தமிழர்களை காப்பாற்ற நாம் முடிவு எடுக்க வேண்டி உள்ளது: மு.க.ஸ்டாலின் பேச்சு
நாகையில் தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடந்நது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அவர், ‘’விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் வந்தாலும், அதற்கு முன்பாக வந்தாலும் நாம் தமிழகம், புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற இருக்கிறோம். தொடர்ந்து 3 முறை நாகை பாராளுமன்ற தொகுதியை நாம் கைப்பற்றி இருக்கிறோம். ஆனால் இடையில் நடந்த சட்டமன்ற தேர்தலை மறந்துவிடக்கூடாது.
விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இருந்தாலும் தோற்றோம். தோற்றவுடன் துவண்டு போய்விடவில்லை. தி.மு.க. இன்று ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். எதிர்கட்சியாக கூட சட்டமன்றத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மக்கள் மன்றத்தில் நாம் தான் எதிர் கட்சி. உங்களிடம் உள்ள உணர்வை பார்க்கும்போது நாம் தான் ஆளும்கட்சி என்ற உரிமையை கூட பெறுகிறோம்.
கடந்த ஆட்சியின் போது 2 மணி நேரம் மின்தடைக்காக ஆட்சி மாற்றத்தை பொதுமக்கள் கொண்டு வந்தார்கள். தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தலைவர் கலைஞர் முதல் அமைச்சராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாட்டை பற்றி, மக்களை பற்றி சிந்திக்கக்கூடிய ஒரே தலைவர் கலைஞர் மட்டும் தான்.
தமிழர்களை காப்பாற்ற நாம் முடிவு எடுக்க வேண்டி உள்ளது. வரக்கூடியது பாராளுமன்ற தேர்தல் தான். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்காக வரக்கூடிய தேர்தல் அல்ல. மத்தியில் ஒரு நல்ல ஆட்சி அமைவதற்கான தேர்தல் தான். இந்த தேர்தலை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று தலைவர் கலைஞர் வியூகம் வகுத்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் கழகம் வெற்றி பெறும்.
வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலை அடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக, அச்சாரமாக நினைத்து பணியாற்ற வேண்டும். உங்களுடன் இணைந்து பணியாற்ற நாங்களும் தயாராக இருக்கிறோம்’’என்று கூறினார்.
No comments:
Post a Comment