கோவை, மார்ச் 28:
கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து நேற்று சோமனூர், பல்லடம், சூலூர் ஆகிய இடங்களில் வேன் மூலம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது:
ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறப்பதை போலீசார் மேலே பார்த்து கொண்டிருக்கும் போது, கீழே கற்பழிப்பு, கொலை, சங்கிலி பறிப்பு நடப்பதை தடுக்க முடியாமல் கோட்டை விடுகின்றனர்.
மத்தியில் மதச்சார்பற்ற கட்சியின் வேட்பாளர் பிரதமராக வர வேண்டும். திமுக தலைவர் சுட்டிக்காட்டுபவர் தான் பிரதமராக வர முடியும். அதிமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டாகியும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சிறப்பு திட்டங்களையும் கொண்டு வரவில்லை. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் 5 முறை ஆட்சி நடந்தது. பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பல்வேறு சாதனை நிகழ்த்தப்பட்டது.
சூலூர் தொகுதியில் 138 கோடி மதிப்பில் கரூர்&கோவை 3 வழிப்பாதை தரம் உயர்த்தப்பட்டது. ஒரு நபருக்கு 120 லிட்டர் குடிநீர் உத்தரவாதப்படுத்த பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று தமிழக அரசு குடிநீரை 10 ரூபாய்க்கு விற்று வருகின்றனர். இது வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. குடிநீரை விற்கும் அளவிற்கு கேவலமான ஆட்சி நடக்கிறது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க திமுக ஆட்சியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பல குடிநீர் திட்டங்களையும், கிராமங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டங்களையும் கொண்டு வந்தோம். செங்கத்துறை, குமாரபாளையம், மாதப்பூர் இணைப்பு பாலம் கொண்டு வந்தோம். சூலூர் ஊராட்சி ஒன்றிய கட்டிடம், அரசு மருத்துவமனை, அத்திக்கடவு குடிநீர் திட்டம், ரயில்வே மேம்பாலங்கள், சோமனூரில் அண்ணா பேருந்து நிலையம், வணிக வளாகம் கொண்டு வரப்பட்டது. இருகூர் முத்துக்கவுண்டன்புதூரில்
ஸி50
கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டது.
விசைத்தறியாளர்களுக்கு 500 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. பல்லடத்தில் விசைத்தறி ஜவுளி பூங்கா கொண்டு வரப்பட்டது. அதிமுக அரசு வந்தவுடன் விசைத்தறியாளர்களுக்கு வழங்கிய இலவச மின்சாரத்தை ரத்து செய்தது. தற்போது, நடந்த விசைத்தறியாளர் கூலி உயர்வு கோரிய வேலை நிறுத்தத்தை, அவர்களுக்கு உபயோகமில்லாமல் முடிவிற்கு கொண்டு வந்துள்ளனர். விசைத்தறியாளர்களுக்கு எந்த பலனும் இல்லை. பல்லடத்தை தாலுகாவாக உருவாக்கினோம். பல்லடம் நகராட்சி மற்றும் ஒன்றிய கட்டிடங்கள் கட்டினோம். வாவிபாளையத்தில் மண் பரிசோதனை நிலையம், பொங்கலூரில் குளிர்பதன கிடங்கு கொண்டு வந்தோம்.
கோவையில் மின் வெட்டு காரணமாக இம்மாவட்டத்திலுள்ள விவசாயிகள், நெசவாளர்கள், தொழில்துறையினர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முதலாளிகள் தொழிலாளியாக மாறி, வேறு மாநிலத்தில் வேலை செய்யக்கூடிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
2011 தேர்தலின் போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் மின்வெட்டு தீர்ப்பதாக கூறினார். 3 ஆண்டாகியும் தீரவில்லை.பேருந்து கட்டணத்தை 5 மடங்கு உயர்த்தினார்கள். திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து அதிகாரிகள் கட்டணத்தை உயர்த்த முன்வந்தபோது, கட்டணத்தை உயர்த்த வேண்டாம், என்று கூறினோம்.
திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முதியோர்களுக்கு ஓய்வூதிய தொகை 6 மாதமாக கொடுக்கவில்லை. ஜெயலலிதா ஒவ்வொரு கூட்டத்திலும் செய்வீர்களா...செய்வீர்களா என்று கூறி வருகிறார். ஆனால், அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன் மின்வெட்டை நீக்குவோம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம், ஒவ்வொருவருக்கும் 20 லிட்டர் தண்ணீர் கொடுப்போம், 58 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு பஸ் பாஸ் கொடுப்போம், ஒவ்வொருவருக்கும் 3 சென்ட் நிலம் கொடுப்போம், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவோம், நடமாடும் மருத்துவமனை கொண்டு வருவோம் என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதியில் கூறினீர்களே..அதையெல்லாம் செய்வீர்களா?
ஐந்தறிவு படைத்த யானையை ஜெயலலிதா தொட்டு பார்த்தபோது, அந்த யானை அவரை முட்டித்தள்ளியது. ஆறறிவு படைத்த நாம் இந்த தேர்தலில் நம்முடைய எதிர்ப்பை காட்ட வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை முடிவிற்கு கொண்டுவரும் வகையில் தேர்தல் முடிவு அமைய வேண்டும். அதற்கு திமுக வேட்பாளர் கணேஷ்குமாருக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment