வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



20/04/2016

ஜெயலலிதா பிதற்றுகிறார்: ஸ்டாலின் பேச்சு


புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதையாக ஜெயலலிதா பிதற்றுகிறார். “மதுவிலக்கு அமுல்படுத்த தனிச்சட்டம் என்றாலே பூரண மதுவிலக்கு” என்றுதான் அர்த்தம் என்பது ஜெயலலிதாவுக்கு தெரியாதா? திமுக ஆட்சியில் ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்காது என ஜெயலலிதாவுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார் ஸ்டாலின்.

அரியலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், 

திமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு பற்றிய வாக்குறுதி முதல் வரியிலேயே வந்திருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழகத்தின் பொக்கிஷமாக உள்ளது. முதல் அறிவிப்பே பூரண மதுவிலக்குதான். சென்னை தீவுத்திடலில் ஜெயலலிதா பேசியது இல்லை படித்தது என்னவென்றால், மதுவிலக்கு பேச திமுகவிற்கு அருகதை இல்லை என்றார். நான் சொல்கிறேன், அதைச் சொல்லும் அருகதை உங்களுக்கு இல்லை என்பது எனது வாதம். 1974 –ம் ஆண்டு மதுக்கடைகளை மூடியவர் தலைவர் கலைஞர். நவம்பர் 29, 2003 அன்று ஜெயலலிதா கையெழுத்துப் போட்டு மதுக்கடைகளை வீதிக்கு வீதி திறந்த நீங்களா கலைஞரைப் பார்த்து தகுதி பற்றி பேசுவது. புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதையாக ஜெயலலிதா பிதற்றுகிறார். மதுவிலக்கை படிப்படியாக அமுல்படுத்துவேன் என்று சொல்லும் யோக்கியதை ஜெயலலிதாவுக்கு உண்டா ? ஐந்தாண்டுகளாக இதைப்பற்றி சிந்தத்துண்டா, சொன்னதுண்டா ? ஏன் அப்போதெல்லாம் மதுக்கடைகளை மூட வில்லை.
ஒரு பாட்டில் மது விற்பனையைக் கூட நீங்கள் குறைக்கவில்லையே ஏன் ? சசிபெருமாள் மறைந்த போதாவது இந்த அரசுக்கு புத்தி வந்ததா ? அவர் திமுகவை சேர்ந்தவரல்ல. ஒரு காந்தியவாதி. நாகர்கோவில் மாவட்டம், மார்த்தாண்டத்தில் செல்போன் டவர் மீது ஏறி, உண்ணாமலை பேரூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடினார். அவரது ஏற்கனவே பல இடங்களில் போராடியவர். அன்றைக்கு குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராடியதன் காரணம், அந்த மதுக்கடையை மூட வேண்டும் என்று அங்கிருந்த நீதிமன்றம் உத்திரவிட்டு 6 மாதம் ஆகியும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், சசிபெருமாள் டவர் மீது ஏறி போராடினார். நியாயமாக காவல்துறையும், அரசு அதிகாரிகளும் அவரை சமாதானம் செய்து கீழே இறக்கி இருக்க வேண்டும்.

சாதாரணமாக ஊருக்கு பஸ் வரவில்லை, தண்ணீர் வரவில்லை என்று போராட்டம் நடத்தும்போதும், சாலை மறியல் செய்யும்போதும், அது சட்டப்படி தவறாக இருந்தாலும், அப்படி நடப்பது சாதாரணமான ஒன்றுதான். அப்போது காவல்துறையும், அதிகாரிகளும் வந்து சமாதானம் செய்வது வழக்கம். உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறார்களோ இல்லையோ அப்படி சொல்லியாவது உங்களை கைது செய்து ஒரு மண்டபத்தில் வைத்து மாலையில் விடுவார்கள். இதுதான் வழக்கமாக நடக்கும். ஆனால் சசிபெருமாள் போராடியபோது கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தார்கள். அவரை தடுக்காததற்கு காரணம், அந்த போராட்டம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்புதான் திமுகவின் பூரண மது விலக்கு என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்க தலைவர் கலைஞர் அவர்களை நேரில் வந்து சந்தித்தார். நான் காவல்துறையை குறை சொல்ல விரும்பவில்லை, அவர்கள் நிலைமை அப்படி உள்ளது.

ஒரு காலத்தில் திமுக ஆட்சியில் உலக அளவில் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு அடுத்த நிலையில் தமிழக காவல்துறை இருந்தது. இப்போது நிலைமை அப்படியல்ல. திமுக ஆட்சி வந்ததும் காவல்துறையின் பெருமை பழைய நிலைக்கு திரும்பும். காவல்துறைக்கே நாங்கள் தான் எல்லாம். கவலையே படவேண்டாம். அவர்கள் என்ன செய்வார்கள் பாவம், நம்மையெல்லாம் பாதுகாக்கும் நிலையில், வெயில் மழை பார்க்காமல் நமக்காக பாடுபடுகிறார்கள். அவர்களை ஆட்டுவிப்பவர்களை தான் நான் குறை சொல்கிறேன்.

நேற்று காஞ்சிபுரத்தில் பேசிய ஜெயலலிதா பூரண மதுவிலக்கு என்று திமுக தேர்தல் அறிக்கையில் இல்லை என்றும், மதுவிலக்குக்கு தனிச்சட்டம் என்றுதான் சொல்லியிருப்பதாக பேசியுள்ளார்.

நான் தமிழகம் முழுவதுமுள்ள 234 தொகுதிகளிலும் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டபோது அனைத்துத்தரப்பு மக்களையும் சந்தித்தேன். அவர்களின் பிரச்சினைகளை கூர்ந்து கவனித்து, பல இடங்களில் பூரண மதுவிலக்கு கட்டாயமாக அமுலுக்கு வரும் என்று தெரிவித்திருந்தேன். அதோடு திமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு அமுல்படுத்த தனி சட்டம், டாஸ்மாக் கடைகள் கலைக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதோடு டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று வேலை தரப்படும் என சொல்லப்பட்டு இருப்பதில் இருந்தே, ஜெயலலிதாவுக்குத் தெரிய வேண்டாமா ?

மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையம் அமைப்போம் என்றும் தேர்தல் அறிக்கையில் உள்ளது. மதுவிலக்குக்கு தனி சட்டம் கொண்டு வரப்படும் என்றாலே பூரண மதுவிலக்கு என்றுதான் அர்த்தம். மறைந்த மூதறிஞர் ராஜாஜி பற்றி ஜெயலலிதா அடிக்கடி குறிப்பிடுகிறார். அதே ராஜாஜி முதல்வராக இருந்தபோது இப்படியொரு சட்டம் வந்தது. ”தமிழ்நாடு புரொவிஷன் ஆக்ட் 1937, அதாவது தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் – 1937.”

எனவே ஜெயலலிதா கவலைப்பட வேண்டாம். மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்கு என்றுதான் அர்த்தம். திமுக ஆட்சியில் ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்காது என்று உரிமையுடன் சொல்கிறேன்.

அதுமட்டுமல்ல இந்த தேர்தல் அறிக்கையில் லோக் அயுக்த சட்டம் கொண்டு வரப்படும் என்று சொல்லி இருக்கிறோம். ஏற்கனவே திமுக ஆட்சியின்போது முதல்வராக, அமைச்சராக, அரசு அதிகாரி என எந்தவித பொறுப்பில் இருந்தாலும் பொது வாழ்வில் இருப்பவர்கள் தவறு செய்ததாக நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அவர்கள் மீது தவறான புகார் அளிப்பவர்கள் மீது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற சட்டம் அமுலில் இருந்தது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு வரவில்லை. அதே சட்டம் இப்போது பெயர் மாற்றப்பட்டு, லோக் அயுக்த என்று இந்தியாவின் சில மா நிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆக, மீண்டும் கரப்ஷன், கலக்ஷன், கமிஷன், ஊழல் இல்லாத ஆட்சி வர வேண்டும் என்பதால் திமுக தேர்தல் அறிக்கையில் லோக் அயுக்த சட்டம் கொண்டு வரப்படும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, இதுவரையிலும் எல்லா துறைக்கும் பொதுவாக ஒரு பட்ஜெட் மட்டுமே இருக்கும். இந்தியாவிலேயே முதல்முறையாக விவசாயம் மேம்பட வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் என தலைவர் கலைஞர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நமக்கு நாமே பயணம் சென்றபோது எனது உடை பற்றி பலவிதமாக விமர்சனம் செய்தார்கள். டீக்கடைக்கு சென்றால், ஓட்டலில் சென்று சாப்பிட்டாலும் விமர்சனம் செய்தனர். ஒருமுறை தெரியாமல் அதிமுக காரர் ஒருவரது ஓட்டலுக்கு கூட சென்று சாப்பிட்டேன். அடுத்த வாரம் அவரே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்படி சென்றபோது மாணவர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்படி என்னிடம் பேசிய மாணவர்கள் ஒட்டுமொத்தமாக கேட்டுக் கொண்ட ஒரு கோரிக்கை என்னவென்றால், “ திமுக ஆட்சியின்போது கல்வித்துறையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் கிடைத்தன. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் சமச்சீர் கல்வியை பெற்றோம். அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் உயர்கல்வி பெற நாங்கள் பெற்ற கல்வி கடனுக்கு இன்று வட்டி கூட கட்ட முடியாத நிலையில் தவிக்கிறோம், எனவே வட்டியை மட்டுமாவது ரத்து செய்ய வேண்டும்”, என்று கேட்டுக் கொண்டனர். இதனை தலைவர் கலைஞரின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, “வட்டியை மட்டுமல்ல, அவர்களது ஒட்டுமொத்தக் கல்விக்கடனையும் ரத்து செய்கிறேன்”, என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் இந்த தேர்தல் அறிக்கையிலும் அதனை குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சார்பில் ஆன்லைன் மூலம் வெளியான, வங்கி வேலைக்கான அறிவிப்பில் அதிர்ச்சிகரமான சில தகுதி குறிப்பிடப்பட்டு இருந்தன. வங்கி வேலைக்கான தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கல்வி கடன் இருந்தால் தேர்வில் பங்கேற்க முடியாது என்ற அறிவிப்பு குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையெல்லாம் தொலை நோக்குப் பார்வை கொண்ட தலைவர் கலைஞர் அவர்கள் சிந்தித்துதான் மாணவர்கள் கல்வி கடன் கட்ட முடியாமல் கடனாளியாக இருக்கக் கூடாது என்று எண்ணி, ஒட்டுமொத்த கல்விக்கடன் ரத்து என்ற அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


அதுமட்டுமல்ல ஆவின் பால் விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளோம். அதனால் பால் உற்பத்தியாளர்களுக்கும் நன்மையாகவே அமையும். உங்கள் உற்பத்தி அனைத்தையும் ஆவின் நிறுவனமே வாங்கும். என்னதான் நீதிகட்சியின் வழியில் நாம் வந்தாலும் பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த திட்டத்தை எல்லாருக்கும் சென்றடைய வைத்தவர் எம்.ஜி.ஆர். தான் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. கலைஞர் ஜெயலலிதாவைப் போல இருக்க மாட்டார். கலைஞர் கலைஞராகவே இருப்பார். சத்துணவு உண்மையான சத்துணவாக இருக்க வேண்டும் என்பதற்காக முட்டையையும் சேர்த்து வழங்கினார். இந்த தேர்தல் அறிக்கையில் சத்துணவில் முட்டையுடன் பாலும் சேர்ந்து வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறோம். இனி ரோட்டில் பாலை கொட்டி போராட வேண்டிய அவசியம் பால் உற்பத்தியாளர்களுக்கு வராது.
தற்போது மின்சாரக் கட்டணத்தை 2 மாதத்திற்கு ஒருமுறை கட்டுவதால் அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது. இதனால் ஒரு தனி நபருக்கு ஒரு ஆண்டுக்கு 2000 ரூபாய் வரை கூடுதலாக செலவாகிறது. தற்போது 100 யூனிட், 200 யூனிட் என்று தனித்தனியாக கட்டணம் மாறுவதால் கட்டணத்தொகை அதிகரிக்கிறது. எனவே மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தை தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்துள்ளதன் மூலம் ஒரு தனி நபருக்கு 2000 ரூபாய் மிச்சமாகும்.

ஆகவே, ஜெயலலிதா ஆட்சியின் ஐந்தாண்டுகால ஆட்சிகால கொடுமைகளை புரிந்து கொண்டு நன்கு சிந்தித்து கழக வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். உங்களை அதிக நேரம் வெயிலில் நிற்க வைக்க விரும்பவில்லை. மக்களைப் பார்த்து செய்வீர்களா, செய்வீர்களா என்று கேட்கும் ஜெயலலிதாவை பார்த்து செய்தீர்களா, செய்து கிழித்தீர்களா, செய்து தொலைத்தீர்களா என்று கேட்கிறேன்.

கழக வேட்பாளர்கள் இங்கே மேடையில் அமர்ந்திருக்கிறார்கள். நான் மேடையிலும், வேட்பாளர்களை தரையிலும் அமர வைத்து வாக்கு கேட்கவில்லை. ஆனால் இன்றைக்கு அம்மையார் ஜெயலலிதாவின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். அம்மையார் ஜெயலலிதா மூன்று அடி உயரத்தில் ஒரு நாற்காலி போட்டு மேடையில் அமர்ந்திருப்பார். அதிமுக வேட்பாளர்கள் எல்லாம் அவருக்கு முன்பு தரையில் அமர்ந்திருப்பார்கள். குறிப்பாக ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன் போன்றவர்கள் சட்டமன்றத்திலேயே ஒரு சேரைப் போலவே குனிந்து உட்கார்ந்து கொண்டிருப்பார். அதிமுகவினர் எல்லாரும் சேரில் உட்கார்ந்து இருப்பது போலவே ஆனால் சேர் இல்லாமல் உட்கார்ந்திருப்பார்கள். இதை எல்லாம் அவர்களால் மட்டுமே செய்ய முடியும்.

No comments:

Post a Comment


Labels