சென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:திமுக பொதுக் குழு 15-12-13 காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை அண்ணா அறி வாலயத்தில் நடைபெற் றது.திமுக அமைப்பு தேர்தல்கள் குறித்து தீர்மானம். ஈழத் தமிழர் பிரச்னை, இந்திய மீனவர்கள் பிரச்னை உட்பட, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மானங்கள் 8. தமிழக அதிமுக அரசுக்கு வேண்டுகோள் மற்றும் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானங்கள் 10. மொத்தம் 24 தீர்மானங்கள்.எந்த தீர்மானத்திலும் பண்பாடு - நாகரிகம் ஆகியவற்றுக்குப் புறம்பான ஒரு வார்த்தையைக் கூட யாராலும் சுட்டிக்காட்ட முடியாது. அரசியல் தீர்மானத்திற்குரிய இலக்கணத்தோடு இந்த 24 தீர்மானங்களும் வடிவமைக் கப்பட்டி ருப்பதை, படிப்பவர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
ஆனால் அதிமுக நிறைவேற்றிய தீர்மானங்கள் எப்படி? மொத்தம் 16 தீர்மானங்களில், 4 தீர்மானங்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மான ங்கள். அமைப்புத் தேர்தல்கள் குறித்து தீர்மானம். அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தும், கூட்டணியை முடிவு செய்ய அதிகாரம் அளித்தும், பல்வேறு காரணங்களுக்காக பாராட்டு தெரிவித்தும் 10 தீர்மானங்கள். மீதம் ஒரு தீர்மானம், எனக்காக.அங்கே நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களில் மிக நீண்ட தீர்மானம் என்னை அர்ச்சனை செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான். அந்தத் தீர்மானத்தை, ஆளும் கட்சி அதிகாரப்பூர்வ ஏட்டை தவிர வேறு எதிலும் முழுமையாக வெளியிடவில்லை. ஏனென் றால், வெளியிடக் கூடிய அளவிற்கு அந்தத் தீர்மானம் நாகரிகமானதாக இல்லை.
அந்த நீண்ட தீர்மானத்தில் என்னை இனத்துரோகி என்றும், மாபாதகன் என்றும், சுயநலவாதி என்றும், தீயசக்தி என்றும், தமிழ் இனத் துரோகி என்றும் கடும் விமர்சனம் செய்திருக்கிறார்கள். நான் செய்த குற்றம், மத்திய ஆட்சிப் பொறுப்பில் திமுக பங்கேற்ற போது எந்த ஒரு நற்செயலையும் செய்யவில்லையாம். இதோ பட்டியல்.
* வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி ஆட்சியில் திமுக பங்கேற்றிருந்த போதுதான், மண்டல் பரிந்துரை ஏற்கப்பட்டு, மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 சதவீதம் இடஒதுக்கீடு கிடைத்தது காவிரி நதிநீர் பிரச்னைக்கு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
* சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரும், உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரும் சூட்டப்பட்டன.
* ஐக்கிய முன்னணி ஆட்சியில், குஜ்ரால் தலைமையிலான அமைச்சரவையில், மறைந்த முரசொலி மாறன், மத்திய அரசின் தொழில் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த போது, சிறந்த 9 பொதுத் துறை நிறுவனங்களை நவரத்தினங்கள் என்று பெய ரிட்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளித்தார்.
* வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் சேது சமுத்திரத் திட்டம் வடிவம் பெற்றது. கன்னியாகுமரி கடற்கரை ஓரத்தில் காமராஜருக்கு மணி மண்டபம் அமைக்க அனுமதி கிடைத்தது. சோனியா காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கழகம் பொறுப்பேற் றிருந்த காலத்தில்தான் தமிழ், செம்மொழி என்ற தகுதியைப் பெற்றது சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைந்தது;
* கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.56,664 கோடியே 21 லட்சம் செலவில், 4,676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகளில், 3,276 கிலோ மீட்டர் சாலைகள், 4 வழி சாலைகளாக மேம்பாடு மிகப் பெரிய மேம்பாலங்கள், துறை முக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் அமைந்தன.
* சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் ரூ.470 கோடி முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட வளர்ச்சிக் கட்டமைப்பு மையம் அமைத்தது. ரூ.1553 கோடி செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம். தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.
* சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம். ரூ.120 கோடி செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மேம்பாடு. ரூ.1650 கோடி செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான துவக்கம். ரூ.2427 கோடி செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம். நெசவாளர் சமுதாயத்தி னர் பெரும்பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்.
* ரூ.908 கோடி செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம். பொடா சட்டம் ரத்து. அனைத்து கிராமங்களிலும் முழு கணினி நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய கணினி நிர்வாகத் திட்டம் அறிமுகம் 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி. மாதம் 120 லட்சம் புதிய தொலைபேசி இணைப்புகள். செல்போன் கட்டணங் கள் குறைப்பு. தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி.
* ரூ.1828 கோடி செலவில் 90 ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி. சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
மத்திய அரசில் இடம் பெற்ற தமிழகத்தின் 13 அமைச்சர்களும் பல்வேறு செயல் திட்டங்களை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் நிறைவேற்றி உள்ளனர்.அதே நேரத்தில் அதிமுக லட்சணம் என்ன? 1998ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்த போது, அந்தக் கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற அதிமுக தலைவி ஜெயலலிதா, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய ஆதரவுக் கடிதத் தைக்கூட வேண்டுமென்றே அனுப்பி வைக்காமல் தாமதம் செய்து முரண்டு பிடித்தார்.
ஜெயலலிதாவின் அப்போதைய முக்கிய கோரிக்கை தமிழக திமுக அரசைக் கலைக்க வேண்டும் என்பதுதான். மேலும் அவர் மீதிருந்த வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமென்று கோரிக்கை வைத்திருந்தார்.தனது சொந்த நலனுக்காக எண்ணியது முழுமையாக நிறைவேறவில்லை என்பதால் ஆத்திரப்பட்ட ஜெயலலிதா, குடியரசுத் தலைவரைச் சந்தித்து, பாஜக ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்று, வாஜ்பாய் தலைமையில் இருந்த மத்திய ஆட்சியை கலைக்க முழு முதல் காரணமாக இருந்தார்.திமுக மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது எவ்வாறு செயல்பட்டது என்பதையும், அதிமுக மத்திய ஆட்சிப் பொறுப் பில் இருந்த போது எவ்வாறு செயல்பட்டது என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்து உணர வேண்டும் என்பதற்காகவே இவற்றை விளக்கியிருக்கிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment