வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



15/03/2014

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது திமுகதான் : கருணாநிதி விளக்கம்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா பேசியபோது“ முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது எனது தலைமையிலான அரசுதான்“ என்று பேசியுள்ளார்.  தி.மு.க ஆட்சியில் தான் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது என்று நாங்கள் கூறுகிறோம்.  இதில் எது உண்மை? அ.தி.மு.க. ஆட்சியில்தான் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது என்றால், அதற்கான சட்டம் இயற்றப்பட்டதா?  எந்தத் தேதியில் அதற்கான ஆணை வெளி வந்தது?  எந்த நாளேட்டில் அந்தச் செய்தி வெளியிடப்பட்டது? திட்டவட்டமாகவும் குறிப்பாகவும்  ஜெயலலிதா கூறத்தயாரா?   


திமுக 2006ம் ஆண்டு வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், 24.5.2006ல் படிக்கப்பட்ட ஆளுநர் உரையிலேயே,“சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த இஸ்லாமியர் மற்றும்  கிறித்தவர்களுக்கு  கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில்  இட ஒதுக்கீடு ஏற்படுத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்““ என்று தெரிவிக்கப்பட்டதே, இந்தச் செய்தி இன்றைக்கும் அந்த உரையிலே இருக்கிறதா இல்லையா? 

2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதல் அமைச்சர். உண்மையிலேயே முஸ்லிம்களுக்கு  இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்று அவர் கருதியிருந்தால், அவர் பதவியிலே இருந்த அந்த ஐந்தாண்டு காலத்திலேயே  பிற்படுத்தப்பட் டோர் நல வாரியத்தின் பரிந்துரையைப் பெற்று, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருக்கலாம் அல்லவா?  அதை ஏன் அவர் செய்யவில்லை?  

13.9.2007ல் தி.மு.க ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கான 30% இட ஒதுக்கீட்டிலிருந்து, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5%, அப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கிறித்தவர்களுக்கு 3.5 சதவிகிதமும், தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் 15.7.2007 முதல் தனி இட ஒதுக்கீடு வழங்கி அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது““ என்று கூறப்பட்டு, அது அப்போதே எல்லா ஏடுகளிலும் வெளிவந்திருக்கிறது.
சிறுபான்மையினர் நலன் என்று எடுத்துக் கொண்டால், அ.தி.மு.க. ஆட்சிதான் நன்மைகளைச் செய்தது என்றும் நாகர்கோவிலில் ஜெயலலிதா பேசியிருக்கிறார். திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு செய்த நன்மைகளின் பட்டியல்  இதோ :

 *  சிறுபான்மையினர் நல இயக்குனரகம் தி.மு.க ஆட்சியில் தோற்றுவிக்கப்பட்டு 1.8.2007 முதல் இயங்கி வருகின்றது.  

* இஸ்லாமிய சமுதாயத்தினரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, தமிழகத்தில் “உருது அகாடமி“  தி.மு.க ஆட்சியில் 21.7.2000ல் தொடங்கி வைக்கப்பட்டது.
   
 *  மத்திய அரசு நிதி உதவியுடன் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்க்கு 20072008ம் ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

* மத்திய அரசு நிதி உதவியுடன் 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்க்குக் கல்வி உதவித்தொகை 2007 2008ம் ஆண்டு முதல் தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டது. 

 * மத்திய  மாநில அரசுகளின் நிதி (75:25) உதவியுடன் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்க்கு கல்வி உதவித்தொகை 20082009ம் ஆண்டில் தி.மு.க ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.  

2006ல் தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன், அதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சியிலே கொண்டுவரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்தினை ரத்து செய்தது.  மேலும் அச்சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் முந்தைய அரசு பிடித்தம் செய்திருந்த ஒரு நாள் சம்பளத்தைத் திரும்ப வழங்கியது.   
தமிழக அரசு சிறுபான்மையினர் நலனுக்காகச் செயல்படுத்திவரும் திட்டங்களை ஆய்வு செய்த மத்திய அரசின் தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங் களின் தலைவர் எம்.எஸ்.ஏ. சித்திக்கும், அவரது தலைமையில் வருகைபுரிந்த குழுவினரும், சிறுபான்மையினருக்கான தமிழக தி.மு.க அரசின் திட்டங்களில் முழு மன நிறைவு கொண்டு, திமுக அரசு,  `சிறுபான்மையினருக்காகப் பாடுபடும் அரசு‘  என்று பாராட்டினார். 

தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களை ஆதரித்துப் பேசும் ஜெயலலிதா கடந்த காலத்தில் அவர்களைப் பற்றி பேசியது என்ன?“அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டபோது, “ஆமாம், ஆதரிக்கிறேன். இந்தியாவிலேயே  ஒரு ராமர் கோயில் கட்ட முடியவில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்?“ என்று கூறியவர்தான் ஜெயலலிதா.

தி.மு.கவின் சார்பாக  இரண்டு இஸ்லாமிய சகோதரர்கள், தோழமைக் கட்சிகள் சார்பில் இரண்டு இஸ்லாமிய சகோதரர்கள் என்று மொத்தம் நான்கு பேர், அதாவது 10% என்கிற அளவிற்கு முஸ்லிம்களுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டிருக்க, அ.தி.மு.க.வில் ஒரே ஒருவருக்குத்தான் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது,  இட ஒதுக்கீட்டில் ஏமாற்றுவதும், வஞ்சிப்பதும், துரோகம் இழைப்பதும் கருணாநிதியா? ஜெயலலிதாவா? இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment


Labels