வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



15/10/2014

கிடைத்த பரிசு என்னவோ? சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது என ஆளுநர் பாராட்டுக்கு கலைஞர் கண்டனம்!

தி.மு.க. தலைவர் கலைஞர் 15.10.2014 புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்று தமிழக ஆளுநர் ரோசையா அவர்கள் தமிழக அரசைப் பாராட்டியதாக ஏடுகளில் இன்று செய்தி வந்துள்ளது. ஆனால் இன்று காலையில் வெளிவந்த நாளேடுகளில் உள்ள தகவல்படி, திருவள்ளூர் அருகே பால்வளத் துறை அமைச்சர் ரமணா அவர்களின் சித்தப்பா மகன் ரவி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அமைச்சரின் தம்பியே நேற்று அவருடைய கட்சிக்காரர்களாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று செய்தி வந்துள்ளது. 

கோவையில் அய்யம்மாள், லெட்சுமி என்ற மூதாட்டிகள் இருவர் நகைக்காக கொலை செய்யப் பட்டுள்ளனர். அம்பத்துhர் அருகே தமிழ் மணி என்பவர் கொலை செய்யப் பட்டுள்ளார். வேளச்சேரியில் மாநகராட்சி ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மறைமலைநகரில் என்ஜினியர் வீட்டுப் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளைஅடிக்கப்பட்டுள்ளது. மீஞ்சூர் அத்திப்பட்டில் காண்ட்ராக்டர் விஸ்வால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். 

கூடுவாஞ்சேரியில் முத்து என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொன்னேரி அருகே குஜராத் வாலிபர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இவையெல்லாம் போதாது என்று திருவாடானை அருகே சையது முகமது என்பவர் காவல் நிலையத்திலேயே காவலர் ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட செய்தியும் வந்துள்ளது. இவ்வளவும் நேற்று ஒரு நாளில் நடைபெற்ற சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள். 

ராமனாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள எஸ்.பி. பட்டணத்தைச் சேர்ந்தவர் அல்லா பிச்சை. அவருடைய மகன் தான் சையது முகமது. வயது 22 தான். சையது முகமது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்திற்கு அருகே உள்ள அருள்தாசின் மெகானிக் ஷாப்புக்கு, சென்றிருந்த போது, அவருடைய “பைக்கை” சர்விஸ் செய்தது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதுபற்றி அருள்தாஸ், எஸ்.பி. பட்டணம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்தப் புகாரில் சையது முகமது கத்தியைக் காட்டி மிரட்டினார் என்று தெரிவித்திருக்கிறார். இந்தப் புகார் பற்றி விசாரிப்பதற்காக சையது முகமதுவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இந்தக் காவல் நிலையத் தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் காளிதாஸ். இவர் சையது முகமதுவிடம் விசாரணை நடத்தும்போது ஏற்பட்ட தகராறில், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சையது முகமதுவை 3 முறை சுட்டார் என்றும் சையது முகமது அதே இடத்தில் பலியானார் என்றும் செய்திகள் வந்துள்ளன. 

 இவ்வளவும் தமிழ்நாட்டில் நடந்துள்ள செய்திகள்; அதுவும் ஒரே நாளில்! ஆனால் நமக்கு வாய்த்திருக்கிற ஆளுநர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று பாராட்டியிருக்கிறார். இந்தப் பாராட்டுக்குக் கிடைத்த பரிசு என்னவோ? அவருக்கும் மேலான பதவியில் இருப்பவர்கள் தான், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதைக் கூறுவதற்குக் கடமைப்பட்டவர்கள்; கடமைப்பட்டவர்கள் மட்டுமல்ல; பொறுப்புள்ளவர்களும் கூட! 

இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment


Labels