வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



13/10/2014

ஜெயலலிதா வுக்கு ஜாமீன் சாத்தியமா???????
**************************************************************
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்து வெளியில் வருவதற்கான சாத்தியங்கள் எந்தளவு உள்ளன? ஜாமின் மனுத் தாக்கல் மேற்கொள்வதில் எவ்வாறான ஆபத்துக்கள் உள்ளன?, ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் எழும் கருத்துக்கள் எவை? எதற்காக ஜெயலலிதா மீதான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்கின்றனர்? என விரிவாக அலசுகிறது இக்கட்டுரை.
ஜெயலலிதா தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக இருந்த 1991-1996 காலகட்டத்தில் அவரது வருமானத்துக்கு மீறி, சுமார் 66.65 கோடி மதிப்புள்ள சொத்துக்களை குவித்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 17 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கு ஒரு வழியாக முடிவு பெற்று ஜெயலலிதா தனது முதல்வர் பதவியையும் இழந்து தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ளனர்.
1991ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா முதன்முறையாகத் தமிழக முதல்வராகப் பதவியேற்றபொழுது, அவருக்கிருந்த மொத்த சொத்துக்களின் மதிப்பு இரண்டு கோடியே ஒரு இலட்சத்து எண்பத்து மூவாயிரம் ரூபாய் (ரூ.2,01,83,000) என அறிவிக்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவருடைய மொத்த சொத்து மதிப்பு அறுபத்து ஆறு கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து எழுபத்து மூவாயிரம் ரூபாய் (ரூ.66,44,73,000) என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவருடைய சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளில் 33 மடங்கு அதிகரித்திருந்தது.
ஜெயலலிதா மீதான முதல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட தேதி 1996 செப்டம்பர் 18. இதன் பின்பு இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் விசாரணை செய்து குற்றப்பத்திரிகையை 1997-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதியன்றுதான் தாக்கல் செய்துள்ளனர். இதில் 9 மாதங்கள் கழிந்துவிட்டன.
சொத்து குவிப்பு வழக்கை 1.7.1991க்கு முன் இருந்த சொத்துகள் 1.7.1991 முதல் 30.4.1996 வரையிலான சேர்த்த சொத்துக்கள் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. வழக்கு காலத்திற்கு முன் ரூ.2 கோடியே 01 லட்சத்து 82 ஆயிரத்து 953 மதிப்புள்ள சொத்து இருந்ததாகவும், வழக்கு காலத்திற்கு பின் சொத்து மதிப்பு ரூ.64 கோடியே 42 லட்சத்து 89 ஆயிரத்து 616 சேர்த்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது.
வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர்களில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ரத்த சம்மந்தமான உறவினர்கள். மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரனை முதல் குற்றவாளியான ஜெயலலிதா, தத்து பிள்ளையாக ஏற்றுகொண்டு பிரமாண்ட திருமணம் செய்து வைத்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்திருப்பதற்கான ஆவணங்கள் உள்ளது.
முதல் வழக்கில் குற்றவாளிகள் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யவே மேலும் 4 மாதங்கள் முடிந்து 1997 அக்டோபர் 21 அன்றுதான் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதன்பிறகு கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் நீதிமன்றத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது இந்த வழக்கு.
1997க்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்து 2000 செப்டம்பர் 2-ல் இரண்டாவதாக ஒரு புது வழக்கு ஜெயலலிதா மீதும் இதர குற்றவாளிகள் மீதும் சுமத்தப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேலும் 6 மாதங்கள் கழித்து 2001 மார்ச் 23 அன்றுதான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது.
2001 செப்டம்பர் 21-ல் அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பின்பு 1 வருடம் கழித்தே சாட்சிகள் விசாரணை தொடங்கியது. 76 சாட்சிகளும் 2003 பிப்ரவரி மாதம் வரையிலும் பல்வேறு நாட்களில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது பல்டி அடித்தனர். வழக்கு விசாரணை சென்றதைப் பார்த்து, ஜெயலலிதா வென்றுவிடுவார் என்பது போல் தோன்றிய நேரத்தில்தான் பேராசிரியர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு செய்து வழக்கினை பெங்களூருக்கு மாற்றும்படியான உத்தரவை பெற்றுக் கொடுத்தார்.
பேராசிரியர் அன்பழகன், உரிய நேரத்தில் தலையிட்டு வழக்குத் தொடர்ந்திருக்காவிட்டால் நிச்சயம் ஜெயலலிதா இந்த வழக்கில் ஜெயித்திருப்பார்.
பெங்களூருக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலேயே ரிவ்யூ பெட்டிஷன் என்று சொல்லி காலத்தை கடத்தியது ஜெயலலிதா தரப்பு தான். இதனால் இன்னும் 2 ஆண்டுகள் கழித்து 2005 மார்ச் 28-ம் தேதியில்தான் பெங்களூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளும், வாக்குமூலங்களும் மொழி பெயர்க்கப்பட்டு குற்றவாளிகள் தரப்பிற்குத் தரப்பட்டன.
இடையில் “எனக்குத் தமிழ் மட்டுமே தெரியும். ஆங்கிலம் தெரியாது. எனவே தமிழில் எனக்குக் குற்றப்பத்திரிகையை மொழி மாற்றம் செய்து கொடுங்கள்” என்று சசிகலா கொடுத்த மனுவோடு, மறுவாரம் சுதாகரனும், இளவரசியும் சேர்ந்து மனுவைக் கொடுத்து இன்னும் கொஞ்சம் தாமதாக்கினார்கள்.
2005 ஜூலை மாதத்தில் இரண்டு வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து நடத்த முடிவு செய்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து பேராசிரியர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குதான் இந்த வழக்கை நீண்ட வருடங்கள் இழுக்க வைத்தது.
2010 ஜனவரி மாதம் தொடங்கி மாதந்தோறும் இந்த வழக்கில் விசாரணைகள் நடைபெற்று, ஏதேனும் ஒரு முன்னேற்றங்கள் நடந்து கொண்டு வந்திருக்கின்றன.
2005-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி தமிழில் மொழி பெயர்த்துக் கொடுக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் இருக்கும் வாசகங்கள் தவறான அர்த்தங்களைக் கொடுக்கின்றன என்பதை 6 ஆண்டு காலம் கழித்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் கூறினர்.
எந்தெந்த இடங்களில் குற்றம், குறைகள் இருக்கின்றன என்று சொல்லி அவற்றைப் பட்டியலிட்டு கேட்டால், நீதிமன்றத்திலேயே அதனைத் திருத்திக் கொள்ளலாம். ஆனால் அதற்கு மாறாக, இனிமேல் புதிதாக, நீதிமன்றமே நேரடி கண்காணிப்பில் மீண்டும் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரையிலும் மொழி பெயர்க்க வேண்டும் என்று கோரி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்தார்கள் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள். சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தபிறகு, இப்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
"முதல்வர் ஜெயலலிதா விற்கு, இவ்வழக்கின் இறுதியில் தனக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்றும், இந்த வழக்கில் இருந்து நாம் தப்பிக்கவே முடியாது என்பதையும் உணர்ந்து இருப்பதால்தான், இப்படி மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறாரா?, தன் மீது தவறில்லை என்றால், தன் மடியில் கனமில்லையென்றால், நீதிமன்றத்தில் துணிந்து நின்று வாதாடி வெற்றி பெற்று தனது நேர்மையைக் காட்டுவதைவிட்டுவிட்டு, வழக்கை இழுத்தடிப்பதன் மூலம், ஜனநாயகத்தையும், மக்களையும் ஏமாற்றுவது சரியா?" என்பதே ஜெயலலிதா மீதான எதிர் தரப்பினரின் வாதம்.
நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா வரும்போது, அவரின் பாதுகாப்புக்காக நீதிமன்றம் தற்காலிகமாக இடம் மாற்றப்படுகிறது. அவருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டு, அவருடைய பாதுகாப்பை உறுதி செய்கிறது. அவருடைய பாதுகாப்புக்காக 1,500 முதல் 3,000 போலீசார் வரை குவிக்கப்படுகின்றனர்; சாலையில் தடையரண்கள் ஏற்படுத்தப்பட்டுப் பொதுமக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுவதோடு, 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்படுகின்றது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா: “எனக்கு மட்டும் ஒரு 10 வயது குறைவாக இருந்திருந்தால் நானா அவங்களான்னு பார்த்திருப்பேன். இப்போது கையறுநிலையில் இருக்கிறேன். என் மீது நீதிபதிகள், கவர்னர் போன்றவர்களிடம் மனுக் கொடுப்பது, நீதிமன்றத்திலேயே பிட் நோட்டீஸ் கொடுப்பது, செய்தி ஊடகங்களில் அவதூறு பரப்புவது என அதிமுக அனுதாபிகளும், ஜெயாவுக்கு நெருக்கமானவர்களும் தொடர்ச்சியாக மெண்டல் டார்ச்சர் கொடுத்தார்கள். கடைசியில் அவர்கள் விரும்பியது போலவே நானும் விலக நேரிட்டது. இதனை கர்நாடக உள்துறை செயலருக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்திலும் தெரிவித்துள்ளேன்.” என்கிறார்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க இதுவரை 8 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதிகள் பச்சாப்புரே, மனோலி, ஆன்ட்ரிக்ஸ், மல்லிகார்ஜுனய்யா, சோமராஜு, பாலகிருஷ்ணா, முடிகவுடர், ஜான் மைக்கேல் குன்ஹா
காலவிவரம் :
1996 ஜூன் 14
சுப்ரமணிய சுவாமி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 1.7.1991 முதல் 30.4.1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறியிருந்தார். அதையேற்று கொண்ட நீதிமன்றம் விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டது.
1996 ஜூன் 26
புகார் மீது விசாரணை நடத்தும்படி போலீஸ் உயர் அதிகாரியாக இருந்த லத்திகா சரண், இன்ஸ்பெக்டர் ஜெனரல் வி.சி.பெருமாளுக்கு உத்தரவிட்டார்.
1996 செப்டம்பர் 18
முதல் தகவல் அறிக்கை வழக்கு குற்ற எண் : 13 ஏ.சி./96/ ஹெட் குவார்ட்டர்ஸ் Charge w/s 13(1) (e) r/w 13(2) of the P.C. Act and u/s.120-B r/w 109 IPC கணக்கில் காட்டப்படாத வருமானத்துக்கு அதிகமான கணக்கு காட்ட முடியாத அளவில் சேர்த்த சொத்துக்கள், இந்தியாவிற்குள் உள்ளவை.
1997
ஜெயலலிதா மற்றும் சசிகலா வீடுகளில் சோதனை நடத்தியபோது, தங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்கள், பட்டுச் சேலைகள், விலை உயர்ந்த கடிகாரங்கள் என்று 1066 அசையும் சொத்துக்களைப் பறிமுதல் செய்தனர்.
1997 ஜூன் 4
விசாரணை அறிக்கை கொடுத்தபின், இவ்வழக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி சென்னை தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
1997 ஜூன் 5
வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
1997 அக்டோபர் 21
2,3 மற்றும் 4-ம் குற்றவாளிகளான சசிகலா, சுதாகரன், இளவரசி தாக்கல் செய்த விடுவிப்பு மனுவை தள்ளுபடி செய்து 4 குற்றவாளிகள் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 259 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அதில் 39 சாட்சிகளை தவிர மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
1999 நவம்பர் 6 முதல் 11
லண்டனில் சசிகலா உறவினரான தினகரனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனைகளில், பல்வேறு ஆவணங்களை தமிழக போலீசார் கைப்பற்றினர்.
2000 செப்டம்பர் 2
இரண்டாவது வழக்கு குற்ற எண்: 2 ஏ.சி./2000/ஹெட் குவார்ட்டர்ஸ் Charge u/s.13(1) (e) r/2 13(2) of the P.C. Act and u/s.120-B r/w 109 IPC (கணக்கில் காட்டப்படாத வருமானத்துக்கு அதிகமான கணக்கு காட்ட முடியாத அளவில் சேர்த்த சொத்துக்கள், லண்டனில் உள்ளவை.
2001 மார்ச் 23
2-வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
2001 ஏப்ரல் 17
குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. (முதல் குற்றவாளி) ஜெயலலிதாவை தலைமையைகக் கொண்ட அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றது.
2001 மே 21
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
2001 செப்டம்பர் 21
உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தால் முதல் குற்றவாளியான ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
2002 மார்ச் 2
முதல் குற்றவாளி ஜெயலலிதா இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
2002 நவம்பர் முதல் பிப்ரவரி 2003
76 சாட்சிகள் திரும்ப அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்கள் ஏற்கெனவே கொடுத்த வாக்குமூலத்தில் இருந்து பல்டி அடித்தனர்.
2003 பிப்ரவரி 21
அரசுத் தரப்புச் சாட்சிகள் விசாரணை முடிவுற்றது.
2003 பிப்ரவரி 24
குற்றவாளிகளிடம் 313 சி.ஆர்.சி.பி.சி படி கேள்விகள் கேட்கப்பட்டன.
2003 பிப்ரவரி 28
இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யகோரி தி.மு.க பொதுசெயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த்தை தொடர்ந்து, சென்னை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
2003 நவம்பர் 18
இரண்டு வழக்குகளும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பெங்களூர் நீதிமன்றத்திற்கு சிறப்பு வழக்கு எண் 208/2004 மற்றும் 209/2004 ஆக உச்சநீதிமன்றத்தால் மாற்றம் செய்யப்பட்டது.
2004 செப்டம்பர் 10
வழக்கை சென்னை தனி நீதிமன்றம், பெங்களுருக்கு மாற்றம் செய்வதற்கான அதிகாரபூர்வ உத்தரவை பிறப்பித்தது.
2005 பிப்ரவரி
கர்நாடக அரசின் சார்பில் சிறப்பு நீதிமன்றம், தனி நீதிபதி பச்சாப்புரே, தனி அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
2005 மார்ச் 28
சாட்சிகளின் வாக்குமூலங்களும், வழக்கு ஆவணங்களும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து குற்றவாளிகள் மற்றும் தமிழக அரசிற்கு வழங்கப்பட்டது.
2005 ஜூன் 27
முதல் குற்றவாளி ஜெயலலிதா 2002 பிப்ரவரி 11-ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிலுவையில் இருந்த மனுவை பெங்களூர் நீதிமன்றம் விசாரித்து 2 வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டது.
2005 ஜூலை
2 வழக்குகளையும் சேர்த்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி. 3828/2005 - என்ற மனு, அன்பழகனால் தாக்கல் செய்யப்பட்டது.
2005 ஆகஸ்ட் 5
உச்சநீதிமன்றம், அன்பழகனின் வழக்கை ஏற்றுக் கொண்டு பெங்களூர் நீதிமன்ற வழக்கின் விசாரணைக்குத் தடை விதித்தது.
2009 டிசம்பர் 7
உயர்நீதிமன்றம் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு எண் : 938/2009-ஐ ஏற்றுக் கொண்டு 2-வது வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்தது.
2010 ஜனவரி 30
சிறப்பு அரசு வழக்கறிஞர் 45 சாட்சிகளைத் திரும்ப அழைப்பதற்கு அனுமதி கேட்டு மனு எண்: 321/2010 தாக்கல் செய்தார். அதே நாளில் குற்றவாளிகள் தரப்பில் வழக்கு விசாரணைக்கு அனுமதித்த உத்தரவில் காட்டப்பட்டிருந்த 2 அறிக்கைகள் வழக்கில் தாக்கல் செய்வதற்காக அனுமதி கேட்டு மனு எண்: 322/2010 தாக்கல் செய்யப்பட்டது.
2010 பிப்ரவரி 25
சிறப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு எண்: 321/2010 நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்த மனு எண்: 322/2010 நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
2010 மார்ச் 3
அரசுத் தரப்புச் சாட்சிகள் 42 பேரும் நேரில் ஆஜராகுமாறு விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. சாட்சிகள் விசாரணை 18-03-2010 முதல் 26-03-2010 வரை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்தது. குற்றவாளிகள் தரப்பில் மனு எண்: 340 மற்றும் 341 தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் சம்மன்களை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் வழியாக அனுப்பப்பட வேண்டும் என்று குற்றவாளிகள் கோரினர்.
2010 மார்ச் 4
2010 மார்ச் 3-ல் 42 அரசு சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டதை மாற்றம் செய்யக் கோரி மனு எண்: 346-ல் குற்றவாளிகள் மனு தாக்கல் செய்தனர். அதே நாளில் 340, 341 மற்றும் 346 மனுக்களின் மீது விவாதம் நடைபெற்றது.
2010 மார்ச் 5
மனு எண்: 340, 341, 346 இம்மூன்று மனுக்களையும் தள்ளுபடி செய்தது விசாரணை நீதிமன்றம்.
2010 மார்ச் 8
1997 ஜூன் 5-ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து மனு எண்: 79/2010 கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர் குற்றவாளிகள்.
2010 மார்ச் 10
79/2010 மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
2010 மார்ச் 19
மனு எண் 79/2010 தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி. 2248/2010 மனுவொன்றை குற்றவாளிகள் தாக்கல் செய்தனர்.
2010 மார்ச் 22
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி தேதிகள் மற்றும் விசாரணையை மறு பட்டியலிட்டு 2010 மே 3-க்கு வழக்கை மீண்டும் துவக்க நாள் குறித்தது விசாரணை நீதிமன்றம்.
2010 ஏப்ரல் 18
போதிலும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் இதன் விசாரணை முழுவதும் சட்டவிரோதமானது என்றும் வழக்கு விசாரணை முழுவதையும் இத்துடன் நிறுத்த வேண்டும் என்றும் குற்றவாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு மனு எண் 359-ஐ தாக்கல் செய்தனர்.
2010 ஏப்ரல் 27
இந்த மனுவை (மனு எண்:359) விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2010 மே 7
2010 மே 7-ல் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதனால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்தில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். அதனால் வழக்கு 2010 மே 11-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
2010 மே 11
விசாரணை நீதிமன்றத்தில் மனு எண்: 359 தள்ளுபடி செய்யப்பட்டதால் அதனை எதிர்த்து குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி.3836/2010 மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் குற்ற நடைமுறைச் சட்டம் 482-ன்படி தாக்கல் செய்யலாம் என தெரிவித்தது. இதனால் குற்றவாளிகள் இந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள்.
2010 மே
70000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் கண்ட ஆவணங்களில் 3 நகல்கள் தேவையென முதல் குற்றவாளி ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.
2010 ஜூலை 21
3-ம் குற்றவாளி சுதாகரன் சார்பிலும் அதே மனு தாக்கல் செய்யப்பட்டது.
2010 ஜூலை 22
மனு எண்: 396. விசாரணை நீதிமன்றத்தால் சில வழிகாட்டுதல்களுடன் இந்த மனு நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் சாட்சிகள் ஆஜராகியிருந்த குற்றவாளிகள் வழக்கை ஒத்தி வைக்க கேட்டுக் கொண்டதால் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது
2010 ஜூலை 29
மனு எண்: 396 நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முதல் குற்றவாளியான ஜெயலலிதா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கு எண்: 3748/2010
2010 ஜூலை 30
மனு எண்: 396-ல் வழங்கப்பட்ட உத்தரவில் நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் ஒரு பகுதிக்கு அரசு சார்பில் அரசின் சிறப்ப வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தார். இதன் வழக்கு எண்: 3766/2010.
2010 ஆகஸ்ட் 4
இந்த வழக்கில் ஜெயலலிதா வாய்தா வாங்கியே காலம் கடத்துவதாகக் கூறி தி.மு.க.வின் இளைஞரணியினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2010 ஆகஸ்ட் 16
மனு எண்: 396 நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு எண்: 3766/2010 மீதான விசாரணை நடந்தது. தொடர்ந்து அடுத்த விசாரணை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
2010 ஆகஸ்ட் 19
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு எண்: 3766/2010 மீதான விசாரணை தொடர்ந்து நடந்தது.
2011
முதல் ஏழு மாதங்களுக்குள்ளாகவே, சாட்சியங்களிடம் நடத்தும் விசாரணையை முடக்கும் நோக்கத்தோடு 23 மனுக்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.
2012 ஆகஸ்ட் 14
வழக்கில் ஆஜராகி வாதாடிவந்த அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தமது பதவியை ராஜினாமா செய்தார். மன உளைச்சல் காரணமாகவே தாம் ராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டார்.
2012 ஆகஸ்ட் 31
சொ‌த்து‌க்கு‌வி‌ப்பு வழ‌க்கை ‌விசா‌ரி‌த்து வ‌ந்த பெ‌‌ங்களூரு ‌சிற‌ப்பு ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி ம‌ல்‌லிகா‌ர்‌ஜுனையா ஓய்ழவு பெ‌ற்றா‌ர். பு‌திய ‌நீ‌திப‌தியாக சோமரா‌ஜ் ‌நிய‌லமி‌க்க‌ப்ப‌ட்டார்.
2013 பிப்ரவரி 2
கர்நாடக ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியால், சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார் பவானி சிங்.
2013 ஆகஸ்ட் 27
வழக்கில், அரசு வக்கீல் பாவனி சிங் போதிய ஆர்வம் காட்டவில்லை என்று திமுக புகார் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, அவரை அதிரடியாக நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டது.
2013 செப்டம்பர் 19
தமிழக முதல்வர், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞர், பவானி சிங் மீண்டும் நீக்கப்பட்டதை எதிர்த்து, கர்நாடக அரசுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில், ஜெயலலிதா சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
2013 செப்டம்பர் 22
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க, பெங்களூரு சிறப்பு கோர்ட் புதிய நீதிபதியாக, முடிகவுடர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும் ஏழாவது நீதிபதி இவர். நீதிபதிகள் பச்சாப்புரே, மனோலி, ஆன்ட்ரிக்ஸ், மல்லிகார்ஜுனய்யா, சோமராஜு மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே விசாரித்தனர்.
2013 செப்டம்பர் 30
சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த சிறப்பு அரசு வழக்குரைஞர் பவானி சிங்கை பதவி நீக்கம் செய்த கர்நாடக அரசின் ஆணை செல்லாது' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2013 நவம்பர் 7
பெங்களூர் சிறப்பு நீதிமன்ற புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் டி குன்ஹா பதவியேற்றார்.
2014 மார்ச் 14
உடல்நிலையை காரணம் காட்டி, வழக்கில் ஆஜராகி வாதம் செய்யாத அரசு வழக்கறிஞர் பவானிசிங்கிற்கு ஒருநாள் சம்பளம் ரூ.65 ஆயிரத்தை அபராதமாக விதித்து நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா உத்தரவிட்டார்.
2014 மார்ச் 22
7 மாத இழுபறிக்கு பின், அரசு வழக்கறிஞர் பவானி சிங் இறுதி வாதத்தை தொடங்கினார். சசிகலா வக்கீல் மணிசங்கர் 9 நாட்கள்,
சுதாகரன் மற்றும் இளவரசி தரப்பு வக்கீல் அமித் தேசாய் 8 நாட்கள் இறுதி வாதம்.
தொடர்ந்து பவானி சிங் 15 நாட்கள் இறுதி வாதம்.
2014 ஆக.28
சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா அறிவிப்பு. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் ஆஜராக உத்தரவு.
2014 செப். 16
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பின் தேதி 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அறிவிப்பு. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக தனிக்கோர்ட்டை பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்துக்கு மாற்றியும் நீதிபதி உத்தரவு.
2014 செப்.27
சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு.
தீர்ப்பின் முழு விவரம்
முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. மற்ற மூன்று குற்றவாளிகளுக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது என்றும் மேலும் இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட பல்வேறு விலை மதிப்பு மிக்க ஆபரணங்களை ஏலம் விட்டு அபராதம் வசூலிக்கப்படும். வழக்கு விசாரணைக்கான செலவுத் தொகையாக கர்நாடக அரசுக்கு தமிழக அரசு ரூ.5 கோடி வழங்க வேண்டும்” என நீதிபதி தீர்ப்பில் அறிவித்தார்.
இந்தத் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் பி.குமார், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும், அபராதத் தொகையும் மிகவும் அதிகம் என்றும், அதனை குறைக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொண்டார். அதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.
“குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க முடியும். ஆனால் 4 ஆண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, தண்டனையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை. மேலும், விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை 1991-96 காலகட்டத்தில் குற்றவாளிகள் 4 பேரும் குவித்த சொத்துக்களின் மதிப்போடு ஒப்பிட்டால் மிகவும் குறைவுதான். ஆகவே, அதனை கண்டிப்பாக செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார். மேலும், குற்றவாளிகள் 4 பேரையும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்குமாறு பெங்களூர் போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கருத்து
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபாரதமும் விதித்து தீர்ப்பளித்ததை அடுத்து இந்த தீர்ப்புக்கு மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ”ஜெயலலிதாவுக்கு இந்த தீர்ப்பை வழங்கியதன் மூலம் நீதிபதி குன்ஹா, நீதித்துறையில் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார். சட்டப்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. அபாராதம் விதித்ததில் குன்ஹா நீதிக் கோட்பாடுகளை மீறிவிட்டார்.
ஊழல் தடுப்பு சட்ட விதிகளின்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் வேண்டுமானால் இந்த தீர்ப்பை ஏற்கலாம். ஆனால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை எதிர்ப்பதாகவும் மேலும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ற இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? என்று ஆழமாக பரிசீலிக்க வேண்டி தேவை உள்ளது” என கூறியதை அடுத்து ஜெயலலிதா தரப்பில் ராம்ஜெத்மலானி வாதாடினால் தீர்ப்பினை மாற்ற முடியும் என நம்பி அவரை இந்த வழக்கில் வாதாட ஜெயலலிதா தரப்பில் தற்போது அழைப்பு விடுக்கப்பட்டு இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஜாமின் கோரி வாதங்களை தொடர முயற்சித்தனர். ஆனால் கர்நாடாக உயர் நீதிமன்றமோ விடுமுறை கால அமர்வினால் இது போன்ற வழக்குகளை உடனே விசாரித்து ஜாமின் வழங்க முடியாது. ஆகவே திங்கள் கிழமை வரை காத்திருக்கும் படியும் மேலும் இது போன்ற வழக்குகளை முழுவதுமாக புரிந்து கொள்ள நேரம் தேவைப்படுவதாக கூறி வழக்கினை திங்கள் கிழமைக்கு தற்போது ஒத்தி வைத்துள்ளது.
யார் இந்த ராம்ஜெத்மலானி?
இளம் வயதில் சட்டம் படித்து அனைத்து துறைகளிலும் குறிப்பாக குற்ற பிண்ணனி உள்ள வழக்குகளை எளிதாக தன் சட்ட அனுபவங்களையும் அறிவையும் வைத்து வாதாடும் திறமை படைத்த ராம்ஜெத்மலானி யாருக்காக தனது சட்ட அனுபவத்தை அதிகமாக பயன்படுத்தி இருக்கிறார் என்பது சுவாரஷ்யமானது.
ஆரம்ப காலத்தில் ஊழலுக்கு எதிராக போராடுபவராக தன்னை அடையாளப்படுத்தி கொண்ட ராம்ஜெத்மலானி பின்பு, பாரதிய ஜனதா கட்சிக்கு மிகவும் நெருக்கமானார். அதன் விளைவு வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட அமைச்சர் பதவி பெற்றார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சியாளர்களை சட்ட பூர்வமாக பல்வேறு வழக்குகளில் சிக்க செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதுவே அவரின் வழக்காடும் திறமையை மக்கள் மத்தியில் கவனத்தை பெறுவதற்கான மாபெரும் சக்தியாக பயன்படுத்தி கொண்டார்.
அதன் பிறகு அத்வானி, அமித் ஷா மற்றும் பாரதிய ஜனதா கட்சி சம்பந்தப்பட்ட பல்வேறு வழக்குகளில் வாதாடி அந்த வழக்குகளில் வெற்றியும் பெற்று தந்தார். அதன் கைம்மாறாக மாநிலங்களவையில் அமைச்சர் பதவியை பெறுவதர்கான வாய்ப்பினை பாரதிய ஜனதா கட்சி வழங்கியது. முதல் முறையாக மும்பையில் போட்டி இட்டு மத்திய அமைச்சர் பதவியையும் (சட்ட அமைச்சராகவும்) அதன் பின்னர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்தும் பாரதிய ஜனதா கட்சி ராம்ஜெத்மலானியை கவுரவப்படுத்தியது.
நீதின் கத்கரியை விமர்சித்த்தற்காக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து சுமார் 6 வருடம் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பொது நல வழக்குகளை தொடர்பவர்களின் மிக பெரிய எதிரியாக எப்போதும் செயல்பட கூடியவர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அவ்வப்போது அவரின் வாத திறமையை கண்டு வியந்து தங்களது தீர்ப்பை மாற்றி எழுதும் அளவுக்கு திறமை கொண்டவர் என்பது உண்மை. அதே சமயத்தில் அவரின் வாதமும், வழக்கின் தீர்ப்பை திசை திருப்பும் தன்மையும் இந்திய அரசியல் சட்டம் எந்த அளவிற்கு மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவதாக இருக்கும் என்பதை அவரின் வாதத்தை பார்த்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள்.
கடந்த 2011-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்ட னையை நிறுத்துவதற்குக் காரணமாக இருந்தார்.
.
.நன்றி: தமிழ் மீடியா...

No comments:

Post a Comment


Labels