வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



20/06/2015

மனப்புழுக்கம் நிறைந்த அ.தி.மு.க. ஆட்சியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்! கலைஞர் !!
சென்னை : தமிழகத்தில் மனப்புழுக்கம் நிறைந்த ஆட்சி நடக்கும்போது, தன்னுடைய பெயர் இருக்கிறது என்பதற்காக, பாடப் புத்தகத்தைத் திரும்பப் பெறுகிறார்கள் என்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.விவசாயிகள் பிரச்சினையில் அ.தி.மு.க. அரசு அலட்சியத்தோடும், பாராமுகத்தோடும் நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்த கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியுள்ளதாவது...தற்போது நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு 1,360 ரூபாயாக உள்ளது. இதனைக் குவிண்டாலுக்கு 50 ரூபாய் என்று உயர்த்தி, இந்த ஆண்டுக்கான விலையாக 1,410 ரூபாய் என்று வழங்க, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டும் "கரீப்" பருவத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 50 ரூபாய் உயர்த்தி ரூ.1,360 ஆக நிர்ணயிப்பது என்றும்; முதல் தர நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 55 ரூபாய் உயர்த்தி ரூ. 1,400 ஆக நிர்ணயிப்பது என்றும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்தது.2011ஆம் ஆண்டு மே திங்களில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு - தொடர்ந்து குறுவைச் சாகுபடி பொய்த்துப்போனது, கடும் வறட்சி, போதிய கடனுதவி அளிக்காதது, பயிர்க் காப்பீட்டில் முறைகேடுகள், வறட்சி நிவாரணத்தில் பாரபட்சம், கோமாரி நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகள் என வரிசையாகப் பிரச்சினைகள் தமிழகத்திலே உள்ள விவசாயிகள் மீது பாய்ந்து, பட்ட காலிலேயே படும் என்பதைப் போல அவர்கள் தொடர்ந்து அனுப வித்து வரும் துயரங்களுக்கு அளவே இல்லாமல் ஆகிவிட்டது.ஆளும் அ.தி.மு.க.வினரோ விவசாயிகளைத் தினமும் தேளாகக் கொட்டும் பிரச்சினைகளில் அலட்சியத்தோடும், பாராமுகத்தோடும் நடந்து கொள்கிறார்கள்.வயலை உழவு செய்யும் டிராக்டர், நடவு செய்ய மற்றும் அறுவடை செய்யப் பயன்படும் இயந்திரங்களுக்கு கூடுதல் வாடகை கேட்கிறார்கள். கேட்டால் டீசல் விலை ஏற்றம் என்கிறார்கள்.இடுபொருள்களான விதை நெல், உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உள்ளது. விவசாயம் செய்வதற்கான செலவுகளும், வேளாண் இடு பொருள்களின் விலையும் மிகவும் அதிகமாகிவிட்ட இந்த நிலையில்தான் நெல்லுக்குக் கட்டுப்படி யாகக்கூடிய விலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் விவசாயிகள் மத்தியிலே ஏற்பட்டுள்ளது.நெல் பயிரிடும் விவசாயிகள் மற்றும் கரும்பு விவசாயிகளின் சிரமங்களை உணர்ந்து தி.மு.கழகப் பொதுக் குழுவிலே கடந்த ஆண்டே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக, "இன்றைய விலைவாசி உயர்வு, இடுபொருள்கள் விலை உயர்வு மற்றும் வேளாண்மைச் செலவினங்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப, நெல் குவிண்டால் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 2,000 ரூபாய் வழங்கிட வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனையேற்று விவசாயிகளுக்கு கட்டுப்படியாகக் கூடிய வகையில், உற்பத்திச் செலவை விடக் கூடுதலாக கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 2,000 ரூபாய்க்குக் குறையாமல் நிர்ணயித்து வழங்கிட இந்த அரசு முன்வர வேண்டு"மென்று; அப்போதே தீர்மானத்தை நிறைவேற்றினோம்.மத்திய அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலை குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.வும், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரெங்கநாதனும், அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியனும் அறிக்கை கொடுத்துள்ளார்கள்.குவிண்டாலுக்கு ரூ. 2,500 ரூபாய் வழங்க வேண்டுமென்றும், தமிழக அரசாவது விவசாயிகளின் நலனைக் கருதி குவிண்டாலுக்கு 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை உயர்த்தி அளிக்க வேண்டு மென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதுவரை விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் செய்யாத அ.தி.மு.க. அரசு, இப்போதாவது மனமிறங்கி, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளின் வேதனை உணர்வைப் புரிந்து கொண்டு, நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500 என்ற அளவிலாவது நிர்ணயிக்க வேண்டுமென்று தி.மு.கழ கத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில், விதிமுறைகளுக்கு மாறாக என்னென்ன முறைகேடுகள் நடைபெறுகின்றன என்று வார ஏடுகளில் வந்த செய்திகளையெல்லாம் தொகுத்து சில நாட்களுக்கு முன்னால் நான் விரிவாக வெளியிட்டிருந்தேன். அந்தச் செய்திகளை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில்தான் பா.ம.க. நிறுவனரின் அறிக்கையும் உள்ளது. குறிப்பாக "சேலம் மாநகரக் காவல் துறையின் மேற்கு சரகக் குற்றப் பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வரும் கணேசன் என்பவர், காலில் அடிபட்டதாகக் கூறி கடந்த பத்து நாட்களாக மருத்துவ விடுப்பில் சென்றிருக்கிறார்.வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ள அவர் தற்போது ஆர்.கே. நகர் தொகுதியில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், அ.தி.மு.க.வினருடன் இணைந்து வாக்கு சேகரித்து வருகிறார். அரசு ஊழியரான இவர் அ.தி.மு.க. கரை வேட்டி கட்டி, ஜெயலலிதா படத்தை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அ.தி.மு.க. நிர்வாகியாகவே மாறி பரப்புரை செய்கிறார்" என்று அவரது அறிக்கையில் தெரிவித் திருக்கிறார்.அந்த அதிகாரி வெள்ளை சட்டை அணிந்து ஆர்.கே. நகர் பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும், அவருடைய புகைப்படம் "முரசொலி" நாளிதழிலேயே வெளிவந்துள்ளது. தேர்தல் ஆணையம் இதுபற்றி விசாரித்தறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, அரசு அலுவலர்களுக்கான நடத்தை விதிமுறைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.ஜெயலலிதா 345 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்ததாக அரசு சார்பில் செய்திக் குறிப்பு வெளியிட்டிருக்கிறது. அந்தப் பேருந்துகள் எல்லாம் புதிதாக அரசுக்கு வந்தவை அல்ல. அவை அரசின் போக்குவரத்துக் கழகத்தின் பொறுப்புக்கு வந்து பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைத்து எத்தனையோ நாட்கள் ஆகின்றன. ஆனாலும் அந்தப் பேருந்துகள் எல்லாம் பொதுமக்களின் போக்குவரத்துக்குக் கொண்டு வரப்படாமல் கிடப்பதாகவும், அதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு என்றும் ஏற்கனவே செய்திகள் வந்துவிட்டன. அரசுக்குத்தானே இழப்பு; பொதுமக்க ளுக்குத்தானே வசதிக் குறைவு; அதனால் எல்லாம் எங்களுக்கென்ன என்றுதான் ஆட்சியாளர்கள் பதில் கூறுவார்கள்!பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் இருந்த எனது பெயரை நீக்க அ.தி.மு.க. அரசு நட வடிக்கை எடுத்திருப்பதற்காக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இவ்வாறு செய்வது அ.தி.மு.க. ஆட்சியினருக்கு கை வந்த கலை. சீப்பை ஒளித்து வைப்பதைப் போன்ற இச்செயல் முதல் முறையும் அல்ல. ஆட்சிக்கு வந்தவுடனேயே அரசின் சமூக நலத் திட்டங்களில் ஒன்றுக்கு வைக்கப்பட்டிருந்த என் அன்னையார் பெயரை நீக்கி நிம்மதி அடைந்த ஆட்சிதான் இது! ப்ளஸ் 1 மாணவர்களின் பொருளியல் பாடப் புத்தகத்தில், அவர்களின் பாடப் பகுதிகளிலே கூட அல்ல, அந்தப் புத்தகத்தின் அணிந்துரையில் எனக்கும், அமைச்சராக இருந்த தம்பி தங்கம் தென்னரசுக்கும், அரசு அதிகாரி களுக்கும் நன்றி கூறியிருக்கிறார்கள். அது இருக்கக் கூடாது என்றுதான், மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்ட நிலையில், மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அந்தப் புத்தகங்களைத் திரும்பப் பெற்று வருகிறார்களாம். கடந்த மூன்றாண்டுகளாக இந்தப் புத்தகங்கள்தான் விநியோகிக்கப்பட்டு மாணவர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அணிந்துரையில் எங்கள் பெயர் இருப்பது, சில ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் தெரிந்ததாம்! எப்படிப்பட்ட ஆட்சி தமிழகத்திலே நடைபெறுகிறது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்! தி.மு. கழக ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற்காக, புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தையே மருத்துவமனையாக மாற்றியவர்கள் அல்லவா? சமச்சீர் கல்வித் திட்டத்திற்கே மூடு விழா நடத்த முயன்றவர்கள் அல்லவா? நீதிமன்றம் கூறிய பிறகும், மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியவர்கள் அல்லவா?"டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேட்டில் ஓர் செய்தி! அ.தி.மு.க. அரசின் கல்வித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் செவ்வாய்க் கிழமை மாலையில், மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு ப்ளஸ் 1 வகுப்பிற்கான பொருளா தார இயல் புத்தகத்தைத் திரும்பப் பெறுமாறு கூறியதற்குப் பிறகு, மற்ற புத்தகங்களிலும் இது போன்று என் பெயர் இருக்கிறதா என்று சோதனையிட்ட போது சரித்திரப் பாடப் புத்தகத்திலும் இருந்தது தெரிய வந்துள்ளது. இரண்டரை லட்சம் பொருளாதார இயல் பாடப் புத்தகங்கள் திரும்பப் பெறப்பட் டுள்ளன. சரித்திரப் புத்தகங்கள் இதுவரை 70 ஆயிரம் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாம்."டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேடு மேலும் கூறும்போது, அந்தப் புத்தகங்களில் அணிந்துரை நான் முதல்வராக இருந்த போது எழுதப்பட்டது என்றும், ஆனால் நான்கு ஆண்டுகளாக 2011ஆம் ஆண்டு முதலே அந்தப் புத்தகங்கள்தான் மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும் தெரிவித் திருக்கிறது.எனவே மனப்புழுக்கம் நிறைந்த இப்படிப்பட்ட ஆட்சி நடக்கும்போது, என்னுடைய பெயர் இருக்கிறது என்பதற்காக, அந்தப் புத்தகத்தைத் திரும்பப் பெறுகிறார்கள் என்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.இந்த உடன்குடி மின் திட்டம் பற்றி பல முறை பேசப்பட்டு விட்டது. தி.மு.கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்ட இந்த உடன்குடி மின் திட்டத்தை 2012ஆம் ஆண்டு ரத்து செய்து விட்டு, தமிழக மின் வாரியம் மட்டும் தனித்தே அந்தத் திட்டத்தைத் தொடங்கப்போவதாகவும், 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் அமைக்கப்படும் என்றும் ஜெயலலிதா 24-2-2012 அன்று அறிவித்தார்.இதற்கான டெண்டர் விடும் பணிகள் 2013ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டன. 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொழில் நுட்பப் புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்டதில், சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனமும், "பெல்" நிறுவனமும் தேர்ந்தெடுக்கப்பட்டன. தொழில் நுட்பப் புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் விலைப்புள்ளி ஒப்பந்தம் திறக்கப்படவேண்டும். ஆனால் நீண்ட இழுபறிக்குப் பின் 2014ஆம் ஆண்டு நவம்பரில்தான் விலைப் புள்ளி திறக்கப்பட்டது.ஆனால் அதற்குப் பிறகும் முடிவெடுக்காமல், இந்த ஆண்டு மார்ச் திங்களில், அந்த டெண்டரில் ஏதோ குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, அந்த டெண்டரை மூன்றாண்டுகளுக்குப் பிறகு ரத்து செய்தார்கள். புதிய டெண்டரைக் கோரிப் பெற்று, அந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று சொன்னார்கள். ஆனால் கடந்த முறை அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் கோரிய போது, விண்ணப்பித்த சீன நிறுவனக் குழுமத்தினர் தங்களுடைய டெண்டரை ரத்து செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டார்கள்.17-6-2015 அன்று வந்த செய்தியில், "தூத்துக்குடி மாவட்டத்தில், உடன்குடியில், தலா, 660 மெகாவாட் திறனுடன் இரண்டு அலகுகள் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான டெண்டர் கோரப் பட்டது. இந்த டெண்டரில் பாரத கனரக மின் நிறுவனமான "பெல்", மற்றும் சீன-இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆகியவை கலந்து கொண்டன. "பெல்" நிறுவனத்தை விட, குறைவான தொகையை, சீன நிறுவனம் குறிப்பிட் டிருந்தது.ஆனால் அந்த நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குவதற்குப் பதில், அந்த நடவடிக்கையை ரத்து செய்து, தமிழக மின் வாரியம் உத்தரவிட்டது. இதற்கான உத்தரவு கடந்த மார்ச்சில் பிறப்பிக்கப் பட்டது. தொழில் நுட்பக் குறைபாடுகள் இருப்பதால், இரு நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்வதாகக் கூறப்பட்டது. மின் வாரியத்தின் இந்த முடிவை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில், சீன நிறுவனம், மனு தாக்கல் செய்தது. இந்த மனு நிலுவையிலே இருக்கும்போதே, உடன்குடி அனல் மின் நிலையத் திட்டம் தொடர்பாக வேறொரு டெண்டரை மின் வாரியம் கோரியது. அதில் "பெல்" நிறுவனம் மட்டுமே கலந்து கொண்டது.அதைத் தொடர்ந்து சீன நிறுவனம், நீதிமன்றத்தில் டெண்டர் விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் மின் வாரியத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று இடைக்கால மனுவினைத் தாக்கல் செய்தது. அதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயணன் அவர்கள், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை, புதிய டெண்டருக்கான ஒப்பந்தப் புள்ளியைத் திறக்கக்கூடாது என்று மின் வாரியத்திற்கு தடை விதித்திருக்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது.இப்படிப்பட்ட "திரிசங்கு" நிலையில்தான் உடன்குடி மின் திட்டம் உள்ளது. எப்படியாவது உடன்குடி மின் திட்டப் பணியை, ஏதோ உள் நோக்கத்தோடு, "பெல்" நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்பதில் அ.தி.மு.க. அரசு தீவிரமாக இருக்கிறது, அது ஏன் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. யாராவது அமைச்சரின் மகனுக்கோ அல்லது மூத்த அதிகாரி ஒருவரின் மருமகனுக்கோ எப்படியாவது சலுகை காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் திட்டம் இழுபறியில் இருப்பதாகக் கூறப்படுகிறதே; அதுதான் உண்மையா?இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels