வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



29/09/2013

100 வயதான மூத்த திமுக தொண்டருக்கு தலைவர் கலைஞர் வாழ்த்து 


திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,எனது 90வது அகவையிலும் அன்றாடம் அண்ணா அறிவாலயத்திற்கு வரத் தவறுவதில்லை. காலையில் முரசொலி நாளிதழுக்காக எழுதி முடித்தப் பின்தான், காலை உணவு. அதன்பிறகு அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளையும், பார்வையாளர்களையும் சந்தித்து முடிக்கவே 1 மணி ஆகிவிடும். வெளியே வந்தால் அங்கேயும், கட்சித் தோழர்களும், செய்தியாளர்களும் நின்றுகொண்டிருப்பார்கள். ஒரே கேள்விக்கு அனுமதிகேட்டுவிட்டு 9 கேள்விகள் கேட்கும் செய்தியாளர்களுக்கு பதிலளித்துவிட்டு புறப்பட நினைத்தால், அப்போது ஒரு சில கட்சித் தோழர்கள் காத்திருப்பார்கள்.கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் புறப்படத் தயாரானபோது, ஒருமுதியவர் என்னை நெருக்கினார். அவரிடம் யார். என்ன வேண்டும் என்று கேட்டேன். தலைவரே, எனக்கு 100 வயது பிறக்கப் போகிறது. எனக்கு நினைவு தெரிந்தது முதல் நான் திமுக. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கு உங்களிடம் வாழ்த்துப் பெறுவது ஒன்றுதான் விருப்பம் என்று அவர் பதிலளித்தார்.அவர் என்னிடம் கொடுத்த மனுவை படித்துப் பார்த்த போது,27.09.2013 அன்று 100வது வயது பிறக்கும் எனக்கு, தங்களுடைய நல்லாசி கிடைக்க வேண்டி, இம்மனுவை சமர்ப்பிக்கிறேன் என்று எழுதியிருந்தது. அந்த தொண்டர் சாமிக்கண்ணுவையும், அவரது துணைவியாரையும் தம்பி ஸ்டா-ன் அவரது அறைக்கு அழைத்துச் சென்று பொன்னாடை அணிவித்து ஆயிரம் ரூபாய் நிதியினையும் அளித்து அனுப்பி வைத்தார்.சாமிக்கண்ணு, காஞ்சிபுரம் மாவட்டம் என்று சொன்னதன் விளைவாகவோ என்னவோ, காரில் செல்லும்போது தமது நினைவலைகளில் அண்ணா வந்தார். அவரைத் தொடர்ந்து சி.வி.எம், சி.வி.ராஜகோபால், கே.டி.எஸ்.மணி, காஞ்சி கல்யாணசுந்தரம், கம்பராசபுரம் ராஜகோபால், வெங்கா, மதுராந்தகம் ஆறுமுகம், பூவிருந்தவல்லி ராஜரத்தினம், திமுக வரலாறு எழுதிய டி.எம்.பார்த்தசாரதி, குன்றத்தூர் தா.மோக-ங்கம், தி.ந.சம்பந்தம், மணிமொழியார் என்ற ஒவ்வொருவரும் தம் மனக்கண் முன் தோன்றி நலம் விசாரித்தனர்.நினைவில் வந்த அண்ணாவிடம் வயதாகிவிட்டது அண்ணா என்று நான் கூறியவுடன், என்ன வயதாகிட்டது. 1969ல் உங்களை விட்டு வரும்போது, திமுகவின் பணி, இன்னும் 50 ஆண்டு காலத்திற்கு தேவைப்படுவதாக சொன்னேனே,அந்த ஞாபகம் வரவில்லையா? அந்த 50 ஆண்டு என்பது 2019ஆம் ஆண்டுதானே வருகிறது. அதன்பிறகும் நம்முடைய கழகத்தின் பணி தமிழ்நாட்டிற்குத் தேவைதான் என்றார்.நான் கூறியதற்கிணங்க காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசனும், கட்சி முன்னணியினரும் 27ஆம் தேதி அன்று சாமிக்கண்ணுவின் இல்லத்திற்கே சென்று, அந்த தம்பதியினருக்கு மாலை, மரியாதை செய்து எனது சார்வில் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து பொற்கிழியும் வழங்கி அதைப் புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பி உள்ளனர்.100 வயதாகும் திமுக தொண்டர் சாமிக்கண்ணுவின் இரண்டாவது மகன் குடும்பத்துடன் தீவிபத்தில் சிக்கி இறந்துவிட்ட நிலையிலும், கட்சிப் பணியை சாமிக்கண்ணு தொடர்ந்து செய்து வருகிறார். இந்த ஒரு சாமிக்கண்ணு மாத்திரமல்ல, இன்னும் எத்தனையோ சாமிக்கண்ணுகள் இணைந்து வளர்த்த கட்சிதான் திமுக.அவர்களைப் போன்றவர்கள், கட்சியை வளர்க்கத் தொடங்கிய நேரத்தில் நம்முடைய கட்சி ஆட்சிக்கு வரும் என்றோ, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக கட்சியைச் சேர்ந்தவர்கள் வருவார்கள் என்றோ எதிர்பார்த்ததில்லை. கட்சியை வளர்க்க வேண்டுமென்பதுதான் அவர்களது குறிக்கோளாக இருந்தது.திராவிட இயக்கத்தின் 100ஆம் ஆண்டு தொடக்க விழாவினை கடந்த ஆண்டு திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. அந்த திராவிட இயக்கம் என்னும் ஆலமரத்தின் விழுதுகளான சாமிக்கண்ணுவைப் போன்ற எண்ணற்றத் தொண்டர்கள் கட்டிகாத்து வருவதுதான் நமது இயக்கம்.ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த 100 வயதான, திமுகவின் தீவிர உறுப்பினரான சாமிக்கண்ணுவையும், அவரது துணைவியாரையும் திமுக தலைவர் என்ற முறையில் மனமார வாழ்த்துகிறேன். நமக்குத் தெரிந்தவரை திமுகவின் மூத்த தொண்டர் காஞ்சிபுரம் சாமிக்கண்ணுதான் என்று கருதுகிறேன். அந்த மூத்த தொண்டருக்கு நாம் அனைவரும் சேர்ந்து வாழ்த்து கூறுவோம். வாழ்க சாமிக்கண்ணு. வளர்க்க அவரின் தொண்டு. இவ்வாறு கலைஞர் அவர்கள் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels