" The Economic Times ” ஆங்கில நாளிதழுக்கு தளபதி அளித்த பேட்டி.
அதன் தமிழாக்கம் இணைக்கப்பட்டுள்ளது.
1. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகிய பிறகு சந்திக்கும் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தொண்டர்களை கட்டுக்கோப்பாகக் கொண்ட கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பதால் தேர்தலை நம்பிக்கையுடன் சந்திக்கிறோம். ஜெயலலிதா அரசின் நிர்வாக சீர்கேடு, பெருகி விட்டு ஊழல், ஜனநாயக விரோத அரசாக செயல்படுவது என்ற பல காரணங்களின் அடிப்படையில் ஜெயலலிதா அரசுக்கு எதிரான அலை வீசுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் எங்களுக்கு நாற்பது தொகுதிகளிலும் வெற்றியை தேடிக் கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.
2. 2. தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது தி.மு.க. மட்டுமே. இதன் நோக்கம் என்ன?
மனித நேயத்தையும், மனித உரிமைகளையும் மதிக்கும் தலைவர் கலைஞர். அதை நிரூபிக்க வரலாற்றில் ஆதாரங்கள் இருக்கின்றன. கலைஞர் முதல் முறையாக முதலமைச்சரான போதே தியாகு, கலியபெருமாள் ஆகியோரின் தூக்குத்தண்டனைய ஆயுள் தண்டனையாக குறைத்தவர். ஐந்தாவது முறையாக முதலமைச்சராக இருந்த போதும் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தவர். ஜனநாய உரிமைகளையும், மனித உரிமைகளையும் காக்கும் தலைவராகிய கலைஞர், நீண்ட காலமாகவே தூக்குத்தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று கூறி வருகிறார். அந்த கருத்திற்கு ஆதரவாக சமீபத்தில் உச்சநீதிமன்றமும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரே தீர்ப்பில் 15 பேரின் தூக்குத்தண்டனைகளை ஆயுள் தண்டனையாக குறைத்தது. பிறகு, திருச்சியில் நடைபெற்ற தி.மு.க.வின் பத்தாவது மாநில மாநாட்டில் தூக்குத் தண்டனையை ஒழி்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை நிறைவேற்ற இப்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.
3. கலைஞர் டாக்டர் மு. கருணாநிதி நரேந்திரமோடியை பாராட்டியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் தி.மு.க. சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
ஒரு தலைவரை பாராட்டுவதும், ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பதும் வெவ்வேறான விஷயங்கள். பா.ஜ.க.வுடனும், காங்கிரஸுடனும் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே தி.மு.க. பொதுக்குழு முடிவு எடுத்து, அதை எங்கள் தலைமையும் நிறைவேற்றியிருக்கிறது. தேர்தலுக்குப் பிறகும் இந்த நிலை தொடரும்.
4. அ. ராஜா தேர்தலில் போட்டியிடுகிறார். 2-ஜி பற்றி பெரிய அளவில் பிரச்சாரம் தேசிய அளவில் மேற்கொள்ளப்படுகிறது. தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும் என்று கருதுகிறீர்கள்?
தி.மு.க.வின் பெயரைக் கெடுக்க சில சுயநல சக்திகளால் உருவாக்கப்பட்ட அதீத கற்பனைக் குற்றச்சாட்டு என்பதை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால் அது எந்த விதத்திலும் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பிற்கு பாதகமாக அமையாது. மத்தியில் நிலையான, மதசார்பற்ற ஆட்சி அமைப்பதில் தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் கலைஞர் முக்கியப் பங்கு வகிப்பார்.
5. நரேந்திர மோடி பற்றி உங்கள் கருத்து என்ன?
மோடி அவர்கள் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார். அடுத்தடுத்து மூன்று முறை வெற்றி பெற்று வந்திருக்கிறார். குஜராத்தில் நல்ல பணிகளை செய்திருக்கிறார் என்று ஒரு சாராரும், அவர் ஒரு மதவாதி என்று இன்னொரு சாராரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்போது பா.ஜ.க. அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் எஜமானர்கள். அவர்கள்தான் இறுதியில் முடிவு எடுக்கப் போகிறார்கள்.
6. ராகுல் காந்தியுடன் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள். அவரது தலைமைப் பண்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?
தேசிய பாரம்பரியம் உள்ள ஒரு கட்சியிலிருந்து ராகுல் வருகிறார். கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக அக்கட்சியின் தீவிர அரசியலில் இருக்கிறார். அவர் கட்சிக்குள் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறார். மதசார்பற்ற தன்மை கொண்ட அவரது தொலை நோக்கை நான் பாராட்டுகிறேன். அவர் எந்த அமைச்சரவையிலும் சேர்ந்து பணியாற்றவில்லை என்பதால் அவரது நிர்வாகத் திறமை பற்றி நான் அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. இந்த நேரத்தில் நான் ஒன்றை மட்டும் சொல்ல முடியும். இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காலங்களில் இருந்த அரசியலுக்கும், இப்போதுள்ள அரசியலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
7. பா.ஜ.க. ஒரு கூட்டணியை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது. அக்கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கூட்டணியை அமைத்த பா.ஜ.க.வும், அதன் தலைவர்களும்தான் அது பற்றி ஆத்ம சோதனை செய்ய வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் 65 வருட கால பாரம்பரியம் கொண்ட கட்சி. அது பல தேர்தல்களையும், கூட்டணிகளையும் பார்த்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி தவிர தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருப்பது போன்ற வரலாறு இருக்காது என்றே நான் நினைக்கிறேன். ஆகவே மாநிலத்தில் உள்ள எந்தக் கூட்டணியையும் விட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெறும்.


No comments:
Post a Comment