" அதோ, அவரை உடனடியாக மேடைக்கு அழைத்து வாருங்கள் !"
துணை முதல்வர் அண்ணன் தளபதி அவர்கள் இப்படிச் சொன்னபோது, அவர் இருக்கையில்
அமர்ந்து சில வினாடிகளே ஆகி இருந்தன.
மேடையில் இருந்த எங்கள் கண்கள் எல்லாம் அவர் கை காட்டிய திசையில் பாய்ந்தன ...
வெகு தொலைவில் , ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் நடுவே மாற்றுத் திறனாளியான
ஒரு சகோதரி கையில் ஒரு மனுவுடன் தரையில் தவழ்ந்து கொண்டிருந்தார் !
எங்களுக்கெல்லாம் பெரு வியப்பு!!. இவ்வளவு பெரிய ஜனத்திரள் ...எப்படி அந்த சகோதரி அவர்
கண்ணில் மட்டும் தென்பட்டார் என்று!
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் நிகழ்ச்சி....கே.வி .எஸ் பள்ளி மைதானம்
நிரம்பி வழிந்தது . மேடைக்கு அருகே அந்த சகோதரி அழைத்து வரப்பட்டு மேடையின் மீது
அவர் தவழ்ந்தே ஏறியவுடன் துணை முதல்வர் அவர்கள் சட்டென்று எழுந்து அருகே சென்று
ஆதுரமாக விசாரித்தார் .
" உன் பெயர் என்னம்மா ?"
" நாகேஸ்வரிங்க ஐயா"
மேலும் இரண்டொரு கேள்விகள்... இரண்டு கால்களும் செயலற்ற நிலையில்
வாழ்வாதாரத்துக்கு ஒரு வேலை வேண்டும். இதுவே கோரிக்கை. மனுவைக் கனிவுடன்
பெற்றுக்கொண்டு இருக்கைக்கு வந்தார் .
மாலைகள் ...சால்வைகள் ...நினைவுப் பரிசுகள் ..விவர அறிக்கைகள் ....எல்லாம் அவர் கைக்கு
வந்து கடந்து போய்க்கொண்டே இருந்தன ...அந்த மனுவைத் தவிர!!
விழா முடிந்தது . மாவட்ட ஆட்சியரை அருகே அழைத்து மனுவை அவரிடம் தந்துவிட்டு
சொன்னார் ,
"அந்தப் பொண்ணு ரெண்டு காலும் நடக்க முடியாம...ரொம்ப பாவமா இருக்கு... தகுதிக்கு ஏத்த
மாதிரி விதிமுறைக்கு உட்பட்டு ஏதேனும் வேலை வாய்ப்புக் கொடுக்க முடியுமான்னு
பாருங்கள்."
துணை முதல்வர் நினைத்தால் கட்டளை இடலாம் ...ஆனால், அன்பு, கனிவு, பொறுப்புணர்வு
மட்டுமே அவர் வார்த்தைகளில் நிறைந்து நின்றது ... மேடையில் இருந்த நானும், அமைச்சர்
அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆரும், மாவட்ட ஆட்சியரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்
கொண்டோம்.....
ஓரிரு மாதங்கள் கடந்திருக்கும் ....
துணை முதல்வர் அண்ணன் தளபதி மீண்டும் விருதுநகர் வருகை தந்தார்.
காலையில் இருந்து மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றிய பின்னும் அயர்ச்சியின்
அறிகுறியே தெரியாமல் ஓய்வு விடுதிக்குத் திரும்பினார். அமைச்சர் அண்ணன்
கே.கே.எஸ்.எஸ் .ஆர் அவர்களும், அமைச்சர் அண்ணன் பெரியகருப்பன் அவர்களும்
உடனிருந்தனர்.
சோபாவில் அமர்ந்து ஒரு மடக்கு 'டீ ' மட்டுமே அருந்தியிருப்பார்... அருகில் போனேன் .
" அண்ணே! கடந்த முறை நீங்கள் வந்த போது ஒரு மாற்றுத் திறனாளியான ஒரு பெண் உங்களிடம் மனு கொடுத்தாரே ..."
"ஓ ..நல்லா ஞாபகம் இருக்கே...பாவம், நடக்க முடியாம தவழ்ந்துட்டே வந்த பொண்ணுதானே?"
"ஆமாண்ணே... அந்தப் பொண்ணுக்குக் கல்வித் துறைல ஒரு வேலை கிடைச்சுருக்கு..."
பணி நியமன ஆணையைப் பார்த்த துணை முதல்வரின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது .....
" அண்ணே! ஒரு வேண்டுகோள் ...நீங்கள் அனுமதித்தால் அந்தப் பெண்ணை இங்கே அழைத்து
வந்து உங்கள் கைகளால் நியமன ஆணை வழங்க விரும்புகிறோம் ..." அண்ணன்
கே.கே.எஸ்.எஸ்.ஆரும் நானும் இணைந்து வேண்டினோம் .
"இல்லை...வேண்டாம் !"
நிமிர்ந்து பார்த்து விட்டு சொன்னார் ...
" நாமே அந்தப் பெண்ணோட வீட்டுக்கு நேரே போய் கொடுத்துட்டு வரலாம் !!! "
ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டோம் .
' இல்லண்ணே ...துணை முதல்வர் திடீர்னு போயி ...ஏற்பாடு ஏதும் பண்ணல .." மெல்ல
இழுத்தோம் .
அதற்குள், "வாங்க போகலாம் " என்று புத்துணர்வோடு காரை நோக்கி நடக்க ஆரம்பித்து
விட்டார்.....
சத்திர ரெட்டியபட்டி கிராமத்தில் துணை முதல்வர் தளபதி அவர்களின் கார் நுழைந்து,
நாகேஸ்வரியின் ஓட்டு வீட்டின் முன்னர் அவர் போய் நின்றபோது, ஊரே திருவிழாக்
கோலமாக
இருந்தது.
ஒரு துணை முதல்வர் தன் வீடு தேடி வந்து தன் கரங்களாலேயே ஆணையை வழங்கியபோது
அந்த சகோதரியால் நம்பவே முடியவில்லை ...அவரது கண்ணீர்ப் பெருக்கு அவரது நன்றிப்
பெருக்கைக் காட்டியது ...
கூடியிருந்த அனைவர்க்குமே மெய் சிலிர்த்தது ...
மாற்றுத் திறனாளிகளிடம் அண்ணன் தளபதி அவர்களுக்குள்ள பரிவு அத்தகையது !!
(ஹூம் ....இன்றைய சூழ்நிலையில் இப்போது ஏன் இந்த நிகழ்வு என் நினைவிற்கு வந்தது
என்று புரியாதவர்களா நீங்கள்?!!! ) Thangam Thenarasu

No comments:
Post a Comment