நெல்லை, மார்ச் 16:
தமிழகத்துக்கு கருணாநிதி போராடி கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை எல்லாம் தடுத்து குட்டிச்சுவர் ஆக்கியவர் ஜெயலலிதா என்று நெல்லையில் நடந்த பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் காட்டமாக பேசினார்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தேவதாச சுந்தரத்தை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று தாழையூத்தில் தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். தொடர்ந்து அவர் நெல்லை டவுன் வாகையடி முனை, சீதபற்பநல்லூர் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
திமுக ஆட்சியில் பஸ் கட்டணம் ஒரு சல்லிக்காசுக்கூட உயர்த்தப்படவில்லை. தமிழக மக்கள் மீது துன்பத்தை, துயரத்தை, பாரத்தை சுமத்தக்கூடாது என்பதற்காக முதல்வராக இருந்த கருணாநிதி பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் பஸ் கட்டணம் எந்த அளவுக்கு உயர்த்தப்பட்டது என்பதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.
திமுக ஆட்சியில் நெல்லையில் இருந்து ஆலங்குளத்துக்கு பஸ் கட்டணம் ரூ.9. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் தற்போது ரூ.21. நெல்லையில் இருந்து அம்பைக்கு ரூ.12 ஆக இருந்த கட்டணம் ரூ.24ஆகவும். நெல்லையில் இருந்து சேரன்மகாதேவிக்கு ரூ.7லிருந்து ரூ.14 ஆகவும், நெல்லையில் இருந்து வள்ளியூருக்கு ரூ.12லிருந்து ரூ.25 ஆகவும் பாபநாசத்திற்கு ரூ.18லிருந்து ரூ.31ஆகவும், தென்காசிக்கு ரூ.18 ஆக இருந்த கட்டணம் ரூ.36 ஆக உயர்த்தப்பட்டது. இதேபோல் பால் விலை, மின்கட்டணம் உயர்வை கேட்கவே வேண்டாம். திமுக ஆட்சியில் 3 யூனிட் மணல் ரூ.13 ஆயிரத்துக்கு கிடைத்தது. அதிமுக ஆட்சியில் ரூ.17 ஆயிரம். கம்பி ஒரு டன் ரூ.33 ஆயிரம், தற்போது ரூ.54 ஆயிரம். சிமென்ட் மூடை ரூ.260, தற்போது ரூ.330 ஆக உள்ளது. ஜல்லி டன் ரூ.250லிருந்து 400 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கட்டுமான பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் விஷம் போல் ஏறும் விலைவாசியை கண்டு கொள்ளாத, தடுக்காத இயலாத, கையாலாகாத ஜெயலலிதா ஆட்சி நடக்கிறது. தமிழக மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நல்ல முடிவை எடுக்க வேண்டும். இந்த தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிடும் தேவதாச சுந்தரத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளாக ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளாரா என மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். கருணாநிதி 5 முறை முதலவராக இருந்தார். ஏழை எளிய மக்களுக்காகவும், சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
2006 முதல் 2011 வரை முதல்வராக இருந்த போது எந்த மாநிலத்திலும் நிறைவேற்ற முடியாத திட்டங்களை கருணாநிதி நிறைவேற்றினார். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை தாமிரபரணி&நாங்குநேரி, திசையன்விளை கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.43 கோடியிலும் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் பணகுடி, வள்ளியூர், திருக்குறுங்குடி, களக்காடு கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.16.80 கோடியிலும், ரூ23 கோடியில் கடற்கரை கிராமங்களுக்கான குடிநீர் திட்டமும் நிறைவேற்றப்பட்டன. நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது நெல்லை மாநகராட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ.13 கோடி தமிழக அரசு வழங்கியது. இதற்கு ரூ.5 கோடி வட்டியும் சேர்த்து கட்ட முடியாமல் மாநகராட்சி தவித்தது. அந்த கடனை திமுக அரசு ரத்து செய்தது.
மத்தியில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்கு ஏதோ திட்டங்களை கொண்டு வந்ததா என பிரசாரம் செய்கிறார். தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென சேது சமுத்திர திட்டம் 150 கால கனவு திட்டம். தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த சிறந்த திட்டம். அந்த திட்டத்தை மத்திய அரசிடம் போராடி, வாதாடி கருணாநிதி பெற்றார். 40 சதவீத பணிகள் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் வந்தது.
மதவெறி பிடித்தவர்கள் சதி திட்டம் தீட்டி இத்திட்டத்தை நிறுத்தி கங்கணம் கட்டிக் கொண்டு, சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று தடை உத்தரவு பெற்றனர். இதுபோல தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை போராடி கொண்டு வந்தவர் கருணாநிதி. அதனை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியவர் ஜெயலலிதா.
எனவே தமிழக மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தேர்தலில் ஜெயலலிதாவுக்கு நல்ல பாடம் புகட்டுங்கள். இவ்வாறு அவர் பேசினார். அதன்பின்னர் பல ஊர்களில் பிரசாரம் செய்து விட்டு இரவில் பாளையங்கோட்டையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

No comments:
Post a Comment