வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



28/11/2013

கண்ணகி சிலையையே எடுத்தவர்கள் இப்போது சிவாஜி சிலையை எடுத்தால்
பலனை அவர்களே அனுபவிக்கட்டும் : கலைஞர்


தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கேள்வி :- ஏற்காடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி விதிமுறைகளை மீறுவதாக உங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் எடுத்துக் கூறி வருகிறீர்கள். இதற்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன?
பதில் :- தேர்தல் ஆணையம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை; என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
கேள்வி :- எரிவாயு குழாய்களைப் பதிக்கும் பிரச்சினையில் உயர் நீதி மன்றம் அளித்திருக்கும் தீர்ப்பினை எதிர்த்து, விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்படுகிறதே?
பதில் :- விவசாயிகளின் கஷ்டத்தையும், அவர்களுடைய கோரிக்கையையும் நான் கவனமாகப் பார்த்து வருகிறேன்.
கேள்வி :- உயர் நீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் அளித்துள்ள தீர்ப்பு பற்றி?
பதில் :- நான் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றி எப்போதும் விமர்சனம் செய்வதில்லை.


கேள்வி :- உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று நீங்கள் கருதுகிறீர்களா?
பதில் :- வழக்காடுவதை விட இரு தரப்பாரும் பேசி, விவசாயிகளுக்கு பாதகமின்றி நன்மை ஏற்படுகின்ற வகையில் நல்ல தீர்வு காண வேண்டும் என்பது தான் என் கருத்து.


கேள்வி :- உங்களுடைய நண்பர் சிவாஜி கணேசனுக்கு நீங்கள் தான் உங்கள் ஆட்சிக் காலத்தில் சிலை வைத்தீர்கள். ஆனால் இப்போது அந்தச் சிலையை அகற்ற வேண்டுமென்று அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்களே?
பதில் :- கண்ணகி சிலையையே எடுத்தவர்கள் இப்போது என்னுடைய நண்பர் சிவாஜி கணேசனின் சிலையை எடுக்க விரும்பினால், அதன் பலனை அவர்களே அனுபவிக்கட்டும்.


கேள்வி:- தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின் வெட்டுக்குக் காரணம், மத்திய அரசின் சார்பில் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள திடீர் பழுதுகள் தான் என்றும், மத்திய அரசு சதி செய்கிறது என்றும் தமிழக முதலமைச்சர் கூறியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் :- இதைப் பற்றிய குற்றச்சாட்டினை தமிழக முதல் அமைச்சரே பிரதமருக்குக் கடிதம் மூலமாக எழுதியிருக்கிறார். அதற்குப் பிரதமரின் பதில் வந்த பிறகு அந்த விவரத்தை அறிந்து நான் விளக்கம் அளிக்கிறேன்.

No comments:

Post a Comment


Labels