உணவு பாதுகாப்பு சட்டம்: ஜெயலலிதா புகாருக்கு கலைஞர் பதில்
தி.மு.க தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“உணவுப் பாதுகாப்புச் சட்டம் லாபமா? நட்டமா?” என்று 2.9.2013 அன்று நான் கேட்டதற்கு, 7.9.2013 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்திருக்கிறார்!
“வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள மக்களுக்காக வாங்க வேண்டிய அரிசிக்காக ஆண்டு ஒன்றுக்கு தமிழக அரசுக்கு ஆகும் செலவு 578 கோடி ரூபாயாகும்.
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்காக வாங்க வேண்டிய அரிசிக்காக ஆண்டு ஒன்றுக்கு தமிழக அரசுக்கு ஆகும் செலவு 856 கோடி ரூபாயாகும். இரண்டும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக ஆண்டு ஒன்றுக்கு புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் அரிசிக்காகத் தமிழக அரசு செலுத்திட வேண்டிய மொத்த விலை 1,434 கோடி ரூபாயாகும்.
ஆனால் தற்போது (இந்தச் சட்டம் வருவதற்கு முன்பு) மத்திய அரசின் ஒதுக்கீட்டின் கீழ் பெறப்படும் அரிசிக்காக, தமிழக அரசு கொடுக்கின்ற விலை 2,231 கோடி ரூபாயாகும். எனவே உணவுப் பாதுகாப்புச் சட்டம் காரணமாக தமிழக அரசுக்கு ஆகும் செலவு ஆண்டு ஒன்றுக்கு 797 கோடி ரூபாய் குறையும். (2,231 –1,434) இது தமிழகத்திற்கு இலாபமா? நட்டமா? புதிய சட்டத்தை தி.மு.க. ஆதரித்தது சரியா? தவறா? நேரடியான இந்தக் கேள்விக்கு ஜெயலலிதா நேரடியாகவே பதில் சொல்லட்டும்!” என்று நான் 3.9.2013 தேதிய முரசொலியில் கேள்வி கேட்டிருந்தேன். ஆனால் முதல் அமைச்சரின் இன்றைய நீண்ட அறிக்கையில் இதைப் பற்றி நேரடியாக விளக்கம் எதுவும் அளிக்கப்பட்டிருக்கிறதா?
இப்போது கூட, ஜெயலலிதா தனது நீண்ட அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள மக்களுக்காக வழங்கப்படும் அரிசி விலை பற்றிய பிரச்சினையைத்தான் கூறியிருக்கிறார்!.
இந்தப் பிரிவினருக்காக வழங்கப்படும் அரிசிக்கு தற்போது மத்திய அரசு; மாநில அரசிடமிருந்து வாங்குகின்ற விலை ஒரு கிலோவுக்கு 8 ரூபாய் 30 காசு. இந்த விலை உயர்த்தப்படக் கூடாது என்பது தான் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கை; நம்முடைய கோரிக்கையும் இது தான்.
மத்திய உணவு அமைச்சர் நாடாளுமன்றத்திலே உறுதி அளித்திருக்கிறார். அவை நடவடிக்கைக் குறிப்பிலும் அந்த உறுதிமொழி பதிவாகியுள்ளது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா 10.8.2013 அன்று விடுத்த அறிக்கையில் “இந்த மசோதா நிறை வேற்றப்பட்டால், 3000 கோடி ரூபாய் அளவுக்குக் கூடுதல் செலவு ஏற்படுமா? இல்லையா?” என்று கேள்வி கேட்டார். பின்னர் 26.8.2013 அன்று இதே முதல்–அமைச்சர் விடுத்த அறிக்கையில் “இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் செலவு ஏற்படும்” என்றார். 7.9.2013 அன்று விடுத்துள்ள அறிக்கையில் “தமிழகத்திற்கான நிதிச்சுமை குறையப் போவதில்லை” என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
படிப்படியாக அவரே இப்படி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பது இரட்டை வேடமா? உண்மைகளை நான் எடுத்துரைப்பது இரட்டை வேடமா?
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை “கல்வி வளர்ச்சி நாள்” என்று தி.மு. கழக ஆட்சியிலே அறிவித்து, “அந்த நாளில் எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் அவருடைய பெயரைச் சொல்லி, அவருடைய படத்திற்கு ஆங்காங்கு மாலைகள் அணிவித்து, அவருக்கு வாழ்த்துச் சொல்லி நன்றி கூறுகிற நாளாக அந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்பதைச் சட்டமாக ஆக்குவதற்கு நான் முனைவேன்” என்று நான் 15.7.2006 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவிலே பேசியதை முதல்–அமைச்சர் ஜெயலலிதா சிரமப்பட்டுத் தேடிப் பிடித்து, அதைத் தன் அறிக்கையிலே குறிப்பிட்டு, சட்டத்தின் முக்கியத்துவத்தை நானே பேசியிருக்கிறேன்,
தற்போது மத்திய அமைச்சரின் வாக்குறுதியை நம்புவது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என்று ஜெயலலிதா தன் அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது மத்திய உணவு அமைச்சர் உத்தர வாதம் கொடுத்திருப்பது நாடாளுமன்றத்தில்! அதை நிறைவேற்றா விட்டால் “உறுதி மொழிக் குழு” வின் கேள்விக்குப் பதிலளித்தாக வேண்டும்.
மத்திய உணவு அமைச்சர் பாராளுமன்றத்தில் அளித்த உறுதி மொழியைக் காப்பாற்றாமல் அதை மீறி அரிசி விலையை உயர்த்தினால், அப்போது அதை எதிர்த்து வாதாடலாம், போராடலாம். அப்போது சட்டத்திலே திருத்தம் கொண்டு வர வேண்டுமென்று பிடிவாதமாகக் கோரலாம். சட்டம் இயற்றப்பட்டு விட்டால், அது திருத்தப்படக் கூடாத ஒன்றல்ல. எந்தவொரு சட்டமும் தொடக்க நிலையிலேயே பூரணத்துவம் பெற்று விடுவதில்லை. அரசியல் சட்டமே நூறு முறைக்கு மேல் திருத்தப்பட்டிருக்கிறது. அதைப் போல இந்தச் சட்டத்திலும் அனுபவத்தின் அடிப்படையிலே காலப் போக்கில் திருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்ளலாமே! அதற்குள் தமிழகத்திற்கே துரோகம், இரட்டை வேடம் எல்லாம் எங்கிருந்து வந்தது?’’என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment