சேலம், ஏப் 8:
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 3330 கொலைகள், 1223 கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அமைதியாக உள்ளது என ஜெயலலிதா சொன்னால் அதை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை என்று சேலத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி கடந்த 5ம் தேதி கோவையில் தனது இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்கினார். நேற்று முன்தினம் திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசினார். நேற்று மாலை சேலம் போஸ் மைதானத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளர்கள் உமாராணி(சேலம்), காந்திசெல்வன்(நாமக்கல்), மணிமாறன்(கள்ளக்குறிச்சி), தாமரைச்செல்வன்(தர்மபுரி), ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார். பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:
ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் இந்த பகுதியில் போட்டியிடுகிற உமாராணி, காந்திசெல்வன், தாமரை செல்வன், மணிமாறன் ஆகியோரை ஆதரித்து சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உங்களை சந்திப்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன். சேலத்திற்கு வருவது என்றால், ஒரு தனி உற்சாகத்தோடு வந்து கொண்டிருந்த காலம் இருந்தது. வீரபாண்டி ஆறுமுகத்தை இழந்து விட்டு நான் சேலத்திற்கு வரவேண்டியிருக்கிறது என்ற வேதனையோடு தான் உற்சாகத்திற்கிடையே ஓரளவு அந்த வேதனையை சமாளித்துக்கொண்டு வந்திருக்கிறேன்.
அவரது திருமுகத்தை, வீரம் செறிந்த முகத்தை காணமுடியாவிட்டாலும் அவரால் உருவாக்கப்பட்ட நினைவு சின்னங்களாக, அடையாளமாக இருக்கும் சாலைகள், நீரோடைகள், பல்வேறு நினைவு சின்னங்களை காணும்போது சேலத்திற்கு வருகிற வழியிலே நான் கண்ட இரும்பு தொழிற்சாலைக்காக அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி இவை எல்லாம் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆர்வத்தினால் அல்லவா, அவரது உதவியால், சிந்தனையால், ஊக்கத்தால் இப்பகுதி மக்களுக்கு கிடைத்தது என்று எண்ணி பூரிப்படைகிறேன்.
இவ்வளவு தந்த வீரபாண்டி இன்னும் கொஞ்ச நாள் நம்மோடு இருந்திருக்கலாம். வீரபாண்டி இருந்திருந்தால் எனக்கு எவ்வளவு துணையாக இருந்திருக்கும் என்பதை நினைக்காமல் இல்லை. அவர் இல்லாவிட்டாலும், அவரால் உருவாக்கப்பட்ட அடலேறுகள், இளஞ்சிங்கங்கள், வாலிப பட்டாளம் அமர்ந்திருக்கின்ற காட்சியை கண்டு ஒரு வீரபாண்டி ஆறுமுகம் இல்லாவிட்டாலும், பல்லாயிரக்கணக்கான ஆறுமுகங்கள் தோன்றியிருக்கிறார்கள் என்று பெருமிதம் அடைகிறேன். அவர் இல்லை என்றாலும் பகிர்ந்துகொண்ட நட்பு, தோழமை, கொள்கைகள், சபதம் அவை அழிந்துவிடவில்லை. எப்போதும் அழியாது. வீரபாண்டி பெயர் அழியாமல் நிலைத்திருப்பது போல் அவரும், நாங்களும் சேர்ந்து விளைத்த காரியங்கள் நிலைத்து நிற்கும்.
அந்த நம்பிக்கையோடுதான் கேட்கிறேன். இந்த பகுதியிலே நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெற செய்யவேண்டும். சேலம் தான் எனக்கு கலை வாழ்க்கைக்கு அடையாளம் காட்டிய நகரம். எனவே உங்களில் ஒருவனாக என்னை கருதி திமுக வேட்பாளர்களுக்கும், நமது கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்.
கை என்னை விட்டு விட்டது. நான் யாரையும் கை விடவில்லை. என்னை யாரும் கை விடமுடியாது. கை சின்னம் என்னோடு இல்லை என்பதற்காக கை விட்டு விட்டது என்று யாரும் கருதக்கூடாது. நாடு போகும் போக்கில் மதச்சார்பின்மை என்ற வார்த்தைக்கே அர்த்தமில்லாமல் போகுமோ என்ற சூழலில், நமது அடிப்படை கொள்கைகளுக்கு சிறுபான்மையினரை பாதுகாக்க முன்வருபவர்களுக்கு யார் கை கொடுத்தாலும் அந்த ஒரு காரணத்திற்காக, . மதச்சார்பின்மைக்காக கை குலுக்கி வரவேற்போம் இதை ஒரு பிரக்ஞையாகவே சொல்ல விரும்புகிறேன். சிறுபான்மை சமுதாயத்திற்கு நாங்கள் பாதுகாப்பானவர்கள் என்று இப்போதைய ஆட்சியாளர்கள் கூறினாலும் அதை ஏற்க மக்கள் தயாராக இல்லை.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது. மூன்றாண்டில் மட்டும் 3330 கொலைகள், 1223 கொள்ளை, 921 சங்கலி பறிப்பு, 916 வழிப்பறி மோசடிகள் நடந்துள்ளன. திருச்சி மாவட்ட செயலாளர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை குற்றவாளி கண்டுபிடிக்கவில்லை. குற்றவாளி சாதாரணமாக தெருவில் நடமாடினால், குற்றவாளி கண்டுபிடிக்கமுடியாத இடத்தில் ஒளிந்து கொண்டிருந்தால் இந்த ஏற்பாட்டை செய்து ராமஜெயத்தை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கிறோம் என்று ஒப்புக்கு சப்பானி போல் செயல்பட்டால் எப்படி கண்டுபிடிக்க முடியும். சட்டம் ஒழுங்கு 3 ஆண்டு காலத்தில் படுகுழிக்கு போய் விட்டது.
மதுரையில் பொட்டு சுரேஷ் கொல்லப்பட்டு பல மாதம் ஆகிறது. இன்னும் அந்த குற்றவாளி கண்டுபிடிக்கவில்லை. பாஜவினர் அந்த பகுதியில் வரிசையாக கொல்லப்பட்டனர். ஆளும்கட்சியினர் கூட கொல்லப்பட்டனர். அதிலும் துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அமைதியாக இருக்கிறது என்றால் யார் நம்புவார்கள்.
தேசிய குற்ற ஆவண விவரப்படி, 2012ல் மட்டும் இந்தியா முழுவதும் தற்கொலை செய்தவர்கள் 1,35, 440 பேர். இதில் முதலிடத்தில் இருப்பது தமிழகம் தான். தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியில் தற்கொலையில் முதலிடம். 16,927 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். 2ம் இடத்தில் மராட்டிய மாநிலமும் , 3ம் இடத்தில் மேற்கு வங்கம் இருக்கிறது. தமிழ்நாடு தான் முதலிடம் இருக்கிறது.
சட்டம் ஒழுங்கு இந்த மாநிலத்தில்தான் காப்பாற்றப்படுகிறது என்று ஜெயலலிதா வீராப்பு பேசுகிறார். நம்மை, நம் கழகத்தை அவரோ, ஏவலாளர்களோ, திமுக வேட்பாளர்கள் எல்லாம் தவறு செய்கிறார்கள். அவர்களை நீங்கள் விரட்டி அடியுங்கள் என்று சொல்கிறார்.
திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்பதற்காக சட்டமன்ற கட்டடம் இடிக்கப்பட்டது. அண்ணா பெயரால் உருவான நூல் நிலையம், எங்கும் இல்லாத அளவுக்கு அவரது நூற்றாண்டை ஒட்டி அடிக்கல் நாட்டி நானே திறந்து வைத்தேன். இப்போது நூல் நிலையத்தையும் கிடப்பில் போட்டு நாயும், நரியும், பூச்சி புழுக்கள் நிறைந்திருக்கும் காட்சியை தான் காணுகிறோம். ஒரு ஆட்சி செய்த சாதனைகள் நல்லவை என்றால் அடுத்து வரும் ஆட்சி தொடர்ந்து செய்யவேண்டும். அது தான் ஒரு ஆட்சிக்கு அழகு. காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தில் அப்படி தான் நாங்கள் முட்டையையும் சேர்த்து வழங்கினோம். திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட எல்லா திட்டத்தையும் ஒழிப்போம் என சொல்வது எந்த வகையில் நியாயம்.
பெங்களூரில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கில் புதிய செய்தி என்னவென்றால் தேர்தல் வேலை பார்க்க செல்வதால் திரும்பி வரும் வரை வழக்கை நடக்கூடாது என ஒரு தடை சட்டப்பூர்வமாக பெறப்பட்டுள்ளது. நமக்கு புரிகிறது. துணிவுள்ள ஜெயலலிதா என்றால் யார் வேண்டுமானாலும் வழக்கை நடத்தட்டும். சந்திக்கிறேன் என கூறியிருக்கலாம்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது ஒரு ரூபாய் சம்பளம் வாங்கினார் என்றால் வாக்கு அளித்தவர்கள் வயிறு எரியாதா. அவர்கள் கோபம் சாதாரணமாகிவிடுமா. ஆத்திரம் வராதா. எவ்வளவு அக்கிரமம் நடந்திருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு, ஓட்டு எண்ணி முடிந்த பிறகு யார் வெற்றி பெற்றார்கள் என்ற கணக்கு வந்த பிறகு தெரியும்.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது ஏன் என்பது பலருக்கு தெரியும். கழக பொது செயலாளர் பேராசிரியர் வழக்கை போட்டார்கள். அந்த வழக்கின் முடிவாக தான் இந்த உண்மைகள் கிடைத்திருக்கிறது. முதல்வர் பொறுப்பை ஜெயலலிதா இல்லாத போது இருந்ததை விட 310 மடங்கு குவித்திருக்கிறார்கள். இதை இல்லை என்று மறுக்க முடியுமா.
100 வாய்தாக்கள் இதுவரை வாங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் முடிவை சந்திக்க இருக்கிறது. ஜட்ஜ்மென்ட் சொல்வது அல்ல. யூகத்தின் அடிப்படையில் சொல்கிறேன். நாட்டுக்கு இந்த உண்மைகள் தெரியவரும். அப்படி வரும் நேரத்தில் யார் இத்தனை ஆண்டு காலம் நல்லாட்சி செலுத்தினார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
தீர்ப்பு வரும் நேரத்தில், கருணாநிதி வேண்டுமென்றே பொய் சொன்னார் என்று ஜெயலலிதா கூறுவார். இதை கருணாநிதி நேருக்கு நேர் விவாதிக்க தயார். பத்திரிகைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிட்டு, அதர்மத்தை அறியாதவள், என்னை போல் நாணயமுள்ள முதல்வர் வரமுடியாது. இதுவரை வரவும் இல்லை என்றெல்லாம் ஜெயலலிதா சொல்லலாம். உண்மை தெளிவாகிவிட்டது. நல்லவர்களுக்கு வாக்களிக்கப்போகிறீர்களா அல்லது சுரண்டியவர்களுக்கு வாக்களிக்க போகிறீர்களா என்பதை தீர்மானித்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
No comments:
Post a Comment