என்னால் சகித்திட முடியவில்லை : கலைஞர்
பொங்கல் பண்டிகையையொட்டி தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,
பொங்கல் பண்டிகையையொட்டி தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,
’’தைத்திங்கள் முதல்நாள்! தமிழ்ச் சமுதாயத்தின் தன்னிகரற்ற பண்பாட்டுத் திருநாளாம் பொங்கல் நன்னாளுடன் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் இணைத்துக் கொண்டாடி மகிழும் அறிவார்ந்த தமிழ்ச் சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாள்! உழுது பயிரிட்டு வளர்த்துப் பாதுகாத்து, அறுவடை செய்து, அனைவரும் வயிறார உண்ண உணவு தரும் விவசாயப் பெருங்குடி மக்களின் நலமும் வளமும் கருதி, திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த காலங்களில் விவசாயத் தொழிலாளர்கள் குடியிருக்கும் வீட்டு மனைகளை அவர்களுக்கே சொந்தமாக்கும் குடியிருப்பு அனுபோகதாரர்கள் உரிமைச் சட்டம், விவசாயப் பம்ப்செட்டுகளுக்கு இலவச மின்சாரம்! உழுவோர்க்கும் நுகர்வோர்க்கும் பெரும் பயன்தரும் உழவர் சந்தை, 7000 கோடி ரூபாய்க் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, வட்டியில்லாப் பயிர்க் கடன், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் செலுத்த வேண்டிய 50 விழுக்காடு காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தும் திட்டம் என நிறைவேற்றப்பட்ட இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பல்வேறு திட்டங்களையும், அவற்றால் தமிழக விவசாயக் குடும்பங்கள் அடைந்த பயன்களையும் இத்திருநாளில் எண்ணி மகிழ்கிறேன்.
ஆனால், இன்று தமிழகத்தில் அமைந்துள்ள ஆட்சி, தமிழ்ச் சமுதாய முன்னேற்றம் கருதி கழக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்களை - அதன் அடையாளங்களை அழிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதை என்னால் சகித்திட முடியவில்லை.
கொஞ்சும் மழலைகள், கோலவிழி மாதர்கள், பெற்றெடுத்த தெய்வங்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் சூழ, தமிழ்ப் புத்தாண்டு -பொங்கல் திருநாள் கொண்டாடி மகிழ்ந்திட என் உளமார்ந்த நல்வாழ்த்துகளை, தமிழ்ச் சமுதாய மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment