தி.மு.க.வின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் கோட்டையையே காலி செய்த 32 அமைச்சர்கள்: துரைமுருகன்
ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக மாறன் போட்டியிடுகிறார். இவர் கடந்த மாதம் 14ந் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஏற்காடு தொகுதிக்கான தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலகம் ஆத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள அயோத்தியாப்பட்டணத்தில் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை தாங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:–
இங்கு பேசியவர்கள், ஏற்காடு தொகுதியில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறலை சுட்டிக்காட்டினார்கள். தேர்தல் பணிகளை பலர் ஒரு இடத்தில் கூடி செய்வதற்கான அலுவலகம்தான் திறக்கப்பட்டுள்ளது. இங்கு எல்லோரும் பேசும்போது, துரைமுருகன் தேர்தல் பணிகளை எவ்வாறு வியூகம் அமைப்பது என ஆலோசனை வழங்குவார் என தெரிவித்தனர்.
இவ்வளவு பெரிய கூட்டத்தில் வியூகம் அமைப்பது பற்றி சொல்வதை விட, நேரடியாக ஜெயலலிதாவுக்கு கடிதமே எழுதி விடலாம். தேர்தல் வியூகம் என்பது சூழ்நிலையை பொறுத்து அவ்வப்போது வகுப்பதாகும். முன்கூட்டியே சொல்வது அல்ல. சொல்லாமல் செய்ய வேண்டியதுதான் வியூகம்.
மீன்குஞ்சுக்கு நீந்த கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. அதுபோல தி.மு.க.வினருக்கு தேர்தல் பணியாற்றிட சொல்லி கொடுக்க வேண்டியதில்லை.
தி.மு.க.வினர் ஏற்காடு இடைத்தேர்தலில் உழைப்பு, உறுதி, தியாகம் ஆகிய 3ஐ நம்பிதான் இருக்கிறோம். இந்த 3ம் தி.மு.க.வினருக்கு புதிதல்ல. இந்த மூன்றையும் மனதில் வைத்து பணி செய்தாலே தி.மு.க. வேட்பாளர் வெற்றி நிச்சயம்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க.வினர் பண பலத்தையும், அதிகார பலத்தையும் நம்பி இருக்கிறார்கள். எவனாவது ‘காச்மூச்‘ என பேசினால் வழக்கு போட்டு விடுவார்கள். ஒரே காரில் வேட்பாளர் மாறன் சென்றால், 9 காரில் சென்றதாக வழக்கு போடுகிறார்கள். நாங்கள் கணித்தவரையில், ஏற்காடு தொகுதியில் இதுவரை தி.மு.க.தான் வெற்றியில் முன்னணியில் உள்ளது. நமது வேகத்தை பார்த்து, அ.தி.மு.க.வினர் வியர்த்துபோய் உள்ளனர். போலீஸ் ரிப்போர்ட்டை கேட்டார்கள். அவர்களும் தி.மு.க. சற்று தூக்கலாகத்தான் உள்ளது என பதில். உடனே என்ன செய்வது என நினைத்த ஜெயலலிதா, தேர்தல் பணிக்காக 32 அமைச்சர்கள், வாரிய தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் என 61 பேரை நியமித்து விட்டார். இன்னும் 39 பேரை போட்டால் கவுரவர்கள்போல 100 பேர் ஆகிவிடுவார்கள். நாம் பஞ்சபாண்டவர்கள். 5 பேரே போதும். தி.மு.க.வின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் 32 அமைச்சர்கள் கோட்டையையே காலி செய்து முகாமிட்டுள்ளனர். இவ்வாறு பேசினார்.
No comments:
Post a Comment