ஓகோ, அது மம்தா அரசியல்! இங்கே ஜெயலலிதா அரசியல் போலும்! கலைஞர் பதில்!
திமுக தலைவர் கலைஞர் 27.01.2014 திங்கள்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
கேள்வி :- காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சவையில் தி.மு.கழகம் அங்கம் வகித்த காரணத்தால்தான் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க.வுடன் சேராமல் அ.தி.மு.க.வுடன் தோழமை கொண்டதாகச் சொல்லிக் கொள்கிறார்களே?
கலைஞர் :- அதுதான் காரணமா? மேற்கு வங்காளத்தில் மேல் சபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்திருப்பதாக வெளிப்படையாகவே செய்தி வந்திருக்கிறதே? ஓகோ, அது மம்தா அரசியல்! இங்கே ஜெயலலிதா அரசியல் போலும்!
கேள்வி :- கரும்புக்கு அரசு அறிவித்த கொள்முதல் விலையைக்கூட சர்க்கரை ஆலைகள் வழங்கவில்லை என்றும், அதனால் கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் பெரிதாகச் செய்தி வந்திருக்கிறதே?
கலைஞர் :- “2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் “கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தப்படும்” என்று அறிவித்தார்கள். அதை நம்பி விவசாயிகள் எல்லாம் வாக்களித்து இவர்களை ஆட்சியிலே அமர வைத்து, மூன்றாண்டுகள் ஆகிறது. கரும்பு வெட்டுக் கூலி மற்றும் வாகன வாடகையை, சர்க்கரை ஆலை நிர்வாகங்களே ஏற்க வேண்டு மென்றும், கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு 3,000 ரூபாயாக வழங்க வேண்டுமென்றும் கரும்பு
விவசாயிகள் கடந்த ஆண்டிலேயே கோரிக்கை வைத்தார்கள்.
ஆனால் இன்னமும் டன்னுக்கு 2,350 ரூபாய் என்ற அளவில்தான் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை மாற்றி கரும்பு கொள்முதல் விலையை குறைந்தபட்சம் டன் ஒன்றுக்கு 3,500 ரூபாயாவது வழங்கிட இந்த அரசு முன்வர வேண்டுமென்றும், இப்பொதுக் குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று 15-12-2013 அன்று நடைபெற்ற தி.மு. கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைப்போலவே வேறு பல அரசியல் கட்சிகளும் கரும்புக்கு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய் என்றாவது நிர்ணயம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தின. ஆனால் அ.தி.மு.க. அரசு கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் தேதியன்று கரும்பின் கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு 2,250 ரூபாயிலிருந்து வெறும் 2,600 ரூபாயாக மட்டுமே உயர்த்தி உத்தரவிட்டது.
தற்போது பெரும்பாலான இடங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்காத நிலையில், தனியார் சர்க்கரை ஆலைகள் மட்டும் தான் அரவையைத் துவக்கியுள்ளன. ஆனால் இந்த ஆலைகளிலும், அரசு அறிவித்த விலையைக் கூட வழங்காமல், 2013ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருந்த 2,250 ரூபாயை மட்டுமே கொடுக்கிறார்கள். இதனால் கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசுக்கு இதுபோன்ற பிரச்சினைகளைக் கவனிக்க நேரம் இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment