வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

03/10/2014

ஜெயலலிதாவின் முகத்திரையை கிழிக்கும் Vikatan ஜூனியர் விகடன் கட்டுரை.. !
  17 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடித்து, தீர்ப்புக்கு முதல்நாள் வரைகூட மனு போட்டு வழக்கை இழுத்தடிக்க முயன்ற ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதற்கு இத்தனை கூக்குரல்களா? இத்தனை நாள் இழுத்தடித்ததுகூட சரி, தீர்ப்பை எதிர்கொள்வதற்கு முதல்நாள்கூட ஜெயலலிதா தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போயிருக்கலாம். ஒருவேளை அவர் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு வந்திருந்தால் கம்பீரத்தோடு பதவி ஏற்ற பெருமையும் அவருக்குக் கிடைத்திருக்கும். ஆனால் ஜெயலலிதாவோ அரசு மரியாதைகளுடன் போய் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டது, அவர் தனக்குத்தானே தேடிக்கொண்ட அவமானம்.
'அம்மா மீது பொய்வழக்கு', 'அம்மா சிறையிலா?' என்ற கண்ணீர்க் குரல்களைப் பார்க்கும்போது அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. இப்போது ஜெயலலிதாவுடன் சேர்த்து தண்டிக்கப்பட்ட சுதாகரன் மீது கஞ்சா வழக்கு, ஒரு நீதிபதியின் மீது கஞ்சா வழக்கு என ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் பலர்மீது வழக்குகள் போடப்பட்டன. அப்படிப் போடப்பட்ட வழக்குகளில் பெரும்பாலானவற்றைப் பொய் வழக்குகள் என்று நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. கருணாநிதி, ஸ்டாலின், வைகோ, நெடுமாறன், கொளத்தூர் மணி என மாற்றுக்கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களைச் சிறையில் அடைத்ததும் ஜெயலலிதா அரசுதான்.
தமிழக அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் பெரியார், அண்ணா, காமராஜர், ராஜாஜி, கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன், நல்லகண்ணு, தா.பாண்டியன், ஜி,ராமகிருஷ்ணன், சங்கரய்யா, வீரமணி, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் என போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற வரலாறு நிறையவே உண்டு. ஆனால் ஜெயலலிதாவுக்கோ போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற அரசியல் அனுபவமே கிடையாது. இதோடு சேர்த்து இரண்டு முறைகளும் அவர் ஊழல் குற்றச்சாட்டில்தான் உள்ளே போயிருக்கிறார். ஆனால் அவரை ஏதோ சமூகப்போராளி போலச் சித்தரிக்கிற அவலம் நிகழ்கிறது.
இன்றைய சூழ்நிலையில் சட்டத்தின் வார்த்தைகளில் சொல்வது என்றால், ஜெயலலிதா நிரூபிக்கப்பட்ட ஊழல் குற்றவாளி, தண்டிக்கப்பட்ட ஊழல் அரசியல்வாதி. ஆனால் அவரைச் சமூகப் போராளியாகச் சித்தரிப்பது சட்டப்படி மட்டுமல்ல, தார்மீக ரீதியாகவும் தவறு.
ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் போராட்டத்தைத் தொடங்கியபோது நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த பலர் இங்கே தமிழகத்திலும் போராட்டம் நடத்தினார்கள். இதோ ஜெயலலிதா என்ற ஊழல் அரசியல்வாதி தண்டிக்கப்பட்டதற்கு எதிராக தமிழகத்தின் வன்முறைகளும் கேலிக்கூத்துகளும் நடக்கின்றனவே, அந்த ஊழல் எதிர்ப்புப் போராளிகள் எல்லாம் எங்கே போனார்கள்?
இன்னொருபுறம் ஊழல் அரசியல்வாதிகளுக்குக் கருடபுராணம் தொடங்கி, சொத்துக்களைப் பறிமுதல் செய்வது, குடும்பத்தில் இருப்பவர்களுக்குக் கல்லூரியில் இடம் தரக் கூடாது, ரேஷன் கார்டு தரக் கூடாது என்றெல்லாம் ரூம் போட்டு படங்களில் சீன் வைத்த சினிமாக்காரர்கள், இப்போது உண்ணாவிரதம் என்ற பெயரில் சீன் போடுகிறார்கள்.
எந்த சுயகூச்சமும் இன்றி, தண்டிக்கப்பட்ட ஊழல் அரசியல்வாதியை நியாயப்படுத்தி, அவர் புகழ் பாடுகிறார்கள். 'தெய்வத்தை மனிதன் தண்டிக்கலாமா?' என்று அவர்கள் வைக்கும் பேனர் நீதித்துறையை மட்டுமல்ல, கடவுளை நம்புபவர்களையும் சேர்த்தே அவமதிக்கிறது.
இப்படியாக, தந்தை பெரியார் காலத்திலிருந்து 'அம்மா' காலத்துக்கு நாம் வழுக்கி விழுந்து வந்து சேர்ந்திருப்பதற்குப் பெயர்தான் மதிப்பீடுகளின் வீழ்ச்சி.
- சுகுணா திவாகர்

No comments:

Post a Comment

Labels