வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



14/11/2016

ஜெயலலிதாவின் பெயரில் அறிக்கை: உண்மையா? மு.ஸ்டாலின் கேள்வி

4 தொகுதி இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் பெயரில் அறிக்கை வெளியாகியிருக்கிறது. கடந்த ஒரு வாரகாலமாக ரூபாய் நோட்டுத் தட்டுப்பாட்டால் இரவிலும் பகலிலும் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் துன்பத்தைத் துடைக்கும் வகையிலான உருப்படியான அறிவிப்போ, குறைந்தபட்சம் சிறு ஆறுதலோ கூட இல்லாத வகையில் இஇப்படியொரு  அறிவிப்பை, மக்களுக்காக நான் என்று சொல்லிக் கொள்ளும் அம்மையார் ஜெயலலிதாவுக்கு எப்படி மனம் வந்தது என்ற கேள்வி எழுகிறது என்று திமுக பொருளாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் பெயரில் அறிக்கை வெளியாகியிருக்கிறது. தான் மறுபிறப்பு கண்டுள்ளதாக அந்த அறிக்கையில் அம்மையார் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அவர் நலம் பெற வேண்டும் என்பதற்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கிருந்தவர்களிடம் நலன் விசாரித்து வந்தவன் என்ற முறையில் அவர் முழு நலன் பெற வேண்டும் என விரும்புகிறேன்.

கடந்த ஒரு வாரகாலமாக ரூபாய் நோட்டுத் தட்டுப்பாட்டால் இரவிலும் பகலிலும் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த காரணத்தால், தங்களின் உழைப்பில் சம்பாதித்த அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளின் முன்பாக பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் உரிய அளவில் சில்லறை நோட்டுகளைப் பெற முடியாத நிலையில் பொதுமக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். கடுமையான இந்த சில்லறைத் தட்டுப்பாட்டினால் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 2000 ரூபாய் நோட்டு கையில் இருந்தாலும் பலனில்லாத நிலை உருவாகியுள்ளது.

அரிசி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாத நிலையில் ஏழை-நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், அவர்களின் துன்பத்தைத் துடைக்கும் வகையிலான உருப்படியான அறிவிப்போ, குறைந்தபட்சம் சிறு ஆறுதலோ கூட இல்லாத வகையில் இப்படியொரு அறிவிப்பை, மக்களுக்காக நான் என்று சொல்லிக் கொள்ளும் அம்மையார் ஜெயலலிதாவுக்கு எப்படி மனம் வந்தது என்ற கேள்வி எழுகிறது.

மக்களின் நலன் பற்றியோ அவர்கள் வாழும் வாழ்க்கை பற்றியோ சிந்திக்க வேண்டியதில்லை அவர்களின் வாக்குகள் மட்டும் போதும் என்று அம்மையார் நினைக்கிறாரா, அல்லது அவரது பெயரில் அறிக்கை வெளியிடப்படுவது தான் அ.தி.மு.கவின் வெற்றிக்கான கடைசி அஸ்திரமாக இருக்கும் என கடந்த 50 நாட்களுக்கும் மேலாக எல்லாவற்றையும் திரைமறைவிலிருந்து இயக்கி கொண்டிருப்பவர்கள் கணக்குப் போட்டு இப்படியொரு அறிக்கையை வெளியிடச் செய்திருக்கிறார்களா என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

அம்மையார் ஜெயலலிதாவின் இந்த அறிக்கை அவரே வெளியிட்ட அறிக்கை என்றால், மக்கள் படும் அவதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் வாக்குகளை மட்டுமே எதிர்பார்க்கிறார் என்பதைத் தான் அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. அம்மையார் ஜெயலலிதாவின் பெயரில் அறிக்கை வெளியாகியிருக்கிறது என்றால், சொந்தக் கட்சியின் தொண்டர்களையே திசைதிருப்பும் வகையில் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது உறுதியாகிறது.

உண்மை என்ன என்பதை, முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவிடம் தான் கேட்க வேண்டும். அவர் முழு உடல் நலன் பெற்றுத் திரும்ப வேண்டும் என விரும்புவதுடன் அப்போது முதலமைச்சரான அவரிடம் இது குறித்த விளக்கத்தை, நாட்டுமக்களுக்காக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பெற வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

No comments:

Post a Comment


Labels