வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



12/10/2013

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு சட்டமன்ற தேர்தல் வராதா? :
மு.க.ஸ்டாலின் பேச்சு


தி.மு.க.வில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாணவர் அணி செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார்.
600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை வரவேற்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, ’’தி.மு.க. இன்றைக்கு ஆட்சியில் இல்லை. இன்னும் சொல்ல போனால் எதிர்கட்சியாக கூட நாம் இல்லை. அதே நேரத்தில் மக்கள் மன்றத்தில் தி.மு.க. தான் எதிர்கட்சியாக உள்ளது. ஆட்சியில் இல்லாத தி.மு.க. தான் மக்களுக்காக பாடுபடுகிறது. இதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். நாட்டில் எத்தனையோ கட்சிகள் உள்ளன.
இன்னும் பல கட்சிகள் வரும். கட்சிகளை தொடங்கியதுமே நான் தான் முதல்-அமைச்சர் என்று சொன்னவர்கள் எல்லோரும் இன்றைக்கு அடையாளம் தெரியாமல், அனாதைகளாக திரிகிறார்கள். இந்திராகாந்தி ஆட்சியின் போது நெருக்கடி நிலை அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதனை எதிர்த்த வாஜ்பாய், அத்வானி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி கவிழ்க்கப்பட்டது. நான் உள்பட 500 பேர் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டோம். அதனை தொடர்ந்து 13 ஆண்டுகள் தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. இன்றைக்கு எத்தனையோ தேர்தல்களை சந்தித்து விட்டோம். நம்மை போல் தேர்தலை சந்தித்தவர்களும் இல்லை, நம்மை போல் தோல்விகளை தழுவியவர்களும் இல்லை.
இதை எதற்கு சொல்கிறேன் என்றால், தி.மு.க. ஆட்சிக்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல. மக்களுக்காக பாடும்படும் கட்சி. மாணவர் அணியும், இளைஞர் அணியும் எனக்கு இரு கண்கள் போன்றது. நாம் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறோம். மாணவர்கள் புதிய யுக்தியை கையாள வேண்டும். மக்கள் நம்மை ஆதரிக்க தயாராக உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு சட்டமன்ற தேர்தல் வராதா? என்று மக்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். கட்சி கூட்டங்கள் நடத்தி, மக்களை சந்திக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment


Labels