியாவிட்டால் இலக்கண வளம், இலக்கிய வளம், கவிதை வளம் என இத்தனை வளமும் பெற்ற எங்கள் தமிழுக்கு ஆட்சிமொழியாகும் தகுதி உண்டு. தமிழுக்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய, இலக்கண வளமும் உண்டு.
அண்ணாவின் ஆசையை நிறைவேற்ற திட்டம்
தமிழை ஆட்சி மொழியாக்குங்கள் என்று திருச்சியிலே நடைபெற்ற திமுக மாநாட்டில் அண்ணாவும் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் உள்ள மற்ற மக்களெல்லாம் யார் யார் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் ஏற்றுக்கொள்கிற மொழியாக தமிழ் மொழியை ஆக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் திட்டம்.
டெல்லியில் யார் அமர்ந்தாலும் தமிழுக்கு கெடுதல் செய்யக்கூடாது. தமிழுக்கு கடுகளவு துன்பம் வந்தாலும் தமிழன் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டான்.தமிழை மட்டும் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று கேட்கவில்லை. தமிழும் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.
செம்மொழிக்கு எதிரான ஜெ
தமிழை செம்மொழியாக்குவதற்குக் கூட சிலபேர் தகுதிகள் இல்லை என்று வாதாடினார்கள். ஹீப்ரு, லத்தீன் போன்ற மொழிகள் எல்லாம் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ள நிலையில், தமிழுக்கும் செம்மொழி தகுதி உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் கேட்டேன். அதை ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பிக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதா செம்மொழிக்கு எதிராக உள்ளார்.
இருளாட்சி நடைபெறுகிறது.
தமிழ் உணர்வைப் பட்டுபோகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆட்சி இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு சரியான பட்டப் பெயர் வைக்க வேண்டுமானால் இருளாட்சி என்று வைக்கலாம் என்றார் கருணாநிதி.

No comments:

Post a Comment


Labels