வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

16/08/2016

ஜெயலலிதாவிடம் உரிய பதிலும் உண்மையும் இருந்தால் தானே உரக்க சொல்வதற்கு? கலைஞர்

ஜெயலலிதா வெற்றி விளம்பரத்துக்காக விதி 100ன் கீழ் அறிவிப்பு வெளியிடுகிறார். 24 மணி நேரமும் மக்களைப் பற்றி சிந்திப்பதாக ஜெயலலிதா சொல்வது சிரிப்பை வரவழைக்கிறது. பொது முக்கியத்துவம் வாய்ந்ததை அமைச்சர் அறிக்கை மூலம் வெளியிடலாம் என்பதே விதி 110 (1). முதலமைச்சர் மட்டுமே தான் எல்லா அறிக்கைகயையும் படிக்க வேண்டும் என்று விதி 110ல் கூறப்படவில்லை. திமுக ஆட்சியில் முதலமைச்சரும், அமைச்சர்களும் விதி 110ன் கீழ் அறிக்கை படித்துள்ளனர். அமைச்சரின் கடமையை முதல்வர் எடுத்துக் கொண்டால் அது ஆக்கிரமிப்பு ஆகாதா. 110வது விதியின் கீழ் அறிக்கை படித்த பின் பாராட்டி பேசலாம் என விதியில் கூறப்படவில்லையே? விதி 110ன் கீழ் கடலளவு திட்டத்தை அறிவித்துவிட்டு கையளவு மட்டுமே செய்ததற்கு என்ன பதில்? முதல்வர் ஜெயலலிதாவிடம் உரிய பதிலும் உண்மையும் இருந்தால் தானே உரக்க சொல்வதற்கு. சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி வைத்துக் கொண்டு சொல்வது எதற்கு என கலைஞர் கூறியுள்ளார்.

110வது விதியின் கீழ் அறிக்கையும், அதற்கு விளக்கமும்! என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகச் சட்டப்பேரவையில் நம்முடைய முதல் அமைச்சர் ஜெயலலிதா, பேரவை நிகழ்ச்சிகளில் தனது பங்களிப்பாக எதையாவது பதிவு செய்ய வேண்டுமென்ற அவாவில், 110வது விதியின் கீழ் அறிக்கைகளைப் படிக்கத் தொடங்கி விட்டார்; அது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் தம்பி மு.க. ஸ்டாலினும், துணைத் தலைவர் தம்பி துரைமுருகனும்  எழுப்பிய சில சந்தேகங்களுக்கும், முதலமைச்சர் அருமையான (!) விளக்கங்களை யெல்லாம் அவையிலே தந்திருக்கிறார்.  24 மணி நேரமும் மக்களைப் பற்றியே சிந்திப்பதால், புதிய புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்களாம்!  அவர் கூறிய சில விளக்கங்கள் பற்றி கழக உறுப்பினர்கள் எழுப்ப முயன்ற சில சந்தேகங் களுக்கு பேரவைத் தலைவர் அனுமதி அளிக்க வில்லையாம். 

110வது விதியின் கீழ் ஓர் அறிக்கை பேரவையில் படிக்கப்பட்ட பின் அதைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யக் கூடாது.  எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்று விதிகளிலேயே உள்ளது.  செய்யப் பட்ட அறிவிப்புக்கு நன்றி கூறி, பாராட்டுத் தெரிவித்து மட்டும் பேசலாம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். பாராட்டுத் தெரிவிப் பதேகூட ஒரு வகை விமர்சனம்தான் என்பதை ஜெயலலிதாவுக்கு யார் எடுத்தியம்பிடக் கூடும்?   விதிகளிலே 110வது விதியின் கீழ் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று நானும் எடுத்துப் பார்த்தேன்.

விதி 110 (1) பொது முக்கியத்துவம்  வாய்ந்த  ஒரு  பொருளைப்  பற்றி ஓர் அமைச்சர் பேரவைத் தலைவரின் இசைவுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம். (2) அவ்வறிக்கையின் மீது அப்போது எவ்வித விவாதமும் இருத்தல் கூடாது என்று தான் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள் புத்தகத் தில் உள்ளது. இந்த விதியைப் படித்தவுடன், நமக்கு ஏற்பட்ட சந்தேகம், 110வது விதியின் கீழ் ஓர் அமைச்சர் அறிக்கை அளிக்கலாம் என்று பொதுவாகத்தான் இருக்கிறதே தவிர, முதல் அமைச்சர்தான் 110வது விதியின் கீழ் அனைத்து அறிக்கைகளையும் படிக்க வேண்டு மென்று குறிப்பாக அந்த விதியில் கூறப்பட வில்லையே?  அவை விதிகளில், ஓர் அமைச்சர் அறிக்கை ஒன்றைத் தரலாம் என்றிருக்கிறதே தவிர, முதலமைச்சர் என்று அதிலே கூறப்பட வில்லையே? அமைச்சர் என்ற வரையறைக்குள் முதல் அமைச் சரும் இடம் பெறுகிறார் என்று சொன்னாலும்கூட, அமைச்சர்களின் துறைகள் பற்றிய அறிக்கைகள் அனைத்தையும்  முதலமைச்சரேதான் படிக்க வேண்டும்; மொத்தத்தில் விதி 110 என்பது அமைச்சர்கள் அனைவருக்கும் உள்ள பொது உரிமை அல்ல, முதலமைச்சருக்கு மட்டுமே உள்ள சிறப்புரிமை என்று அந்த விதியில் எந்த இடத் திலும் கூறப்படவில்லையே?

110வது விதியின் கீழ் படிக்கப்படும் அறிக்கை மீது  அப்போது எவ்வித விவாதமும் இருத்தல் கூடாது என்றுதான் 110வது விதியில் கூறப்பட்டிருக்கிறதே தவிர, அறிக்கைக்குப் பிறகு அதன் மீது விவாதம் எழுப்புவதற்கு எந்தத் தடையும் இருப்ப தாகக் குறிப்பிடும் வார்த்தைகள் எதுவும் விதியில்  இல்லையே?  110வது விதியின் கீழ் அறிக்கை படிக்கப்பட்டவுடன், அதிலே கூறப்பட்ட அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டிப் பேசலாம் என்றும் விதிகளிலே கூறப்படவில்லையே?  பிறகு எந்த விதியின் கீழ் முதலமைச்சர் ஒவ்வொரு முறை 110வது விதியின் கீழ் அறிக்கை படித்த பிறகும், ஆளுங்கட்சியின் தோழமைக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக எழுந்து ஜெயலலிதாவுக்குப் பாராட்டுரை வைபவம் நடத்துவதற்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள்? 

முதலமைச்சர் ஜெயலலிதா, 110வது விதியின்கீழ் அறிவிப்புச் செய்தது பற்றி, பேரவையில் 12-8-2016 அன்று அவர் அளித்த விளக்கத்தில், “அமைச்சர் கள் அவரவர்களுடைய மானியக் கோரிக்கையை இங்கே முன்மொழிந்து, அதன் மீது விவாதம் நடைபெற்ற பிறகு, அவர்கள் தங்கள் துறை சம்பந்தமான சில புதிய அறிவிப்புகளைச் செய்த பிறகு, அதே துறையைப் பற்றிய சில அறிவிப்புகளை முதலமைச்சர் ஏன் வெளியிடுகிறார் என்று கேட்கிறார்.  அதற்கு விளக்கம் சொல்ல நான் தயாராக இருக்கிறேன்.  எல்லா யோசனைகளும், எல்லாத் திட்டங்களும் ஒரே சமயத்தில் ஒரு ஆட்சிக்குத் தோன்றாது. ஏற்கனவே இந்தத் துறையைப் பற்றி சம்பந் தப்பட்ட அமைச்சர் தன் னுடைய மானியக் கோரிக் கையை அவை முன் வைத்தார்.  அதன் மீது விவாதம் நடைபெற்றது.  அன்றைக்கு அவர் சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  அன்று வரை எங்களுக்குத் தோன்றியவை அவை தான்.  அதன்பின் அந்தத் துறையைப் பற்றி யோசிக்க யோசிக்க, அடடா, இதை விட்டு விட்டோமே, இதையும் செய்யலாமே என்ற யோசனை வந்ததால், அப்படிப்பட்ட புதிய அறிவிப்புகளை வெளியிடு கிறேன்” என்று கூறியிருக்கிறார். 

பொதுமக்களைப் பற்றியே 24 மணி நேரமும் சிந்திப்பதால், புதிய புதிய அறிவிப்புகளை வெளி யிடுகிறோம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.  ஒவ்வொரு துறை பற்றிய புதிய புதிய அறிவிப்புகளை 110வது விதியின் கீழேயே, அந்தந்தத் துறை அமைச்சர்களைக் கொண்டு படிக்கச் செய்யாமல், முதல் அமைச்சரே அனைத்து அறிக்கை களையும் படிப்பது, அந்த அமைச்சர் களுக்கு உரிய வாய்ப்பினை முதலமைச்சர் தட்டிப் பறிப்பது ஆகாதா? ஏதோ ஒன்றிரண்டு அறிவிப்பு களை படித்தால், அது பெரிதாகத் தோன்றாது.  அவை விதிகளின் அத்தனை 110வது விதியின் கீழான அறிக்கைகளையும் முதலமைச்சரே படிக்க வேண்டும் என்றா இருக்கிறது? அமைச்சர் படிக்கலாம் என்றுதானே இருக்கிறது?  எல்லா அறிக்கைகளையும் முதலமைச்சரே தன் வயப்படுத் திக் கொண்டால், பின் துறை அமைச்சர்களுக்கு  ஆர்வமும், பொறுப்புணர்வும் குன்றி விடாதா?  அவரவரது கடமையை அவரவர் ஆற்றுவதுதானே முறை? ஒருவர் கடமையை மற்றொருவர் சுவீகரித் துக் கொண்டால், அது ஆக்கிரமிப்பு ஆகாதா?

ஒரு குறிப்பிட்ட துறை மீது விவாதம் நடைபெற்று முடிந்த பிறகு, அந்தத் துறை சார்பில் வேறு சில அறிவிப்புகளை வெளியிடுகிறோம் என்று முதலமைச்சர் சொல்லி யிருக்கிறார். இதிலே எனக்குள்ள அய்யப்பாடு, பேரவையிலே ஒரு துறையைப் பற்றிய மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று, அறிவிப்புகளை அந்தத் துறை அமைச்சர் வெளியிடுவதற்கு முன்பாகவே,  அந்தத் துறை பற்றிய அறிவிப்புகளை முதல் அமைச்சரே  முந்திக் கொண்டு பேரவையிலே 110வது விதியின் கீழ் கடந்த ஆண்டுகளில் படித்தாரே, அதெல்லாம் எப்படி? 
 உதாரணம் கூற வேண்டுமேயானால்,  2013ஆம் ஆண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை பற்றிய மானியத்தின் மீதான விவாதம் 15-4-2013 அன்று நடைபெற்றது.  ஆனால் 1-4-2013 அன்றே முதல் அமைச்சர், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் 110வது விதியின் கீழ் 1,348 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு அறிவிப்புகளைச் செய்திருக்கிறார்.  இது அந்தத் துறை அமைச்சரின் உரிமையைப் பறிக்கும் செயலா அல்லவா?

அதுபோலவே பொதுப்பணித் துறை மீதான விவாதம் பேரவையில் 18-4-2013 அன்று நடைபெற்று, அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.  ஆனால் முதல் அமைச்சர் ஜெயலலிதா 4-4-2013 அன்றே 110வது விதியின் கீழ் பொதுப் பணித் துறை சம்பந்தப்பட்ட 259 கோடி ரூபாய்க்கான திட்டங் களை பேரவையில் அறிவித்தார்.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மீதான மானிய விவாதம் 16-4-2013 அன்று நடை பெற்றது. ஆனால் அந்தத் துறை மீதான அறிவிப்புகளை அதாவது மதுரையில் துணைக் கோள் நகரம், சோழிங்கநல்லூரில் மாடிக் குடியிருப்புகள் ஆகியவை பற்றிய அறிவிப்புகளை முதலமைச்சர் 4-4-2013 அன்றே செய்து விட்டார்.  அது போலவே மீன்வளம் பற்றிய மானியம் 17-4-2013 அன்று நடைபெற்றது. ஆனால் 5-4-2013 அன்றே  முதலமைச்சர் அறிவிப்புகளைச் செய்து விட்டார்.  இதுபோல் ஏராளமான எடுத்துக்காட்டுகள் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே முதல மைச்சர் பேரவையில் கூறிய மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் முடிந்த பிறகு, 24 மணி நேரமும்  பொதுமக்களைப் பற்றியே சிந்திக்கின்ற காரணத் தால் தோன்றிய  அறிவிப்புகளை 110வது விதியின் கீழ் படிக்கிறோம் என்று பேரவையில் கூறியது சரியான காரணம் ஆகாது.  ஜெயலலிதாவின் சமாதானத்தை ஆய்ந்து பார்த்தால், 24 மணி நேரமும் பொதுமக்களைப் பற்றிய சிந்தனை என்பது சிரிப்பைத்தான் வரவழைக்கும்.

முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் அரசின் முக்கிய அறிவிப்புகளையெல்லாம் அவரே படிப்பதும், அதைத் தொடர்ந்து அவருடைய தோழமைக் கட்சித் தலைவர்கள் அதைப் பாராட்டு வதும் என வழக்கமாக நடைபெறுவதைப்  பார்க்கும்போது எதிர்க்கட்சியினருக்கு எந்த வருத்தமும்  கிடையாது. ஆனால் அந்த அறிவிப் புகள் எல்லாம் செயலாக்கத்திற்கு வருகிறதா?  110வது விதியின் கீழ் அ.தி.மு.க. ஆட்சியில் படிக் கப்பட்ட அறிக்கைகள் எத்தனை? அதிலே கூறப் பட்ட அனைத்து அறிவிப்புகளும் செயலாக்கம் பெற்று விட்டனவா? அறிவிப்புகளிலுள்ள  திட்டத் திற்காக ஒதுக்கப்படுகின்ற நிதி முறையாகச் செல வழிக்கப்பட்டு விட்டதா என்பதையெல்லாம் விளக் கும் வகையிலும், பொதுமக்கள் புரிந்து கொள்ளக் கூடிய முறையிலும்  ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் கோரிய பிறகும், அதனை அரசின் சார்பாக வைக்கப் பிடிவாதமாக மறுப்பது ஏன்?

நிதியமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள் இந்த  110வது விதியின் கீழான அறிக்கை பற்றிப் படித்த அறிக்கையில்,  2013-2014ஆம் ஆண்டு, விதி எண். 110இன் கீழ்  236 திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததாகவும்,  ஆனால் அதில் 116 திட்டங்களுக்குத்தான் அரசாணைகள் வெளி யிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.  அதற்குப் பிறகு எத்தனை திட்டங்களுக்கு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன, அதிலே எத்தனை திட்டங்கள் முடிக்கப்பட்டன என்பதற்கான விளக்கங்களைப்  பேரவையில் வெளிப்படையாகத் தெரிவிக்கத் தயங்குவது ஏன்? அந்தத் தயக்கம்தானே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது?

கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், 8-6-2011 முதல் 13-9-2011 வரை 21 அறிக்கை களும் - 29-3-2012 முதல் 2-11-2012 வரை 44 அறிக்கைகளும் - 1-4-2013 முதல் 15-5-2013 வரை 46 அறிக்கைகளும் - 2014ஆம் ஆண்டு 19-2-2014 முதல் 12-8-2014 வரை 41 அறிக்கை களும் - 2015ஆம் ஆண்டு 25-8-2015 முதல் 31 அறிக்கைகளும் - 2016ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு 4 அறிக்கைகளுமாக  மொத்தம் 187 அறிக்கைகள் 110வது விதியின் கீழ் பேரவையில் படிக்கப்பட்டுள்ளன. 187 அறிக்கை களையும் ஒன்று விடாமல் படித்தவர் முதலமைச்சர் ஜெயலலிதாதான்!  மற்ற அமைச்சர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று  கேட்கி றீர்களா? முதலமைச்சர் அறிக்கையைப் படிக்கும் போது, மேசையைத் தட்டிக் கொண்டிருந்தார்கள்!  அமைச்சர்களுக்கு இட்ட பணி அது மட்டும்தான்!

இதற்கு முன்பு 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு மே திங்கள் வரை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற போது, 110வது விதியின் கீழ்  எத்தனை அறிக்கைகள் படிக்கப்பட்டன தெரியுமா?  25-7-2006 முதல் 8-2-2011 வரையிலான ஐந்தாண்டு காலத்தில்  110வது விதியின் கீழ் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள்கள் மீது படிக்கப்பட்ட அறிக்கைகளின் எண்ணிக்கை 46 தான்! இந்த 46 அறிக்கை களையும்  முதலமைச்சர் என்ற முறையில் நான் தான் படித்தேனா?  18 அறிக்கைகளைத்தான் முதல்வர் என்ற முறையில் நான் படித்திருக்கிறேன்.     துணை முதலமைச்சரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலின் 8 அறிக்கை களையும் - நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள் 3 அறிக்கைகளையும் - பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் 5 அறிக்கைகளையும் - வேளாண் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் 1 அறிக்கையையும், உயர் கல்வி அமைச்சராக இருந்த முனைவர் கே. பொன்முடி 1 அறிக்கையையும் - வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி 1 அறிக்கையையும் - உணவமைச்சராக இருந்த எ.வ. வேலு 2 அறிக்கை களையும் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு 2 அறிக்கைகளையும் - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 2 அறிக்கை களையும் - செய்தித் துறை அமைச்சராக இருந்த பரிதி இளம்வழுதி 1 அறிக்கையையும் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 1 அறிக்கையையும் - பால் வளத் துறை அமைச்சராக இருந்த மதிவாணன் 1 அறிக்கையையும் பேரவையிலே படித்திருக்கிறோம் என்பதையும்,  அமைச்சரவை யின் கூட்டுப் பொறுப்பு எவ்வாறு போற்றப்பட்டது என்பதையும்  அவை நடவடிக்கை குறிப்பினை எடுத் துப் பார்த்து அனைவரும்  தெரிந்து கொள்ளலாம்.

26-8-2015 அன்று இந்த அறிவிப்புகள் பற்றி நான் எழுதிய “உடன்பிறப்பு” மடலில்  110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் அன்றைய நிலை என்ன என்பதை விவரித்து, “நான்காண்டு காலத்தில் 110வது விதியின் கீழ் படித்த அறிவிப்பு களில் அடங்கியிருக்கும் திட்டப் பணிகளுக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை 84 ஆயிரத்து 374 கோடி ரூபாய்.  அதிலே செலவு செய்யப்பட்டதோ 

12 ஆயிரத்து 734 கோடி ரூபாய்தான்.  அதாவது 12.09 சதவிகிதம்தான். கடலளவு அறிவித்து விட்டு, கையளவு மட்டுமே செய்ததற்கு  என்ன பதில்?” என்று கேட்டிருந்தேன்; பதிலே தரவில்லை;  உரிய பதிலும் உண்மையும் இருந்தால்தானே, உரக்கச் சொல்வதற்கு?

110வது அறிக்கை பற்றி, நான் கூறுவதைவிட பொதுவான வார இதழான “ஆனந்த விகடன்” தெரிவித்த கருத்தைக் கூறுகிறேன். 

“பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஓர் அமைச்சர், சபாநாயகரின் இசைவுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம்.  தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை விதி 110 இப்படித்தான் விவரிக் கிறது. ஆனால் எந்தப் பொது முக்கியத்துவமும் இல்லாத, புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் மட்டுமே 110ன் கீழ் வெளியிடப்படுகின்றன.  அந்த அறிவிப்புகள் ஏதாவது செயல்வடிவம் பெறுகின் றனவா? வீட்டு வசதி வாரியத்தின் மூலம்  2,160 கோடி ரூபாய்ச் செலவில் 311 ஏக்கரில் சென்னை திருமழிசையில் துணைக்கோள் நகரம்  அமைக்கப்படும் என்று 2011ஆம் ஆண்டில் அறிவித்தார்.  இதுவரை எந்தத் துணைக்கோள் நகரத்தையும் காண வில்லை. இந்தத் திட்டத்துக்கு வரைபடம் தயாரிக்கும் பணியே இப்போதுதான் தொடங்கி யிருக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் கேளம்பாக்கம் அருகில் துணை நகரம் அமைக்கப்படும் என கருணாநிதி அறிவித்தார். உடனே ஜெயலலிதா காட்டமாக அறிக்கை விட்டார். “கருணாநிதி வீட்டில் உள்ள பெண்டு பிள்ளைகள், பேரன் பேத்திகள், மறைந்த முதல் மனைவியின் உறவினர்கள், அவர்கள் வழி வந்த உறவினர்கள், இருக்கும் மனைவியின் உறவினர்கள் ஆகியோர் கோபாலபுரத்தை விட்டும், சி.ஐ.டி. காலனியை விட்டும் வெளியேறி ஜனநெருக் கத்தைக் குறைத்தாலே, துணை நகரத்துக்கு அவசியம் இல்லாமல் போய்விடும்” என்றார்.  இப்போது அவரே திருமழிசை துணை நகரத் திட்டத்தை அறிவித்து, அதுவும் தூங்கிக் கொண் டிருக்கிறது. மதுரை விமான நிலையத்துக்கு அருகில் 586 ஏக்கரில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங் கிணைந்த துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்பது 110ன் கீழ் இன்னோர்  அறிவிப்பு.  இதுவரை வரைபடம் தயாரிக்கும் பணிகள் முடியவில்லை.  தமிழகத்தின் தென் பகுதி நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூரில்  புறநகர் பேருந்து நிலையம் ஏற்படுத்தப்படும் என்றார். நிலம் கையகப் படுத்துவதற்கான வழிகளைக் கூட இப்போது தான் ஆராயத் தொடங்கியிருக்கிறது சி.எம்.டி.ஏ.  கருணாநிதி “மெட்ரோ”ரெயிலுக்கு அடிக்கல் நாட்டிய போது, “மெட்ரோ ரெயிலை விட மோனோ ரெயில் தான் பெஸ்ட்”  என்று பக்கம் பக்கமாக அறிக்கை விட்டு மட்டம் தட்டினார் ஜெயலலிதா.  ஆனால் ஆட்சியில் அமர்ந்ததும் மெட்ரோ ரெயில் திட்டத் துக்குச் சொந்தம் கொண்டாடினார். “சென்னையில்  மோனோ ரெயில் திட்டம் அமல்படுத்தப்படும்.  கிழக்கு தாம்பரம் வழியாக வண்டலூரில் இருந்து வேளச்சேரி வரையிலும், போரூர் வழியாக பூந்தமல்லியில் இருந்து கத்திப்பாரா வரையிலும்,  வளசரவாக்கம் வழியாக பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரையிலும் செல்லக்கூடிய மூன்று வழித் தடங்கள் கொண்டதாக மோனோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று 2011ஆம் ஆண்டில் அறிவித்தார் ஜெயலலிதா.  அத்துடன் மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரெயில் திட்டம் கொண்டுவரப்படும் என ஜிகினாக்களைத் தொங்க விட்டார். எல்லாமே பஞ்சர்தான். நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் 35 அறிவிப்பு களை வெளியிட்டார். இதில் ஆறு பணிகள்தான் முடிக்கப்பட்டிருக்கின்றன. “மாமல்லபுரத்தில்

10 கோடி ரூபாய்ச் செலவில் பல ஏக்கர் பரப்பில் நீர்மூழ்கிக் கப்பலுடன் கூடிய கடல்சார் அருங் காட்சியகம் அமைக்கப்படும்” என 2012ஆம் ஆண்டில் அறிவித்தார்.  அதுவும் அப்படியே இருக்கிறது” என்று அந்த வார இதழ் எழுதியிருந்தது.  சொல்லுக்கும் செயலுக்கும் இவ்வளவு பெரிய இடைவெளியை வைத்துக் கொண்டு, சொல்வது  எதற்கு? சொன்னதற்குப் பாராட்டு ஏன்? சொல்வதெல்லாம் வெற்று விளம்பரத்திற்குத்தான்; அனைவரையும் ஏமாற்றுவதற்குத்தான் என்றல்லவா பொதுமக்கள் நினைக்கிறார்கள்!

No comments:

Post a Comment

Labels