வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

03/04/2017

இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி தமிழகத்துக்கு விடிவுகாலத்தை ஏற்படுத்தும் - மு.க.ஸ்டாலின் உரை

- கழக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உரை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (02-04-2017) திமுக வர்த்தகர் அணியின் மாநில செயலாளர் பாண்டி செல்வம் அவர்களின் இல்லத்தில் பங்கேற்றார். இதனைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமை தேர்தல் பணிமனையில் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்
 
திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி தளபதி அவர்கள் ஆற்றிய உரை விவரம்:

மதிப்புக்குரிய தொழிலதிபர் சந்தோஷம் அவர்களே, பேரன்புக்குரிய பேராயர் ஐயா எஸ்ரா சற்குணம் அவர்களே, கவிஞர் காசி முத்துமாணிக்கம் அவர்களே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடிய மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் அவர்களே, மேடையில் வீற்றுள்ள கழக முன்னோடிகளே, மாவட்ட செயலாளர் சிவலிங்கம் அவர்களே, பகுதி கழக நிர்வாகிகளே, வட்ட கழக செயலாளர்களே, நன்றியுரை ஆற்றியிருக்கும் அருமை சகோதரர் பாண்டி செல்வம் அவர்களே, மணக்கோலம் பூண்டுள்ள மணமக்களே, மணமக்களின் பேற்றோர், உற்றார், உறவினர்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தகர் அணியின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் அவரது துணைவியார் ஜோதி பாண்டி செல்வம் தம்பதியினரின் அருமை மகன் கதிரவரன் பி.காம்., அவர்களுக்கும், மணலி கே.அன்பழகன் – சாந்தி தம்பதியினரின் அன்பு மகள் சண்முகபிரியா எம்.பி.ஏ., அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளுடன் மணவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த மணவிழாவிற்கு தலைமைப் பொறுப்பேற்று, நிகழ்ச்சியை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பானதொரு வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய மணமக்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் குறிப்பாக நம்முடைய பாண்டி செல்வம் அவர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றியை நான் காணிக்கையாக்க விரும்புகிறேன்.

இங்கு பேசியவர்கள் பாண்டி செல்வம் பற்றி குறிப்பிடுகையில், நான் ஒரு எளிய தொண்டரின் இல்லத்திருமண விழாவிற்கு வந்திருப்பதாக தெரிவித்தார்கள். அவர்கள் சொன்ன அடிப்படையில் அது உண்மையாக இருக்கலாம். ஆனால், என்னைப்பொறுத்தவரையில் அவரை ஒரு எளிய தொண்டராக அல்ல வலிய தொண்டராக, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு சிறப்புக்குரிய தொண்டராகவே நான் பார்க்கிறேன். அதுமட்டுமல்ல, பாண்டி செல்வம் அவர்கள் இங்கு நன்றியுரை ஆற்றியபோது, ’ஒரு ஏழை தொண்டருடைய இல்லத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருப்பதாக சுட்டிக்காட்டி, அதற்காக பெருமைப்படுகிறேன், நன்றி செலுத்துகிறேன்’, என்று குறிப்பிட்டார். அதையும் கடந்து நான் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், உள்ளபடியே நமது பாண்டி செல்வம் அவர்கள் எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், கழகம் தான் – தலைவர் கலைஞர் அவர்கள் தான் தன்னுடைய மூச்சு, லட்சியம் என்ற உணர்வோடு, தனது கடமையை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ’தனது இளவயது முதல்’ என்று அவர் சொன்னார். இப்போதும் பார்ப்பதற்கு அவர் இளமையாகவே இருக்கிறார். அந்தநிலையில் இருந்து நானும் மணமக்களை வாழ்த்துவதற்கு, போற்றுவதற்கு கடமைப்பட்டு இருக்கிறேன்.

நமது மதிப்புக்குரிய எர்ணாகுளம் நாராயணன் அவர்கள் இங்கு பேசுகையில் சீர்திருத்தத் திருமணத்தைப் பற்றி சொன்னார், அதைத்தொடர்ந்து நம்முடைய பொன்முடி அவர்களும் நல்லதொரு விளக்கத்தையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். நாடார் சமுதாயத்தில் இருக்கக்கூடிய பொதுமக்கள் அன்றைக்கு எங்களைப்போன்ற தலைவர்களை எல்லாம் அழைத்து, வாழ்த்தரங்குடன் சீர்திருத்தத் திருமண நிகழ்ச்சிகளை நடத்தவில்லை என்று சொன்னாலும், தமிழ் முறைப்படி, சுயமரியாதை உணர்வோடு, சீர்திருத்தத் திருமணங்களை நடத்திக் காட்டி இருக்கிறார்கள் என்பது வரலாறு. அது படிப்படியாக வளர்ந்து, பலவகையில் வளர்ச்சி பெற்று, இன்றைக்கு பல பெரியோர்கள், முன்னோர்கள், சில தலைவர்கள், மணமக்களை வாழ்த்தும் சூழ்நிலை இன்றைக்கு உருவாகி இருக்கிறது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், 1967 க்கு முன்பு இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் நடக்கும் என்று சொன்னால், அந்தத் திருமணங்கள் சட்டப்படியான அங்கீகாரத்தை பெற்றிருக்கவில்லை. கேலி, கிண்டல், விமர்சனங்களை செய்தார்கள். எள்ளி நகையாடினார்கள். ஆனால், இன்றைக்கு சட்டப்படி, முறைப்படி அங்கீகாரத்தோடு இந்த சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெறுகின்றன. 1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அறிஞர் அண்ணா தலைமையில் முதன் முதலாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உதயமாகி, முதலமைச்சராக கோட்டைக்குள் அறிஞர் அண்ணா அவர்கள் சென்று, சட்டமன்றத்தில் முதன் முதலில் ஏகமனதாக நிறைவேற்றிக் கொண்டு வந்த தீர்மானம் எதுவென்றால், சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற தீர்மானம் தான். ஆகவே தான் இன்றைக்கு இந்த திருமணம் சட்டப்படி, முறைப்படி நடந்தேறி இருக்கிறது.

ஒருவேளை, இது வைதீக முறையில் நடந்திருந்தால், நடக்க வாய்ப்பில்லை என்றாலும், ஒரு வாதத்துக்காக சொல்கிறேன், நாங்கள் எல்லாம் இங்கு வந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்க மாட்டோம். இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய நண்பர்கள், உறவினர்கள் வந்திருக்கலாம். அப்படியே வந்தாலும், இப்படி மேடையில் அமர்ந்து மணமக்களை வாழ்த்தும் வாய்ப்பு கிடைத்திருக்குமா என்றால், கிடைத்திருக்காது.

காரணம், வைதீக திருமணத்தை யார் நடத்திவைப்பார்கள்? வைதீக திருமணம் என்றால், மணமக்களை இப்படியெல்லாம் வசதியாக நாற்காலியெல்லாம் போட்டு உட்கார வைக்க மாட்டார்கள். நல்லா ஜம்முன்னு, எந்த பிரச்சனையும் இல்லாமல் உட்கார்ந்து இருக்கிறார்கள் பாருங்கள். இதுதான் சீர்திருத்த திருமணம். வைதீக திருமணம் என்றால் அவர்களை அப்படியே கீழே உட்கார வைத்து, எப்போது எழுவோம் என்று அவர்கள் உட்கார்ந்து இருப்பார்கள். அவர்கள் உட்கார்ந்து இருப்பது மட்டுமல்ல, சுத்தி ஒரு கூட்டம் உட்கார்ந்து, அதன் பிறகு அந்த வைதீக திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதர் மணமக்களுக்கு முன்னாடி நெருப்பை மூட்டி, அந்த நெருப்பிலிருந்து புகை மண்டலம் கிளம்பி அந்த புகை மணமக்களின் கண்களை தாக்கி, அவர்கள் கொஞ்சம் கண்ணீர் சிந்தி, அவர்கள் கண்களை மட்டுமல்ல, உங்கள் கண்களையும் அது விட்டுவைக்காது. நீங்கள் அழுதுகொண்டுதான் இருப்பீர்கள். ஆக, ஒரு சோக சூழ்நிலையில்தான் அந்த திருமணம் நடக்கும். அதற்கு பிறகு அந்த புரோகிதர் சில மந்திரங்களை எல்லாம் எடுத்துக்கூறுவார். கின்னரரை கூப்பிடுவார், கிம்பரரை கூப்பிடுவார், தேவர்களை கூப்பிடுவார், முப்பது முப்பத்தெட்டு கோடி தேவர்களை எல்லாம் கூப்பிடுவார், அவதாரத்தை அழைத்து, இஷ்டாவதாரத்தை அழைத்து, சில எக்ஸ்ட்ரா அவதாரங்களையும் கூப்பிட்டு அந்த திருமணத்தை நடத்தி வைப்பார். அவர் என்ன சொல்கிறார் என்பது மணமக்களுக்கும் புரியாது, வந்திருக்கும் உங்களுக்கும் தெரியாது, ஒரு வேளை வந்திருக்கும் அந்த புரோகிதரை தனியாக கூப்பிட்டு கேட்டால் அவரும் சொல்லுவார்; ‘எனக்கும் தெரியாது,இருந்தாலும் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்லுவார்.

ஆக, யாருமே தெரிந்துகொள்ள முடியாத, புரிந்துகொள்ளமுடியாத நிலையிலே அந்த திருமணம் நடக்கும். ஆனால், இன்றைக்கு பார்க்கிறீர்கள். சுதர்சனம் வரவேற்புரை ஆற்ற, எர்ணாவூர் நாராயணன் வாழ்த்துரை வழங்க நம்முடைய தொழிலதிபர் சந்தோசம் அவர்கள் வாழ்த்துரை வழங்க, பொன்முடி அவர்கள் வாழ்த்துரை வழங்க, நிறைவாக நான் வாழ்த்துரை வழங்க, ஆக, நாங்கள் எல்லாம் எப்படி வாழ்த்துகிறோம், வாழ்த்துகிற போது மக்களுக்கு எப்படிப்பட்ட அறிவுரைகளை சொல்லுகிறோம், அதே நேரத்தில் நாட்டு நடப்புகளை உங்களுக்கு எப்படி அடையாளம் காட்டுகிறோம் என்பது மணமக்களுக்கும் புரிகிறது, உங்களுக்கும் தெரிகிறது, எங்களாலும் உணர முடிகிறது, ஆகவே, இது நமக்கு தெரிந்த, நமக்கு புரிந்த, நாம் அறிந்த நம்முடைய தாய்மொழியாக இருக்கக்கூடிய தமிழ்மொழியில் இன்றைக்கு இந்த திருமணம் சிறப்போடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆக, அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சியிலே உங்களோடு சேர்ந்து நானும் மணமக்களை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன்.

நீண்ட நேரம் இங்கே நின்று வாழ்த்துவதற்கு நேரம் இல்லை. எனக்கு மட்டுமில்லை, இந்த மேடையில் இருக்கக்கூடியவர்கள். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடியவர்களுக்கு எல்லாம் பல வேலைகள் இருக்கின்றன. காரணம் 12-ஆம் தேதி ஒரு இடைத்தேர்தலை நாமெல்லாம் சந்திக்கவிருக்கிறோம். அந்த இடைத்தேர்தலில் கழகத்துக்கு கிடைக்குவுள்ள வெற்றி தமிழகத்துக்கு நல்ல விடிவுகாலத்தை ஏற்படுத்துக்கிற வகையில் அமையவிருக்கிறது. எனவே, அப்படிப்பட்ட தேர்தல் பணியில் நாமெல்லாம் இன்றைக்கு ஈடுபட்டிருக்கிறோம். எனவே, இந்த சூழ்நிலையில் நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. இருந்தாலும், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்டு இருக்கக்கூடிய இந்த திருமண அரங்கத்திலே, இந்த விழா நடக்கின்ற காரணத்தால், அதுவும் பாண்டிச்செல்வன் அவர்கள் முன்னின்று இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கிறபோது, நான் கொஞ்சம் கூட தேர்தல் பிரச்சாரத்தை செய்யாமல் போய்விட்டால், உங்களுக்கு கோபம் வருகிறதோ இல்லையோ, பாண்டிசெல்வத்துக்கு நிச்சயமாக கோபம் வரும்.

ஆகவே, அதை உணர்ந்து நான் உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவது, ஏற்கனவே, இதே ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டொரு நாட்களுக்கு முன்னால் நடந்தேறிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மிக பிரம்மாண்டமானதாக நடந்தது. இதுவரை ஆர்.கே.நகர் தொகுதியில் இவ்வளவு பிரம்மாண்டமாக ஒரு கூட்டம் நடந்ததாக வரலாறு கிடையாது. இனிமேல் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிற சூழலில் ஒரு பெரிய கூட்டம் நடந்திருக்கிறது என்று சொன்னால், ஏதோ, தனிப்பட்ட முறையில் எனக்காக கூடிய கூட்டமல்ல, தனிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்காக கூடிய கூட்டமகாவும் எண்ணிப் பார்க்கவில்லை, அதேபோல், தனிப்பட்ட எங்களுக்காக கூடிய கூட்டமுமில்லை. ஒரே உணர்வாக எனக்கு என்ன தோன்றியது என்றால், நிச்சயமாக உறுதியாக தமிழ்நாட்டிலே மிக விரைவிலே ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகத்தான் அந்தக் கூட்டம் அமைந்தது என்பது உண்மை. ஆகவே, அந்த நிலையிலே இன்றைக்கு தமிழகம் இருந்துகொண்டிருக்கிறது. ஆக, அப்படிப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய நீங்கள் நமக்காக இல்லை என்று சொன்னாலும், நம்முடைய சந்ததியினர் இந்த நாட்டிலே நலமோடு வாழ்ந்திட வேண்டுமென்று சொன்னால், நீங்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

இங்கே வந்திருப்பவர்களில் ஆர்.கே.நகர் வாக்காளர்கள் பலர் இருக்கலாம். அல்லது பக்கத்து தொகுதியிலிருந்தோ, பக்கத்துக்கு ஊரிலிருந்தோ, வேறு பகுதியிலிருந்தோ வந்திருக்கலாம். அது வேறு. ஆனால், வாக்களர்களாக இருந்தால் உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், வாக்காளர்கள் இல்லை என்று சொன்னால், உங்கள் உறவினர்களிடத்தில், இந்த தொகுதியில் இருக்கக்கூடிய நண்பர்களிடத்தில் தயவுசெய்து இன்றைக்கு நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகளை எல்லாம் எடுத்துச்சொல்லி, நிச்சயமாக உறுதியாக இந்த தேர்தலை பொறுத்தவரையிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக, நம்முடைய கூட்டணி கட்சியின் வேட்பாளராக, உங்களிடத்திலே ஒப்படைக்கப் பட்டிருக்கக்கூடிய நம்முடைய அருமை சகோதரர் அவர்கள், மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கு உதசூரியன் சின்னத்திற்கு நீங்கள் எல்லாம் நல ஆதரவை தந்து, அந்த வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்று நான் இந்த நேரத்திலே உங்களை எல்லாம் அன்போடு கேட்டு மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும்.

இங்கே பொன்முடி அவர்கள் மிகத்தெளிவாக குறிப்பிட்டு சொன்னார்கள். குடும்ப கட்டுப்பாட்டை நினைவுபடுத்தி எடுத்துச் சொன்னார்கள். ஒரு காலத்தில், ஏன் என்னுடைய திருமணம் 1975-ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அப்போது குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் எப்படி இருந்தது என்றால், ‘நாம் இருவர், நமக்கு மூவர்’ என்றிருந்தது. மூன்று என்று சொன்ன காரணத்தினால் நான் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ளவில்லை. இரண்டோடு நிறுத்திக் கொண்டேன். பின்னர் குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் கொஞ்சம் குறைந்தது. எப்படி என்றால், ‘நாம் இருவர்;நமக்கு இருவர்’ என்றாயிற்று. இப்போது என்னவென்றால் ‘நாம் இருவர், நமக்கு ஒருவர்’. நாளை இதுவும் மாறலாம். ‘நாம் இருவர், நமக்கேன் இன்னொருவர்’. நான் ஒரு சினிமா விளம்பரத்தில் பார்த்தேன். ‘நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை’. காரணம் அந்தளவுக்கு பிரச்சாரம் இன்றைக்கு போய்க் கொண்டிருக்கிறது.

இதையும் புரிந்து கொண்டு, மணமக்கள் படித்தவர்கள், பட்டதாரிகளாக இருக்கக் கூடியவர்கள், ஆக உங்களுக்கு அறிவுரைகளை ஆலோசனைகளை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய குடும்ப சூழ்நிலை என்ன? இந்த நாட்டினுடைய நிலை என்ன? அதை புரிந்து அறிந்து அதற்கேற்ற வகையில் நீங்கள் செல்வங்களை பெற்று சிறப்போடு வாழ வேண்டும். ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழு’ என்று சொன்னால் பதினாறு குழந்தைகளை அல்ல, பதினாறு செல்வங்களை. நாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வாகனம், பொன், பொருள், புகழ். கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள் மிக அழகாக இதைப்பற்றி விளக்கமாக குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். ஆக, அந்த செல்வங்களை பெற்று சிறப்போடு வாழ வேண்டும்.

இன்னொரு வேண்டுகோள், இந்தி திணிப்பு இன்றைக்கு எந்த நிலையிலே வந்து கொண்டிருக்கிறது. மத்தியில் ஒரு மதவாத ஆட்சி அமைந்திருக்கின்ற காரணத்தால், 1965 ல் நம்முடைய மொழிக்கு ஒரு ஆபத்து ஏற்பட்ட நேரத்தில் எத்தனையோ தியாகங்களை செய்து தடுத்துக் காட்டினோம். அந்தநிலை மீண்டும் வரக்கூடாது என்ற நிலையில் தான் இப்போதும் இருக்கிறோம். நெடுஞ்சாலைகளில் இருக்கக்கூடிய மைல் கற்களில் இந்தி எழுத்துக்கள் இடம்பெறும் நிலை உருவாகி இருக்கிறது என்றால், தயவுசெய்து அனைவரும் சிந்திக்க வேண்டும். நாங்கள் இந்தியை எதிர்க்கிறோம் என்று யாரும் நினைத்து விடக்கூடாது. இந்தி திணிப்பை நாம் எதிர்க்கிறோம். ஆக, நமது தமிழ்மொழியை காப்பாற்ற வேண்டும். அதற்கான எத்தனையோ பணிகளில் இன்றைக்கு ஈடுபட்டிருக்கிறோம்.

இந்தநேரத்தில் மணமக்களை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, உங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்றோ, இரண்டோ உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயரை நீங்கள் சூட்டிட வேண்டும் என்பது தான் எனது அன்பான வேண்டுகோள். சீர்திருத்தத் திருமணங்கள் நடப்பதற்கு எப்படி திராவிட இயக்கங்கள் காரணமாக இருக்கின்றதோ, தந்தை பெரியார் காரணமாக இருந்தாரோ, அதே தந்தை பெரியார் அவர்கள் தான் பெயர் வைப்பதிலும் புரட்சி செய்திருக்கிறார். ஒருமுறை தந்தை பெரியார் அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், கையில் குழந்தையுடன் வந்த ஒரு தோழர் மேடைக்குச் சென்று, குழந்தையை தந்தை பெரியார் கையில் கொடுத்து, ’ஐயா குழந்தைக்கு பெயர் வையுங்கள்’, என்று கேட்டுள்ளார். உடனே, தந்தை பெரியார் குழந்தையை கையில் வாங்கி, ’ரஷ்யா’, என்று பெயர் வைத்தார். உடனே குழந்தையை கொண்டு வந்தவருக்கு கோபம் வந்து, ‘ குழந்தைக்கு பெயர் வைக்கச் சொன்னால், நாட்டின் பெயரை வைக்கிறீர்களே?’ என்று கேட்டதும், தந்தை பெரியார், ‘உன் பக்கத்து வீட்டில் இருப்பவர் பெயர் என்ன?’ என்று கேட்டுள்ளார். அவர், ‘மதுரை’ என்றார். எதிர்வீட்டில் இருப்பவர் பெயர் என்ன என்று கேட்டதும், ’திருப்பதி’ என்றார். உடனே தந்தை பெரியார் அவர்கள், ’அவர்கள் எல்லாம் ஊர் பெயரை வைத்துள்ளார்கள், நான் நாட்டின் பெயரை வைத்துள்ளேன், போடா’, என்றாராம்.

எதற்காக இதை சொல்கிறேன் என்றால், பெயர் வைப்பதிலேயே புரட்சி செய்தவர் தந்தை பெரியார். என்னுடைய பெயர் ஸ்டாலின், உங்களுக்கே சந்தேகம் வந்திருக்கலாம், ஸ்டாலின் என்பது தமிழ் பெயரா? இல்லை. ஆனால், அது காரணப் பெயர். எப்படி அந்தப் பெயர் எனக்கு வந்ததென்றால், தலைவர் கலைஞர் அவர்களின் குடும்பத்தை பொறுத்தவரையில், எங்களுடைய இல்லத்தில் உள்ள எல்லாருடைய பெயர்களும் தமிழ் பெயர்கள் தான் என்பது உங்களுக்கே தெரியும். என்னுடைய மூத்த அண்ணனுடைய பெயர் முத்து. அடுத்தவர் அழகிரி, தம்பியின் பெயர் தமிழரசு, தங்கைகள் தமிழ் செல்வி, கனிமொழி, பேரர்கள், பேத்திகள் என எல்லாருடைய பெயர்களும் தமிழ் பெயர்கள் தான். ஆனால் என்னுடைய பெயர் மட்டும் ஆங்கிலத்தில் உள்ள ஸ்டாலின் என்ற பெயராக உள்ளது.

இந்தப் பெயரை வைத்த காரணத்தாலேயே எனக்குப் பல சங்கங்கள் எல்லான் வந்துள்ளன. ஏனெனில், ரஷ்யாவில் ஸ்டாலினுக்கு ஒருகாலத்தில் மிகப்பெரிய எதிர்ப்புகள் ஏற்பட்டன. ஒருமுறை நான் ரஷ்யாவுக்குச் சென்றபோது, என்னுடைய பெயரை சொல்வதற்கே பயந்தேன். சில இடங்களில் என்னுடைய பெயரை கேட்டபோது, நான் மாற்றி மாற்றி சொல்லி விட்டு வரும் நிலைமைகள் எல்லாம் ஏற்பட்டன.

இன்னும் சொல்ல வேண்டுமெனில், அண்ணாசாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வெண்ட் ஒருகாலத்தில் தலைசிறந்த பள்ளி. இப்போது பல பள்ளிகள் வந்துவிட்டன. அந்த சர்ச் பார்க் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று என்னையும், என்னுடைய தங்கை தமிழ்செல்வியையும், மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தார். இடமும் கிடைத்தது. அப்போது அது கோ-எஜுகேஷன் பள்ளி. இப்போது அது பெண்கள் பள்ளியாக உள்ளது. அப்படிப்பட்ட பள்ளியில் அட்மிஷன் தினத்தன்று, அந்தப் பள்ளியின் நிர்வாகிகள் நமது முரசொலி மாறன் அவர்களை அழைத்து, ’பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறோம், ஆனால் ஸ்டாலின் என்ற பெயரை மட்டும் மாற்றுங்கள்’, என்று கோரிக்கை வைத்தனர்.

உடனே, மாறன் அவர்கள் தலைவரிடத்தில் வந்து கேட்டார். தலைவர் அவரிடம், ‘நான் பள்ளியை மாற்றினாலும், மாற்றுவேனே தவிர, பெயரை மாற்ற மாட்டேன்’, என்று சொன்னார். இதெல்லாம் வரலாறு. அந்தப் பெயர் எப்படி வந்ததென்றால், ரஷ்யாவில் ஸ்டாலின் அவர்கள் மறைந்த நேரத்தில், சென்னை கடற்கரையில் எல்லா கட்சிகளும் பங்கேற்ற அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. அப்போது தலைவர் கலைஞர் அவர்களிடம், ‘உங்களுக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்’, என்று ஒரு சீட்டில் எழுதி கொண்டு வந்து கொடுத்தார்கள். உடனே, அதே மேடையில், ‘இந்த இரங்கல் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது எனக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது, எனக்கு மகன் பிறந்திருக்கிறான், அவன் பெயர் ஸ்டாலின்’, என்று அறிவித்து அங்கேயே பெயர் வைத்தார்.

ஆக, ரஷ்யாவின் கம்யூனிஸ கொள்கையின் மீது, அந்த தத்துவத்தின் மீது தலைவர் கலைஞர் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அந்தக் காரணத்தால் ஸ்டாலின் என்ற காரணப் பெயர் அமைந்தது. எதற்காக இதை குறிப்பிடுகிறேன் என்றால், இங்கு திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆனவர்கள், பேரன் – பேத்தி எடுக்கக்கூடியவர்கள் என பலரும் இருக்கிறீர்கள், எனவே, மணமக்களை மட்டுமல்ல, இங்கு வந்திருக்கும் அனைவரையும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, அழகான தமிழ் பெயர்களை சூட்டி, தமிழுக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் உங்கள் கடமையை ஆற்றிட வேண்டும்.

அதேநேரத்தில், வரும் 12 ஆம் தேதியன்று நடைபெற இருக்கக்கூடிய, ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை உருவாக்கித் தருவதற்கு, நீங்கள் அத்தனை பேரும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டு, மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லா நலன்களையும் பெற்று, வாழ்வாங்கு வாழ்ந்து, வீட்டுக்கும் – நாட்டுக்கும் பெருமை சேர்ப்பவர்களாக வாழுங்கள் என வாழ்த்தி, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

No comments:

Post a Comment

Labels