வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



29/05/2015

வாட்சாப், எஸ்.எம்.எஸ், பேஸ்புக், டுவிட்டரில் ஒரு வேடிக்கையான செய்தி படித்தேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திருவள்ளூரில் உள்ள ஐ.சி.எம்.ஆர். வளாகம் அருகே மாவட்ட செயலாளர் நாசர் தலைமையில் வியாழக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

தமிழகத்திலே ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்று உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும் அதுவும் அண்மையிலேயே நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.  

என்ன தீர்ப்பு என்றால் அம்மையார் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு அந்த வழக்கிலே பலருக்கு தண்டனை கிடைத்தது.  சிறப்பு நீதிமன்றத்திலே நான்காண்டு கால சிறை தண்டனை 100 கோடி அபராதம் என்ற நிலையிலே தண்டனை கிடைத்தது.  கிடைத்ததற்கு பிறகு அவர் சிறையிலே அடைக்கப்பட்டார். அடைக்கப்பட்ட சில நாட்களில் உடனடியாக அவர் ஜாமீனில் வெளிவந்தார். ஜாமீனில் வெளிவந்தது மட்டுமல்ல இப்போது விடுதலையாகியும் வெளிவந்திருக்கிறார். 

எப்படி அவருக்கு ஜாமீன் கிடைத்தது? எப்படி அவர் அந்த விடுதலையை பெற்றார்? எப்படி அந்த விடுதலையை பெற்றார் என்று சொல்வதற்கு பதில் எப்படி அந்த விடுதலையை வாங்கினார்? என்று இன்று மக்களிடையே பேசப்படுகிற செய்திகளாக நீதிபதி தந்த தீர்ப்பு உள்ள குளறுபடிகள், குழப்பங்களே விமர்சனங்களாக நாட்டில் வந்து கொண்டிருக்கின்றன.  

அந்த சொத்து குவிப்பு வழக்கைப் பொறுத்தவரையில் மெயின் வழக்கை எடுத்துக் கொண்டால் ஏறக்குறைய 19 ஆண்டு காலம் நடந்திருக்கிறது. 19 ஆண்டு காலம் நடந்திருக்ககூடிய அந்த வழக்கின் தீர்ப்பின் மீது அப்பீல் செய்யப்பட்டுள்ளதை பொறுத்தவரையில் வெறும் மூன்றே மாதத்தில் முடிந்திருக்கிறது. அதனுடைய மர்மம் என்ன? என்பது நிச்சயமாக உறுதியாக விரைவில் வெளிவரத் தான் போகிறது அதை தமிழ்நாட்டு மக்கள் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள இருக்கிறார்கள். 

ஆக விடுதலையாக வெளிவந்திருக்ககூடிய இந்த சொத்துகுவிப்பு வழக்கை பொறுத்தவரையில் அரசு குற்றவியல் சிறப்பு வழக்கறிஞர் திரு. ஆச்சாரியா அவர்கள் உடனடியாக உச்சநீதிமன்றத்திற்கு அப்பீலுக்கு சென்றாக வேண்டும் என்று வெளிப்படையாக அவர் அறிவிப்பை வெளியிடுகிறார், கர்நாடக அரசுக்கு பரிந்துரையும் செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் அட்வகேட் ஜென்ட்ரல் ரவிக்குமார் வர்மா அவர்கள் ஆச்சாரியா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்று ஆமோதித்து வரவேற்று அவரும் கர்நாடக மாநில அரசுக்கு அப்பீலுக்கு செல்ல வேண்டுமென்று பரிந்துரை வழங்கியிருக்கிறார். 

நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், அம்மையார் ஜெயலலிதாவைப் பொறுத்தவரையிலே அவர் பதவியிலிருந்து விலகி மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பது இது முதல்முறையல்ல ஏற்கெனவே 2001ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது. முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்கிறார்.  அப்படி பொறுப்பேற்ற நேரத்தில் அவர் மீது டான்சி வழக்கு சுமத்தப்பட்டிருந்தது.  அந்த டான்சி வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பைத் தந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது எனவே மூன்றாண்டு கால சிறைத்தண்டனை, அம்மையாருக்கு சிறப்பு நீதிமன்றத்திலே வழங்கப்படுகிறது.  தனி நீதிமன்றம் மட்டுமல்ல அதை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. அதன் பின் உச்ச நீதிமன்றத்தில் அம்மையாருக்கு விடுதலை என்று தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி தன்னுடைய தீர்ப்பிலே மிகத் தெளிவாகச் சொன்னார். அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஒரு முதலமைச்சராக இருந்திருக்க கூடியவர். அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கியிருக்கிறார். அதில் எந்த மாறுபாடும் கிடையாது, வேறுபாடும் கிடையாது. ஆனால் அதே நேரத்தில் அரசுக்குரிய அந்த இடத்தை அரசிடமே ஒப்படைக்க வேண்டும். ஆக நீங்கள் திருடியது உண்மை தான் இருந்தாலும் விடுதலை செய்கிறேன். உங்களை நான் விடுதலை செய்கிறேன் என்ற போதும் நீங்கள் முதலமைச்சராக இருந்து செய்திருக்ககூடிய தவறுகளையெல்லாம் உங்கள் மனசாட்சிக்கே நான் விட்டுவிடுகிறேன் என்று அந்த நீதிபதி சொன்னாரா, இல்லையா? இதுவரை ஜெயலலிதா அந்த மனசாட்சியுடன் பதில் சொல்லியிருக்கிறாரா? இல்லை அதேபோலத் தான் இப்போதும் விடுதலையாகியிருக்கும் உண்மை என்னவென்று ஜெயலலிதாவின் மனசாட்சிக்கே தெரியும். அதை அவர் சொல்ல வேண்டும். அதைத் தான் தமிழ்நாட்டு மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  அதற்கு அவர் தயாரா? இது தான் நம்முடைய கேள்வி. 

இந்த வழக்கு அப்பீலுக்கு செல்ல வேண்டிய வழக்கு தான் என்று பெரும்பாலான பத்திரிகைகள் ஆனந்த விகடன், டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து, மட்டுமல்லாமல் அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா, அட்வகேட் ஜெனரல் என அனைவரும் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல உச்சநீதிமன்றத்தில் இருக்ககூடிய ஒரு மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் சொல்கிறார். தொலைக் காட்சி மற்றும் பத்திரிகையில் எல்லாம் பார்த்திருப்பீர்கள். அதை தலைப்புச் செய்தியாக மாத்திரம் சொல்கிறேன். எந்த வகையில் பார்த்தாலும் ஜெயலலிதா விடுதலை செய்யப்படுகிறவர் அல்ல. நீதித்துறையே குற்றவாளியாக்கி விட்டு தப்பி சென்றவர் ஜெயலலிதா என்று நான் சொல்லவில்லை இதற்கு முன் அவருடைய வழக்கிற்கே அப்பியர் ஆன மூத்த வழக்கறிஞர் ராஜீவ்தவான் சொல்கிறார். 

அது மட்டுமல்ல அரசியல் கட்சித் தலைவர்கள் சொல்வதையும் பார்ப்போம். எதிர்க்கட்சித் தலைவர் நண்பர் விஜயகாந்த் சொல்கிறார், தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே எதிர்பார்த்திருந்த ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த எதிர்பாராத தீர்ப்பு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக நீதிக்கு தலைவணங்குவோம். ஆனால் இன்று நீதியே தலைகுனிந்து நிற்கிறது என்கிறார். ம.தி.மு.க வின் பொதுச் செயலாளர் வைகோ ஒரே வரியில் சொன்னார் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன நீதிதேவதையின் மயக்கம் என்ற சொற்றொடர் தான் இந்த தீர்ப்பில் நான் பார்த்தேன் என்கிறார். பா.ம.க. நிறுவனர் மதிப்புக்குரிய ராமதாஸ் அவர்கள் நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் எதுவுமே ஏற்று ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில் இல்லை. பல குளறுபடிகள் குழப்பங்கள் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலமாக குற்றவாளியா இல்லையா என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்று தெளிவாக கூறினார்.  

அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் திரு ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாதங்கள் எதுவுமே விசாரிக்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது என்கிறார். அதே போல காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் திரு ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் அவர்கள் தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும், திரு. குமாரசாமி வழங்கிய தீர்ப்புக்கும் உள்ள வித்தியாசம் மடுவுக்கும், மலைக்கும் உள்ள வித்தியாசம். எனவே மேல்முறையீடு தேவை என்று தெளிவாக கேட்டிருக்கிறார். 

இதே அரசு தரப்பு வழக்கறிஞர் திரு. ஆச்சாரியா சொல்கிறார், என்னுடைய 58 ஆண்டு கால சட்ட அனுபவத்திலேயே இப்படி ஒரு தீர்ப்பை பார்த்ததேயில்லை. அரசு தரப்பின் வாதங்களை கேட்காமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டது இதுவே முதல் முறை. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒருதலைபட்சமானது. ஆகவே கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்கிறார். 

இப்பொழுதெல்லாம் கையில் இருக்கும் செல்போனிலே வாட்சாப், எஸ்.எம்.எஸ், பேஸ்புக், டுவிட்டர் என்று எல்லா செய்திகளும் அதிலே வருகிறது. அதில் ஒரு வேடிக்கையான செய்தி படித்தேன். ஒரு பெரிய பங்களாவில் இருக்கும் வீட்டுக்காரருக்கு முயல் கறி சாப்பிட வேண்டுமென்ற ஆசை. அந்த முயல் கறியை சாப்பிடுவதற்காக, அவர் வீட்டின் வேலை செய்யும் சமையல்காரியை கூப்பிட்டு தோட்டத்தில் இருக்கும் முயல் ஒன்றை அடித்து சமைத்து கொண்டு வர சொல்லியிருக்கிறார். அந்த சமையல்காரியும் முயலை தேடி அடித்து சமையல் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் சமையல் காரிக்கு ஒரு ஆசை இந்த முயலை நாமும் சுவைத்துப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டு முயலின் ஒரு காலை எடுத்து சுவைத்துப் பார்த்திருக்கிறார். மிச்சம் இருந்த மூன்று காலை எடுத்து வந்து வீட்டு ஏஜமானுக்கு பரிமாறியிருக்கிறாள்.  

அப்போது எஜமானார் முயலுக்கு நான்கு காலாயிற்றே மூன்று கால் தான் உள்ளது என்று கேட்டதற்கு சமையல்காரி சொல்லியிருக்கிறார் மூன்று கால் தான் இருந்தது. நான் புடிச்ச முயலுக்கு மூன்று கால் தான் என்று சொன்னவுடன் எஜமானுக்கு கோபம் வந்துவிட்டது.  உடனே அந்த ஊர் பெரியவர் குன்ஹா என்பவரிடம் இது பஞ்சாயத்திற்கு செல்கிறது. அந்த பஞ்சாயத்தில் சமையல்காரி குற்றவாளி என்று தெரிந்தவுடன் அந்த ஊரில் இருப்பவர்களெல்லாம் அவளை திருடிவிட்டதாக என்று சொல்கிறார்கள். 

இந்த தீர்ப்பை அந்த பெண்ணால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே என்ன செய்கிறாள் அந்த ஊர் நாட்டாமையிடம் செல்கிறாள் அவர் பெயர் சாமி. அந்த நாட்டாமை விசாரித்துப் பார்த்து முயலுக்கு நான்கு கால் இல்லை மூன்று கால் தான் என்று சொல்லிவிடுகிறார். உடனே அந்த பெண்ணின் உறவினர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட தொடங்கிவிடுகிறார்கள். அந்த நாட்டாமை சாமி சொன்ன கணக்கு அடுத்த நாள் முழுமையாக வந்திருக்கிறது, தீர்ப்பு சொன்ன நாட்டாமை  முயலுக்கு முன்பக்கம் இரண்டு கால் பின் பக்கம் இரண்டு கால் ஆக கூட்டினால் மூணு கால் தான். சிலர் வேடிக்கையாக முன்பு சொல்வதுண்டு ஏமாத்துகிற கணக்கு காந்தி கணக்கு என்பார்கள் இப்போது எல்லாம் தப்பா போடுகிற கணக்கு சாமி கணக்கு. இது எல்லாம் வாட்ச் ஆபில் எனக்கு வந்தது. ஆக முயலுக்கு மூன்று காலா, நான்கு காலா? நாட்டாமை சொன்னது சரியா, தவறா? இதைத் தான் நான் உங்களிடம் கேட்கிறேன். இந்த தீர்ப்பு நியாயமான தீர்ப்பா? நீங்கள் புரிந்து கொண்டால் சரி. 

சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் நீதிபதி குமாரசாமி என்ன சொன்னார்?  ஜெயலலிதா தரப்பைப் பார்த்து 35 மார்க் தான் வாங்கியிருக்கிறீர்கள் என்றார். அதைப் பார்த்து தான் தலைவர் கலைஞர் அவர்கள் கேட்டார் 65 மார்க் வாங்கியவர்களை பெயிலாக்கி விட்டு, 35 மார்க் வாங்கியவர்களை பாஸ்ஸாக்கி விட்டீர்களே? என்று ஆனால் நான் இப்போது நின்று கொண்டிருப்பது நீதிமன்றமல்ல உங்கள் மன்றம். மக்கள் மன்றம். 

நீதிமன்ற தீர்ப்புக்கு 90 நாட்களில் அப்பீலுக்கு போகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் 2011ல் நீங்கள் அளித்த தீர்ப்புக்கு ஐந்து வருடங்களுக்கு அப்பீலே கிடையாது. இப்போது நான்கு வருடம் தான் முடிந்திருக்கிறது. இன்னும் ஒரு வருடம் காத்துக் கொண்டு தான் இருக்க வேண்டும். கொடுமைகளை அனுபவித்து தான் தீர வேண்டும் இருந்தாலும் முன்கூட்டியே நான் உங்களிடத்தில் அப்பீலுக்காக வந்திருக்கிறேன் என்பதை மட்டும் நீங்கள் மனதிலே பதியவைத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். 

இந்த மாவட்டத்தின் வளர்ச்சியை பற்றி இணையதளத்தில் சில புள்ளி விவரங்களை சொல்லியிருக்கிறார்கள். அ.தி.மு.க. பொறுப்பேற்று இந்த நான்காண்டு காலத்தில் 2-லிருந்து, 18 வயதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1995. குறைதீர்ப்பதற்காக அம்மா திட்டம் என்றொரு திட்டம் இருக்கிறது. எல்லாம் அம்மாதான் இப்போது. ஏனெனில் எல்லாம் சும்மா கொடுக்கிறார்களே அதனால் அம்மா திட்டம். அதில் நிலுவையில் இருக்கக்கூடிய எண்ணிக்கை 1,10,000. இம்மாவட்டத்தின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் பட்டியல் 1,71,349 பேர். கொலை, கொள்ளை, கற்பழிப்பை பற்றி கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை மாநகர பேருந்துகள் வந்து நிற்பதற்கு 15 ஏக்கரில் பேருந்து நிலையம் அமைக்க தி.மு.க. ஆட்சியில் இடத்தை தேர்வு செய்து வழங்கினோம். உடனடியாக 23 கோடி ரூபாய் தொகை ஒதுக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து இந்த நான்காண்டு காலத்தில் எந்த பணியும் நடக்கவில்லை, அந்த திட்டம் நிறைவேற்றப்பட எந்த சூழலும் இல்லை. 

தி.மு.க ஆட்சி காலத்தில் நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு 75 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டன. அதன் பின்னர் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மீதமுள்ள 25 சதவிகித பணிகளை முடிக்க வக்கில்லாத, வகையில்லாத, திராணியில்லாத ஆட்சி தான் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  
கடந்த 23-ஆம் தேதி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் எப்படி பதவி ஏற்றார் என்பதை நீங்களெல்லாம் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். இந்தப் பக்கம் பதினாலு பேர், அந்தப் பக்கம் பதினாலு பேர் நின்றுகொண்டு பஜனை பாடுகிறார்கள். நான் பக்த பெருமக்களை சொல்வதாக யாரும் கருதிட கூடாது. ஒரு உதாரணத்துக்காக சொல்கிறேன். 
 ….
ஆக அந்த நிலையிலேயே ஆகு ஆகு என்று கோரஸ் பாடி அந்த பதவி ஏற்பு நடந்தது. எவ்வளவு வேதனை. தேசியகீதம் பாதியாக குறைக்கப்பட்டு அதை அவமதித்து பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். நான் கேட்கிறேன் 76 ஆயிரம் கோடி முதலீட்டில் தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவோம், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவோம் என்று அறிவித்தீர்களே அதற்காக 100 கோடி ரூபாய் செலவிட்டிர்களே இதுவரை நான்காண்டுகளில் மாநாடு நடந்ததா? மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தலைவர் கலைஞர் முதல்வராகவும் நான் துணை முதல்வராகவும் இருந்தபோது தலைவர் என்னிடம் தொழிற்துறைப் பொறுப்பை அளித்திருந்தார்கள்.  அப்போது வெளிநாட்டு முதலீடுகள் எந்த அளவுக்கு வந்து சேர்ந்தன. எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. அதன் மூலமாக எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தியாவிலேயே தொழிற்துறை முதலிடத்திற்கு வரக்கூடிய சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்தோம். ஆனால் இன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் முதல் இடத்திற்கு வந்த தொழில்துறை கடைசி இடத்திற்கு வந்திருக்கிறது என்றால் அதைவிட வெட்கக்கேடு உண்டா? தமிழ்நாட்டிற்கு தி.மு.க. ஆட்சி நடைபெற்ற நேரத்தில் டெண்டர் விடுவோம். பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற பல்வேறு துறைகளில் பணிகள் வரும் போது ஒப்பந்ததாரர்கள் அழைக்கப்படுவார்கள். இதற்கு டெண்டர் விடுவோம். அந்த டெண்டர்களில் ஏதேனும் தவறுகள் நடந்திருந்தால் அப்படி எங்கையாவது தவறுகள் நடந்தால் கூட முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் நடவடிக்கை எடுத்தார். ஆனால் இன்றைக்கு என்ன நடந்தது. உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் நான் சொல்கிறேன். 

நம்முடைய ஆட்சிக் காலத்தில் ரேசன் கார்டு இருந்தால்போதும் அத்தனை குடும்பங்களுக்கும் கலர் டி.வி. தந்தோம். ஆனால் இந்த ஆட்சியில் அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவது போதாது என்று அதிகாரிகளை விட்டு லஞ்சம் வாங்கச் சொல்வது ஆட்சி மாற்றம் அடிக்கடி ஏற்படுவதுண்டு, அப்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நாம் ஆட்சிக்கு வந்தால், அது அமைச்சர்களாக இருந்தாலும் சரி, அதிகாரிகளாக இருந்தாலும் யாரையும் தவறு செய்ய தலைவர் கலைஞர் அனுமதிக்கமாட்டார். எனவே, தப்பு செய்யும் அதிகாரிகளுக்கு  நாளை தி.மு.க ஆட்சி வந்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அச்சம் உண்டு. ஆளும் கட்சியின் அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் பயந்து முத்துகுமாரசாமி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறார். அப்படிப்பட்ட கொடூரங்கள் நம் நாட்டிலே நடக்கின்றன. 

வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை, அதைத்தொடர்ந்து திருச்சியில் மருத்துவ அதிகாரி நேரு தற்கொலை முயற்சி, சென்னையில் ரேசன் கடை ஊழியர் தற்கொலை, திருவாரூரில் இஞ்னியர் தற்கொலை என தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. 

அது மட்டுமல்லாமல் பொதுப்பணித்துறையில், உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர் விடுகிற விஷயத்திலும் லஞ்சம். அந்த டெண்டர்கள் கூட அ.தி.மு.க.காரர்களுக்கு தான் செல்கிறது.  அப்படி டெண்டர் விடுகிற சமயத்தில் அவர்களுக்குள்ளேயே சண்டை வந்துவிடுகிறது.

தாதுமணல் கொள்ளையில் 1லட்சம் கோடி ஊழல். இது குறித்து விசாரணை நடத்தி முதல்வரிடமே அறிக்கை தந்தாரே ஐ.ஏ.எஸ். அதிகாரி பேடி அந்த அறிக்கை சட்டமன்றத்திலோ, மக்கள் மன்றத்திலோ சமர்ப்பிக்கபட்டதா என்றால் இல்லை. கிரானைட் குவாரியிலே 14 ஆயிரம் கோடி ஊழல். அதை விசாரித்து கொண்டிருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு கொலை மிரட்டல். பருப்பு வாங்குவதில் ஆண்டுக்கு 110 கோடி ரூபாய் ஊழல். முட்டை வாங்குவதில் ஆண்டுக்கு 97 கோடி ரூபாய் ஊழல். ஆவின் பால் கலப்பட ஊழல். இவற்றையெல்லாம் சொன்னால் வழக்குப் போடுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் இதற்கெல்லாம் கவலைப்படவில்லை. பொடாவை பார்த்தோம், குண்டர் சட்டத்தை பார்த்தோம். தி.மு.கழகத்தினர் பனங்காட்டு நரி, நாங்கள் இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

No comments:

Post a Comment


Labels