வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



01/03/2015

ஊர் ஊராகச் செல்வோம், தெருத் தெருவாக செல்வோம்.. பயணங்கள் முடிவதில்லை.. மு.க.ஸ்டாலின்

சென்னை: ஊர், ஊராகச் செல்வோம். தெருத் தெருவாகச் செல்வோம். பகுதி பகுதியாகச் செல்வோம். வீடு, வீடாகச் செல்வோம். நம்முடைய பயணங்கள் முடிவதில்லை. அதைபோல நம்முடைய பணிகள் முடிவதில்லை. முயற்சிகள் என்றைக்கும் தோற்றதில்லை. உண்மைகள் என்றைக்கும் பொய்த்தது இல்லை. எனவே நம்முடைய கடமைகளும் என்றைக்கும் நிற்பதில்லை என்ற அந்த உணர்வோடு நாம் உறுதி எடுப்போம். சபதம் ஏற்போம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 63வது பிறந்த நாளைக் கொண்டாடினார். சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த விழாவில் தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடினார் ஸ்டாலின். பின்னர் தொண்டர்களிடம் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.அதன் பின்னர் அவர் உரை நிகழ்த்தினார். மு.க.ஸ்டாலின் பேச்சிலிருந்து...உங்களின் ஆர்வத்தை, ஆரவாரத்தை பார்க்கும்போது நிச்சயமாக உங்களுடைய வாழ்த்துக்கள் எனக்கு உற்சாகத்தை வழங்கிடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.நம்மைப் பொறுத்தவரையில் இந்த சமுதாயம் வாழவேண்டும். இந்த நாடு வாழ்ந்திட வேண்டும். இந்த சமுதாயத்தை, இந்த நாட்டை வாழவைக்கக்கூடிய வகையில் நம்முடைய பணி அமைந்திட வேண்டும் என்று சொன்னால், நம்முடைய இயக்கம் தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் பீடுநடை போடவேண்டும் என்று நான் என்னுடைய பிறந்த நாள் செய்தியாக இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.சாதி, மதம், இனம், மொழி இவைகளைப் பொருத்தவரையிலே யாருக்கும் பாகுபாடு இருக்கக்கூடாது. ஈரோட்டு சிங்கம் பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார், வங்கக் கடலோரத்தில் 6 அடி சந்தனப் பேழையில் உறங்கியும், உரங்காமலும் உறங்கிக்கொண்டிருக்கக்கூடிய நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா, அவர்கள் வழியில் இன்றைக்கும் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். இந்த இயக்கத்திற்காக நம்முடைய திராவிட இயக்கத்தை வளர்ப்பதற்காக எந்த அளவிற்கு அரும்பாடுபட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.இப்படிப்பட்ட தலைவருடைய தொலைநோக்குதான் நம்மைபோன்ற இளைஞர்களை இன்றைக்கு ஓரளவுக்கு பக்குவப்படுத்தி, தொடர்ந்து நாம் ஆற்றக்கூடிய பணிகளுக்கு உரமூட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.மார்ச் 1 ஆம் தேதி என்பது பாகுபாடு ஒழிக்கக்கூடிய தினமாக ஐக்கிய நாடுகள் சபைகள் இன்றைக்கு இந்த நாளை கொண்டாடுகிறது. எனவே, தலைவர் கலைஞர் அவர்களுடைய வழிகாட்டுதலோடு அதை மனதிலே வைத்துக்கொண்டு நம்முடைய கழகம் பாடுபடவேண்டும். அந்த பாகுபாடுகளை ஒழிப்பதற்கு நாம் சபதம் ஏற்க வேண்டும். உறுதி எடுக்கவேண்டும் என்று நான் இந்த நேரத்திலே உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். அப்படிப்பட்ட உறுதி அந்த சபதத்தை நீங்கள் எல்லாம் ஏற்றால்தான் உள்ளபடியே நீங்கள் எனக்கு சொல்லக்கூடிய வாழ்த்துக்கள் மகிழ்ச்சிகரமாக அமைந்திட முடியும் என்பதை நான் உறுதியோடு உங்களிடத்திலே எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதை நினைவுபடுத்தக்கூடிய வகையில் இந்த மார்ச் 1ஆம் நாள் இருந்திட வேண்டும். நீங்கள் ஆணா? பெண்ணா? இளைஞரா? வயதானவரா? நகர்புறத்தவரா? அல்லது கிராமப்புறத்து வாசியா? ஏழையா? பணக்காரரா? கருப்பா? சிகப்பா? நாத்திகரா? ஆத்திகரா? என்று பாகுபாடு காட்டாத ஒரு சமுதாயத்தை உருவாக்கிடவேண்டும். பாகுபாடு ஒழிப்பு கொள்கை என்பதை நம்முடைய உடம்பில் ஓடக்கூடிய ரத்தத்தோடு நிச்சயமாக நாம் ஒப்பிட முடியும்.நம் அனைவருடைய நரம்புகளில் ஓடுவது ஒரே ரத்தம்தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது. நம்மை உயிரோடு வைத்திருக்கக்கூடிய ரத்தம், மற்றவரை உயிரோடு இருக்கவைக்கவும், இன்னமும் சொல்லவேண்டுமென்று சொன்னால், ஒரு பணக்காரர் தரக்கூடிய ரத்தம், ஒரு ஏழையை வாழவைக்கிறது. ஒரு ஏழை தரக்கூடிய ரத்தம், ஒரு பணக்காரரை வாழவைக்கிறது. எனவே, ரத்தத்தை பொறுத்தவரையிலே பாகுபாடு கிடையாது. இன்னும் நான் வெளிப்படையாக சொல்ல விரும்புகிறேன். கடவுள் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை வாழ வைக்கிறது. அதேபோல கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களை வாழவைக்கிறது. அதனால்தான் உங்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.மார்ச் 1 ஆம் தேதியிலிருந்து இந்த மாத இறுதி வரையிலே நம்முடைய தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய இளைஞர்கள், நம்முடைய கழகத் தோழர்கள், ரத்தம் வழங்கக்கூடிய நிகழ்ச்சியை நடத்திட வேண்டும் என்று இளைஞர் அணியினுடைய செயலாளர் என்ற அந்த முறையிலே நான் ஏற்கனவே என்னுடைய வேண்டுகோளாக எடுத்து வைத்திருக்கிறேன்.இன்று காலையில்கூட சில பத்திரிகைகளில் அதற்கான விளம்பரத்தை இளைஞர் அணி சார்பிலே நாங்கள் வழங்கியிருக்கிறோம். எனவே, இந்த மாத இறுதிக்குள்ளாக 1 லட்சம் யூனிட் ரத்தம் நம்முடைய இளைஞர் அணியின் சார்பில் வழங்கப்பட்டிருக்கிற இந்த செய்தி வந்தாக வேண்டும். ஏதோ இளைஞரணி மாத்திரமல்ல, கழகத் தோழர்கள் மாத்திரமல்ல, இதற்கு நமக்கு துணை நிற்க. ரோட்டரி சங்கம் நமக்கு ஒத்துழைப்பு தருகிறது. எனவே, அப்படிபட்ட அந்த ரோட்டரி சங்கத்தை பயன்படுத்திக்கொண்டு அந்தப் பணியை இளைஞர்களாக இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் ஈடுபடவேண்டும் என்று நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள கடமைபட்டிருக்கிறேன்.ஒரு பயிர்வாழ அதற்கு பருவமாற்றங்கள் தேவைப்படுகிறது. அதைபோல நம்முடைய வளர்ச்சிக்கும் பல மாற்றங்கள் தேவை. தொழில்நுட்பம் இன்றைக்கு ஒரு மிகப் பெரிய மாற்றத்தை நம்முடைய நாட்டிலே உருவாக்கி யிருக்கிறது. மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் இன்றைக்கு மாற்றத்தை விரும்புகிறது. அதிலும் குறிப்பாக நம்முடைய தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள் அரசியலில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.எனவே உங்களையெல்லாம் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஊர், ஊராகச் செல்வோம். தெருத் தெருவாகச் செல்வோம். பகுதி பகுதியாகச் செல்வோம். வீடு, வீடாகச் செல்வோம். நம்முடைய பயணங்கள் முடிவதில்லை. அதைபோல நம்முடைய பணிகள் முடிவதில்லை. முயற்சிகள் என்றைக்கும் தோற்றதில்லை. உண்மைகள் என்றைக்கும் பொய்த்தது இல்லை. எனவே நம்முடைய கடமைகளும் என்றைக்கும் நிற்பதில்லை என்ற அந்த உணர்வோடு நாம் உறுதி எடுப்போம். சபதம் ஏற்போம்.இந்த மார்ச் 1 ஆம் தேதியை இளைஞர் எழுச்சி நாளாக மட்டுமல்ல, பாகுபாடு ஒழிப்பு தினமாகவும் நாம் இன்றைக்கு இதை நடத்துகிறோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு ரத்ததானம் வழங்குவதற்கு அனைவரும் உறுதி எடுப்போம். சபதம் ஏற்போம். இதுதான் என்னுடைய பிறந்த நாள் செய்தியாக - வாழ்த்து சொல்ல வந்திருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் இந்த நேரத்திலே தெரிவித்துக்கொண்டு உங்கள் அனைவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி என்னுடைய உரையை இந்த அளவில் நிறைவு செய்கிறேன் என்றார் ஸ்டாலின்.

No comments:

Post a Comment


Labels