வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



10/01/2014

தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவோம்: கலைஞர் வேண்டுகோள்

தை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவோம் என்று கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
23–1–2008 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் ஆளுநர் தனது உரையிலே செய்த அறிவிப்பில், திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக தமிழ் அறிஞர்கள் அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால்; தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது என்றும், எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகப் போற்றிக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள்; இனி–தமிழ்ப்புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடனும், அன்பை அள்ளிப்பொழிய வேண்டுமென்றும் வெளியிட்டார்.ஆளுநர் உரையிலே செய்யப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து அதே ஆண்டில் 29–1–2008 அன்று தமிழ்ப் புத்தாண்டு சட்ட முன் வடிவை பேரவை முன் நான் அறிமுகம் செய்தேன். 1–2–2008 அன்று இச்சட்ட மசோதா மீதான விவாதம் நடைபெற்று, நிறைவேறியது.
மலேசியா நாட்டில் தமிழர்கள் தை முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இப்படியெல்லாம் போற்றப்பட்ட, பாராட்டப்பட்ட ஒரு முடிவு நடைமுறைப்படுத்தப்பட தி.மு.க. ஆட்சியிலே சட்டமாகக் கொண்டு வரப்பட்டு 2008–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது.
தை முதல் நாளை–தமிழர் திருநாளாக– தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தி.மு.க. ஆட்சியில் ஆர்வத்தோடு சிறப்பாகச் செய்தோம். ஆனால் 2011–ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க. அரசின் மற்ற திட்டங்களுக்கு காழ்ப்புணர்வு மிகக் கொண்டு மூடுவிழா நடத்தியதைப் போல, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினம் என்பதை மாற்றிவிட்டு, சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று புரட்டிப் போட்டு மாற்றுகின்ற வகையில் மசோதா ஒன்றினை சட்டப்பேரவையிலே கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.
அதன் மூலமாக தி.மு.க.விற்கோ அது நடத்திய ஆட்சிக்கோ அவமானமா என்றால் இல்லை. அ.தி.மு.க. அரசின் திரிபுவாத மசோதாவினால் தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்ற பழம் பெரும் வரலாறு பொய்த்துப் போய்விடுமா? நம்மைப் பொறுத்த வரையில் பொங்கல் திருநாளை ‘‘தமிழர் திருநாள்’’ என்று நாம் கொண்டாடுகிறோம். இனியும் கொண்டாடுவோம். ஆண்டுக் கணக்கிலே ஆங்கிலேயர்களுடைய முதல் நாளை அவர்கள் கொண்டாடுவதைப் போல, நாமும் நம்முடைய ஆண்டு முதல் நாளை, விழா எடுத்துக் கொண்டாட வேண்டும். தமிழ் இனப் பகைவர் எப்படி வேண்டுமானாலும் செய்து விட்டுப் போகட்டும். நம்மைப் பொறுத்த வரையில், உண்மையான உணர்வுமிக்க தமிழர்களைப் பொறுத்தவரையில், தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள்.
அதேநேரத்தில், நான் ஏற்கனவே தெரிவித்தவாறு, சித்திரை முதல் நாளில் விழா கொண்டாடுவோரை, நாம் வேண்டாமென்று தடுக்க மாட்டோம். நம்மைப் பொறுத்தவரையில் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடிடுவோம். அன்றைய தினம் ஆங்காங்கு மின் விளக்குகளைத் தோரணமாக்கி, மின்மினி மின்னுவதைப் போல எல்லா மரங்களிலும் விளக்குகளைத் தொங்க விட்டு, கடைகளின் முகப்புகளில் எல்லாம் கண் கவர் அலங்காரம் செய்து, ஒவ்வொரு வீட்டிலும், எழில் குலுங்கச்சிங்காரித்து இந்நாளை ஏற்றமுடன் கொண்டாடிடுவோம்.
ஏழை, பணக்காரர் வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் சமத்துவம் கமழ்ந்திட இந்நாளை தமிழர் திருநாளாக புத்தாடை உடுத்திப் புத்துணர்வுடன் விழா எடுத்திடுவோம். தை முதல் நாளே, தமிழர் புத்தாண்டுத் திருநாள் என்பதைத் தரணி அறிய நிலைநாட்டிடுவோம். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels