வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



17/01/2013

                     குமரி திருவள்ளுவர் சிலை கருணாநிதி பதில்


சென்னை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைப்பதில் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் பங்களிப்பை தாம் ஒருபோதும் மூடி மறைக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தேனி அருகே பென்னிகுவிக் மணிமண்டபத்தை திறந்து வைத்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, குமரி திருவள்ளுவர் சிலை உருவாக்கத்தில் அதிமுகவின் பங்களிப்பை கருணாநிதி மறைப்பதாகவும் தாமே எல்லாவற்றுக்குக் காரணம்போல அவர் பேசிவருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளித்து கருணாநிதி வெளியிட்டிருக்கும் நீண்ட விளக்க அறிக்கை:
திருவள்ளுவர் சிலை பராமரிப்பில் கருணாநிதியை விட எனக்கு அதிக அக்கறை உண்டு' என்று முதல்வர் ஜெயலலிதா பென்னிகுவிக் நினைவு மண்டபத் திறப்பு விழாவில் திருவாய் மலர்ந்திருக்கிறார். பெரியார் அணையைக் கட்டிய பொறியாளர் பென்னி குவிக்கின் நினைவினைப் போற்றும் வகையில் அவரது சிலையினை தி.மு.க. ஆட்சியிலேயே 15-6-2000 அன்று மதுரை பொதுப்பணித் துறை வளாகத்தில் நான் திறந்துவைத்து, அந்தச் சிலை இன்றளவும் அங்கேதான் உள்ளது. அந்தப் பொறியாளர் பென்னி குவிக்குத்தான் இப்போது மீண்டும் மணிமண்டபம் எழுப்பியிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆரின் பங்கு
தி.மு.கழக ஆட்சியில் வள்ளுவருக்கு சென்னையிலே கோட்டம் எழுப்பியது மட்டும் போதாது என்று 31-12-1975 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே குமரி முனையில் வள்ளுவர் சிலை ஒன்றினை வைப்பதென முதன்முதலாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால் முடிவெடுத்த ஒரு மாதத்திற்குள்ளேயே தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்ட காரணத்தால், அது உடனடியாக நிறைவேற்றப்பட வில்லை. பிறகு எம்.ஜி.ஆர். ஆட்சியிலே இருந்தபோது அதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும், அது செயல்வடிவம் பெறவில்லை. இந்தச் செய்தியை நான் மூடி மறைத்ததாக ஜெயலலிதா பேசியிருக்கிறார்.ஏற்கனவே நான் பல முறை இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.
அக்கறையில்லாத ஜெயலலிதா
தற்போது வள்ளுவர் சிலை பராமரிப்பில் தனக்கு அதிக அக்கறை என்று சொல்லிக்கொள்ளும் ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது உண்மையிலேயே அக்கறை காட்டியிருந்தால், ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட சிலை நிர்மாணிக்கும் பணியை நிறைவேற்றி முடித்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெற வில்லை.பின்னர் 1996-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மலர்ந்தவுடன் சுமார் பத்து கோடி ரூபாய் செலவில் சிலை அமைத்திடும் பணியை கணபதி ஸ்தபதி மற்றும் அவரது குழுவினரின் சீரிய முயற்சியோடு விரைந்து நிறைவேற்றி 1999-ம் ஆண்டு டிசம்பர் 31, 2000-ம் ஆண்டு ஜனவரி 1 ஆகிய இரு நாட்களில் சிலை திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளுவர் சிலை பராமரிப்பில் என்னைவிட தனக்கு அதிக அக்கறை உண்டு என்று ஜெயலலிதா எனக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆனால் 2001-ம் ஆண்டு மே திங்களில் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்திலே ஏற்பட்ட பிறகு, தி.மு.க. ஆட்சியினால் இந்தச்சிலை வைக்கப்பட்டது என்பதால் இந்தச் சிலையினைப் பராமரிக்கும் பணியினை அப்போதே ஜெயலலிதா அரசு கைவிட்டுவிட்டது. குமரி முனையில் நிறுத்தப்பட்டுள்ள வள்ளுவரின் சிலைக்குக் கடல்காற்றினால் மெல்ல மெல்ல ஏற்படும் சேதாரத்தை நிரந்தர மாகத்தடுத்திட ஆண்டுதோறும் ரசாயனக் கலவை பூசுகிற பராமரிப்புப் பணியைத் தொடர்ந்துநடத்திட இந்த அரசு முன் வந்தாலே போதுமென வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று 2003-ம் ஆண்டிலேயே எழுதினேன்.
மவுனம் சாதித்த அதிமுக அரசு
திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததாகவும்; ‘‘2011-ம் ஆண்டு ஆட்சி மாறிய பிறகு ஒன்றரை ஆண்டு காலமாக இந்த ரசாயனக் கலவை பூசப்படவில்லை என்று கருணாநிதி கூறுவது விஷமத்தனமானது'' என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார். ஒருபத்திரிகை 31-12-2012 அன்று அரைப்பக்கத்திற்கு ‘‘உப்புக் காற்றால் சேதமடையும் திருவள்ளுவர் சிலை'' என்று எழுதியவுடனேயே, அதை ஏன் மறுக்கவில்லை? அரசின் சார்பில் அடுத்த நாளே அந்த செய்தியை மறுத்து, பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்திருந்தால், தி.மு.கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நாம் அறிவிக்கவேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காதே!
திருக்குறளை அழிச்சது யாரு?
அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருக்குறளை அழித்துவிட்டு, என்னுடைய வாசகங்களை எழுதச் செய்தேன் என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார். 1967-ல் அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றவுடன், தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பேருந்துகளில் எல்லாம் திருவள்ளுவரின் படத்தை அமைத்து, திருக்குறளையும் பொறிக்கச் செய்தவனே நான் தான். தி.மு.க. அரசு பிறப்பித்த ஆணையின்படி தான், 1971-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் நாட்குறிப்பிலும், 1972-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும், திருவள்ளுவர் ஆண்டு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளுவர் விருதுக்கான தொகையை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் 10 ஆயிரம் ரூபாய் என்பதற்கு மாறாக, 20 ஆயிரம் ரூபாயாகவும், 1998-ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயாகவும் உயர்த்தினேன் என்பதை மறைத்து விட்டு, திசைதிருப்பும் வகையில் குற்றஞ் சாட்டியிருக்கிறார் ஜெயலலிதா.சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்களில் தி.மு.க. ஆட்சியில் அச்சிடப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்தையே ‘‘ஸ்டிக்கர்'' ஒட்டி மறைத்தவர் ஜெயலலிதா.இறுதியாக அவர் யாரோ ஒருவர் சொல்லிக் கொடுத்த குறளைச் சொல்லித்தான் தன் பேச்சை முடித்திருக்கிறார்.அந்தக் குறள், ‘‘பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்'' அதாவது பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந் துரைப்பார்கள் என்ற இந்த வள்ளுவரின் பொன் மொழி, என்னுடைய இந்த நீண்ட விளக்கங்களுக்குப் பிறகு, அந்தக் குறள் யாருக்குப் பொருந்தும் என்பதை தமிழ்நாட்டு மக்களும், குறளை நன்குணர்ந்த சான்றோர்களும், புலவர்களும் நன்கு உணர்வார்கள் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels