வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

10/10/2014

ஆபத்தான ஆட்டம் - விகடன் தலையங்கம்
**********************************************************
ஜெயலலிதா சிறையில் இருக்கிறார். காரணம், அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், 'ஜெயலலிதா குற்றவாளி’ என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தன் மீது குற்றம் இல்லை என ஜெயலலிதா தரப்பு கருதினால், மேல் நீதிமன்றங்களில் முறையீடு செய்து நீதி பெறலாம். சட்டத்தின் ஆட்சியை மதித்து நடக்கும் அரசும் கட்சியும் தலைவர்களும் மக்களும் இப்படித்தான் நடக்க வேண்டும். ஆனால், நடப்பது என்ன?
வழக்கு விசாரணை நடைபெற்ற இடம் கர்நாடகா மாநிலம் என்பதால், வேண்டும் என்றே மொழிவெறுப்பு இங்கே தூண்டிவிடப்படுகிறது. 'வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஒரு கன்னடர்’ எனச் சொல்லி, திட்டமிட்டே இனவெறுப்பு உருவாக்கப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு பதற்றம் ஏற்படாமல் தடுக்க வேண்டிய தமிழக அரசு, மர்ம மௌனம் காக்கிறது. இரு மாநில உறவுகள் குறித்தும், எல்லையோரம் வாழும் மக்களின் பாதுகாப்பு குறித்தும் கவலைப்படாமல் ஆடும் இந்த ஆட்டம், மிக மிக ஆபத்தானது!
பொதுவாகவே போராட்டங்கள் நடத்துவதில் முன்நிற்கும் மாநிலம் தமிழ்நாடு. சுயமரியாதையும் பகுத்தறிவும்கொண்ட அரசியல் மரபின் மிச்சம் இது. ஆனால், இப்போது 'நடத்தப்படும் போராட்டங்களை’ப் பார்த்தால், வெட்கித் தலைகுனிய வேண்டும். தன் கட்சித் தலைவர் சிறையில் அடைக்கப்பட்டதால் அந்தக் கட்சிக்காரர்கள் துக்கப்படலாம். ஆனால், ஓர் அரசாங்கமே துக்கம் அனுஷ்டிப்பதுபோல இருப்பது விநோதம்.
ஜெயலலிதாவின் சிறைத் தண்டனைக்குப் பிறகு தமிழ்நாட்டில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் அராஜக அபத்தங்கள். கடைகளை மூடச் சொல்லி, வேலையை நிறுத்தச் சொல்லி, வியாபாரிகளை, தொழிலாளர்களை அச்சுறுத்துகின்றனர். கல்வீச்சு, பேருந்து எரிப்பு என வன்முறைகள் அரங்கேற்றப்படுகின்றன. 'நாமும் ஏதாவது செய்யாவிட்டால், பிறகு பிரச்னை வருமோ?’ எனத் திரைப்பட நடிகர்கள் வரை தெருவுக்கு வந்துவிட்டார்கள். அநாகரிகமான வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. தீர்ப்புக்கு எதிராகவும் நீதிபதி குறித்தும், அவதூறுகள், அசிங்க அர்ச்சனைகள் அள்ளி இறைக்கப்படுகின்றன.
இவை அனைத்தும் அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு என்பதாவது, இவர்களுக்குத் தெரியுமா? நீதிமன்றத் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பித்து உள்ளாட்சி மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றுவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே எள்ளி நகையாடும் செயல். மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கெடுக்கும் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை; தண்டிக்கப்பட வேண்டியவை.
'அமைதி, வளர்ச்சி, வளம்’ மூன்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த தாரக மந்திரம். அதில் 'அமைதி’யை முதலில் நிலைநிறுத்துங்கள், முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களே!
நன்றி : விகடன்

No comments:

Post a Comment

Labels