வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



12/07/2014

ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக எம்.எல்.ஏ.க்கள் மனு!

ஆளுநரிடம் அளித்த அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :-
சென்னை போரூருக்கு அருகிலுள்ள மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 61 பேர் உயிரிழந்ததையும், 27 பேர் காயமடைந்ததையும் தங்களது கவனத்திற்கு மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.
இந்தக் கட்டடம் ஒரு ஏரி மீது கட்டப்பட்டது. கட்டுமான அனுமதிக்கு (பெர்மிட்டுக்கு) அந்நிறுவனம் விண்ணப்பித்தபோது மண் பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்றும் பின்னர்தான், அதாவது கட்டுமானம் ஆரம்பித்த பிறகுதான், சமர்ப்பிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்தக் கட்டடம் நிறைவடைந்து குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்து பின்னர் இடிந்திருந்தால் சாவு எண்ணிக்கை மேலும் பல மடங்கு இருந் திருக்கும்.
விண்ணப்ப கட்டத்திலேயே
பிளானிங் விதி மீறல்கள்!
இந்தக் கட்டடத்துக்கு அனுமதி வழங்கியதில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறினாலும், இதுதொடர்பான அறிக்கையை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அதிகாரிகள் அதற்கு முந்தைய நாளன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு அனுப்பியதாக நாளேடுகள் தெரிவித்தன. இக்கட்டடத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட திலிருந்தே பல்வேறு விதிகள் மீறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. மனையின் பக்கவாட்டில் வெற்றிடம் விடப்படுவதில் விதிமீறல்கள் காணப்பட்டன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விவாதிக்க 17.8.2012 அன்று சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் பல மாடிக் கட்டடங்களுக்கான உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்று அதில் சாலை அகல வேறுபாடு இருப்பதால் இந்த விண்ணப்பத்துக்கு விதிகளைத் தளர்த்தலாம் என்று முடிவு செய்யப் பட்டது. மேலும் வெளிப்புற வெற்றிடம் விதிமீற லையும் முறையான அங்கீகார மின்றி மனையில் நிலம் பிரிக்கப்பட்டதற்கும் முறைப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
விண்ணப்பக் கட்டத்திலேயே கட்டுமான பிளானில் விதிமீறல்கள் இருப்பது தெரிந்த பிறகும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அதிகாரிகள் அதை முறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டியது ஏன் என்றும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் இந்நிறுவனத்துக்கு சாதகமாக அனுசரணையாக இரண்டு அரசாணைகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வெளியிட்டது ஏனென்றும் நாளேடுகள் கேள்வி எழுப்பின.
முதலமைச்சர் அங்கு பார்வையிடச் சென்ற போது மீட்பு நடவடிக்கைகள் தாமதப்படுத்தப் பட்டது குறித்து ஒரு செய்தியாளர் கேட்டபோது அது உள்நோக்கம் கொண்ட கேள்வி என்று கூறி அவர் பதிலளிக்க மறுத்தார் என்றும் கூறப்பட்டது. இதுபோன்ற பல கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் ஒரு கட்டடம் இடிந் துள்ளது தமிழக மக்களின் மனங்களில் அய்யப்பாடு எழுந்துள்ளதால் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வழங்கியுள்ள அனுமதிகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பொதுவான கருத்து நிலவுகிறது.
அனுமதி அளிக்கும் முன்பே
கட்டடப் பணிகள் தொடங்கியது!
குடியிருப்புப் பகுதிகளில் மண் பரிசோதனை உட்பட பல அம்சங்களை ஆய்வு செய்ய சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை ஐ.ஐ.டி. மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவற்றின் வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும வட்டாரங்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளன.
வருவாய்த் துறையின் கீழ் விவசாய நிலம் என்று பிரிக்கப்பட்ட இந்தப் பகுதி களிமண் பூமி என்றும் அங்கு 25 மீட்டர் ஆழத்துக்கு அடித்தளம் தேவைப்படுமென்றும் தெரிகிறது. இக்குழு இந்த அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், விதிப்படி திட்ட அனுமதி பெறுவதற்கு முன்னரே கட்டடம் கட்டப்பட்டதா என்றும் அது விசாரிக்கும். 15.2.2012 அன்று திட்ட அனுமதிக் கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னரே 2011 ஆம் ஆண்டில் கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டன என்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும வட்டாரங்கள் குற்றம் சாட்டின.
இக்கட்டட நிறுவனமான பிரைம் சிருஷ்டி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் 15.2.2012 அன்று பிளான் அனுமதிக்கு விண்ணப்பம் சமர்ப்பித்தது என்றும் 6.6.2013 அன்று அனுமதி பெற்றது என்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் உள்ள ஆவணங்கள் காட்டுகின்றன. "ஓராண்டுக்குள் இப்பகுதியில் இரண்டு உயரமான கட்டடங்கள் எழும்பியுள்ளன என்பது வியப்பளிக்கிறது"" என்று வட்டாரங்கள் கூறு கின்றன.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படாத நிலை யிலேயே 2011ல் பணி தொடங்கியது என்று அவர்கள் உறுதி செய்வது சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளின் பாத்திரத் தினை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது. முறைப்படி, பிளான் அனுமதி நகலை அமலாக்கப் பிரிவு பெற்று அவர்கள் அந்த இடம் காலியாக உள்ளதா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும். ஆனால் இதில் அமலாக்கப் பிரிவு கண்காணிப்பு செய்யப்படவில்லை.
இதைவிட ஆச்சரியமானது என்னவென்றால், இக்கட்டடம் கட்டுவதற்கு வளர்ச்சிக் கட்டுப்பாடு வரைமுறைகள் தளர்த்தப்படுவதற்கு 2012 நவம்பர், 2013 மே ஆகிய மாதங்களில் இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டன என்பதுதான். விதி மீறல்கள் மிகக்குறைவுதான் என்று சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் கூறியபோதும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும நெறிமுறைகள் ஒவ்வொன்றையும் மீறி இந்த நிறுவனத்துக்கு சிறப்புச் சலுகை உரிமைகள் அளிக்கப்பட்டது குறித்து கேள்விகள் உள்ளன.
ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அரசு நியமித்துள்ள போதும், விசாரணைக்கான கால நிர்ணயம் எதுவும் வரையறுக்கப்படவில்லை. மேலும், நீதிபதி ரகுபதி தமிழக அரசின் கீழ் பல்வேறு இதர குழுக்களில் இடம் பெற்றுள்ளதால் அவர் இந்த விசாரணையை பாரபட்சமின்றி நடத்துவது சந்தேகத்துக்குரியதாகும்.
இடிந்து விழுந்த கட்டடத்தின் அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர்கள் கூட கலந்து கொண்டனர் என்று பல செய்திகள் தெரிவிப்ப தால், நியாயமான முறையில் விசாரணை நடத்தி குற்றம் இழைத்தவர்களை தண்டிக்க இந்த விசாரணையை சி.பி.ஐ.வசம் ஒப்படைப்பதுதான் நியாயமானதாக இருக்கும்.
தமிழக அரசு நியமித்துள்ள ஒரு நபர் கமிஷனை திரும்பப்பெற்று சி.பி.ஐ.யிடம் விசாரணை ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, தே.மு.தி.க, சி.பி.எம்., சி.பி.ஐ., ம.தி.மு.க, பா.ம.க. போன்ற பல்வேறு இதர கட்சிகளும் மற்றவர்களும் கோரியுள்ளனர்.
எனவே, தாங்கள் உடனடியாகத் தலையிட்டு சி.பி.ஐ.வசம் இந்த விசாரணையை ஒப்படைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட தி,மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
LikeLike ·  · 

No comments:

Post a Comment


Labels