வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



10/07/2017

சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை 
விமர்சிக்க ஓ.பி.எஸ்.க்கு துணிச்சல் 
இருக்கிறதா? ஸ்டாலின் கேள்வி

“பா.ஜ.க.,வின் முகமூடியாக செயல்படுவதில் தனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ள கடுமையான போட்டியில் தி.மு.க.,வை வீணாக வம்புக்கு இழுத்து ‘டெல்லியில்’ உள்ள தனது ஆசான்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்ள ஓ. பன்னீர்செல்வம் முயற்சிக்கிறார்” என திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மீண்டும் அதிகாரத்திற்கு வந்து விட்டால் இன்னும் நான்கு வருடம் கொள்ளையடிக்கலாமே என்ற ஆசையில் ‘இணைந்து கொள்ள’ ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தும் திரு. ஓ. பன்னீர்செல்வம் பொதுக்கூட்டங்களில் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, துணிச்சல் இருந்தால் முதலில் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கவாவது முன்வரட்டும் என்றும் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
“எடப்பாடி தலைமையிலான அரசு ஸ்டாலினுடன் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது”, என்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உளறிக் கொட்டியிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். ஆக்கபூர்வமான கொள்கைகள் ஏதும் இல்லாமல் அரசியலில் கொடிபிடிக்க ஆசைப்படும் அவர் அசிங்கமான குற்றச்சாட்டை கூறுவது எந்த அதிகாரமும் இல்லாமல் போய் விட்டதே என்ற ஆதங்கத்தில் அவர் துடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களும், பிரதான எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும் முதலமைச்சராக இருக்கும் திரு. எடப்பாடி பழனிசாமியின் குதிரை பேர அரசின் முகத்திரையை தினமும் கிழித்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் வாய்க்கு வந்தபடி பேசி அலைகிறார். சட்டமன்றத்திற்குள் நடக்கும் தி.மு.க.,வின் ஆக்கபூர்வமான விவாதங்களை, குதிரை பேர அரசின் மீது கிளப்பும் ஊழல் புகார்களை மூடி மறைக்க முயன்று வருவோரின் பட்டியலில் ‘இலவச இணைப்பாக’ ஓ. பன்னீர்செல்வமும் சேர்ந்திருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க.,வின் முகமூடியாக செயல்படுவதில் தனக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ள கடுமையான போட்டியில் தி.மு.க.,வை வீணாக வம்புக்கு இழுத்து ‘டெல்லியில்’ உள்ள தனது ஆசான்களிடம் நல்ல பெயர் வாங்கிக்கொள்ள ஓ. பன்னீர்செல்வம் முயற்சிப்பது மட்டும் நன்கு தெரிகிறது.

கூவத்தூரில் மிகப்பெரிய ‘கொண்டாட்டம்’ நடத்தி, கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தபோது ‘இரகசிய கூட்டணி’ அமைத்து திரு. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பாடுபட்டவர் ஓ. பன்னீர் செல்வம்.  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று அவரது சமாதியில் ஒரு ‘மவுன விரத’ நாடகத்தை நடத்தி விட்டு, பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து கொள்ள ‘இரகசிய பேச்சுவார்த்தை’ நடத்தியது திரு ஓ. பன்னீர்செல்வம். அந்த பேச்சுவார்த்தை அம்பலத்திற்கு வந்ததும் ஒரு கமிட்டியை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தியதும் இதே பன்னீர்செல்வம்தான். இப்போது முதலமைச்சர் பதவி கிடைக்காது என்று தெரிந்தவுடன், “கமிட்டி கலைப்பு”, “இணைப்பு கிடையாது” என்றெல்லாம் வெளியில் கதை அளந்துவிட்டு, திரைமறைவில் இன்னமும் இணைப்பதற்கு ஹோட்டல் ஹோட்டலாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருபவர் ஓ. பன்னீர்செல்வம்தான். ஒன்றுகூடி தமிழகத்தை கொள்ளையடித்த இரு அணிகளின் சார்பிலும் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும்’ பா.ஜ.க நிறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் கைதூக்கி நின்றபோது எந்த மாதிரி ரகசிய கூட்டணியை திரு. எடப்பாடி பழனிசாமியுடன் அவர் வைத்துக் கொண்டார்? அதிமுக.,விற்குள் உள்ள இரு அணிகளுக்கும் இடையில் உள்ள ‘ரகசிய கூட்டணியின்’ வெளிப்பாடுதான் அப்படி இருவரும் டெல்லியில் நின்று காட்சியளித்தது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாதா? ‘பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டு’ என்று ஓ. பன்னீர்செல்வம் ஊழலில் திளைத்து விட்டு உத்தமம் வேடம் போடலாமா?


ஆர்.கே.நகர் தொகுதியில் 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது பற்றி நான் பிரச்னை எழுப்பியபோது திரு. ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில்தான் இருந்தார். அப்போது ஏன் வழக்குபோட வேண்டும் என்று அவர் கேட்கவில்லை? சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கேள்விகேட்க துணிச்சல் இல்லாத திரு. ஓ. பன்னீர்செல்வம் இராமநாதபுரத்தில் போய் நின்று கொண்டு “ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் ரகசிய கூட்டணி” என்று பேசுவது தி.மு.க.,விற்கு கிடைத்துவரும் மக்கள் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது டெல்லி ஆசான்களின் வழிகாட்டுதலில் கூறும் உப்புச்சப்பு இல்லாத குற்றச்சாட்டு. ‘குட்கா டைரி’ ஊழல், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோடி கோடியாக பணம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்பியபோதெல்லாம் ‘மவுன விரதம்’ இருந்து விட்டு, இன்றைக்கு அபாண்டமான குற்றச்சாட்டுகளில் திரு. ஓ. பன்னீர்செல்வம் ஈடுபடுவது அரசியலில் ‘விபத்தால்’ கிடைத்த இடமும் பறிபோய்விட்டதே என்ற ஆதங்கத்தில் இருக்கிறார் என்று புரிகிறது. ஆனால், மணல் குவாரிகள் ஊழல், பொதுப்பணித்துறை முறைகேடுகள், சேகர் ரெட்டி தொடர்புகள், முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டே கூவத்தூரில் கோடி கோடியாக பணம் கொடுக்க ரகசியமாக ஒத்துழைப்பு வழங்கியது போன்ற பயங்கரமான வழக்குகளில் தான் மாட்டிக்கொள்ள நேரிடும் என்ற அச்சத்தில் ‘தான் தப்பித்துக் கொள்வதற்காக’ இல்லாத கூட்டணியை இருப்பது போல் சித்தரிக்க முயலும் திரு. ஓ. பன்னீர்செல்வம் இந்த ரவுண்டிலும் தோல்வியை தழுவுவார் என்பதில் சந்தேகமில்லை. உள்ளபடியே, திரு. எடப்பாடி பழனிசாமி அரசு நீடிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்று ஓ. பன்னீர்செல்வம் நினைத்தால் குதிரை பேர அரசு மீது சட்டமன்றத்தில் குற்றச்சாட்டுகளை வைக்க அஞ்சுவது ஏன்?  சேகர் ரெட்டியின் மணல் குவாரி ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி முதலமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நேருக்கு நேர் கேள்வி எழுப்ப ஏன் ஓ. பன்னீர்செல்வத்திற்கு தெம்பும், திராணியும் இல்லை? ஆகவே தி.மு.க.,வின் மீது அபாண்டமாக பழி சுமத்தி, டெல்லியில் உள்ளவர்களுக்கு ‘ஆளவட்டம்’ போடும் முயற்சியை கைவிட வேண்டும் என்று திரு. ஓ. பன்னீர்செல்வத்தை கேட்டுக் கொள்கிறேன்.

ஊழலில் ஒன்றாக திளைத்தவர்கள், துறைவாரியாக பட்டியல் போட்டு வசூலித்தவர்கள், சதவீத கணக்கில் காண்டிராக்டில் ஊழல் பணத்தை சேர்த்தவர்கள், ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு திருமதி. சசிகலா குடும்பத்திற்கு ‘கும்பிடு’ போட்டு கோடி கோடியாக சம்பாதித்து கொடுத்தவர்கள் இன்றைக்கு ‘புனித வேடம்’ போட்டுக் கொள்ளட்டும். அது அவர்களின் உள்கட்சி பிரச்சினை. ஆனால், அந்த ஊழலில் மூழ்கிக் கிடக்கும் திரு. ஓ. பன்னீர்செல்வத்திற்கு தி.மு.க.,வை வம்புக்கு இழுக்க எந்த தகுதியும் இல்லை என்பதை மாத்திரம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மீண்டும் அதிகாரத்திற்கு வந்து விட்டால் இன்னும் நான்கு வருடம் கொள்ளையடிக்கலாமே என்ற ஆசையில் ‘இணைந்து கொள்ள’ ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தும் திரு. ஓ. பன்னீர்செல்வம் பொதுக்கூட்டங்களில் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, துணிச்சல் இருந்தால் முதலில் சட்டமன்றத்தில் திரு. எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கவாவது முன்வரட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

  



                                       

No comments:

Post a Comment


Labels