வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



27/01/2014

திருச்சி என்றாலே, திருப்புமுனை மாநாடுதானே? (5)

அண்ணா அவர்கள் இருந்து மிகவும் வெற்றிகர மாக நடத்திய விருகம்பாக்கம் மாநாட்டினைப் பற்றி கடந்த வாரம் விரிவாக விளக்கியிருந்தேன் அல்லவா? அண்ணா அவர்கள் நம்மை விட்டு மறைந்த பிறகு 1970ஆம் ஆண்டு பெப்ரவரித் திங்களில் - இதே திருச்சியில்தான் திருச்சி மாவட்ட ஐந்தாவது தி.மு.க. மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் நான் ஆற்றிய உரையின் தொடக்கம் இப்படித்தான் அமைந்தது!
"கழகக் கண்மணிகளே! அருமைத் தாய்மார்களே! பெரியோர்களே! பேரறிஞர் அண்ணா அவர்களே! . என்று அழைத்துப் பேச்சைத் தொடங்கிட வேண்டிய நான், இன்று அந்த அண்ணன் எங்கே? எங்கே? என்று தேடுகிற நிலைமையில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

"தம்பீ வா! தலைமையேற்க வா!” என்று அழைத்து ஆணையிட்டதும், கேட்டு ஓடிவந்த நாவலர், இங்கே அமர்ந்திருக்கிறார், அழைத்து ஆணையிட்ட நீ எங்கே போய்விட்டாய்?
மதியழகனுக்கு எப்போதுமே பிடிவாதக் குணம் அதிகம்; ஆனாலும் தான் நினைத்ததைப் பேசி நம்மைக் கவர்ந்து தன் பக்கம் இழுக்கத் தவறமாட்டார் என்று அடிக்கடி புகழ்வீர்களே அண்ணா! அந்தப் பிடிவாதக்கார மதியழகன் இங்கே அமர்ந்திருக்கிறார்; அவரைப் பிரிந்து எங்கே அண்ணா சென்று விட்டீர்கள்?
சிற்றரசு பேசினால் நான் குலுங்கக் குலுங்கச் சிரித்து விடுகிறேனடா தம்பீ! என்று சிரிப்பீர்களே அண்ணா; அந்தச் சிற்றரசு இங்கே எங்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தபோது, அதை ரசிக்காமல் எங்கே போய் விட்டீர்கள் அண்ணா?
பக்கத்தில் என்.வி.என். அமர்ந்து, வெற்றிலை மடித்துத் தர, அதை வாங்கி வெற்றிச் சிரிப்போடு வாய் குழையக் குழையப் போட்டுக் கொள்வீர்களே, அண்ணா! வெற்றிலை மடித்துத் தர இங்கே என்.வி.என். இருக்கிறார், வெற்றி களைத் தந்த எங்கள் அண்ணனே, நீ எங்கே போய்விட்டாய்?
ஆழமாகச் சிந்திப்பதும் - அமைதியாக இருப்பதும் - ஆணித்தரமாக வாதிடுவதும் அன்பழகனின் இயல்பு எனப் பாராட்டுவீர்களே அண்ணா - அந்தப் பேராசிரியர் இங்குள்ளார்; பெருமை மிகு அண்ணனே! நீ எங்கே போய்விட்டாய்?
"என்ன முத்து? கோபமாக வருகிறாயா? உட்கார்!” என்று புன்னகை தவழச் சொன்னதும், கோபத்தை எல்லாம் மறந்துவிட்டுக் குளிர்ந்த முகத்தோடு எதிரே அமர்வாரே; அந்த மதுரை முத்து இந்த மாநாட்டிலே இருக்கிறார்; ஆனால் அவரைக் குளிரவைக்கும் அண்ணனே; நீ எங்கே போய்விட்டாய்?

"மன்னை, மன்னார்குடிக்கு வர வேண்டாமென்று கருணாநிதிதான் சொல்கிறான், என் மேல் குற்றமில்லை யப்பா” என்று குறும்பு செய்வீர்களே, அந்தக் குறும்பைத் தாங்கிக் கொள்கிற மன்னை நாராயணசாமி இங்கே இருக்கிறார், அண்ணனே, எங்கே போய்விட்டாய்?
"அன்பில்! எங்கே கொஞ்சம் கண்ணைக் காட்டு” என்று கண்ணைக் காட்டச் சொல்லி குமிழ்க் கண்களைப் பார்த்து ரசிப்பீர்களே, அந்தக் கண்ணைக் காட்ட நம்முடைய அன்பில் இங்கே இருக்கிறார். அண்ணனே, கண்மூடி நீ எங்கே போய்விட்டாய்?
"சென்று வா தம்பீ; வென்று வா தம்பீ” என்று கல்லக்குடிப் போராட்டத்திற்கு சிதம்பரத்திலே என்னை வழியனுப்பி வைத்தீர்களே, அண்ணா! சென்று வந்திருக்கிறேன்; வென்று வா என்று சொன்ன நீங்கள் எங்கே போய் விட்டீர்கள்? எங்கே போய்விட்டீர்கள்? என்று கேட்டுத்தான் இந்த மாநாட்டிலே பேரறிஞர் அண்ணா அவர்களே என்று நான் அழைக்கிறேன்.
எனக்கு நம்பிக்கை உண்டு. இங்கேயிருக்கிற எங்களுக்கெல்லாம் நம்பிக்கை உண்டு. அண்ணா நீ இங்கேதானிருக்கிறாய். இந்தப் பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாய். இந்த ஆரவாரத்தைக் காணுகிறாய். இங்கே இருக்கின்ற உன்னுடைய அருமைத் தங்கைகளையெல்லாம் பார்க்கிறாய். தம்பிகளின் பட்டாளங்களைக் காணுகிறாய். மலர் போன்ற மழலைக் குழந்தைகளின் இதழ் ஓரத்தில் முத்தமிடுகிற அண்ணனே, நீ எங்கும் போகவில்லை, இங்கேதான் இருக்கிறாய்! இங்கேதான் இருக்கிறாய்! எங்களுடைய நெஞ்சங்களில்தான் இருக்கிறாய் அண்ணனே! இங்கே தான் இருக்கிறாய்!”


ஒவ்வொரு மாநாட்டிலும் கழகத்தினுடைய பொருளாளர் என்கிற முறையில் நான் கணக்குகளை எல்லாம் ஒப்படைக்க மாநாட்டு மேடைக்கு வர; எவ்வளவு வசூல் என்று அண்ணா கேட்க - சொல்ல முடியாது, அது "சஸ்பென்ஸ்” என்று அவரிடத்தில் நான் சொல்ல - "சும்மா சொல், நான் வெளியே சொல்ல மாட்டேன்” என்று அவர் வேடிக்கை பேச - பக்கத்தில் இருக்கிற ப.உ. சண்முகம் வசூலை அவரிடம் சொல்லிவிட - "பார்த்தாயா, பார்த்தாயா, உன்னுடைய நண்பனே சொல்லிவிட்டான்” என்றெல்லாம் கேலி பேசுவாரே, அந்த அண்ணன் மேடையில் நின்று பேசுகின்ற அந்த எழில் ஓவியத்தைக் கண்டு கண்டு களித்து வந்த நான் இன்றையதினம் அந்த இடத்திலே நின்று பேசுவது என்றால் என்னுடைய உடல் எல்லாம் நடுங்குகிறது! என்னுடைய உள்ளமெல் லாம் குமுறுகிறது! என் கண்கள் குளமாகின்றன! தாயை இழந்த நேரத்திலே - தந்தையை இழந்த நேரத்திலே எனக்கு ஏற்படாத கவலையை நான் கல்லறைக்குச் செல்கிற வரையில் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் என்னுடைய அண்ணன்! அண்ணாவிற்குப் பிறகு இந்தப் பெரிய பொறுப்பினை என்னுடைய தோள்களிலே சுமத்தி வைத்திருக்கின்ற கழகத்தின் தங்கங்களே! உங்களை யெல்லாம் நம்பித்தான் நான் இங்கே அமர்ந்திருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு அண்ணனாகத் தெரிகிறீர்கள். அண்ணன் ஒருவன் இருந்து எனக்கு வழங்க வேண்டிய ஆறுதலை - எனக்குத் தர வேண்டிய அறிவுரையை நான்கு கோடி தமிழ்ப் பெருங்குடி மக்களாகிய நீங்கள் எனக்குத் தந்து கொண்டிருக் கிறீர்கள்.”

இப்படித்தான் கண்ணீரோடும் கவலையோடும் கனத்த இதயத்தோடும் அந்த திருச்சி மாவட்ட மாநாட்டிலே என்னுடைய பேச்சினைத் தொடங்கினேன். அதன் பின்பு, 1971ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று சென்னை அசோக் நகரில் கழகத்தின் தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் நான் பேசுவதற்கு முன்பு வரை, இந்திரா காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி வருமென்று எதிர்பார்த்திருந்து, பேச்சுவார்த்தை வெற்றி பெறாத நிலையில் இந்திரா காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட காரணத்தால், நானும் என் பேச்சின்போது கழகத்தின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டேன். ஆனால் இரவு பன்னிரெண்டு மணி அளவில் டெல்லியிலிருந்து பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரும், திரு. ஜி. பார்த்தசாரதி அவர்களும் பேசிய பிறகு, காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதில்லை என்றும், பத்து நாடாளுமன்றத் தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் தி.மு. கழகம் 184 இடங்களிலும், தோழமைக் கட்சிகளான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களிலும், பார்வர்டு பிளாக் 7 இடங்களிலும், பி.சோ. கட்சி 4 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 6 இடங்களிலும், தமிழரசுக் கழகம் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. தி.மு.கழகம் பெற்ற இந்த வெற்றி தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை எந்தக் கட்சியும் பெறமுடியாத மாபெரும் வரலாற்றுச் சாதனையாகும்.
தி.மு. கழகத்தின் ஐந்தாவது பொது மாநில மாநாடு 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறுவதற்கு முன்பாக அதே ஆண்டு நவம்பர் 15, 16 ஆகிய நாட்களில் தி.மு. கழக மகளிர் மாநில மாநாடு மதுரை தமுக்கம் திடலில், வெற்றிச் செல்வி அன்பழகன் பந்தலில், சரஸ்வதி கந்தசாமி அரங்கில், பேரறிஞர் அண்ணா அவர்களின் துணைவியார் திருமதி இராணி அண்ணா அவர்கள் தலைமையிலே நடைபெற்றது. மாநாட்டினை பொற்செல்வி இளமுருகு துவக்கி வைத்தார். மூவலூர் மூதாட்டி இராமா மிர்தத்தம்மையார் படத்தினை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களும், டாக்டர் தர்மாம்பாள் படத்தினை திருமதி பூங்கோதை அவர்களும் திறந்து வைத்தார்கள். வரவேற்புக்குழுத் தலைவர் அலமேலு அப்பாதுரை; மாநாட்டுப் பொருளாளர் தமிழரசி, எம்.எல்.சி. ; மாநாட்டுச் செயலாளர்கள் தேவகி பாண்டியன், சக்தி கோதண்டம், அமுதா ராகவன், எஸ்.பி. சற்குணம்; தொண்டர் படைத் தலைவி மதுரை அனுசுயா. 

மகளிர் மாநாட்டினைத் தொடர்ந்து கழகத்தின் ஐந்தாவது பொது மாநில மாநாடு கோவை மாநகரில் 75ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் இறுதி வாரத்தில் என்னுடைய தலைமையில் நடைபெற்றது. மாநாட்டுத் திறப்பாளர், பொதுச் செயலாளர் நாவலர். கழகத் தியாகிகளின் படத் திறப்பாளர் பேராசிரியர் அன்பழகன். அந்த மாநாட்டில் தம்பி மு.க. ஸ்டாலின் நடித்த "வெற்றி நமதே” நாடகமும், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். நடித்த "சந்திரமோகன்” நாடகமும், கழகப் பேச்சாளர்கள் நடித்த "அவன்தான் எங்கள் இறைவன்” என்ற நாடகமும் நடைபெற்றன. இப்படி மாநாடு என்றாலே தி.மு. கழகத் திற்கு என்று ஒரு நீண்ட பண்பாட்டு-கலாச்சாரப் பின்னணி உண்டு. 

திருச்சியிலே தற்போது பிப்ரவரித் திங்களில் நடைபெறவுள்ள பத்தாவது மாநில மாநாட்டினையொட்டி ஒன்றரை மாதங்களுக்கு முன்பே மாநாடு நடைபெறு வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, பந்தல் அமைக் கின்ற வேலையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டுப் பணிகளைக் கழகப் பொருளாளர் நேரில் சென்று பார்வையிட்டது பற்றி நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து அன்றாடம் திருச்சியைச் சுற்றியுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள் எல்லாம் திருச்சி சென்று மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு உணர்வுபூர்வமான ஒத்துழைப்பினை நல்கி வருகின்ற புகைப்படங்கள் எல்லாம் நம்முடைய ஏடுகளிலே வெளிவருவதைக் கண்டிருப்பாய்! தஞ்சை மாவட்டக் கழகத்தின் தளகர்த்தர், முன்னாள் அமைச்சர் தம்பி கோ.சி. மணி நடக்க முடியாத நிலையிலேகூட மற்றவர்களின் துணையோடு வந்து மாநாட்டுப் பந்தலைப் பார்த்திருக்கிறார். 
அந்த அளவுக்கு அடக்க முடியாத ஆர்வம் அவருக்கு! அதுபோலவே மற்ற மாவட்டக் கழகங்களின் செயலாளர்கள் - குறிப்பாக திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி ஐ. பெரியசாமி, தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர், "முரட்டுப் பக்தர்” தம்பி என்.பெரியசாமி, கோவை மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பொங்கலூர் பழனிசாமி, கடலூர் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி மூர்த்தி, தேனி மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி எல்.மூக்கையா மற்றும் அவர்களோடு எல்.கணேசன், அறந்தாங்கி ராஜன், சேடப்பட்டி முத்தையா, அர. சக்கரபாணி, குத்தாலம் கல்யாணம், செ.ராமலிங்கம் ஆகியோர் பரவசத்தோடு சென்று பார்த்து வந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் வரவேற்று தம்பி நேருவும், திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மு.அன்பழகன், அன்பில் பெரியசாமி, காஜாமலை விஜய், ஆர்.சி. கணேசன், குடமுருட்டி சேகர், மதிவாணன், கொ. தங்கமணி, கே.என்.சேகரன், துரை.கந்தசாமி, என்.டி.ஆர். சிங்காரம், துரை, நவல்பட்டு விஜி, தியாகராஜன், ரகுபதி, கென்னடி, பாஸ்கர், மோகன் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பந்தலைச் சுற்றிக் காட்டி உவகையோடு உபசரித்திருக்கிறார்கள்.

மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டு மென்று தோழமைக் கட்சித் தலைவர்களுக்கெல்லாம் நானே கடிதம் எழுதி, அவற்றை பொருளாளர் தம்பி மு.க.ஸ்டாலின் நேரில் கொண்டுபோய் கொடுத்ததோடு அந்தக் கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டிலே தவறாமல் கலந்து கொள்வதாகப் பதில் கடிதமும் எழுதியிருக் கிறார்கள். 
மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங் களையெல்லாம் தொகுத்திடும் பணியிலே தீர்மானக் குழுத் தலைவர் தம்பி பொன் முத்துராமலிங்கம் அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதி, ஆங்காங்குள்ள பிரச்சினைகள் பற்றி அறிந்து, தீர்மானக் குழு உறுப்பினர்கள் குழந்தை தமிழரசன், புதுக்கோட்டை சி.முத்துசாமி, மீ.அ.வைத்திலிங்கம், கோவை க.ரா.சுப்பையன், வ.சத்தியமூர்த்தி, ஆதிசங்கர் ஆகியோரின் உதவியோடு என்னிடமும் கலந்தாலோ சித்து, மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங் களையெல்லாம் முறையாகத் தயாரித்து வருகிறார்கள். 
மகளிர் அணி - மகளிர் தொண்டர் அணி, பிரச்சாரக் குழு சார்பில் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் 
20-1-2014 அன்று திருச்சி, கலைஞர் அறிவாலயத்தில், தம்பி கே.என்.நேரு தலைமையில், கழகத் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.பி.சற்குணப் பாண்டியன், கழக மகளிரணித் தலைவர் நூர்ஜகான் பேகம் முன்னிலையில் நடைபெற்று தமிழகம் முழுவதிலுமிருந்து மகளிர் அணியினர் மாநாட்டில் கலந்துகொள்வது பற்றித் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். மாநில மகளிரணிச் செயலாளர் புதுக்கோட்டை விஜயா, மாநில மகளிர் தொண்டரணிச் செயலாளர் காரல்மார்க்ஸ், காஞ்சனா கமலநாதன், விஜயா தாயன்பன், திருப்பூர் சுலக்சனா, திருவாரூர் விஜயகுமாரி, பவானி ராசேந் திரன், வசந்தி ஸ்டான்லி, சங்கரி நாராயணன், நளினி சாரங்கள், சித்திரமுகி சத்தியவாணி முத்து ஆகியோர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
சென்னையில் என்னைச் சந்திக்கும் மாவட்டக் கழகச் செயலாளர்கள், எங்கள் மாவட்டத்திலிருந்து இத்தனை பேருந்துகளும், வேன்களும் புறப்படுவதற்கு முன்தொகை கட்டியிருக்கிறோம். என்றைக்குப் புறப்படுகிறோம் என்ற விவரங்களையெல்லாம் என்னிடம் பெருமிதத்தோடு கூறி வருகிறார்கள். இதற்கிடையே மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் பணிகளும் வந்து விட்டன. அதிலும் தேவையான கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். 
மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட பெரும் நிதி வேண்டும். அதற்காக தலைமைக் கழகத்தின் சார்பில் "டிக்கெட்” புத்தகம் முறைப்படி, கணக்குப்படி அச்சடிக் கப்பட்டு வரவேற்புக் குழுத் தலைவரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவரும் ஒன்றியக் கழகங்களுக்கும், நகரக் கழகங்களுக்கு அந்த டிக்கெட்டுகளைப் பகிர்ந்து விநியோகித்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டக் கழகத்தின் சார்பில் 15 லட்சமும், அரியலூர், பெரம்பலூர் மாவட்டக் கழகங்களின் சார்பில் 25 லட்சமும், திருவண்ணாமலை மாவட்டக் கழகத்தின் சார்பில் 
25 லட்சமும், கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் 10 லட்சமும், "பெல்” தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் ஐந்து இலட்ச ரூபாயும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருச்சி மண்டலத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பாக ஒரு இலட்ச ரூபாயும், மதுரை மாவட்ட தி.மு.க. சார்பாக ஐந்து இலட்ச ரூபாயும் முதல் தவணையாக நிதியளித்த புகைப்படங்கள் "முரசொலி”யில் வெளிவந்ததையும் கண்டிருப்பாய். மற்ற அமைப்புகளின் சார்பில் நிதியினை வசூலித்து வழங்கத் தயாராக இருப்பவர்களும், மாநாட்டுத் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து அவற்றை வழங்கிட முன்வரவேண்டும்.
இதற்கிடையே நம்முடைய கட்சியினரும், தோழமைக் கட்சியினரும் மாநாட்டுப் பணிகளை ஆற்றினால் போதாதென்று தமிழகத்தை ஆளும் கட்சியின் சார்பிலும் நமக்காக மாநாட்டுப் பணிகளை அவர்களுடைய பாணியில் ஆற்ற முன் வந்திருக் கிறார்கள். என்ன குழப்பமாக இருக்கிறதா? நம்முடைய கட்சியினரை உசுப்பி விட்டால்தானே மேலும் மேலும் எழுச்சி பெறுவார்கள்; அதற்கு உதவிடுவது போல திருச்சி மாநகரில், இந்த மாநாட் டினையொட்டி நாம் வைத்திருந்த "ப்ளக்ஸ்” போர்டு களையெல்லாம் எங்கிருந்தோ வந்த அறிவுரையின்படி காவல் துறையினரே முன்வந்து, அந்தத் தட்டிகளை யெல்லாம் அகற்றியிருக்கிறார்கள். கட்சி சார்பில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, அதற்கு முன் "ப்ளக்ஸ்” போர்டுகளை வைக்கவும், நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அவற்றை எடுத்துவிடவும் நீதிமன்றமே அனுமதி கொடுத்திருக்கின்ற நிலையில் அ.தி.மு.க. அரசின் காவல் துறை, மாநாடு நடைபெறுவதற்கு முன்பாகவே, மாநாடு பற்றி கழகத்தின் சார்பில் வைக்கப்பட்டிருந்த போர்டுகளையெல்லாம் அகற்றி யிருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் நம்முடைய கழக போர்டுகளுக்குப் பக்கத்திலேயே முதலமைச்சர், ஜெயலலிதாவின் பிறந்த நாளினையொட்டி அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துப் "பேனர்”களை அகற்றாமல் விட்டு வைத்திருக் கிறார்கள். அந்த இரண்டு காட்சிகளையும் புகைப்படம் எடுத்து "முரசொலி”யிலேயே வெளியிட்டிருக்கிறார் கள். மாநாடு நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன வகையில் "திருப்பணி” செய்யவிருக்கிறார்களோ? இதுபோன்ற எத்தனையோ தடைகளையெல்லாம் தாண்டி வென்று வளர்ந்ததுதானே நம்முடைய கழகம்! 
"சீப்பை ஒளித்துவிட்டால் திருமணமே நின்று விடும்” என்று நினைக்கிறார்கள்! ஆனால் கழகத்தைப் பொறுத்தவரையில் இப்படிப்பட்ட எதிர்ப்புகளையெல் லாம் புறங்கண்டு, திருச்சி மாநாடு கழக வரலாற்றில் மீண்டும் ஒரு சிறப்பான இடத்தைப் பெறும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை. "வெட்டி வா என்றால், கட்டி வரும்” காளைகளாம் என்னுடைய அருமை உடன்பிறப்புக்களே, கழகத்தின் மாநாடுகளையெல் லாம் வெற்றி மாநாடுகளாக்கி கழகத்தின் தலைமையை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திடும் தோழர்களே, இதோ கழகத்தின் பத்தாவது மாநில மாநாட்டையும் வெற்றி மாநாடுகளின் பட்டியலிலே பொன்னெழுத் துக்களால் பொறித்திடப் புறப்படுவீர்! பத்தாவது மாநில மாநாடு - பாரினில் பார்த்தது உண்டோ இதுபோல் இன்னொரு மாநாடு - என்று நாட்டார் வியக்குமளவுக்கு இதனை நடத்திக் காட்டிடுவீர் என்ற நம்பிக்கையோடு நாளும் காத்திருக்கும் உங்கள் அன்பு அண்ணன்; உங்களின் உடன்பிறப்பு!

No comments:

Post a Comment


Labels