ஒரு தலைப்பட்சமாக சொல்லாமல்
இனியாவது மனசாட்சிக்கு
மதிப்பு கொடுத்து சொல்வாரா ‘சோ’ : கலைஞர்
இனியாவது மனசாட்சிக்கு
மதிப்பு கொடுத்து சொல்வாரா ‘சோ’ : கலைஞர்
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை:
கேள்வி :- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர், பவானிசிங்கை மாற்றக்கூடாது என்று குற்றம் சாட்டப்பட்டவர்களே கோரிக்கை வைத்த காரணம் என்ன?
கலைஞர் :- இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் பவானி சிங், குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளுக்கு மாறாகவும் செயல்பட்டதால், அவரை நீக்கி விட்டு, புதிய வழக்கறிஞரை, அரசு வழக்கறிஞராக நியமனம் செய்ய வேண்டுமென்று கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், 23-8-2013 அன்று கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவினை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, கர்நாடக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். பேராசிரியர் தொடுத்த வழக்கில் உண்மை இருப்பதைப் புரிந்து கொண்ட கர்நாடக மாநில அரசு; அரசு வழக்கறிஞர் பதவியிலிருந்து பவானி சிங்கை நீக்கிவிட்டதாக, கர்நாடக மாநில சட்டத் துறைச் செயலாளர் நாகராஜா 25-8-2013 அன்று உத்தரவிட்டார்.
ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடுவதற்காக அரசு சார்பில் நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கி, கர்நாடக அரசு உத்தர விட்டதை ரத்து செய்யக்கோரியும், பவானி சிங்கே அரசு வழக்கறிஞராக நீடிக்க வேண்டுமென்று கோரியும், ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத் தில் “ரிட்” மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சவுஹான் மற்றும் பாப்டே ஆகியோரின் முன்பு விசாரணை நடைபெற்ற போது, நீதிபதிகள் புதிய வழக்கறிஞரை நியமனம் செடீநுய அனுமதி வழங்கியதுடன், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை தள்ளுபடி செய்து 7-9-2013 அன்று உத்தரவிட்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங், அரசு சார்பாக ஆஜராக வலியுறுத்த வேண்டாம் என்று 10-9-2013 அன்று கர்நாடக அரசு தெரிவித்தது. அதையும் எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் 11ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்று பவானி சிங் விசாரணையில் ஆஜராகக் கூடாது என்று கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதற்கிடையில் கர்நாடக அரசு வெளியிட்ட அரசாணையில், “சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து வக்கீல் பவானி சிங்கை கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒப்புதலோடு முறைப்படி நீக்கம் செய்திருப்பதாக”த் தெரிவித்தது.
நீதிபதி பாலகிருஷ்ணா இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கு முன்பு மல்லிகார்ஜுனய்யா அவர்களும், வேறு சிலரும் நீதிபதிகளாக இருந்த போது, அவர்களேதொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கேட்காத ஜெயலலிதா, தற்போது மட்டும் நீதிபதி பாலகிருஷ்ணாவே தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென்றுகோரிக்கை வைத்த மர்மம்தான் என்ன?
அதுபோலவே கர்நாடகா அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா இருந்து பதவி விலகிய போது, அவர் பதவி விலக வேண்டா மென்றும், தொடர்ந்து அவரே நீடிக்க வேண்டு மென்றும் கேட்காத ஜெயலலிதா, பவானி சிங் மட்டும் நீடிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்த உள்நோக்கம்தான் என்ன? குற்றவாளியே தன் மீதான வழக்கை, குறிப்பிட்ட நீதிபதிதான் ஓய்வு பெற்ற பின்னும் பதவியிலே நீடித்து விசாரிக்க வேண்டுமென்றும், தனக்கு எதிராக குறிப்பிட்ட வழக்கறிஞரைத்தான் நீடிக்க செய்ய வேண்டு மென்றும் கேட்கின்ற விநோதத்தை யாராவது பார்த்தது உண்டா? ஆனால்ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த விநோதம் நடைபெற்றது. இந்தச் செய்திகளையெல்லாம் நண்பர் சோ படிக்கவில்லை போலும்!
ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீது 30-9-2013 அன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.எஸ். சவுஹான் மற்றும் பாப்டே ஆகியோர், நீதிபதி பாலகிருஷ்ணா அவர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதா, வேண்டாமா என்பதை கர்நாடக அரசுடன் ஆலோசித்து, அந்த மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்து கொள்ளலாம் என்றும், அரசு வழக்கறிஞராக இருந்த பவானி சிங்கை நீக்கி கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசு வழக்கறிஞர் பவானி சிங் அவர்களுக்குப் பதிலாக புதிய வழக்கறிஞரை நியமனம் செய்யலாம் என்று 7-9-2013 அன்று உத்தரவிட்டதும் உச்சநீதிமன்றம்தான். அரசு வழக்கறிஞராக இருந்த பவானி சிங்கை நீக்கி கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, அவரே அரசு வழக்கறிஞராக நீடிக்கலாம் என்று 30-9-2013 அன்று உத்தரவிட்டதும் அதே உச்ச நீதிமன்றம்தான்!
பெங்களூரு சிறப்பு நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய நீதிபதி முடி கவுடர் முன்னி லையில் இந்த வழக்கு 3-10-2013 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா வின் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக் காட்டிய போது, நீதிபதி முடிகவுடர், “இன்றைய தேதியில் இந்த வழக்கினை விசாரிக்கும் நீதிபதியாக கர்நாடக உயர்நீதிமன்றம் என்னைத்தான் நியமனம் செய்திருக்கிறது. எனவே நான்தான் இந்த வழக்கினை விசாரிப்பேன். கர்நாடக உயர்நீதி மன்றம் வேறு ஏதும் உத்தரவு பிறப்பிக்குமானால், அதனை பின்னால் பார்ப்போம்” என்றார்.
இந்த நிலையில் பெங்களூர் சிறப்பு நீதிபதியாக பாலகிருஷ்ணாவே நீடிக்க வேண்டுமென்றும், முடிகவுடர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டு மென்றும் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு 29-10-2013 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர் சேகர் நாப்டே, “செப்டம்பர் 30ஆம் தேதிய உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடக அரசு, கர்நாடக உயர்நீதிமன்றத்துடன் ஆலோசனை நடத்தாமலேயே புதிய நீதிபதியாக முடி கவுடரை நியமித்துள்ளது, அதனை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.
அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சவுஹான், பாப்டே ஆகியோர், “கர்நாடக உயர்நீதிமன்றத்தின் மீது எந்த வித ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளைக் கூறக்கூடாது. நீதிமன்றத்தின் மீது குறை கூறும்போது, யூகத்தின் அடிப்படையில் நம்புவ தாகத்தெரிகிறது என்றெல்லாம் சொல்லக்கூடாது. முடிகவுடர் நியமனம் முறைப்படி அரசுடன் ஆலோசனை செய்யப்பட்டதா என்று கர்நாடக உயர் நீதிமன்றத்திடம் கேட்டீர்களா?
அப்படிக் கேட்பதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல வழிமுறைகள் உள்ளனவே. உயர்நீதி மன்றத்துடன் ஆலோசிக்கவில்லை என்ற தகவல் உங்களுக்கு எங்கிருந்து எப்படி கிடைத்தது?” என்று கேள்விகளை எழுப்பினர். அரசு வழக்கறிஞர் பவானி சிங்கைப் பொறுத்த வரையில், அவரே தொடர்ந்து இந்த வழக்கில் பணியாற்றலாம் என்று உத்தரவிட்டது. இதுதான் பவானி சிங் புராணம்!
கேள்வி :- சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் பவானி சிங் குறித்து அளித்த தீர்ப்பு பற்றி ஏடுகள் பல்வேறு வகையில் விமர்சனம் செய்திருக்கிறதே?
கலைஞர் :- ஆமாம், “தி இந்து” நாளிதழ், “வழக்கில் குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் கோரிக்கையை ஏற்று, அவருக்குச் சாதகமாக உச்சநீதிமன்றமே இப்படி ஓர் உத்தரவை பிறப்பித்திருப்பது இந்திய சட்டத் துறையில் இதுவே முதல் முறை என நீதித் துறை வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன” என்று எழுதியது.
இந்தத் தீர்ப்பு பற்றி “தினமலர்” எழுதும்போது, “இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்த போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் வாகன்வதி, “குறிப்பிட்ட அரசு வழக்கறிஞர்தான் தன் வழக்கில் ஆஜராக வேண்டும் என குற்றம் சாட்டப்பட்ட எவரும் உரிமை கோர முடியாது; இதுபோன்ற கோரிக்கைகளை சுப்ரீம் கோர்ட் அனுமதித்தால், அது தவறான முன் உதாரணமாகி விடும்”என்று தெரிவித்தார். அதையும் மீறி, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகி வந்த பவானி சிங்கை, திடீரென கர்நாடக அரசு நீக்கம் செய்தது,தீய எண்ணத்துடன்மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, அதனால் பவானி சிங்கை நீக்கி, கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம்” என்று தெரிவித்திருப் பதாகவும்எழுதியுள்ளது.
ஜூ.வி. வார இதழில், “ஜெயலலிதா வைத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தால், இது அ.தி.மு.க.வுக்குச் சாதகமான தீர்ப்பு என்று சொல்லலாமா?” என்ற கேள்விக்கு, “தீர்ப்பின் ஒரு பகுதியைப் பார்த்து விட்டு சிலர் இப்படிச் சொல்கிறார்கள்.
அரசு வழக்கறிஞரான பவானி சிங் தொடர வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டார். அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இது ஜெயலலிதாவுக்கு சாதகமானதுதான். ஆனால் ஜெயலலிதாவின் மிக முக்கியமான கோரிக்கை, நீதிபதி பாலகிருஷ்ணாவே தொடர வேண்டும். அவருக்கு பணி நீட்டிப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான். “நீதிபதியின் பதவிக் காலம் நிறைவு பெறும் நிலையில் அவரது பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்து கர்நாடக மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியும் அந்த மாநில அரசும் முடிவு செய்ய வேண்டும்” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்து விட்டனர்.
“கர்நாடக அரசுதானே, அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கிக் குடைச்சல் கொடுத்தது. அப்படிப்பட்ட கர்நாடக அரசிடம் பொறுப்பைக் கொடுத்தால் எப்படி?” என்று இப்போதே ஜெயலலிதா தரப்பினர் புலம்ப ஆரம்பித்து உள்ளனர்” என்று எழுதியுள்ளது.
கேள்வி :- ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு எதிராக வாதாடு வதற்காக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் பவானி சிங்கே தொடர்ந்து நீடிக்க வேண்டு மென்று உச்சநீதிமன்றம் கூறிய பிறகு, தற்போது நடைபெறும் விசாரணையின் போது அவரது நடவடிக்கை எவ்வாறு உள்ளது?
கலைஞர் :- ஒரே ஒரு உதாரணம் கூறுகிறேன். 30-10-2013 அன்று இந்த வழக்கு பெங்களூரு வில் நடைபெற்ற போது, ஜெயலலிதாவின் வழக்கறிஞர், “நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக் காலத்தை நீட்டிப்பது பற்றி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறோம்; அதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கவேண்டும்” என்று கேட்டிருக்கிறார். அப்போது நீதிபதி முடிகௌடர், உச்சநீதிமன்ற அறிவுறுத் தலின்படி இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டியுள்ளதால், வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால் ஜெயலலிதாவின் வழக்கறிஞர், வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். இந்த நேரத்தில் அதைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறி ஞரான பவானி சிங், முன்பு செய்ததைப்போலவே, எந்தவிதமான ஆட்சேபமும் தெரிவிக்காமல் இருந்தார்.
அப்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர், அரசு வழக்கறிஞரிடம் விசாரணையை நீண்ட நாட்களுக்குத் தள்ளி வைக்க தாங்கள் வைக்கும் கோரிக்கை மீது அவருக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்பதைத் தெரிவிக்கும்படி கூறினார். அதன் அடிப்படையில் அரசு வழக்கறிஞரான பவானி சிங், ஜெயலலிதாவுக்கு எதிராக தேதியை அதிக நாட்கள் நீடிக்கக் கூடாது என்று நீதிமன்றத்திலே ஆட்சேபணை தெரிவிப்பதற்குப் பதிலாக, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தேதியை நீண்ட நாட்களுக்கு தள்ளி வைப்பதில் தனக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை என்று தெரிவிக்கின்றார். அதனைக் கேட்டு, நீதிபதி அவர்கள், அரசு வழக்கறிஞரே ஆட்சேபம் இல்லை என்று தெரிவிக்கிறார், எனவே விசாரணையை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.
கேள்வி :- ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வரும் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக ஜான் மைக்கேல் டி.குன்ஹாவை நியமித்து கர்நாடக மாநில அரசு அரசாணை பிறப்பித்தது பற்றி?
கலைஞர் :- இந்த வழக்கினை இதுவரை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியோடு ஓய்வு பெற்றார். ஆனால் அவரே நீடித்து இந்த வழக்கினைத் தொடர்ந்து விசாரிக்க வேண்டு மென்று குற்றஞ் சாட்டப்பட்ட ஜெயலலிதா தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றம்; கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஆலோசனையின் பேரில் கர்நாடக அரசு நீதிபதி பாலகிருஷ்ணா அவர்களை தொடர்ந்து “காண்ட்ராக்ட்” அடிப்படையில் நீடிப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று தீர்ப்பளித்தது. ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணா தொடர்ந்து அந்த வழக்கினை விசாரிக்க விரும்பவில்லை என்ற செய்திகள் ஏடுகளில் வெளிவந்தன.
அதனால் கர்நாடக அரசு பல்வேறு நீதிபதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எச். வஹேலாவிடம் கொடுத்து, பரிசீலனை செய்தது. நீதிபதி மாலதி, சிக்கன்ன கவுடர், சோமராஜய்யா, ஜான் மைக்கேல் டி. குன்ஹா ஆகியோர் அடங்கிaய இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அப்பட்டியலில் இருந்து புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் டி.குன்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த உதாரணம் ஒன்று போதாதா?
நண்பர் சோ இவைகளையெல்லாம் விருப்பு வெறுப்பின்றி படித்து, ஒரு தலைப்பட்சமாக எதுவும் சொல்லாமல், இந்த வழக்கு பற்றிய கருத்தினை இனியாவது மனசாட்சிக்கு மதிப்பு கொடுத்து தெரிவிப்பார் என்று நம்புகிறேன்.
No comments:
Post a Comment