பிரச்சாரத்திற்கு கூட ஏற்காடு மலைப்பகுதிக்கு வராத ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட ஏற்காடு மலைப்பகுதிக்கு வராமல் புறக்கணித்துவிட்ட ஜெயலலிதாவுக்கு இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஏற்காடு சட்டமன்றத் தேர்த-ல் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாறனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் அத்தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஏற்காடு பேருந்துநிலையம் அருகே பேசிய அவர், கலைஞர் தலைமையில் திமுக ஆட்சியில் ஏற்காடு தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டார். ஜெயலலிதா அரசோ ஏற்காடு மலைப்பகுதி மக்களை கண்டுகொள்ளவில்லை. அங்கு சாலை, குடிநீர் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை என்றார்.
முந்தைய திமுக ஆட்சியில் ரேஷனில் வழங்கப்பட்டு வந்த 10 லிட்டர் மண்ணெண்ணெயைக் கூட அதிமுக அரசு இரண்டு லிட்டராக குறைத்துவிட்டது. இப்போது தேர்தலுக்காக மட்டுமே ஏற்காடு தொகுதிக்கு ஜெயலலிதா வருகிறார். தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட ஏற்காடு மலைகிராமங்களுக்கு வராத முதல் அமைச்சர் ஜெயலலிதா, அடிவாரத்திலேயே சாலைவசதி, ஹெலிகாப்டர் இறங்கும் வசதி உள்ள இடங்களில் மட்டும் பிரச்சாரம் செய்துவிட்டு, மலைகிராம மக்களை சந்திக்காமலேயே புறப்பட்டுவிட்டார்.
திமுக நிர்வாகிகளுக்கு எதிராக கூறப்பட்ட பொய்யான நிலஅபகரிப்பு புகாரின் பேரில் உடனே வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்ட அதிமுக அரசு, அக்கட்சியைச் சேர்ந்த தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்களான கே.பி.ராமலிங்கம், எஸ்.பி.சண்முகநாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம் உள்ளிட்டவர்கள் மீது ஆதாரத்துடன் புகார் கூறப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment