பெரம்பலூர்: ""தமிழக முதல்வர் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார்,'' என முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, பெரம்பலூரில் நடந்த தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் குற்றம்சாட்டினார். பெரம்பலூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் சட்டசபை தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் துறைமங்கலம் பாலக்கரை பகுதியில் நடந்தது.
கூட்டத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தலைமை வகித்து, பெரம்பலூர் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் சீமானூர் பிரபுவை அறிமுகப்படுத்தி பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் மீது, தி.மு.க., தலைவர் கருணாநிதி மிகுந்த அக்கறைகொண்டு உடனுக்குடன் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றினார். ஆனால், முதல்வர் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், சென்னையில் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தை கலைப்பதற்காக காவல் துறையை கொண்டு அவர்கள் மீது தடியடி நடத்தினார்.
தற்போதைய தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
என் மீது தொடரப்பட்ட "2 ஜி' வழக்கு தொடர்பாக உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட 33 இடங்களில் சி.பி.ஐ., போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவோ, மற்ற ஆவணங்களோ பறிமுதல் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகளே நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இவ்வழக்கில் அரசு சாட்சியம் நிறைவடைந்துள்ள நிலையில், ஏப்., 4ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளேன். என் மீது தொடரப்பட்ட வழக்கு, இப்போது வேறு விதத்தில் செல்கிறது. "2 ஜி' தொடர்பாக கைது செய்யப்பட்டு, 15 மாதம் சிறையில் இருந்தேன். அதற்கெல்லாம் கலங்காத நான், கடந்த சட்டசபை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளரின் தோல்வியை அறிந்து அழுதேன். எனவே, தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் சீமானூர் பிரபுவை அதிக ஓட்டுக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்துக்கு திருச்சி மாவட்ட செயலாளர் நேரு, பெரம்பலூர் லோக்சபா தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சுபாசந்திரசேகர், மாவட்ட செயலாளர்கள் துரைசாமி, சிவசங்கர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வி.சி., புதிய தமிழகம், இ.யூ.மு.லீக்., த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, எம்.ஜி.ஆர்., கழகம், அகில இந்திய ஃபார்வார்டுபிளாக் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment