வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



15/01/2014

தமிழர் திருவிழாவில் முத்தமிழின்   உரை.

நாடாளுமன்றக் கழகத்தின் குழுத் தலைவர், தம்பி டி.ஆர். பாலு இங்கே வாழ்த்திப் பேசும்போது, கனிமொழி என்ற பெயரைச் சொல்லாமல், கவிஞர், கவிஞர், கவிஞர் என்று சொன்னார். பல பேருக்கு "எந்தக் கவிஞர்"" என்று புரிந் திருக்காது. "கனிமொழி" என்ற கவிஞரைத் தான் பாலு குறிப்பிட்டார் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். காரணம், என்னுடைய இல்லத்திலே ஒரு உறுப்பினராக, இருக்கின்ற தம்பி பாலு, கனிமொழியைக் குழந்தைப் பருவத்தில் இருந்து அறிந்தவர், வளர்த்தவர், பாசம்காட்டிப் பழகியவர். அதனால் கவிஞர் என்ற பெருமையோடு, கனிமொழியை இங்கே அழைத்தார். இருந்தாலுங்கூட அதையும் மீறி நானே அதிசயத்தக்க வகையில், இன்னும் சொல்லப் போனால், பொறாமைப் படுகின்ற அளவிற்கு, கவிதைத் திறத்திலே, கற்பனைத் திறத்திலே என்னுடைய அருமைச் செல்வி, நம்முடைய கனிமொழி, சிறந்து விளங்குவதைக் காணும்போது, அந்தக் கனிமொழியைப் பெற்றெடுத்த தாய் கொண்டுள்ள மகிழ்ச்சியைப் போலவே, நானும் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வளவு பீடிகை எதற்காக என்றால், இந்த அருமையான நிகழ்ச்சி, முரசு கொட்டுவது போல், போர்ப் படைக் கிளம்புவது போல், பாசறையில் எழுகின்ற முரசத்தைப் போல, மேளதாளங்களும், தப்பட்டைகளும் முழங்கிய இந்த மேடை, நம்முடைய மனக்கண்ணிலிருந்து விலகுவதற்கு நீண்ட நாட்களாகும். அந்த அளவுக்கு நம்முடைய இதயத்திலே ஆழமாகப் பதிந்து விட்ட இந்த நிகழ்ச்சி, நாட்டுப்புறப் பாடல்கள் இந்த பாடல்களை இங்கே ஒலித்த அல்லது பாடிய கலைஞர்களால் தரப்பட்டுள்ள ஊக்கம், உற்சாகம் என்பதை நான் மறந்து விட வில்லை, நீங்களும் மறந்து விட முடியாது. இது போன்ற நிகழ்ச்சிகளை ஆண்டு தோறும் தமிழகத்தின் தெருக்களில் எல்லாம் நடத்த வேண்டும். தமிழர் மறந்து விட்ட பெருமையை, மறந்து விட்ட புகழை, மறந்து விட்ட வரலாற்றை, மறந்து விட்ட இனத்தை, இன உணர்வை - இவற்றையெல்லாம் நினைவுபடுத்துவதற்கும், நினைவு படுத்தினால் தான் எதிர்காலத்தை எழில் உடையதாக ஆக்க முடியும் என்ற அந்த நம்பிக்கையோடு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலே இது போன்ற கிராமிய நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், பாட்டு நிகழ்ச்சிகள் நடத்திட - அந்த ஒரு வழக்கத்தை உருவாக்கி, தமிழ்நாட்டின் தெருக்கள்தோறும், நம்முடைய தமிழர்களின் செவிகளிலே பழம் பாடல் பெருமையும், பழைய வரலாற்று உண்மையும் பதியத் தக்க வகையிலே இவைகள் எல்லாம் கடந்த காலத்தில் நமக்கு எழுச்சியூட்டிக் கொண்டிருந்தன.

ஆனால் இடையில் ஆட்சி மாறிய காரணத்தால், ஆட்சி மாறினால் பண்பாடும் மாற வேண்டும், கலாச்சாரமும் மாற வேண்டும் என்ற ஒரு விகல்பமான எண்ணத்தோடு சிலர் பாடுபட்டு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நாம் போற்றிப் பாராட்டிய கலைகளை எல்லாம், நம்முடைய பெருமைகளை எல்லாம் குழி தோண்டிப் புதைக்கின்ற அந்தக் காரியத்திலே ஈடுபட்டதின் காரணமாக, நம்முடைய கலையை மறந்தோம், நாகரிகத்தை மறந்தோம், பண்பாட்டை மறந்தோம், நம்முடைய விழாக்களை மறந்தோம். தைத் திங்கள் முதல் நாள் தமிழருடைய புத்தாண்டு நாள் என்பதைக் கூட ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு நினைவூட்டித் தான் நாமெல்லாம் உணரத் தலைப்பட்டோம். அதற்கு முன்பு சித்திரை முதல் நாள் புத்தாண்டு நாள். வருஷப் பிறப்பு தான் புத்தாண்டு. தமிழ்ப் புத்தாண்டு என்றால் பல பேருக்கு என்னவென்றே தெரியாது. அப்படிப்பட்ட இருள் கடலில் மூழ்கிக் கிடந்த தமிழனை தட்டி எழுப்பிய இயக்கம், திராவிடர் இயக்கம் என்பதையும், அந்தத் திராவிடர் இயக்கத்தை அடியோடும்,அடி மண்ணோடும், வேரோடும் சாய்த்தால்தான் இனி அவர்கள் முளைத்துக் கிளம்ப மாட்டார்கள் என்கிற எண்ணத்தோடு, பல பேர் பாடுபட்டு தங்களுடைய ஆற்றலையும், தங்களுடைய பெருமைகளையும், தாங்களே அழித்துக் கொண்டிருந்தோமே என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல், தங்களை அகலபாதாளத்தில் கொண்டுபோய் அவனுடைய நாகரிகத்தை, பண்பாட்டை, அனைத்தையும் சீரழித்து விட்டக் கொடுமை நடைபெற்றது, நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமையிலிருந்து தமிழன் விடுபட வேண்டுமேயானால், அவனுடைய பழம் பெருமை நிலைநாட்டப்பட வேண்டும். அவனுடைய பண்பாடு நினைவுபடுத்தப் பட வேண்டும். அது மீண்டும் போற்றப்பட வேண்டும். அப்படிப் பட்ட பண்பாட்டை நினைவுபடுத்தவும், அவனுடைய நாகரிகத்தை எடுத்துச் சொல்லவும், அவனுடைய வரலாற்றை தெருவெல்லாம் முழக்கவும், அவன் வீழ்ந்த வீரத்தை மீண்டும் புதுப்பித்திடவும் இன்றைக்கு நாம் கண்ட இந்தக் கலைஞர் களுடைய ஆற்றல், அறிவு, உழைப்பு அத்தனையும் பயன்பட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றுகின்ற வகையிலே ஒரு துளி அடையாளமாக நம்முடைய அருமைச் செல்வி திருமதி கனிமொழியினுடைய இந்த நிகழ்ச்சி அமைப்பு, மாலையிலிருந்து நான் கேட்ட இசை முழக்கம், நடன முழக்கம், முரசு முழக்கம் இவைகளையெல்லாம் செவிமடுத்த போது, நம்முடைய பழங்கால நினைவுகள் வராமல் போகவில்லை. இப்படித் தான் நம்முடைய படை வீரர்கள் எதிரிகளை விரட்டுவதற்கு, வீழ்த்துவதற்காக முழங்கியிருந்திருப்பார்கள், இப்படித் தான் அவர்கள் ஒலித்த முரசு கொட்டப்பட்டிருக்கும் என்றெல்லாம் நான் நினைத்துப் பார்த்தேன். ஏன், எப்படி நம்முடைய பண்பாடு குலைந்தது, நம்முடைய வரலாறு வீழ்ந்தது, நம்முடைய நாகரிகம் மாய்ந்தது என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது, இதே செய்திகளை வேறு மொழிக்காரர்கள், நம்மை ஆதிக்கம் செலுத்த எண்ணியவர்கள், தாங்கள் பயன்படுத்திக் கொண்டு, இந்தக் கலையின் மூலமாகவே நம்முடைய கலையை அழித்தார்கள். நம்முடைய நிலையை ஒழித் தார்கள். இதற்கு நாம் பதிலாகத் தான் இன்றைய இந்த நிகழ்ச்சியை உங்கள் முன்னிலையிலே நம்முடைய கனிமொழி அவர்களும், அவரைச் சார்ந்த நண்பர் களும் இந்தப் பகுத்தறிவு இயக்கச் சங்கத்தினரும் எடுத்துக் காட்டியிருக்கிறார் கள். முன்பெல்லாம் "புத்தாண்டு" என்றால், தை முதல் நாள் என்பதை அறியாத தமிழன் தான் இருந்தான். " தை பிறந்தால் வழி பிறக்கும் " என்று அவனுக்குச் சொல்லத் தெரியும். ஆனால் தை மாதம், தமிழனுக்கு புத்தாண்டின் தொடக்கம் என்பது அவனுக்குத் தெரியாது. அதை ஞாபகப்படுத்தி, தெரிய வைத்தது திராவிட இயக்கம் தான் என்பதை நான் இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்த நாளுக்கு நாம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எத்தனை? எத்தனை? பதில் சொல்ல வேண்டிய எதிர்ப்புக் கணைகள் எவ்வளவு? எவ்வளவு? என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்தால் எவ்வளவு மலைகளை, ஆறுகளை யெல்லாம் கடந்து, பொட்டல்காடுகளை எல்லாம் கடந்து நாம் இன்றைக்கு ஒரு நல்ல பூமிக்கு வந்திருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் நான் சொல்ல விரும்புகிறேன். இந்தப் புத்தாண்டுக்கு, இது வரையில் உள்ள பெயர் என்ன? பத்தாண்டு காலத்திற்கு முன்பு "வருஷப் பிறப்பு"" என்று தான் சொல்லப்பட்டது. "வருஷம்" என்றால் அது தமிழே அல்ல; "ஆண்டு" என்பது தான் தமிழ் என்று சொல்லித் தரவே ஒரு இயக்கம் வேண்டியிருந்தது. அந்த இயக்கத்திற்குத் தலைவராக பெரியார் தேவைப்பட்டார். அந்தப் பெரியாருக்குப் பிரதம சீடராக அண்ணா தேவைப்பட்டார். அவர்களும், அவர்கள் வழி வந்த புலவரேறுகளும், கவிஞர் பெருமக்களும் எடுத்துச் சொன்ன செய்திகள் தான் தமிழ்ப் புத்தாண்டினுடைய விவரங்கள், வரலாற்றுத் துளிகள்.

"சித்திரை" மாதம் தான், தமிழ்ப் புத்தாண்டு முதல் நாள் என்றால், ஏன் அப்படிச் சொன்னார்கள் என்றால் அதை நம்முடைய மனதிலே பதிய வைத்து, அதன் மூலமாக தங்களுடைய நாகரிகத்தை, தங்கள் கலாச்சாரத்தை, நம்முடைய உள்ளத்திலே விதைக்க வேண்டுமென்பதற்காகச் சொன்னார்கள். சித்திரையோ, வைகாசியோ, ஆனியோ, ஆடியோ எதுவும் முதல் மாதமாக வந்து போகட்டும். ஆனால் அதே நேரத்திலே அதற்காக, அதை யாரும் மறந்து விடக் கூடாது, மனதிலே அழுத்தமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சில கதைகளையும் சொல்லி வைத்தார்கள். நான் அந்தக் கதைகளுக்குள் போக விரும்பவில்லை, இந்த விழாவிலே அவைகள் தேவைப்படவில்லை.

ஆனால் அவைகளை நம்முடைய மொழியிலே உள்வாங்கிக் கொண்டு, அவற்றை நாம் நம்பி அவைகளைக் கடைப்பிடித்தால் எத்தகைய விபரீதங்கள் ஏற்படுகின்றன என்பதை மறந்து விடக் கூடும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் என்று கிழமைகளைச் சொல்லி, அந்தக் கிழமைகளுக்குத் தேதிகளையும் சொல்லி, அதாவது நாட்களையும் குறிப்பிட்டு, வாழ்ந்த தமிழன் - ஆனால் அவைகளுக் கெல்லாம் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணத்தைச் சொல்கின்ற கதைகளைக் கேட்க வேண்டியவனானான். அந்தக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, தமிழன் தன்னை மாய்த்துக் கொண்டான். தங்களை மாய்த்துக் கொண்டது மாத்திர மல்ல; அதனுடைய நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம், கலை அனைத்தையும் மாற்றாருக்கு விலை கூறி வாடகைக்கு விட்டு விட்டான். நான் கேட்கிறேன், ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்றால் நமக்குப் புரிகிறது. ஆனால் இவற்றையெல்லாம் ஒன்றாக இணைத்து, மாதம் என்று நாம் கணக்கிடும் போது, சில குழப்பங்கள் ஏற்படுகிறது. அந்த மாதங்களை எல்லாம் ஒன்றாக இணைத்து, வருஷம் என்று சொல்லும் போது, பெரும் குழப்பமே விளை கிறது. நம்முடைய ஆண்டுக் கணக்கு, மாதக் கணக்கு இவைகள் எல்லாம் வேறானது. தனிப் பண்பாட்டுக்கு உரியது. அவைகளையும் நாம் மறந்துவிட்டோம். மறந்து விட்டது மாத்திரமல்ல; அந்தப் பண்பாட்டையே இழந்து விட்டோம். அப்படி இழந்து விட்ட காரணத்தினால் தான் இங்கே நாம் அவைகளை நாடக உருவத்தில், பாட்டு வடிவத்தில், வேடங்கள் தறித்து அதன் மூலமாக "சங்கமம்" மூலமாக, சாதாரண மக்களுக்கு, கிராமப்புறத்து மக்களுக்கு, எடுத்துச் சொல்ல வேண்டிய இன்றியமையாமை நமக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. ஆண்டுக் கணக்கு 2012, 2013, 2014 என்று சொல்லும்போது, சுலபமாக இருக்கிறது. ஆங்கிலலேயனுக்கும் அதே கணக்கு தான், பிரெஞ்சுக் காரனுக்கும் அதே கணக்கு தான், வடக்கே இருப்பவனுக்கும் அதே ஆண்டுக் கணக்கு தான், தெற்கே இருக்கிற நமக்கும் அதே ஆண்டுக் கணக்கு தான். எல்லோருக்கும், அகில உலகத்திற்கு ஒரு ஆண்டுக் கணக்கு இருக்கும்போது, நாம் மாத்திரம் ஆண்டுகளுக்குப் பெயர் வைத்து, அறுபது ஆண்டுகள் என்று ஒரு கணிப்புக்கு வந்து விடுகிறோம். பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பார்பவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன, அக்ஷய என்று வடமொழியிலே சில ஆண்டுகளுக்குப் பெயர் வைத்து, அதிலே அறுபது ஆண்டுகள் முடிந்தால், அது விசேஷமான காலம், அறுபதாண்டுகள் முடிந்தால் மணி விழா கொண்டாட லாம் என்றால், நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோம். அந்த அறுபதாண்டுகள் எப்படி வந்தது என்ற ஆராய்ச்சியில் நான் ஈடுபட விரும்பவில்லை. அதற்கெல்லாம் கதைகளை யெல்லாம் சொல்லி வந்திருக்கிறார்கள். இரண்டு கடவுள்கள் - ஒரு ஆண் கடவுள், இன்னொன்றும் ஆண் கடவுள் - அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் அறுபது - அந்த அறுபது குழந்தைகளின் பெயர்கள் தான் அறுபது ஆண்டுகள் - பிரபவ என்ற ஆண்டிலே ஆரம்பித்து - அட்சய ஆண்டிலே முடியும் - முடிந்த பிறகு, அடுத்த ஆண்டு, அட்சய ஆண்டிலே பிறந்தவன், பிரபவ ஆண்டிலே பிறந்தவனுக்கு அறுபது ஆண்டுகள் சரி, ஆனால் அந்தப் பிரபவ ஆண்டிலே பிறந்து பத்தாண்டுகள் கழித்து அவன் பாலப் பருவத்திலேயே மறைந்து விட்டால், அவனுக்கு வயது என்ன? இது அந்தக் கணக்கின்படி சரிப்பட்டு வராது. ஆகவே தான் நாம் இன்றைக்கு ஆங்கில ஆண்டு என்ற கணக்கிலேயே எடுத்துக் கொண்டு, அதன்படி நம்முடைய வாழ்க்கையை, நம்முடைய ஆண்டுக் கணக்கை வகுத்திருக்கிறோம். அதை மாற்றுகின்ற முயற்சியிலே ஈடுபட்டவர்கள் தான், புதுப் புது கணக்குகளை, புராணக் கதைகளைப் புகுத்தி நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள். அப்படி அந்த ஏமாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட ஆண்டுக் கணக்கு தான் பிரபவ, விபவ என்று நான் சொன்னேனே, அந்த ஆண்டுக் கணக்கு. அதனால் தான் நம்முடைய ஆண்டுக் கணக்கை 1910, 1911, 1912, 1913 என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கணக்கு பொதுவாக உலகம் முழுவதும் சொல்லப்படுகின்ற ஆண்டுக் கணக்கு. ஆனால் தமிழர்கள் மாத்திரம் தங்கள் ஆண்டுக் கணக்கை அறுபது ஆண்டு களோடு நிறுத்தி விட்டார்கள். அதனால் தான் "அட்சய" என்ற அறுபதாவது ஆண்டோடு, ஆண்டுக் கணக்கு முடிந்து விடுகிறது. அதற்கு மேல் நாம் போவது இல்லை. அதற்கு மேலும் நாம் சென்று, நம்முடைய கணக்கைப் புரிந்து கொண்டு வெளியிட வேண்டுமென்பதற்காகத் தான், அந்த ஆண்டுக் கணக்கையே துhக்கி வெளியே போடு என்று அதைப் போட்டு விட்டு, உலகத்திற்கு பொதுவான ஆண்டுக் கணக்கை நாம் கடைப்பிடிக்கிறோம். அப்படிப்பட்ட ஆண்டுக் கணக்கில் நாம் கடந்த காலத்திலே நம்முடைய வரலாற்றுப் புதையல்களை, நம்முடைய சரித்திரச் சான்றுகளை, நம்முடைய கல்வெட்டுகளை, நம்முடைய பழைய வரலாறுகளை, பழைய மன்னர்கள் புரிந்து யுத்தங்களை, அவர்கள் வென்ற நாடுகளையெல்லாம் நாம் மறந்து விடுகிறோம்.
எந்தவொரு நாட்டிலே சரித்திரத்தை இழந்து விடுகிறானோ, அவன் வாழ்க்கையையும் மறந்து விடுகிறான். எந்த ஒரு நாட்டிலே வரலாற்றைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறானோ, அவன் வரலாற்றை என்றைக்குமே புரியாதவனாக ஆகி விடுகிறான். ஆகவே தான் வரலாற்றுக் கணக்கின்படி, சரித்திரச் சான்று களின்படி நாம் பெற்றிருந்த கலை, பண்பாடு இவற்றுக்கெல்லாம் சிறிதளவு அழிவும் ஏற்படாமல், அவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்கான முயற்சியாகத் தான் நம்முடைய கனிமொழி அவர்கள் இந்த இயக்கத்தின் சார்பாக நம்முடைய கிராமிய கலைகளை வளர்த்தால் , நம்முடைய பழைய பண்பாட்டுக் கலைகளை வளர்த்தால், பழைய வரலாறுகளைத் தெரிந்து கொள்ள முடியும், புரிந்து கொள்ள முடியும் என்ற அந்த ஆசையின் காரணமாகத் தான், இந்தக் கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை உருவாகியிருக்கிறது. அந்தப் பேரவையின் தலைவராக நம்முடைய கனிமொழி விளங்குகிறார். அந்தப் பேரவை யின் கிளைகளாக பல இடங்களில் தோற்றுவிக்கப்பட்டுள்ள பல பாசறைகள் இன்றைக்கும் அறிவுச் செறிவோடு, ஆணித்தரமான வாதங்களோடு, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்கின்ற மன்றங்களாக விளங்குகின்றன. அப்படிப்பட்ட மன்றங் களில் ஒன்று தான் தென் சென்னையிலே மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி அன்பழகன் தலைமையில் நடைபெறுகின்ற இந்த அருமையான நிகழ்ச்சி, விழா - இந்த விழாவில் கலந்து கொண்டு நமக்கெல்லாம் பெருமை சேர்த்த இசைவாணர்கள், நாதஸ்வர வித்வான்கள், முரசு முழங்கியோர், பாடல்கள் மூலம் நம்மை வசியப்படுத்துவோர்க் கெல்லாம் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்தனைப் பேருடைய முயற்சியும் தமிழனின் பண்பாட்டை உயர்த்தவேண்டும், மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒரு முயற்சி தான். அந்த முயற்சியிலே ஒரு துளியாக இன்றைக்கு சென்னையிலே இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இதிலே கலந்து கொண்டுள்ள பெரியவர்கள், நண்பர்கள், தோழர்கள், தொண்டர்கள் அத்தனை பேருக்கும் நான் என் சார்பிலும், என்னுடைய அருமை மகள், இந்தப் பேரவையின் தலைவியாக இருக்கின்ற கனிமொழி சார்பிலும், நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, அதிக நேரம் உங்களையெல்லாம் காக்க வைத்தமைக்காக என்னுடைய மன்னிப்பையும் உங்களிடத்திலே கேட்டுக் கொண்டு இந்த அளவில் இந்த நிகழ்ச்சி நிறைவுறுகிறது என்பதை அறிவித்து விடைபெறுகிறேன்.

No comments:

Post a Comment


Labels