வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



24/01/2014

பொம்மலாட்ட ஆட்சியைப் புரிந்து கொள்ளுங்கள்!

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு என்ற தலைப்பில் தமிழக அரசு 21-1-2014 அன்று "செய்தி வெளியீடு” ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் மக்கள் நல் வாழ்வுத் துறை சார்பில் இந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக் கைகள் என்று இரண்டு மூன்று திட்டங்கள் முதல் பத்தியிலேயே கூறப்பட்டுள்ளன. "108” அவசர கால மருத்துவ ஊர்தி இலவசச் சேவைத் திட்டம் - உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டம் - டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம் - வருமுன் காப்போம் திட்டம் - கண்ணொளி வழங்கும் திட்டம் - இளம்சிறார் மற்றும் பள்ளிச் சிறார் இருதயப் பாதுகாப்புத் திட்டம் - இருதய நோய்த் தடுப்புத் திட்டம் - பச்சிளங் குழந்தைகளின் உயிர் காக்கும் அவசர கால சிகிச்சைத் திட்டம் - பள்ளி சுகாதாரத் திட்டம் போன்ற இத்தனைத் திட்டங்களும் தி.மு. கழக ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட திட்டங்கள் அல்லவா? "சுகாதாரத் திட்டங் களைச் செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்மாதிரியாக விளங்குகிறது” என்று கழக அரசை மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் வெளிப்படை யாகப் பாராட்டவில்லையா? கழக ஆட்சியில் 
12-4-2010 அன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் நல்வாழ்வுத் திட்டங்களைத் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக, மத்திய அரசு தமிழ்நாட்டை முதல் மாநிலமாகத் தேர்ந்தெடுத்து, அதற்கான விருதினை அளித்ததை மறந்து விட முடியுமா? இதெல்லாம் தி.மு.கழக ஆட்சியின் சாதனைகள் அல்லவா?
அரசின் செய்திக் குறிப்பில் இவற்றையெல்லாம் மறைத்து விட்டதோடு, இதற்கெல்லாம் முத்தாய்ப் பாக, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், தி.மு. கழக ஆட்சியில் தலைமைச் செயலகம், சட்டப் பேரவை ஆகியவை இயங்குவதற்காக மிகவும் நேர்த்தியாகக் கட்டப்பட்ட கட்டிடத்தில் பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனை தொடங்க முடிவெடுத்தது பற்றியும், அந்தக் கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்று வதற்காக சுமார் 27 கோடி ரூபாய் செலவழிக் கப்பட்டு வருவது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு. கழக ஆட்சியில் கட்டப்பட்டு, தலைமைச் செயலகமாகவும், சட்டப்பேரவையாகவும் பல மாதங்களாக இயங்கி வந்த கட்டிடத்தை, மருத்துவ மனையாக மாற்றுவதற்குக் காரணம் என்ன என்பது பற்றி அந்த அறிக்கையில் முதலமைச்சரோ, அல்லது அரசின் சார்பில் வேறு யாருமோ கூறவில்லை. அங்கே கட்டடப் பணிகள் முழுவதும் முடிவு பெறாமல், அதற்கான திறப்பு விழா 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவசர கதியில் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையிலே சொல்லியிருக் கிறார்கள். இதுபோன்ற பெரிய கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெறும் போது சிறு சிறு பணிகள் முடிவடையாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் திறப்பு விழா நடைபெறுவது என்பது ஒரு குறை அல்ல. 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்ட பிறகு 2011ஆம் ஆண்டு மே திங்கள் வரை அங்கே தலைமைச் செயலகமும், சட்டப்பேரவையும் முறையாகத்தானே செயல்பட்டு வந்தன. அதிலே ஏதாவது சுணக்கமோ அல்லது பிரச்சினையோ ஏற்பட்டதா? எந்தப் பணியாவது நடைபெற முடியாமல் போய்விட்டதா? ஆனால் அந்தத் தலைமைச் செயலகத்தை ஜெயலலிதா மாற்றுவதற்குக் காரணமாக என்ன சொன்னாரென்றால், புதிய தலைமைச் செயலகத் தில் ஒரு சில துறைகள்தான் உள்ளன; மற்ற துறைகளுக் கான கட்டிடம் கட்டப்படும் நிலையிலே இருந்தன; எனவே இடத்தை மாற்றினால் கோப்புகளையெல்லாம் தற்போதுள்ள செயலகத்திலிருந்து கொண்டு வருவதற்கு அதிக தூரமாகும் என்று சொன்னார். ஆனால் தற்போது ஒரு மாத காலமாக முதல் அமைச்சர் ஜெயலலிதா, சென்னையிலிருந்து 600 கிலோ மீட்டர் தொலைவிலே உள்ள கொடநாட்டி லிருந்து ஆட்சிப் பணி புரிகிறாரே, அந்த இடத்திற்குக் கோப்புகளைக் கொண்டு செல்வதற்கும், அமைச்சர் களும் அதிகாரிகளும் சென்று வருவதற்கும் மட்டும் நிர்வாக வசதி எப்படி ஏற்பட்டுள்ளது என்று முதல் அமைச்சர்தான் கூற வேண்டும்.
முதல் அமைச்சருக்கு பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்றினை சென்னையிலே அமைக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தால், சென்னையில் வேறு எங்கெங்கோ இடங்கள் இருக்கின்றனவே, அங்கே ஒரு கட்டிடத்தை, மருத்துவமனைக்கே உகந்த வகையில் திட்டமிட்டு, எழுப்பி உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்றினைத் தொடங்கினால், வருங்காலத் தமிழகம், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இந்த மருத்துவ மனையைக் கட்டித் திறந்தார் என்று நினைக்கும். ஆனால் தற்போது என்ன சொல்வார்கள்? முதல் அமைச்சர் கருணாநிதி மிகுந்த சிரமப்பட்டு எழுப்பிய தலைமைச் செயலகத்தை, அடுத்து வந்த அம்மையார் மருத்துவமனையாக மாற்றினார் என்றுதானே பொதுமக்கள் சொல்வார்கள்! 
தலைமைச் செயலகத்திற்காக - சட்டப்பேரவைக் காக கழக ஆட்சியில் எழுப்பப்பட்ட அந்தக் கட்டி டத்தை, முதலமைச்சர் ஜெயலலிதாவின் காழ்ப் புணர்ச்சி காரணமாக மருத்துவமனையாக மாற்று வதற்காக மட்டும் அ.தி.மு.க. அரசு 26 கோடியே 93 இலட்ச ரூபாயும், மற்றும் உபகரணங்கள், மரச்சாமான்கள் வாங்குவதற்காக முதற்கட்டமாக 76 கோடியே 4 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்த தோடு, மேலும் முடிவு பெறாத மாட விதானத்தின் கட்டிடப் பணிகளை முடிப்பதற் காகவும், எஞ்சியுள்ள பணிகளை நிறைவேற்று வதற்காகவும் 6 கோடியே 86 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்காக ஒரு அறிவிப்பினை முதல் அமைச்சர் உத்தரவு என்று அனைத்து ஏடுகளிலும் வெளியிடச் செய்திருக் கிறார்கள். இந்தச் செலவுகள் எல்லாம் எப்படி ஏற்பட்டன? இவ்வளவு ரூபாய் அந்தக் கட்டிடத்தை மாற்றுவதற்காகச் செலவு செய்ததற்குப் பதிலாக வேறொரு கட்டிடத்தைப் புதிதாக வேறு ஒரு இடத்தில் உருவாக்கி, அங்கே உயர் மருத்துவமனையை நடத்தியிருக்கலாம் அல்லவா? செலவழிக்கப்பட்ட இந்தத் தொகை யாருடைய வீட்டுப் பணம்? தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த வரிப் பணம் இப்படி யெல்லாம் வீணே செலவழிக் கப்படலாமா? இதற் கெல்லாம் யார் பொறுப்பு? விசாரணை நடத்தப்பட வேண்டாமா? 

இதுபற்றி அப்போதே 16-5-2011 அன்று, அ.தி.மு.க. ஆட்சி அமைந்து இரண்டொரு நாட்களிலேயே இந்தக் கட்டிடத்தை மாற்றுவதற் கான முயற்சி எடுத்த நேரத்தில், ஆங்கில நாளேடான "இந்து” வெளியிட்ட தலையங்கத்தில் என்ன எழுதியிருந்தார்கள் தெரியுமா?
"1917ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சியின் போது புரட்சியாளர்களில் சிலர் ஜார் மன்னனின் அரண் மனையை முற்றுகையிட்டனர். பிரமாண்டமான அந்த அரண்மனையில் ஜார் மன்னன் விலை மதிப்புமிக்க கலைப் பொருள்களை சேமித்து வைத்திருந்தான். கலா ரசனையுள்ள ஜார் மன்னன் பல்வேறு நாடுகளி லிருந்து அழகிய சிற்பங்களையும் எழிலார்ந்த ஓவியங்களையும் பழங்கால நினைவுச் சின்னங்களை யும் கொண்டு வந்து வைத்திருந்தான். உள்ளே புகுந்த புரட்சியாளர்கள் ஜார் மன்னன் மீது இருந்த கோபத்தால் அந்த அரிய கலைப் பொக்கிஷங்களை உடைத்து நொறுக்கத் துவங்கினர். தகவல் அறிந்த தோழர் லெனின், உடனடியாக அனைத்துப் புரட்சி யாளர்களும் அரண்மனையை விட்டு வெளியேறு மாறு உத்தரவிட்டார். ஏனெனில், "அரண்மனையில் உள்ள கலைச் செல்வங்கள் அனைத்தும் பன்னெடுங்கால பன்னாட்டுச் சின்னங்கள், மனித உழைப்பினால் உருவானவை. அவற்றை உடைத்து நொறுக்குவது என்பது நமது பாரம்பரியப் பெருமை கொண்ட அடையாளங்களை நாமே அழிப்பதாகும்” என்று லெனின் குறிப்பிட்டார். இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தையும், சட்டமன்றத்தையும் ஓமந்தூரார் தோட்டத்திலிருந்து பழைய புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுகின்ற சம்பவம் நினைவுக்கு வருகிறது. 
ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள புதிய சட்ட மன்றக் கட்டிடம் சுமார் 400 கோடி ரூபாயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் இரவு பகலாக தங்களது ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி பல மாதங்கள் அதை உருவாக்கினார்கள். அரசின் பல முக்கிய இலாக்காக்கள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற மூன்றாவது நாளே தலைமைச் செயலகத்தையும், சட்டமன்றத்தையும் கோட்டைக்கே மாற்றுவது என்று முடிவு செய்து அதற்கான பணிகள் தற்போது நடந்து வருவதாகச் செய்திகள் தெரிவிக் கின்றன. புதிய சட்டமன்றக் கட்டிடம் என்பது கலைஞருக்கு தனிப்பட்ட முறையில் உரிமை உள்ளதல்ல. தமிழக மக்களின் வரிப் பணத்தால் உருவாக்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் கலைஞர் மீதுள்ள கோபத்தால் இவ்வளவு பெரிய கட்டிடத்தைப் புறக்கணிப்பது உசிதமானதாகத் தெரியவில்லை. ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரிடமிருந்து ஏராளமான உதவிகளையும் திட்டங் களையும் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பொதுப் பிரச்சினையில் காட்டுவது பரந்த மனப்பான்மைக்கு உரியது அல்ல. மேலும் இந்தக் கட்டிடத்தைக் கட்டி முடிப்பதற்குள் மூன்று நான்கு தொழிலாளர்கள் விபத்தில் பலியானதாகச் சொல்லப்படுகிறது. மனித உயிர்களைப் பணயமாக வைத்து பிற மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான ஊழியர்களின் கடும் உழைப்பைக் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தைப் புறக்கணிப்பது வருத்தமளிக்கிறது. இந்தத் தேசத்தின் பிரதமரே திறந்து வைத்த ஒரு கட்டிடத்தை ஒரு மாநில முதலமைச்சர் புறக்கணிப்பது என்பது பிரதமருக்கு இழைக்கப்படும் அவமான மாகவே கருத முடிகிறது. நகருக்குப் பெருமை சேர்க்கும் இந்த எழிலார்ந்த கட்டிடத்தை தனிப்பட்ட ஒருவருக்காக ஒரு முதலமைச்சரே நிராகரிப்பது வருத்தம் அளிக்கிறது” என்று "இந்து” நாளேடு தலையங்கம் தீட்டி வேதனையை வெளியிட்டது.
"இந்து” நாளேடு இவ்வாறு எழுதியதற்குப் பிறகாவது, அத்தகைய கருத்துகளுக்கு மதிப் பளித்திடும் வகையில் முதலமைச்சர் தன்னைத் திருத்திக் கொண்டு விட்டாரா? தி.மு.கழக ஆட்சி யில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதற்காக, அங்கே செல்லமாட்டேன் என்று வறட்டுப் பிடிவாதத்திற்காகச் செய்யப்பட்ட அரசுப் பணம் எவ்வளவு? தி.மு.கழக ஆட்சியில் கட்டப்பட்டதைப் பயன்படுத்திக் கொள்ள மாட்டேன் என்றால், முதலமைச்சர் ஜெயலலிதா அன்றாடம் தலைமைச் செயலகத்திற்குச் செல்கிறாரே "மியூசிக் அகாடமி” பக்கத்திலே உள்ள பாலம் வழியாக! அது தி.மு.கழக ஆட்சியிலே கட்டப்பட்டது தானே? அதிலே மட்டும் பயணம் செல்லலாமா? 
நேற்றையதினம் அந்த அறிவிப்பிலேயே மற்றொரு அறிவிப்பாக கொசுக்களை ஒழிப்பதற்காக களப்பணி யாளர்களை நியமனம் செய்தல், கொசுப் புழுக் கொல்லி மருந்துகளை வாங்குதல் ஆகியவற்றுக் காக இரண்டு கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து முதல் அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறாராம்! கொசுக் களை ஒழிக்க இரண்டு கோடி ரூபாயா? சென்னை மாநகரத் தெருக்களிலே கிடக்கும் குப்பைகளை ஒழுங்காக அகற்றினாலே, கொசுக்கள் தாமாகவே ஒழிந்து விடும். சென்னையிலே மக்கள் இரவில் தூங்க முடிகிறதா? கொசுக்களின் தொல்லை! இதோ குளிர் காலம் முடியப் போகிறது; தானாகவே கொசுக்களும் ஒழிந்துவிடும். முறையாகச் செய்ய வேண்டுமேயானால், இரண்டு மாதங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டிய பணியை தாமதமாகத் தற்போது செய்திருக்கிறார்கள். முதல் அமைச்சர் தலைநகரிலே இல்லாததால் அவருக்கு கொசுத் தொல்லை தெரியவில்லை போலும்! 
தமிழ்நாட்டு மக்களே! தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள்! நீங்கள் வாக்குகளை அளித்து எப்படிப் பட்ட ஆட்சியைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதோ; முதலமைச்சர் கொடநாட்டிற்குச் சென்று ஒரு மாதமாகிறது! கேட்டால் அங்கிருந்து ஆட்சிப்பணி புரிகிறாராம். இன்றைக்குத்தான் திரும்புகிறாராம். இதோ 30ஆம் தேதி தமிழகச் சட்டப்பேரவை கூடப் போகிறதாம்! ஆளுநர் உரையாற்றப் போகிறாராம்! அந்த ஆளுநர் உரை என்றால், அரசின் கொள்கை களையெல்லாம் அறிவிக்கின்ற உரையாகும். அரசின் முதல் அமைச்சர், தலைமைச் செயலாள ரோடும், நிதித் துறை, பொதுத் துறைச் செயலாளர் களோடும் கலந்தாலோசித்து, விவாதித்து சுமார் ஒரு மாத காலமாவது முயற்சித்து தயாரிக்கப்பட வேண்டிய உரை அது. அந்த உரை பற்றி யாருக்குக் கவலை? 
திருமணப் பத்திரிகை கொடுப்பதற்காக சிறுபான்மை வாரியத் தலைவர் தன் குடும்பத் தோடு உதகைக்குச் சென்றிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஜி.ராம கிருஷ்ணன், ஏ.சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் கொடநாடு சென்று முகாம் அலுவலகத் திலே முதல் அமைச்சரைச் சந்தித்து மாநிலங்கள் அவைத் தேர்தலிலே ஆதரவு கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்குள்ள கவலை, வேறென்ன செய் வார்கள்? மற்றொரு கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒவ்வொரு நாளும், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணியிலே இருக்கிறோம் என்று இவர்கள்தான் கட்டியம் கூறிக் கொண்டே இருக் கிறார்கள். ஆனால் முதலமைச்சர் பொதுக் குழுவில் நாற்பது இடங்களிலும் நாங்களே நிற்போம் என்று முழங்கி விட்டுச் சென்றுவிட்டார். மீனவர்கள் பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. இன்று கூட 25 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 20ஆம் தேதி நடைபெற வேண்டிய பேச்சுவார்த்தை 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவர்களைக் கேட்டால் மத்திய அரசின் விருப்பப்படி பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். மத்திய அமைச்சர்களோ ஒன்றரை ஆண்டுத் தாமதத்திற் குக் காரணம் தமிழக அரசுதான் என்கிறார்கள். பேச்சுவார்த்தை நடந்தாலும், தமிழக மீனவர்களைக் கைது செய்வதை நிறுத்த மாட்டோம் என்று இலங்கை அமைச்சர் ரஜிதா சேனரத்னா சூளுரைக் கிறார்; இன்று வரை கைது நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. மீனவர்களோ உண்ணாவிரதம் இருந்து பார்த்து விட்டு தற்போது தீக்குளிப்போம் என்கிறார்கள். குடிநீர்ப் பஞ்சம் எப்போது வரலாம் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறது. ஆட்சி என்றால் இதைப் பற்றியெல்லாம் ஒவ்வொரு நாளும் கவனித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கோ கேட்க வேண்டியதில்லை. சந்திக்குச் சந்தி சிரியாய்ச் சிரிக்கிறது.! இந்த ஆட்சியில் கொலை நடக்காத நாள் உண்டா? கொள்ளை நடக்காத நாள் உண்டா? முன்பெல் லாம் செயின் பறிப்பு அங்கொன்றும் இங்கொன்று மாக இருக்கும். இப்போதே ஏடுகளிலேயே, "இந்த வட்டாரத்தில் இத்தனை செயின் பறிப்பு சம்பவங் கள் நடைபெற்றன” என்று தொகுத்து வெளியிடு கிறார்கள். அன்றாடம் அரசு செய்திக் குறிப்புகள் வாயிலாகவும், காணொலிக் காட்சி வாயிலாகவும் "ரிமோட் கண்ட்ரோல்” மூலமாக இந்த ஆட்சி நடைபெறுகிறதே தவிர வேறென்ன? ஜனநாயகம் வெறும் காட்சிப் பொருளாகிவிட்டது. "துக்ளக் ஆட்சி” என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் இப்போது இந்தப் பொம்மலாட்ட ஆட்சியைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment


Labels