மினி பஸ்களில் இரட்டை இலை சின்னம்: மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீசு
சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில் ‘‘சென்னை மற்றும் புறநகரில் 50 புதிய சிறிய பஸ்களின் இயக்கத்தை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.
இந்த பஸ்களின் பக்க வாட்டில் ஆளும் கட்சியின் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை நீதிபதி கே.கே. சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அட்வ கேட் ஜெனரல் ஏ.எல். சோமையாஜி, சிறப்பு பிளீடர் ஐ.எஸ். இன்பதுரை, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் விடுதலை ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அதன் விவரம் வருமாறு:–
அட்வகேட் ஜெனரல் சோமையாஜி:– இந்த வழக்கை 2 வாரம் தள்ளி வைக்க வேண்டும். இந்த வழக்குக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசு தயாராக உள்ளது. இந்த சிறிய பஸ்களின் பக்க வாட்டில் வரையப்பட்டுள்ள இலைகள் பசுமையை குறிக்கும் வகையில் பொறிக்கப்பட்டுள்ளது.
வெளி நாடுகளில் மாசு இல்லாத பகுதிகளில் இது போன்ற இலைகளை வரைந்து அடையாளம் காட்டப்படும். இந்த நடைமுறை இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது. சுற்றுச் சூழல் பாதிக்கும் புகையில்லாத வாகனம் என்பதை சுட்டிக் காட்டும் விதமாக இந்த இலைகள் வரையப்பட்டுள்ளன. இது அரசியல் கட்சியின் சின்ன மல்ல.
நீதிபதி: ஏற்காடு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாகவும், இது போன்ற வாகனங்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டால் அது தமிழக மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை எற்படுத்தும் என்றும் மனுதாரர் தரப்பில் நேற்று வாதம் செய்யப்பட்டது.
சோமையாஜி:– சென்னை, மற்றும் புறநகரில் 50 வாகனம் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில் இது போன்ற வாகனம் இயக்கப்படவில்லை. மேலும் பல வாரங்களுக்கு புதிய பஸ்களை பிற மாவட்டங்களில் இயக்கும் திட்டம் இல்லை.
நீதிபதி:– உங்களது வாதத்தை பதிவு செய்து கொள்கிறேன்.
வக்கீல் விடுதலை:– பொதுவாக அரசு பஸ்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் பொறிக்கப்பட்ட அரசு இலச்சினை மட்டுமே வரையப்படும். ஆனால் இந்த அரசு புதுவிதமான இலைகளை வரைந்து ஒரு நடைமுறையை உருவாக்கியுள்ளது.
சோமையாஜி:– மனுதாரர் வக்கீல் வாதம் செய்வதை பார்த்தால் மரக்கிளைகளில் இரட்டை இலை உள்ளது. அதையெல்லாம் வெட்ட வேண்டும் என சொல்வது போல் உள்ளது.
இவ்வாறு வாதம் நடந்தது.
இதையடுத்து மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் தமிழக தலைமை செயலாளர், போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ஆகியோர் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீதான விசாரணையை வருகிற 26–ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன் என நீதிபதி சசிதரன் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment