இடைத்தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் 32 அமைச்சர்கள்: கோடி, கோடியாக பணம் கொட்ட திட்டம்
வரும் டிச.,4-ம் தேதி சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., தரப்பில், மறைந்த, எம்.எல்.ஏ., பெருமாளின் மனைவி சரோஜா, வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பாக மாறன் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க 32 அமைச்சர்கள் உள்பட 60 பேர் கொண்ட, "மெகா தேர்தல் பணிக்குழுவை, அ.தி.மு.க., தலைமை நியமித்துள்ளது. அ.தி.மு.க.,வில் மொத்தமுள்ள, 52 மாவட்ட அமைப்புகளில், 32 அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களாகவும் உள்ளனர்.
மீதமுள்ள 28 பேர், எம்.எல்.ஏ., - எம்.பி., மற்றும் கட்சி பதவி வகிக்கின்றனர். இவர்கள், ஒட்டுமொத்தமாக, செவ்வாய்க்கிழமை சேலம் வருகை தந்தனர். இவர்களுடன், அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி பொறுப்பாளர்கள் என, பெரும் படையே திரண்டு வந்தது.
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, கார்களை தவிர்த்த அமைச்சர்கள், 32 பேரும், சேலத்தில் இருந்து, மூன்று வேன்களில் புறப்பட்டு, வாழப்பாடியில் நடக்கும் தேர்தல் பணி ஆலோசனை மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றனர்.
முதல்வர் ஜெயலலிதா மற்றும் சபாநாயகர் தனபால் இருவரயும் தவிர்த்து, ஒட்டுமொத்த தமிழக அமைச்சர்கள், இடைத்தேர்தல் பணிக்காக முகாமிட்டிருந்தனர்.
அ.தி.மு.க., அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தேர்தல் பணிக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், உள்ளூர் அதிமுகவினர் தங்களின் பலத்தை காட்ட ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை நிர்வாகிகள் மூலம், அதிக அளவில் ஆட்களை அழைத்து வந்திருந்தனர். கூட்டம் நடந்த வாழப்பாடியார் திருமண மண்டபம், காலை, 10 மணி முதல், மாநாடு போல, நிரம்பி வழிந்தது.
குறிப்பாக, சொர்ண ஜெயந்தி திட்ட மகளிர் மற்றும் சுயஉதவிக்குழு மகளிர் அதிக அளவில் காணப்பட்டனர். சாலையையொட்டி, கூட்டம் நடந்த மண்டபம் அமைந்திருந்ததால், ஆட்களை அழைத்து வந்த வாகனங்கள், நெடுஞ்சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டிருந்தன. அதனால், வாழப்பாடியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தேர்தல் வாக்கு பதிவு நடைபெற இன்னும் 28 நாட்கள் உள்ள நிலையில், அமைச்சர்கள் அனைவரும் “பெட்டி”யுடன் களம் இறங்கியுள்ளதால், தொகுதியிலுள்ள அதிமுக புள்ளிகள் உற்சாகத்தில் உள்ளனர். ஒவ்வொரு வார்டுகளுக்கும் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் முதல் கட்ட தேர்தல் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அத்தொகை வாக்குப்பதிவு நெருங்கும் போது, இதுபோல இன்னும் பலமடங்கு தொகை வழங்கப்படும். குறிப்பாக இந்த தொகுதிக்கு நூறு கோடி ரூபாய் முதல் இருநூறு கோடி ரூபாய் வரை செலவு செய்யவும் தாங்கள் தயாராக இருப்பதாகவும், உழைப்பதற்கு மட்டும் நீங்கள் தயாராக இருக்கவேண்டும் என்று அமைச்சர்கள் தொண்டர்களிடம் இரகசியமாக கூறி உற்சாகத்தை ஏற்படுத்தினர்.
எதிர்தரப்பில் உள்ள தி.மு.க.வில், இதுவரை தேர்தல் செலவுகளுக்கு ஒரு வார்டுக்கு தலா ஐந்து ஆயிரம் வீதம் கொடுத்துள்ளனர். எப்படியோ, ஏற்காடு இடைதேர்தல் சரித்திரம் படைக்கப்போகிறது.
No comments:
Post a Comment