வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



06/12/2013

வெள்ளை இருட்டை விலக்க வந்த கருப்பு நிலா மறைந்தது: நெல்சன் மண்டேலா மறைவுக்கு கலைஞர் இரங்கல்

வெள்ளை இருட்டை விலக்க வந்த கருப்பு நிலா மறைந்தது என்று நெல்சன் மண்டேலா மறைவுக்கு திமுக தலைவர் கலைஞர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குடிசையில் பிறந்து, குடிசையில் வளர்ந்தவர். ஆரம்ப வயதில் ஆடுமாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு - அவர் அன்னை எழுதப் படிக்கத் தெரியாதவர் - ஆயினும் மகனைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி வைத்தார். 
1938ஆம் ஆண்டு அவரது உறவினர் ஜோன்கின்டாபா முயற்சியினால் மண்டேலா; முதலில் “கெல்ட் டவுன்’’ கல்லூரியிலும் - பிறகு “போர்ட்ஹேர்’’ கல்லூரியிலும் சேர்க்கப்பட்டார். அப்போதுதான்  அவரது முதல் போராட்டத்துக்கான துளிர் விடத் தொடங்கியது. அங்கே  வெளிப்பட்ட இன வேற்றுமைக் கொடுமையை எதிர்த்து இளைஞர் மண்டேலா  தலைமையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்படவே; கல்லூரி நிர்வாகம் மண்டேலாவை வெளியேற்றியது. 
ஆம் - மண்டேலாவுக்கு அவர் நடத்திய உரிமைப் போரில் கிடைத்த முதல் தண்டனை அது! மன்னிப்பு கேட்டுக் கொண்டால் மீண்டும் கல்லூரியில் சேரலாம் என்று கூறப்பட்டது. அதை மானப் பிரச்சினை என்று கூறி மறுத்து விட்டார் மண்டேலா. அப்போது மண்டேலா, “எங்களுக்கு சுதந்திர உரிமை இல்லையென்றால், நான் அடைபட்டுள்ள சிறைச்சாலையே திருப்தி அளிக்கக் கூடியது’’ என்று கூறிவிட்டார். அவர் நடத்திய போராட்டங்களின் தொடர்ச்சியாக நீண்ட கால சிறை வாழ்க்கையைத்தான் அவர் ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. சிறைக் கொடுமைகளைப் பற்றி, “சிறைக் கொடுமை என்னை இன்னலுக்கு ஆளாக்கவில்லை. சிறைக்கு வெளியே என் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை எண்ணித்தான் நான் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறேன்” என்று விவரித்திருக்கிறார்.
மண்டேலாவின் இந்தத் தியாக வாழ்க்கை தென்னாப்பிரிக்க நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமல்ல; இந்தப் பூமிப் பந்தில் வாழ்ந்து கொண்டு புத்துலகம் காணத் துடிக்கின்ற ஏறுநடை இளைஞர்களுக்கெல்லாம் இதய கீதமாகும்.
இளம் வயதிலேயே புரட்சிக்காரராக மாறி, தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்காக பாடுபட்ட நெல்சன் மண்டேலாவின் மறைவுக்காக இரங்கல்  தெரிவிக்கும் இந்த நேரத்தில், அவர் கூறிய சில வரிகள் நினைவுகொள்ளத் தக்கதாகும்.
(இளைஞர் இயக்கத்தின் சார்பில் நாங்கள் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டத்திற்கு இந்தியர்கள் நடத்திய இயக்கமே முன் மாதிரியாக இருந்தது.)
உலகத்தில் விடுதலை இயக்கங்கள் உயிரோடு இருக்கும் வரையில் நெல்சன் மண்டேலாவின் நினைவும் நீடித்திருக்கும், வாழ்க மண்டேலாவின் புகழ் என்று கருணாநிதி இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels